“பக்கம் பக்கமாய்” …. சிறுகதை ….. சோலச்சி.

சைக்கிள் கடை வைத்திருக்கும் மாரியப்பன், ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வீதம் சைக்கிள்களை வாடகைக்கு விட்டு வந்தார். சாயந்தர நேரத்திலும் விடுமுறைக் காலங்களிலும் சைக்கிள் ஓட்ட கத்துக்குறதுக்காக சிறுவர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும்.
சிறுவர்கள் ஓட்டுவதற்கென்றே சின்ன சைக்கிள் இரண்டு வைத்திருந்தார். சின்ன சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்து ஓட்டுவதும் பெரிய சைக்கிளில் சீட்டை ஒரு கையிலும் கைப்பிடியை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு விக்குவிக்குயென ஓட்டுவதென்பது தனி சுகம்தான். மண் சாலையில் புழுதி பறக்க ஓட்டி மகிழ்ந்தனர்.
குரங்குபெடல் போட்டு ஓட்டி கீழே விழுந்து பலருக்கும் முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டதுண்டு. யாராவது சைக்கிளிலிருந்து கீழே விழுந்து நொண்டுனாலோ அல்லது அழுதாலோ “காயம்படாம ஓட்டுறதுக்கு இது என்ன எலிக்காப்டரா… நாலு பேரு வயித்தக் கிழிச்சாதான் நல்ல டாக்டராவே ஆக முடியும். நாலுதடவ விழுந்து எந்திரிச்சாதான் நல்லா ஓட்ட முடியும்…” என பெரியவர்கள் நக்கல் செய்வதுண்டு.
நண்பர்களோடு சேர்ந்து வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவதற்கு பழகிக்கொண்டான் பேரறிவாளன். யாராவது சைக்கிளை அவனிடம் கொடுத்து கடையில் பொருள் வாங்கிவரச் சொன்னால் போதும்…. சைக்கிளை மிதித்துக்கொண்டு கைகளை விரித்தபடி சிட்டாய் பறந்து செல்வான். ஆளே இல்லாவிட்டாலும் கினிங்கினிங்கென்று சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு காற்றில் மிதந்து செல்வான். சைக்கிள் ஓட்டுறதுங்கிறது ஏரோபிளேன் ஓட்டுறதுமாறி. சைக்கிள் மட்டும் இருந்துச்சு இந்த உலகத்தையே சுத்தி வந்துருவேன் என்பான்.
இவன் சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர்களே இல்லை. காற்றைக் கிழித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை நாம் உணர முடியும். சைக்கிளும் காற்றும் மோதும்போது ம்யிங்…ங் ம்யிங்…ங்….என சத்தம் நம் காதுகளை கிழித்தெடுக்கும்.
“எந்தச் சிரிக்கியோட வலயில சிக்கப் போறானோ… ஒரு எடத்துல இருக்க மாட்டேங்கிறான். வண்டு மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும்
ஓடிக்கிட்டே இருக்கான். ஏன்டி…. செல்வி… எத்தன மாசத்துலடி இவனப் பெத்துப்போட்ட… ம்…. ஊருக்குள்ள இருக்குற புள்ளைகளப் பாரு…ஓம்மயன் இருக்க அழகப் பாரு. ஓம்மவனுக்கு நெதமும் திட்டி சுத்திப் போடுடி. ஊரு கண்ணே அவன்மேலதான் மண்டிக் கெடக்குது..” பக்கத்து வீட்டு அமிர்தம் சொன்னாள்.
“நீ சும்மாரு அயித்த. எப்பப் பாத்தாலும் அதயேதான் சொல்லிட்டு இருப்பே. இது காதா இல்ல வேறெதுவும் மிசினா…. கேட்டுக்கேட்டு காதே சிவ்வுனு இருக்குது. சைக்கிளு ஓட்டுறது அவனுக்கு புடிக்குமுனு தெரிஞ்சுக்கிட்டு ஊருல உள்ளவுக எல்லாதும் சைக்கிள கொடுத்து வேல வாங்குறானுக. ஏம் புள்ள என்ன ஓடும் புள்ளயா. ஊருக்கு ஒழைக்கவா பெத்துப் போட்டுருக்கேன். இந்த வருசம் பத்தாங்கிளாசு முடிச்சுறட்டும். மேல படிக்கிறதுக்கு அசலூருக்குத்தானே போகனும். எப்பாடுபட்டாவது நல்ல உருப்படியான சைக்கிள பாத்து அப்போதைக்கி வாங்கி கொடுத்துப்புடுறேன்..” செல்வி சொன்னதுபோல் பேரறிவாளன் பதினோறாம் வகுப்பு சேர்ந்ததும் முதல் வேலையாக சைக்கிளை வாங்கிக் கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் செல்வி.
“ஏய்யா… வம்பாடுபட்டு உனக்காக ஒழச்சு வாங்குன சைக்கிளுய்யா. இதுல மகாராசா மாறி சும்மா ஜம்முனு போய்யா…. இனி யாராச்சும் சைக்கிளக் கொடுத்து வேல வாங்கட்டும். அப்ப வச்சுக்குறேன்….” பேரறிவாளனை உருவி முத்தம் கொடுத்தாள் செல்வி.
கூடலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் பிலாக்குடியில் உள்ள பள்ளியில்தான் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படித்து வந்தான். பொருளியல் பாடப்பிரிவு மாணவர்கள் ஆங்கில வகுப்புக்கு மட்டும் அறிவியல் பாடப்பிரிவு வகுப்பறைக்கு வந்து விடுவார்கள். ஆங்கில ஆசிரியர் ஒருவர் மட்டும் இருந்ததால்தான் இந்த இணைப்பு வகுப்பு. பொருளியல் பிரிவு மாணவர்கள் பெஞ்சில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்தார்கள். பெஞ்சில் இடமில்லாதவர்கள் தரையில்தான் அமர்ந்தனர்.
அப்போதெல்லாம் பொருளியல் படிக்கும் சங்கீதா முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பேரறிவாளன் இருக்கைக்கு கீழே அமர்ந்து கொள்வாள். அவளின் பார்வை ஆசிரியர் பக்கம் என்றாலும் சிந்தனை பேரறிவாளனைப் பற்றியதாகவே இருக்கும்.
அவள் தனது இடது கையால் பேரறிவாளன் கால்களை வருடிக்கொண்டே இருந்தாள். அவன் இடமாறி உட்கார்ந்தாலும் லாவகமாக நகர்ந்து அவனருகே சென்று விடுவாள்.
” ஏம்பா…. ஒரு எடத்துல இருக்கமாட்டியா. அங்கிட்டும் இங்கிட்டுமா நகர்ந்துக்கிட்டே இருந்தா. நா ஒன்னப் பாக்குறதா…? இல்ல பாடத்த நடத்துறதா..? வெளியில போயி முழுக்கால் சட்டையில எதுவும் பிரச்சினைனா சரிபண்ணிக்கிட்டு அடுத்த கிளாசுக்கு வா. என்னப்பா சொல்லிக்கிட்டே இருக்கேன். வயசுக்கு வந்த புள்ளமாதிரி தலகுனிஞ்சு நிக்கிற. நீ போறீயா… இல்ல நா போகவா.” கலாவதி டீச்சரின் சத்தம் அதிகமாயிருந்தது. நிசப்தமாக இருந்த வகுப்பறையிலிருந்து வெளியேறி கதவு ஓரமாய் நின்றுகொண்டு இருந்தான்.
வழியில் செல்லும் ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் இவனைப் பார்த்துக்கொண்டே சென்றதால் அவமானமாக கருதினான்.
ஆசிரியர்கள் சிலர், “என்னப்பா… வெளியில நிக்கிற. சொல்லுப் பேச்சு கேக்கமாட்டியோ… நல்ல புள்ளைனுலோ நெனச்சோம். படிக்கிறதக்காட்டியும் ஒனக்கு வேறென்ன வேலை கெடக்கு… கண்ண மூடிக்கிட்டு படிச்சா… ரெண்டு வருசம் குடுகிடுனு ஓடிப் போயிரும்…” என்று அறிவுரை சொல்லிச் சென்றனர். உதடுகளைச் சுருக்கியும் பிதுக்கியுமாக சிரித்துக் கொண்டான்.
“வெலகி வெலகிப் போனாலும் அந்தப் பொண்ணு எதுக்கு நமக்கிட்டயே வருது. நம்ம குடும்பம் இருக்க நெலமயில அதுவும் இந்த வயசுல அது ஒன்னுதான் கொறச்ச. சட்டில திங்கிறதுக்கே ஒன்னும் இல்லையாம். இதுல சட்டத்துணிக்கி எங்கே போறதாம்ங்கிற கணக்கா நம்ம பொழப்பே இருக்குது…” தனக்குள்ளேயே பேசிக்கொண்டான் பேரறிவாளன்.
இணைப்பு வகுப்பு பேரறிவாளனுக்கு தர்மச்சங்கடத்தை உண்டாக்கியது. கலாவதி டீச்சரிடம் சங்கீதாவைப் பற்றி ஒருமுறை கூட புகார் சொன்னதே இல்லை. “படிக்க வந்த எடத்துல நல்லதும் கெட்டதும்னு நாலும் இருக்கத்தான் செய்யும். நாமதான் கருத்தா இருக்கனும். இல்லன்னா காத்தோ கருப்போ களவாண்டுக்கிட்டுப் போயிரும். ஒருத்தர ஒருத்தரு புகார் சொல்லி என்ன பண்ணப் போறோம். அந்தப் பொண்ணு தானாப் புருஞ்சுக்கும்” தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.
“பொம்பளப் புள்ளைககிட்ட சூதானமா பழகனும்ப்பா. வேணுமுனே இல்லாதும் பொல்லாதும் பழிச்சொல்லும் வரும். நாமதான் எதுலயும் சிக்கிறக் கூடாது. பொம்பளப் புள்ள பாவம் சும்மா விடாது. ஆம்பளப் புள்ளையோ பொம்பளப் புள்ளையோ… ரெண்டு பேருமே ஒன்னுதான். யாரு மனசயும் கலங்கப்படுத்திடாம நல்லபடியா படிச்சுட்டு வந்துரு
சாமி.” செல்வி சொன்னதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டான்.
இருவரது வகுப்பறையும் எதிரெதிரே இருந்தது. அவளது வகுப்பறைச் சன்னலிலிருந்து இவனைப் பார்த்துக் கொண்டே இருப்பதை பெரும் பாக்கியமாக கருதினாள். உதடுகளைக் கடித்து கண்களால் அவனை உறிஞ்சிக்கொண்டு இருந்தாள். யதார்த்தமாய் சன்னல் பக்கமாய் திரும்பினாலும் பூவுக்குள் நுழைந்த வண்டாய் தேனினும் இனிய அவனது செயல்களை பருகிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் பூட்டிக்கிடக்கும் அந்தத் தவிப்பினை அவனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவனும் என்ன ஏதுயென்று அவளிடம் கேட்கவில்லை.
எப்படியாவது அவளிடம் பேசி… அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என பல நேரங்களில் நினைத்தாலும்… எதுக்கு.. நாம ஏதாவது கேட்கப்போயி வில்லங்கத்துல முடிஞ்சிட்டா… சும்மாக் கெடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிற கதையா முடிஞ்சுரும்.. என நினைத்து தானாக பேச நினைப்பதிலிருந்து ஒதுங்கிக் கொண்டான்.
நண்பர்கள் அவனை பேசுடா….போய்ப் பேசுடா… என்னதான் அந்தப்புள்ள சொல்லுதுனு பாப்போம். இப்பப் பேசாம வேற எப்ப பேசுறதாம். எங்கள எந்தப் புள்ளையாச்சும் அப்புடி பண்ணுதுகளா..” எனக் கட்டாயப்படுத்தினர்.
“அதெல்லாம் ஒன்னும் இருக்காதுடா… அப்புடியே இருந்தாலும் இது பட்டிக்காடுடா. பன்னண்டாவது படிச்சவொடனயே அந்தப் புள்ளய எப்புடியும் யாருக்காவது கட்டிக் கொடுத்துருவாங்க. அப்பதான்டா நமக்கு பதினெட்டு வயசே ஆரம்பிக்கும். எனக்குச் சோறு போடுறதுக்கே எங்க அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் நாக்கு தள்ளுது. இந்தக் கெரகத்துல இது வேறயா.. அந்தப் பொண்ணுக்கு ஏதோ ஒன்னு என்கிட்டப் புடுச்சுருக்கு. அத அப்புடியே விட்ருவோம்டா… இது படிக்கிற வயசுடா..” பேரறிவாளனின் கருத்து அனைவருக்கும் நியாயமானதாக தோன்றினாலும் அரைகுறை மனசோடு ஆமாம் போட்டனர்.
“அப்புடினா அந்தப் பொண்ணுக்கிட்ட ஏம்மனசுல ஒன்னுமே இல்லனு உண்மையச் சொல்லிற வேண்டியதுதானே. நா வேணா போயி சொல்லவா…” ஞானேஸ்வரன் குறுக்கிட்டான்.
“மாப்ள, அதுக்கான வாய்ப்பு அமையும்டா. நீபாட்டுக்குப் போயி தூண்டில போட்டு தண்ணிப்பாம்ப கொண்டு வந்துறாத” என தட்டிக்கழித்தான் பேரறிவாளன்.
அந்த ஆண்டு நடக்க இருக்கும் ஆண்டு விழாவுக்கான போட்டிகள் மாலை நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. யார்யார் என்னென்ன போட்டிகளில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“என்னங்க… நீங்கதான் பாட்டுப்புத்தகம் பைண்டிங் பண்ணி நெறைய வச்சுருக்கீங்கள்ள. அதக் கொடுக்குறீகளா… பாட்டுப் போட்டில சேந்திருக்கேன்” சங்கீதாவின் குரல்கேட்டு மறுப்பேதும் சொல்லாதவனாய் தலையாட்டினான்.
“மாப்ள… என்னடா சொன்னுச்சு. நீ என்ன சொன்ன…” நண்பர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் உண்மையைச் சொன்னான்.
“ம்….அவ்ளோதானா… இருந்தாலும் இந்த விசயத்துல எப்புடி நம்புறதுனுதான் தெரியல…” நண்பர்களின் செயலுக்கு பிறைநிலவாய் சிரித்து முற்றுப்புள்ளி வைத்தான். மறுநாள் காலையில் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தபோது முழுநிலவாய் உதடுகளை விரித்து பற்களால் வசியம் செய்தாள்.![]()
ஆசிரியர் வராத பாடவேளையில் பாட்டுப்புத்தகத்தை வைத்து பாடிக்கொண்டு இருந்ததை பல நேரங்களில் சங்கீதா பார்த்திருக்கிறாள். அவன் பாடும்போது அசையும் உதடுகளை தூரத்திலிருந்தே மென்று விழுங்கினாள்.
பாட்டுப் போட்டியில் பேரறிவாளனும் கலந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு வகுப்புக்கான பாட்டுப்போட்டி தொடங்கி நடந்துகொண்டு இருந்தது. மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாய் பாடிக்கொண்டு இருந்தனர். தங்களுடைய நண்பர்கள் பாடும்போது கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். தெம்மாங்குப் பாடல்களும் சினிமாப் பாடல்களும் நிறையப் பாடினர். ஒருசில மாணவர்கள் பாரதியார் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் பாடினர்.நிறைவாக மேல்நிலை வகுப்புகளுக்கான பாட்டுப்போட்டி தொடங்கியது.
வரிசைப்படி பெயர் கூப்பிட ஒவ்வொருவராக பாட ஆரம்பித்தனர். பேரறிவாளனை அழைத்தபோது அவனது நண்பர்களோடு சேர்ந்து சங்கீதாவும் கரவொலி எழுப்பினாள். ஒருசிலர் விசில் அடித்தனர். உடற்கல்வி ஆசிரியரோ விசிலை சத்தமாக ஊதி “இது என்ன பள்ளிக்கூடமுனு நெனச்சிகளா..? இல்ல ஊருநாட்டுல வைக்கிற
பாட்டுக் கச்சேரினு நெனச்சிகளா.. யாரும் விசிலடிக்காத” என சத்தம்போட்டார். நம்மளச் சொல்லிட்டு அவரு மட்டும் அடிக்கிறாரு. எப்படியோ நமக்குப் பதிலா சாரு அடிக்கிறாருல.. அது போதும் என சிலர் முணுமுணுத்தனர்.
சங்கீதாவைப் பார்த்து “என்னடி.. உதடு ரொம்ப சில்லுனு இருக்கு.” என அவளது தோழிகள் கேட்டதை அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
“பச்சமலப் பூவு நீ உச்சிமலைத் தேனு…. குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…. அழகே பொன்னுமணி…. சிரிச்சா வெள்ளிமணி….” கிழக்குவாசல் கார்த்திக் படப் பாடலை….பேரறிவாளன் பாடும்போது அவளும் முனுமுனுத்தாள். அவனைத் தொடர்ந்து நான்கைந்து பேர் பாடினர்.
சங்கீதா பாட ஆரம்பித்தாள். அவளின் பார்வை முழுவதும் பேரறிவாளனை நோக்கியே இருந்தது.
“இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை தொட்டிலில் கட்டி வைத்தேன்….
அதில் பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்….” நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து பாடினாள். பேரறிவாளனின் நண்பர்களில் ஒருவன் கைகளைத் தொட்டிலாக்கி ஆட்டிக் கொண்டிருந்தான்.
”சும்மா இருங்கடா… பிஈட்டி சார் பாத்தாருன்னா பொம்பளப் புள்ளைங்க முன்னாடி அசிங்கப்படுத்திப்புடுவாரு..” மெல்லியதாய் சத்தமிட்டுக் கொண்டே இருந்தான் பேரறிவாளன்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பேரறிவாளனிடம் வாங்கிய பாட்டுப் புத்தகத்தை கொடுத்தாள். அவளின் கண்கள் இளகிய பனியை ஒத்து இருந்தது. அவளின் உதடுகளில் முல்லை மலர்களை பூக்கச் செய்து நகர்ந்து சென்றாள். அவள் கண்களின் ஒளியை அவன் மீது பாய்ச்சினாள். அவன் சற்று நிதானம் தவறினாலும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றான்.
”மாப்ள கொடுடா. அதுல என்ன இருக்குனு பாக்குறேன்…” வெடுக்கென பறித்தான் சுப்பிரமணி. ஒவ்வொரு பக்கமாக புரட்டினான். அதில் ஒன்றுமில்லை என்று உதடுகளைப் பிதுக்கினான். கடிதம் ஏதாவது இருக்கும் என்ற நினைப்பில்தான் வாங்கியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பாட்டுப் புத்தகத்தை வாங்கிய பேரறிவாளன் ஒவ்வொரு பக்கங்களையும் காற்றில் விரிய விட்டான். அதிலொரு பக்கம்
அதிகம் பயன்படுத்தியதற்கான அடையாளத்தோடு இருந்தது. உற்றுப் பார்த்தான். அந்தப் பக்கத்தில் முன்று நட்சத்திர குறியீடுகள் இட்டு வட்டமிட்டு இருந்தது. வட்டத்தின் மேல் பறவைகள் இரண்டு பறப்பது போல் குறியீடும் இருந்தது.
”எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாட்டு. இப்படிக்கு எஸ்.ஜி. என்பது ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. சங்கீதா என்பதைத்தான் அப்படி எழுதியிருந்தாள்.
”வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள… சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…” யாரோ அவனுக்குள் பாடுவது போலிருந்தது.
இவனைத் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற அவளது கண்கள் இரண்டும் குறி பார்த்து அவனைக் குத்திவிட்டு துள்ளி நடனமாடிக் கொண்டிருந்தன. பேரறிவாளனின் இதயம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாய் துடித்தது. தனது வலது கையை நெஞ்சில் வைத்து சாந்தப்படுத்திக் கொண்டான்.
நாட்கள் கடந்தன. பள்ளிக்கூடம் விட்டு வந்த அவனிடம் கடிதம் வந்திருப்பதாக அவன் அம்மா செல்வி சொன்னாள்.
“நமக்கு கடிதமா… ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. நமக்கு கடிதம் எழுதுற அளவுக்கு யாரு இருக்கா..,? சன்னலில் இருந்த உறையிடப்பட்ட கடிதத்தை எடுத்தான். அனுப்புநர் முகவரி வெற்றிடமாக இருந்தது. பிரித்துப் பார்த்தான். முத்துகளை கோர்த்து அதில் எழுத்துகளைச் செதுக்கி இருந்தன. கடிதத்தை சங்கீதாதான் எழுதியிருந்தாள். வாசிக்க ஆரம்பித்தான். மறுபடியும் மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தான். அவளின் கருவிழிகள் தன்னைத் தாங்கியிருப்பதாக உணர்ந்தான்.
பிரியாதிருப்பாய் என்று நம்பி ப்ரியமுடன் உன்னுள் வாழ ஏங்கும் உனக்கான சங்கீதா…
கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி உன்னை ரசிக்கும் என் கருவிழிகளை காணாததுபோல் கடந்து போகும் உன்னைக் நாள்தோறும் கனவில் காற்றோடு கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்கின்றேன். கால்களைச் சுரண்டும் போதெல்லாம் கட்டெறும்பு கடிப்பதாய் இடம்மாறி அமருகிறாய். உன்னுள் வாழ துடிக்கும் என்னை எவ்விடத்தில் வைத்து அழகுபார்க்க எண்ணுகிறாய் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குழுவில் நீயும் இருக்கிறாய் என்பதை நானறிவேன். நம் மாணவர்கள் மலையக்கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதாக அறிந்து உன்னைக் காண ஒற்றை ரோஜாவை தலையில் சூடாமல் கைகளில் தாங்கி வந்தேன். பூ வைக்காத என் தலையைப் பார்த்து என் தாய் திட்டிக்கொண்டே வந்தாள். உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் அந்தப் பூவைச் சூட வேண்டும் என்று நான் எண்ணியிருந்ததை என் தாயிடம் எப்படிச் சொல்வேன்.
உன் நண்பர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து பேசினார்கள். அவர்களுக்கும் தெரிந்திருக்கும் நான் உன்னைக் காண்பதற்காகத்தான் வந்தேன் என்று. உனக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை. திருவிழாவில் கூட்ட நெரிசலாக இருந்தபோதும் என்னுள் அவை அனைத்தும் வெற்றிடமாகவே தென்பட்டது.
உன் வருகை இல்லாத திருவிழா வெறிச்சோடி காணப்பட்டது. உன் விடுப்புக்கான காரணத்தை உன் நண்பர்களும் அறியாதவர்களாகவே இருந்தனர். வெற்றுக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி வெறுமையை சுமந்துகொண்டு அந்த ரோஜாவை படியொன்றின் ஓரமாய் வைத்தேன். சிறுமி ஒருத்தி ஓடி வந்து அதைச் சூடிக்கொண்டு சிரித்தபடி சென்றாள். அந்தச் சிரிப்பில் நாம் மகிழ்ந்திருந்தோம்.
பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் நீ எழுதி வைத்திருந்த முகவரியை பத்திரப்படுத்தி வைத்திருந்ததால்தான் என்னால் மடல் எழுத முடிந்தது. பக்கம் பக்கமாய் அமர்ந்தபோதும் பக்குவமில்லாதவனைப் போல் காட்டிக்கொள்ள முயல்கிறாய். உரக்கச் சிரிக்கும் உன் அழகில் உறங்கிக் கிடக்கும் என்னை உன்னுள் அணைத்துக்கொள். கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டும் உன் கரங்களை மெல்லப் பற்றிக்கொண்டு மிதக்கும் என்னை உன்னுள் மூழ்கவிடு. சொந்தமாய் பாட்டெழுதி சந்தம் போட்டு சத்தமில்லாமல் உன் நண்பர்களிடத்தில் பாடும் அந்த சந்தடிக்குள் நீந்த துடிக்கும் என்னை ஏந்திக்கொள். விரட்டி விரட்டி உன்னைக் கவ்விக்கொள்ள துடிக்கும் அந்தக் கண்களுக்குள் என்னைக் காத்துக்கொள்….
பிரியாதிரு பிரியமே
ப்ரியமுடன்
உன்னுள் வாழும்
சங்கீதாபேரறிவாளன்.
ஒவ்வொரு சொற்களிலும் உயிரோட்டமாய் அவள் கலந்திருந்தாள். அந்தக் கடிதம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதினான். அப்படி பாதுகாத்தால் ஏற்றுக் கொண்டதாக அல்லவா கருதப்படும். நாளை நேரில் பார்த்து அவளது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதாக சொல்லிவிடுவதுதான் சரியாக இருக்கும் தனக்குள் எண்ணினான். விதைக்குள்ளிருந்து வெடித்த துளிராய் முகம் சிரித்தது.
”சாமி…. என்னக்கடிதாசிப்பா அது”
”பழைய கொஸ்டீன் பேப்பர என் ப்ரண்டு அனுப்பிருக்காம்மா…”
”ஏதோப்பா… நா என்ன படிச்சா இருக்கேன். ஓந்…தங்கச்சிக ரெண்டும் ஒன்ன நம்பிதான் இருக்குதுக. வித்து கட்டிக் கொடுக்குற அளவுக்கு பெருசா நமக்கிட்ட என்ன இருக்கு. ஓட்டக் கலப்பயும் ஒட்டிப்போன வயித்தோட தொத்த மாடு ரெண்டும்… காலா நடுக ஒரு நாத்தங்காலும்தான் இருக்கு. ஊருஒலகம் சிரிச்சுப்புடாம கெட்டிச் சமத்தா படிச்சுக்கய்யா…”
வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றான். அவன் கடிதம் வந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவளும் அவனைப் பின்தொடர்வதிலிருந்து பின்வாங்குவதாய் இல்லை …….
*************
![]()
காதல் சில சமயம் யாருடைய எதிர்ப்பும் இல்லாமலே பிரிவை சந்திக்கும் .
என் மனம் அந்த உண்மை காதல் சேர்ந்து இருக்க கூடாத என்று ஏங்க வைத்தது உங்கள் உயிரோட்டமான வரிகள்.
சிறப்பு ஐயா! இந்த கதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கடந்த கால பள்ளிப்பருவம் கண்டிப்பாக கண்முன் காட்சியாக தோன்றும். படித்து முடிக்கின்ற போது ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுவர்.
சிறந்த காதல் கதை கடிதம் அபாரம் காதலிக்காமல் யாரும் இருந்திருக்க
முடியாது என்பதை வெளிப்படுத்தும்விதம் அழகு
நல்வாழ்த்துகள்