நடுகைக்காரி! …. 57 ….. ஏலையா க.முருகதாசன்.

வீட்டிலிருந்து தான் கொண்டு வந்த புட்டுப் பார்சலை ஞானத்தின் தாயிடம் புஸ்பகலா கொடுத்துக் கொண்டிருக்கும் போது மார்க்கண்டுவின் மனைவி திடுதிப்பென்று அங்கே வந்துவிடுகிறார்.
பள்ளிக்கூடச் சீருடையில் ஒரு மாணவி சண்முகவல்லியின் வீட்டில் நிற்பதைக் கண்டதும்,அவள் யாராக இருக்கும் என்று நெற்றியைச் சுருக்கி யோசித்துக் கொண்ட மார்க்கண்டுவின் மனைவி பரிமளம் எதுக்கும் சண்முகவல்லியைக் கேட்டுவிடுவம் என்று தீரமானிச்சு மெய்யெ சண்முகவல்லி இந்தப் பொடிச்சி ஆர் இந்தப் பொடிச்சியை எங்கடை இலகைக்கள்ளைய ஒருநாளும் காணலையே ஆற்றை மகள் என்று ஞானத்தின்ரை தாயிடம் கேட்க இந்தப் பிள்ளை ஞானத்தோடை ஒன்றாய்ப் படிக்கிற பிள்ளை ஞானத்திற்கு காய்சசல் என்று கேள்விப்பட்டுப் பார்க்க வந்திருக்கிறா என்று பதில் சொல்ல..
என்னத்திலை வந்தவா என்று மார்க்கண்டுவின் மனைவி கேட்க சைக்கிளிலை என்று ஞானத்தின் பதில் சொல்ல எங்கை இருக்கிறவா என்று மார்க்கண்டுவின் மனைவி கேட்க வீமம்காமம் என்று பதில் சொன்ன ஞானத்தின் தாய் விடுப்புப் பிடுங்க வந்திருக்கிறா என மனதில் நினைச்சுக் கொண்டே ஞானத்தின் தாய் சரி பரிமளம் என்ன விசயத்திற்காக வந்தனீங்கள் என்று கேட்க வல்லி ஒரு மூடி மிளகாய்த்தூள் தாவன் இடிச்சுப் போட்டுத் தாறன் என்று மார்க்கண்டுவின் மனைவி சொல்ல இவளை கனநேரம் மெனக்கெடுத்தினாள் கதை பிடுங்கிக் கொண்டு நிற்பாள் என்று நினைச்ச ஞானத்தின் தாய் அவசரம் அவசரமாக மிளகாயத்தூளை அளந்து குடுக்கும் போது எனக்கு கன அலுவலிருக்கு என்று சொல்ல புஸ்பகலாவை ஏற இறங்கப் பார்த்து பரிமளம் நல்ல மதப்பான பொடிச்சியாய்க் கிடக்கு சொல்லேலாது இந்தப் பொடிச்சிதான் உனக்கு மருமோளா வாறாளோ தெரியாது என்று ஞானத்தின் தாயின் காதுக்கு மட்டுமே கேட்கத் தக்கதாகச் சொல்லிவிட்டுப் போகிறாள்.
பரிமளம் புஸ்பகலாவின் உருவத்தை மதப்பான பொடிச்சியாய்க் கிடக்கு என்று சொன்னதைக் கேட்ட ஞானத்தின் தாய் புஸ்பகலாவை கூர்ந்து பார்க்கிறாள்.
விறாந்தையில் மேசைக்கு வலது பக்கமாக இருந்து கொண்டு இடது பக்கத்தில் இருக்கும் ஞானத்துடன் மெதுவான புன்னகையுடன் கதைச்சுக் கொண்டிருந்த புஸ்பகலாவை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறாள்.
புஸ்பகலாவின் உயரம்,நேர்த்தியான தசைப் பிடிப்பான நீளமான கால்கள்,நீளமான கைகள் அதற்கேற்றாற் போல விரல்கள் என புஸ்பகலா எடுப்பாகவே இருந்தாள்.
நீள முகமாய் இல்லாமலும் வட்ட முகமாய் இல்லாமலும் கவர்ச்சிகரமான முக வெட்டுடன் இருந்த புஸ்பகலா ஏதோ ஒரு நடிகையின் சாயலில் இருப்பதை உணர்ந்த ஞானத்தின் தாய் தனது மனதுக்குள் யார் போல இந்தப் பிள்ளை இருக்கிறாள் என தேடிய வேளை என்ன பத்தியக் கறி சாப்பிட அருவருக்குதோ மாமி தாற பத்தியக் கறிதான் சாப்பிட வேணும் அதுதான் காய்ச்சலை மாத்தும்
என்று கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தபடி புஸ்பகலா சொல்லியதைக் கவனித்த தாய் புஸ்பகலாவின் இருபக்க தொற்றுப் பற்களையும் கண்டு விடுகிறாள்.
உடனே ஞானத்தின் தாய்க்கு நடிகை ஜமுனாவின் சாயலில் இருப்பதாக நினைச்சுக் கொண்டாள்.
பொதுவாக ஆம்பிளைப் பிள்ளைகளை வைச்சிருக்கும் பெற்றோர் அழகான எடுப்பான பொம்பிளைப் பிள்ளைகளைக் கண்டால் தமது ஆம்பிளைப் பிள்ளைகளுடன் சோடி சேர்த்துப் பார்த்து இந்தப் பிள்ளை எங்களுக்கு மருமகளாக வந்தால் நல்லாயிருக்கும் என்று எண்ணுவதும் அது போல பொம்பிளைப் பிள்ளைகளை வைச்சிருப்போர் கம்பீரமான உயரமான தோற்றத்துடன் இருக்கும் ஆம்பிளைப் பிள்ளையளைக் கண்டுவிட்டால் இப்படியொரு பொடியன்தான் தங்களுடைய மகளுக்கு கணவனாக வரவேண்டும் என்று மனதுக்குள் எண்ணுவதுண்டு.சில நேரங்களில் நம்பிக்கைக்குரியவர்களுக்குச் சொல்லி மகிழ்வதும் உண்டு.
அது இயல்பானதுதான்.அப்படித்தான் ஞானத்தின் தாயும் ஞானத்திற்கு இந்தப் பிள்ளையே மனைவியாகிவிட்டால் என்று கற்பனை செய்து ஞானத்தையும் புஸ்பகலாவையும் சோடி சேர்த்துப் பார்த்து மகிழ்ந்தாள்.
ஞானத்திற்கு கீளிமீன் பத்தியக் கறியுடன் ஒரு கோப்பையில் சோறையும்,இன்னொரு கோப்பையில் விளைமீன் குழம்பு வாழைப்பூ முருங்கை இலைக்கறி தேங்காய்ப்பூ கலந்து வறுத்த வறையையும் போட்டுக் கொண்டு வந்து தாய் கொடுக்க, மேசையில் கோப்பையை வைச்சு சாப்பிடக்கூடியதாக கதிரைகளை அரக்கி வைச்சு சாப்பிடத் தொடங்குகின்றனர் ஞானமும் புஸ்பகலாவும்.
என்ன பத்தியக் பறி ருசியாக இருக்கிறதா என ஞானத்தைப் பார்த்து புஸ்பகலா கிண்டலடிக்கிறாள்.
புஸ்பகலா என்ன நினைத்தாளோ விளைமீன் துண்டிலிருந்து முள்ளில்லாமல் தசைப் பகுதிகளை எடுத்து சோற்றோடு குழம்புப் பகுதியையும் எடுத்து ஞானத்தின் சாப்பாட்டுக் கோப்பைக்குள் வைக்கிறாள்.
புஸ்பகலா வைப்பதை ஞானத்தின் தாய் கண்டு விடுகிறாள்.ஆனால் தான் காணவில்லை என்பது போல ஒரு புன்னகையுடன் அடுப்படிக்குள் போகிறாள்.
புஸ்பகலா தனது கோப்பைக்குள் வைச்ச குழம்புச் சோற்றையும் விளைமீன் தசையையும் ஆவலாக சாப்பிட்ட ஞானம் ஆ உறைக்குதே உங்களுக்கு உறைக்கேலையா என்று புஸ்பகலாவைக் கேட்க,எனக்கு உறைக்கேலை உறைப்பு அளவாயும் குழம்பு ருசியாகவும் இருக்கு காய்ச்சல்காரருக்கு வாய் அவிஞ்ச மாதிரி இருக்கும் என்றதாலைதான் சரக்குப் பத்தியக் கறி வைச்சுக் குடுக்கிறவை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது புஸ்பகலா குடுத்த முட்டைப் பொரியல் போட்டுப் பிரட்டிய புட்டை கோப்பையில் போட்டு மீன் குழம்பையும் அதன்மேல்; விட்டு விறாந்தையிலிருக்கும் கதிரையிலிருந்து சாப்பிடுவம் எனத் ஞானத்தின் தாய் வர அதைக் கவனிக்காத ஞானம், வகுப்பிலை என்ன புதினம் கறுவல் செல்லத்துiரை மாஸ்ரர் என்னவாம் என்று ஒரு அர்த்தப்பட்ட சிரிப்புடன் கேட்க, அவர் வழமைபோல வம்புப் பகிடிகளை..என்று தொடர்ந்து சொல்ல நினைச்ச புஸ்பகலா,ஞானத்தின் தாய்
![]()
வருவதைக் கண்டதும் வம்பு என்றதுவரை சொல்லி பகிடி என்றதை மென்று விழுங்கி மாமி வாங்கோ மேசையிலை வைச்சுச் சாப்பிடுங்கோ நான் கையிலை வைச்சுச் சாப்பிடுகிறன் என்று புஸ்பகலா எழ வேண்டாம் பிள்ளை நான் எப்பவும் இப்பிடித்தான் கையிலை வைச்சுத்தான் சாப்பிடறனான்,அது பிரச்சினை இல்லை, நான்,ஞானம் ஞானத்தின் அப்பா எல்லாரும் ஒன்றாய்ச் சாப்பிடுற நாட்களில் அடுப்படிக்குள்ளை பலகை போட்டிருந்து சாப்பிடுறனாங்கள் நீ மேசையிலை இருந்து சாப்பிடு பிள்ளை என்கிறாள் ஞானத்தின் தாய்.
புட்டின் ருசி ஞானத்தின் தாய்க்கு நன்றாகவே பிடித்துவிட, புட்டு நல்லாய் இருக்கு அளவான சூட்டிலை சுடுதண்ணிவிட்டு பதமாக குழைத்து உடன் தேங்காய்ப்பூ துருவிப் போட்டு பிள்ளையின்ரை அம்மா அவிச்சிருக்கிறா,முட்டைப் பொரியலும் நல்லெண்ணையிலைதான் பொரிச்சிருக்கிறா அம்ம நல்லாயச் சமைப்பா போல என்று ஞானத்தின் தாய் கேட்க,ஓம் மாமி அம்ம நல்லாய்ச் சமைப்பா ருசியாயும் சமைப்பா என்று புஸ்பகலா சொல்ல நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டபடியாலைதான் இந்தப் பிள்ளை இப்பிடி மினுமினுப்பாக இருக்குது என்று மனதுக்குள் நினைச்சுக் கொள்கிறாள்.
மாமி அம்மா மட்டுமில்லை,நீங்களுந்தான் ருசியாய்ச் சமைக்கிறது இந்தச் சாப்:பாட்டிலையிருந்தே தெரியுதே குத்தரிச் சோறும் விளைமீன் குழம்பும் வாழைப்பு முருங்கையிலை தேங்காயப்பூ போட்ட வறையும் அருமையாயிருக்குது உங்கடை சாப்பாட்டாலைதான் இவர் இந்தளவு உயரம் வளர்ந்திருக்கிறார்.மாமி இவர் மட்டுந்தானா இல்லாட்டில் இவற்றை சகோதரங்களும் இவரைப் பொலத்தானா என்று புஸ்பகலா கேட்க எங்கடை பிள்ளைகள் எல்லாரும் உயரமாய் கட்டுக் கோப்பான உடம்பைக் கொண்டவர்கள்தான் என்று சொன்ன ஞானத்தின் தாய் ஐயையோ நான்: ஒரு மடைச்சி அதல் மீன் பொரியலை மறந்து போனன் என்று சொல்லியவாறு எழுந்து சாப்பாட்டுக் கோப்பையை மேசையில் வைச்சிட்டு அடுப்படிக்குள் போய் ஒரு தண்டு வாழையிலையில் இரண்டு மீன் பொரியல்களை எடுத்துக் கொண்டு வந்து புஸ்பகலாவின் சாப்பாடடுக் கோப்பையில் வைக்கிறாள்.
மாமி உங்களுக்கு என்று புஸ்பகலா கேட்க நான் இரவுக்குச் சாப்பிடுகிறன் நீ சாப்பிடு என்கிறாள் ஞானத்தின் தாய்.ஞானத்தின் தாய் மீன் பொரியலைச் சாப்பிடாமல் விட்டதற்கு ஞானம் பத்தியக்கறி சாப்பிடும் போது தான் வாய்க்கு ருசியாய் மீன் பொரியலையும் சாப்பிடக்கூடாது என்றுதான் ஞானத்தின் தாய் சாப்பிடவில்லை என புஸ்பகலா நினைச்சுக் கொள்கிறாள்.
ஒரு மணித்தியாலம்கூட ஆகவில்லை அதற்கிடையில் தன்னை மாமி மாமி என புஸ்பகலா உரிமையுடன் அழைப்பதை ஞானத்தின் உள்மனம் விரும்பிய போதம் இப்படி அழைப்பதற்கு ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ என எண்ணிக் கொண்டவளுக்கு ஞானமும் இவளும் ஒருவரையொ விரும்புகிறார்களோ என யோசிக்கத் தொடங்கியவள் என்னதான் ஒன்றாகப் படிப்பவர்களாக இருந்தாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளை தன்னோடு படிக்கும் ஆம்பிளைப்பிள்ளையை வருத்தம் பார்க்க வருவது என்பது இன்iறைய சமூகத்தில் சாதாரண விடயமல்ல எனவும் சிந்திக்கத் தொடங்குகிறாள்..
ஞானம்,புஸ்பகலா,ஞானத்தின் தாய் மூவரும் விறாந்தையிலிருந்து ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த நேரம் பார்த்து அம்பனை வயலில் தோட்ட வேலைகளை முடிச்சு ஞானத்தின் தகப்பன் வீட்டு முற்றத்தில் வந்து நின்று ஒரு பொம்பிளைப் பிள்ளை விறாந்தையிலிருந்து சாப்பிடுவதைக் கண்டதும் இந்தப் பிள்ளை யாராக இருக்கும் என யோசித்தவர் கல்லூரிச் சீருடையிலிருக்கும் பிள்ளையாதலால் ஞானத்துடன் படிக்கும் சக மாணவிதான் என நினைச்சுக் கொள்கிறார்.
(தொடரும்)
![]()