பத்துவயதில் வானொலிக் கலையகம் பிரவேசித்து, உலகெங்கும் நேயர்களை சம்பாதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத்! …. முருகபூபதி.

கடந்த ஜூன் மாதம் முதல், தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டிருந்தமையால், வாசகர்களுடன் பகிர்ந்துகொண்ட முதல் சந்திப்பு தொடரை கடந்த மூன்று மாத காலம் எழுத முடியாமல் போய்விட்டது.![]()
எழுத்துலகில் தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கும் என்னை, மீண்டும் குறிப்பிட்ட தொடரை எழுதத்தூண்டிய ஒரு வழிப்போக்கன் பற்றியே இந்தப்பதிவில் சொல்கின்றேன்.
தான் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் மாத்திரமே என தன்னடக்கத்தோடு சொல்லிவந்திருப்பதுடன், கடந்த அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தனது பயணத்தில் சந்தித்த சாதாரண மனிதர்கள் தொடக்கம் பேராளுமைகள் வரையில் தனது மனப்பதிவுகளை எழுதியிருக்கும் எமது இனிய அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் எழுதியிருக்கும் நூல், நான் வதியும் கடல் சூழ்ந்த கண்டத்தில் பரவலாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் தருணத்தில் இதனை எழுதுகின்றேன்.![]()
பாடசாலைப்பருவத்தில் அரைக்காற் சட்டையுடன் இலங்கை வானொலி கலையகம் பிரவேசித்து, படிப்படியாக எவ்வாறு வானொலி – தொலைக்காட்சி ஊடகங்களில் தன்னை வளர்த்துக்கொண்டார் என்பதை விளக்குவதே அவர் எழுதியிருக்கும் நூல். இவரின் குரல் மேற்குறித்த ஊடகங்களில் மாத்திரமன்றி, திரைப்படங்களிலும் விமானங்களிலும் ஒலித்தது !
அவரது நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பின்னர் விரிவாக எழுதுவேன்.
1968 களில் நான் எனது பாடசாலைப் படிப்பினை முடித்துக்கொண்டு, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை வானொலியில் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களின் மதுரமான குரலைக்கேட்டேன்.
நீர்கொழும்பில், எங்கள் வீட்டருகில் வசித்த ஜோசப் மாஸ்டர், “ அப்துல் ஹமீத், தன்னுடைய பாடசாலையில் தனது அபிமானத்துக்குரிய மாணவன் “ என்று பெருமையோடு சொல்வார்.
வானொலியில் அப்துல் ஹமீதின் தெளிவான தமிழ் உச்சரிப்போடு தனது உச்சரிப்பினை ஒப்பிடும், எங்கள் ஊர் பெரும்பான்மை மக்களின் தமிழ் உச்சரிப்பில் பேசும் ஜோசப் மாஸ்டர், “ ஹமீத் ஒரு இஸ்லாமிய சமூகத்திலிருந்து வந்த பிள்ளையாகவிருந்தாலும், அவர்களின் கொழும்புத்தமிழ் பேசாமல், என்ன அழகாக தேன்வந்து காதில் பாய்வதுபோன்று பேசுகிறான் பாரும் “ என்பார் ஜோசப் மாஸ்டர்.
தினமும் இலங்கை வானொலியில் நாம் கேட்டுவந்த மதுரமான குரலுக்குச்சொந்தக்காரரை முதல் முதலில் வானொலி கலையகத்தின் வாசலில்தான் 1972 ஆம் ஆண்டு சந்தித்தேன்.
இவரை எனக்கு அன்று அறிமுகம் செய்துவைத்தவர் மற்றும் ஒரு அறிவிப்பாளரான நண்பர் வி. என். மதியழகன்.
மதியழகன் நடத்திய சங்கநாதம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நான் சென்ற சமயம் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
அப்துல் ஹமீத் அக்காலப்பகுதியில் நடத்திவந்த பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி, இலங்கையில் தமிழ் நேயர்கள் வாழும் இல்லங்களில் மாத்திரமன்றி கடல் கடந்து தமிழகத்திலும் ஒலித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் ஊர் இளம் பாடகர் விஜயரத்தினம் என்பவரை வான் அலைகளில் முதல் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை பற்றி நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
பாட்டுக்குப்பாட்டு போட்டியில் இறுதிச்சுற்றில் தெரிவான விஜயரத்தினத்திற்கு ஒரு புத்தம் புதிய வானொலிப்பெட்டி பரிசாக கிடைப்பதற்கும் வழிசமைத்தவர்தான் இந்த அன்பு அறிவிப்பாளர்.
எதிர்பாராத வகையில் அந்த இளைஞர் 1975 ஆம் ஆண்டு, ஒரு கொலைக்குற்றத்திற்காக கைதாகி சிறைசெல்லநேரிட்டு, யாழ்ப்பாணத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கே பாட்டுக்கு பாட்டு விஜயரத்தினம் என்றே அறிமுகமாகியிருந்தார். சக கைதிகள் மத்தியில் அவர் பாடினார்.
அவரது நன்னடத்தையினால், வெகுவிரைவில் விடுதலையாகி வந்தபின்னரும், எங்கள் ஊர் நிகழ்ச்சிகளில் பாடிக்கொண்டிருந்தார்.
தன்னை பாட்டுக்குப்பாட்டு மூலம் அறிமுகப்படுத்திய பி. எச். அப்துல் ஹமீத் அவர்களை என்றென்றும் நன்றியுடன்
நினைவுகூர்ந்தவாறிருந்த அந்த இளம் கலைஞர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார்.
எனினும், எங்கள் நீர்கொழும்பூரில் அந்த விஜயரத்தினம் என்ற இளம் பாடகரின் பெயருக்கு முன்னால் அப்துல் ஹமீத் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பாட்டுக்குப்பாட்டு நிலைத்திருக்கிறது.![]()
“ பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் மட்டும் என்னை இனம்காண்பதை நான் விரும்பவில்லை. இது என்னுடைய தாழ்மையான கருத்து. க. பொ. த. உயர்தர மாணவர்களுக்காக நட்சத்திர அறிவுக்களஞ்சியம், பரராஜசிங்கம் அவர்கள் நடத்திய இலக்கிய தரத்தினைக்கொண்ட இதய ரஞ்சனி என்பன அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருந்தன. ஆனால், குளியலறை சங்கீத ஞானமுடையவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற நோக்குடைய நிகழ்ச்சியாகவே பாட்டுக்குப்பாட்டினை ஆரம்பித்தோம். எத்தனையோ கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். புதிய இசையமைப்பாளர்கள் உருவானார்கள். அவர்களுக்கு இரசிகர்கள் உருவானார்கள். இதற்கு அடித்தளம் அமைத்தது பாட்டுக்குப்பாட்டு. “ என்று இதன் ரிஷிமூலத்தை சொன்னவர் எங்கள் அன்பு அறிவிப்பாளர்.![]()
“ என்னை உலக அறிவிப்பாளர் என்று பலர் சொல்கிறார்கள். உலக அறிவிப்பாளர் பட்டத்துக்கும் கஞ்சிப்பானை இம்ரானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கஞ்சிப்பானை இம்ரான் என்ற பெயரை யாரோ வைத்தார்கள். அதை பலரும் வழிமொழிந்தார்கள். உண்மையில் கஞ்சிப்பானைக்கும் இம்ரானுக்கும் எந்த தொடர்புமில்லை. அதைப் போல உலக அறிவிப்பாளர் என்று யாரோ ஒருவர் சொல்ல, அதை எல்லோரும் வழிமொழிகிறார்கள். ஆனால், நான் உலக அறிவிப்பாளர் அல்ல. உலக நாடுகள் பலவற்றுக்கும் போயிருக்கிறேன். ஆனால், உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. ”
இவ்வாறு மிகுந்த தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்துபவர்தான் உலகெங்கும் நேயர்களைக்கவர்ந்த இந்த அன்பு அறிவிப்பாளர்.
அப்துல் ஹமீதின் தன்னடக்கமே அவரது பெரிய பலம். அத்துடன் மற்றவர்களுக்கும் முன்மாதிரியானது.
பல வருடங்களுக்கு முன்னர் கே. எஸ். பாலச்சந்திரன் கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற புதினத்தை எழுதியிருந்தார்.
இதற்கு முன்னுரை எழுதியவர் அப்துல் ஹமீத். இந்தப்புதினம் எனக்கு படிக்கக் கிடைக்காத அக்காலப்பகுதியில் அந்த முன்னுரை தமிழ்நாடு சுபமங்களா இதழில் வெளியாகியிருந்தது.
அதுவரையில் எனக்கு அறிவிப்பாளராகவே தென்பட்டிருந்த அப்துல் ஹமீதின் இலக்கிய ஞானம் பெரு வியப்பாகவிருந்தது. தாமதிக்காமல், இவருடைய தொலைபேசி இலக்கம் தேடிப்பெற்று எனது வாழ்த்துக்களை சொன்னேன்.
2007 ஆம் ஆண்டு கனடாவில் கே. எஸ். பாலச்சந்திரனை சந்தித்தபோது அவரிடத்திலும் சிலாகித்துச்சொன்னேன்.![]()
பிரித்தானியா உலகத் தமிழ்க் கலையகத்தின் இயக்குநர்கள் எஸ்.கே. ராஜென் மற்றும் சுந்தரம் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் 2004 இல் வெளியிட்ட கலையமுதம் சிறப்பு மலரில் அப்துல் ஹமீதின் சிறப்பியல்புகள் பற்றி, பலரும் எழுதியிருக்கும் பதிவுகள் குறிப்பிடத்தகுந்தன. வானலைகளில் வலம் வரும் இந்த வழிப்போக்கனின் ஆளுமைப்பண்புகளையும் தன்னடக்கத்தையும் அந்த சிறப்புமலரில் நாம் தெரிந்துகொள்ள முடியும்.
எழுத்தாற்றலும் இலக்கியவுணர்வும் மிக்க அப்துல் ஹமீதிடமிருந்து மேலும் பல நூல்களை நாம் எதிர்பார்க்க முடியும்.

![]()