“ஆகச் சிறந்தவன்” …. சிறுகதை …. சோலச்சி.

மருத்துவமனையில் லோகநாதன் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து ஓட்டலில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த சிவா கண்ணீர் மல்க ஓடி வந்தான்.![]()
உடலெங்கும் காயங்கள். உடலில் ஆங்காங்கே கட்டு போடப்பட்டிருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் லோகநாதன் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆக்ஸிஜன் வாயு மூலமாக சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மயக்க நிலையில் உறங்கிய லோகநாதனை கதவில் பொருத்தப்பட்ட கண்ணாடி வழியே பார்த்த சிவா பேயறைந்தவன் போல் நின்றான்.
சிறிது நேரம் லோகநாதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிவா சுவற்றில் தலை சாய்த்து கண்ணீர் மல்க அண்ணா….அண்ணா…. என்று கதறினான். சிவாவின் கைகளைப் பிடித்த பெரியவர் ஒருவர் வரண்டாவிலிருந்த நாற்காலியில் உட்கார வைத்தார். அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. படபடவென இதயம் துடித்தது. பேச முடியாமல் வாய்குளறியது. பெருமூச்சு விட்டு தெகைப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் பிரம்மை பிடித்தவனைப்போல் உட்கார்ந்திருந்தான். நாலாபக்கமும் தலையைத் திருப்பி எதையோ பார்த்தவன் திடீரென நாற்காலியில் தனது கால்களை அகட்டி தலையை தொங்கப்போட்டவாறு தேமி அழ ஆரம்பித்தான்.. மூச்சு அடைப்பது போல் இருந்தாலும் தன்னிலை உணர்ந்து அவ்வப்போது கைகளால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
நோயாளிகளைப் பார்க்க வருபவர்களும்…. மருந்து மாத்திரை வாங்கச் செல்வோரும் என கூட்டமானது மீன் சந்தையைப் போல் நசநசவென இருந்தது.
மருத்துவர்கள் யாரைப் பார்த்தாலும் தன் அண்ணனின் நிலையைப் பற்றி கேட்டுக்கொண்டே இருந்தான் சிவா. நர்சுகள், சீட்டில் எழுதி கொண்டுவரும் மருந்து மாத்திரைகளை அவ்வப்போது வாங்கிக் கொண்டுவந்தும் கொடுத்தான்.
”எவ்ளோ சொந்தம் இருந்தாலும் கூடப் பொறந்தவனுக ஆதரவு இல்லனா செரமம்தான். எங்க ஊர்ல கூட ஒருத்தரு, பரம்பர சொத்துல சமமா தம்பிக்கு கொடுக்காம கொஞ்சூண்ட கொடுத்துட்டு ஒதுக்கிப்புட்டாரு. ஏன்னு கேட்டா பொறந்ததுல இருந்து நான்தான் குடும்பத்துக்கு கஷ்டப்பட்டேனுட்டாரு. மூத்தவன் வேல வெட்டி பாக்கும் போது அவன் சின்னப்பயலாதானே இருந்தான். அவனால அப்ப என்ன பண்ண முடியும்னு ஊர்ல உள்ள பெரியவுங்க எவ்ளோ சொல்லியும் மூத்தவரு ஒத்துக்கல. அவுக தம்பியும் ஒருதாயி வயித்துலதானே பொறந்தோம். பொறந்தபொறப்பு இல்லேன்னா போயிரும். நல்லாருக்கட்டும்னு விட்டுட்டாப்புல. மூத்தவரு தீராத நோக்காடு வந்து கெடந்தப்ப, தம்பிக்கிட்ட அடிச்சிப் பறிச்ச அந்த சொத்தா வந்து காப்பாத்துச்சு. அவுக தம்பிதான் அங்கிட்டும் இங்கிட்டும் தூக்கிட்டு போயி உசுர காப்பாத்துனாப்புல. இந்தக் காலத்துல ஒருத்தன் ரெண்டு பேர்தான் புருஞ்சுக்கிட்டு பொழப்புதழப்ப பாக்குறான்”.
”அட… மண்ணுல ஒரு தடவதான் பொறக்கப் போறோம் ஓயாமயா பொறக்கப்போறோம். சிலதுக புரிஞ்சுக்காம தலையில தண்ணியத்தூக்கி ஊத்திக்கிட்டு மொறப்பாடு கட்டிக்கிட்டு பழிபோட்டு திரியுதுக..”
”சொத்துப்பத்து கூட வராதுங்க… சேத்துவச்ச சொந்த பந்தம்தான் கடைசி வரைக்கிம் கூட வரும். இதப் புரிஞ்சுக்கிட்டா எதுக்கு சண்டசல்லு வருது..”
பார்வையாளர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த இருவர் தங்களுக்குள் சொந்தக்கதை வந்தகதை என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எதையும் காதில் வாங்காதவனாய் அவ்வப்போது எழுந்து கண்ணாடி சன்னல் வழியாக லோகநாதனின் கண்களையே உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் உட்காருவதுமாக இருந்தான் சிவா.
சிறிது நேரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு அலறியடித்தபடி மருத்துவமனைக்குள் நுழைந்தாள் வனிதா. வனிதாவின் அலறல் கேட்டு மரங்களில் அமர்ந்திருந்த காக்கைகள் கரைந்துகொண்டே மரத்திற்கு மரம் மாறிமாறி பறந்தன. ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்த நாய் ஒன்று திடுக்கிட்டு எழுந்து ஊ…ஊ…ஊ என ஊளையிட்டது. ஒடிச்சி….அங்கிட்டு ஓடு.. நேரங்காலம் தெரியாமல் எங்கவந்து ஊளையிடுற…. கல்லால் எறிந்து நாயை விரட்டினார் காவலாளி. மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வனிதாவையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வராண்டாவில் உட்கார்ந்திருந்த லோகநாதனைப் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு வாயை முந்தானையால் பொத்தியபடி ஒரு மூலையில் சாய்ந்தாள். அவளையும் மீறிக்கொண்டு அழுகைச் சத்தம் வெளியில் கேட்டது. லோகநாதனின் கால்களைப் பிடித்துக்கொண்டு குழந்தைகள் தேமித்தேமி அழுது கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சிந்தும் கண்ணீர் லோகநாதனின் கால்களை நனைத்துக் கொண்டிருந்தது. குழந்தைகளை தனது கைகளுக்குள் அணைத்துக் கொண்டான் சிவா.
இப்போதுவரை எல்லோரும் தன்னைக் கெட்டிக்காரன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான் லோகநாதன். படிக்கும்போது வகுப்பறையில் முதல் பெஞ்சில் முதல் ஆளாகத்தான் உட்காருவான். யாரைக் கேள்வி கேட்டாலும் முந்திக்கொண்டு பதில் சொல்வான். சரியோ தவறோ தான் முதலில் வாய் திறக்க வேண்டும்.என்பதில் உறுதியாக இருப்பான். மற்றவர்கள் பதில் சொல்லி நல்ல பேர் எடுத்துவிடுவார்களோ என்ற எண்ணம் அவனுக்குள் அதிகமாகவே இருந்தது.
மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளிக்கூடத்தைப் பார்வையிட வந்தார். ஒவ்வொரு வகுப்பறையாக பார்த்துவிட்டு பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவுக்கு வந்தார். வகுப்பில் ஆங்கில ஆசிரியர் முருகையனின் பாட வேளையாக இருந்தது. அவர் ஆங்கிலத்தில் ஆக்டிவ்வாய்ஸ் பேசிவ்வாய்ஸ் இலக்கணம் நடத்திக் கொண்டு இருந்தார். வகுப்பறை கரும்பலகையில் ஐந்து சொற்கள் கொண்ட ஆங்கில சொற்றொடரை எழுதிய அதிகாரி, மாணவர் ஒருவனை சுட்டிகாட்டி வாசிக்கச் சொன்னார். அவன் எழுவதற்குள் லோகநாதன் முந்திக்கொண்டான். தான் சரியாக வாசித்து அதிகாரியிடம் நல்ல பேர் வாங்கிவிட்டோம் என்ற நினைப்பில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அதிகாரி ‘ம்..’என தலையை ஆட்டியவர் இன்னொரு சொற்றொடரை எழுதி இன்னொரு மாணவனை எழுப்பிவிட்டார்.
அதற்கும் லோகநாதனே கையைத் தூக்கி எழுந்தவாறே வாசித்துவிட்டான். ”வகுப்புல ஒருத்தன் மட்டும் படிச்சா போதுமா..? வேற எவனுக்குமே வாசிக்கத் தெரியாதோ….” என்பது போல ஆசிரியரைப் பார்த்த அதிகாரி லோகநாதனை அழைத்து தட்டிக் கொடுத்தார்.
வெளியில் வந்த அதிகாரியிடம் ”சார்…. மத்த பசங்களும் நல்லா படிப்பானுக. வேணும்னா இன்னொரு முறை எழுதி வாசிக்கச் சொல்லுங்க சார்….” என்ற முருகையன் ஆசிரியரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்தார் அதிகாரி. முருகையன் ஆசிரியருக்கோ பெருத்த தர்மச்சங்கடமாக போய்விட்டது. லோகநாதனோ தனது சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு மற்றவர்களை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மதியம் உணவு இடைவேளை நேரத்தில் மாவட்டக் கல்வி அதிகாரியின் வாகனம் புறப்பட்டது. கல்வி அதிகாரி தலைமையாசிரியரிடம் என்ன சொன்னாரோ,… ஒன்னுமே புரியலயே… அருகிலிருந்த தலைமையாசிரியரும் நம்மிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்ற மன உளைச்சலில் இருந்த ஆசிரியர் முருகையன் அன்றைய மதிய உணவுக்கு விடுமுறை அளித்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று வாசலை எட்டிஎட்டிப் பார்த்து காலைப் பொழுதுக்காக காத்திருந்தார். மறுநாள் மூன்றாவது பாடவேளை பத்தாம் வகுப்பு ‘ஆ’பிரிவுக்கு ஆங்கில பாடவேளையாக இருந்தது .
வகுப்புக்கு சென்ற ஆசிரியர் முருகையன் ஓட்டுக் கொட்டகையில் சொருகியிருந்த மூங்கில் குச்சியால் என்ன ஏதுனு சொல்லாமல் லோகநாதனை துவைத்து எடுத்துவிட்டார்.
”ஏன்டா…..எத்தன மொற சொல்லிருக்கேன். என்கிட்ட பண்றமாதிரியே மத்தவங்ககிட்ட பண்ணாதேனு. அது என்னடா அவனக் கேட்டாலும் நீ சொல்ற. இங்க எவனக் கேட்டாலும் முந்திரிக்கொட்டை முந்தன முந்திக்கிற. மத்தவனுகயெல்லாம் கூமுட்டையா. ம்……” பல்லைக் கடித்துக்கொண்டு கருப்பண்ணசாமிபோல் கண்களைத் துருத்தினார்.
“இவளோ கஷ்டப்பட்டு பாடம் சொல்லிக்கொடுத்தும் கொஞ்ச நேரத்துல எம் பேர கெடுத்து கிரவுண்டுல பறக்க விட்டுட்டியே…” கத்திக் கொண்டு இருக்கும் போதே தலைமை ஆசிரியர் அழைப்பதாக பியூன் ஆறுமுகம் சொன்னார்.
”உன்ன வந்து கவனுச்சுக்குறேன்” என்பதுபோல் விழிகளை உருட்டி விழித்துவிட்டு சென்றார் ஆசிரியர். லோகநாதனை மற்ற மாணவர்கள் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
லோகநாதன் அரசு மாணவர் விடுதியில்தான் தங்கிப் படித்துக் கொண்டு இருந்தான். பவிடுமுறை நாட்களில் வீட்டுக்குச் செல்வது வழக்கம். லோகநாதன், மற்றவர்கள் நம்பும்படி பேசுவதில் கெட்டிக்காரன்.
அவனுக்கு கீழ் உள்ள சிறுவர்களிடம் தான் உளவுத்துறையில் பணியாற்றுகிறேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் மாணவர்களுக்கான உளவுத்துறை தேர்வில் முதல் மாணவனாக வந்ததால் என்னை உளவுத்துறையில் சேர்த்துக் கொண்டார்கள். மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம். நம்ம பள்ளிக்கூடத்து பக்கத்துல இருக்குற இடுக்கு மலைல கொலை கொள்ளை கற்பழிப்பு எல்லாம் நடக்குது. அத உளவு பாக்கத்தான் இங்க வந்திருக்கேன். பசங்க வேற அங்கிட்டுதான் கட் அடிச்சுட்டு போறானுங்க. அவனுகளயும் கண்காணிக்கத்தான் ஆஸ்டலுல தங்கிருக்கேனு சொன்னபோது சிறுவர்கள் எந்த அசைவும் இல்லாமல் வாயைப் பிளந்தவாறு கேட்டுக்கொண்டு இருந்தார்கள் .
”அதுனாலதாண்ட இந்த அண்ணங்கூட யாரும் சேரமாட்ராங்க. இந்த வயசுலயே எவ்ளோ பெரிய ஆளா இருக்கு.. பாத்தீயா…” விடுதி அறையில் ராத்திரியில் தூங்கும்போது ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொள்ள, அருகில் படுத்திருந்த லோகநாதன் தன்னை ஒரு சக்திமானாக எண்ணிக் கொண்டான்.
குளிக்கும் போது, ”தண்ணிய செலவு பண்ணாதீங்கப்பா. அவனவன் குடிக்கிறதுக்கே கஷ்டப்படும்போது இப்புடி வீணாக்கலாமா. தலைநகருல குடிக்கிறதுக்கும் கழுவுறதுக்கும் தண்ணி கெடைக்காம தாளம் போடுறாங்க ” என்று லோகநாதன் சமூக சித்தாந்தம் பாடினான். அதனால் பட்டும்படாமல் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து மற்ற மாணவர்கள் வெளியேறிக்கொண்டு இருந்தனர். கடைசியாக குளிக்கப் போன லோகநாதன் நீண்ட நேரம் கழித்தே வெளியே வந்தான். நீ மட்டும் இவ்ளோ நேரம் என்ன பண்ணுன என்று கேட்பது போல் நெஞ்சை வெடைத்துக்கொண்டு சிலர்
நின்றனர். உடம்புல பதினாறு லிட்டர் தண்ணியாச்சும் படுறமாறி குளிக்கனும். அப்பத்தான் குளிச்சதுக்கே அர்த்தம்னு புதிய சித்தாந்தம் பாடினான் லோகநாதன். இவனெல்லாம் ஒரு ஆளுனு இவன் பேச்சக் கேட்டோம்பாரு அதுக்கு நம்மல….. தங்களுக்குள் நொந்து கொண்டனர்.
கல்வி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பிரிவு உபச்சார விழா நடத்திக்கொண்டு இருந்தனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் சர்பத், டீ, பிஸ்கட் என ஆசிரியர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மாணவர்கள் சிலர் வழங்கிக் கொண்டு இருந்தனர்.![]()
பன்னிரண்டாம் வகுப்பு பி கிளாஸ் பசங்க டீ பார்ட்டிய நல்லா கொண்டாடுறாங்கய்யா என்று சிவசுப்பிரமணியம் ஆசிரியர் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த லோகநாதனும் சிலரும் மாணிக்கம் ஆசிரியருக்கு டீ, பிஸ்கட்டை வழங்கிக்கொண்டு இருந்தனர். இந்த வருசம் எல்லாரும் பப்ளிக்ல பாஸ் பண்ணிருங்கப்பா, மாணிக்கம் ஆசிரியர் சொன்னபோது “எல்லாம் உங்க ஆசிர்வாதம்ங்கய்யா..” என்று சொல்லிக்கொண்டே அவரின் கால்களைத் தொட்டு வணங்கினான் லோகநாதன். கூட வந்த மாணவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. டீ பிஸ்கட் குவளை என ஒவ்வொரு மாணவர்களும் ஒன்றை வைத்திருந்தனர்.
”நீ கெட்டிக்காரன்டா. இவனுக தேறிருவானுகளா… ” மாணிக்கம் ஆசிரியர் கேட்டபோது மாணவர்கள் முகத்தில் பூத்திருந்த புன்னகை பொசுக்கென வாடித் தொங்கியிருந்தது. இவனோ மிடுக்காக நடந்து வந்து கொண்டு இருந்தான்.
மாணவர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக சர்பத் குடிக்க ஆரம்பித்தனர். சர்பத் ஒரு பெரிய சில்வர் குடத்தில் கலக்கப்பட்டு இருந்தது. மொத்தம் நாற்பத்தெட்டு பேர் உள்ள வகுப்பில் மாணவிகள் இருபது பேர் இருந்தனர். மாணவிகளுக்கு ஒன்று மாணவர்களுக்கு ஒன்று என இரண்டு குவளைகள் இருந்தன. லோகநாதனோ ஆண்கள் வரிசையில் கடைசியில் நின்று கொண்டு இருந்தான்.
”டேய் பொம்பளப் புள்ளங்க இருக்குதுக…. எடுத்து வேக வேகமா குடிச்சுட்டு வர்றது இல்லயா. அந்தப் புள்ளங்க நம்மல சர்பத்தே பாக்காதவன்மாறினு நக்கலா பாக்காதுகளா….” என்று லோகநாதன் சொன்னதுதான் தாமதம் அனைவரும் சில்லென்ற சர்பத்தை குடத்தில் இருந்து ஒரு குவளை மெத்தி வேகமாக குடித்துவிட்டு தங்கள் இருக்கைக்கு வந்தனர். நாக்கு வெடவெடத்துப் போனது. ஐஸ் கட்டியை அப்டியே விழுங்கியது போல் இருந்தது. தொண்டையை யாரோ இழுத்து பிடித்துக்கொண்டதுபோல் பலரும் உணர்ந்தனர்.
“டேய் மெதுவா குடிங்கடா. கடக்குனு ஒரே மொடக்குல குடிச்சுட்டு வர்றீக. பல்லு கூச போகுதுடா… ” வகுப்பாசிரியர் விஜயகுமார் சொல்வதை யாரும் காதில் வாங்கவில்லை. வேகமாக குடித்துவிட்டு தனது கௌரவத்தை காப்பாத்திக்கொண்டனர்.
மெதுவாக ருசித்து குடித்துவிட்டு உட்காரந்த லோகநாதனிடம் ”நீ மட்டும் எதுக்குடா மெதுவா ஆடி அசஞ்சு ருசிச்சு குடிச்சுட்டு வர்ற…” ஒருவன் ஆசிரியர் காதிலும் விழும்படி கேட்டேவிட்டான்.
”எதையும் ஆற அமர ரசிச்சு ருசிச்சு குடிக்கனும்டா. அவசர அவசரமா குடிச்சுட்டு என்னத்த வாரிக் கொட்டிக்கிட்டிக. லோகநாதன பாரு…..” என்றபோது ஒட்டு மொத்த வகுப்பறையும் அவனைத் திரும்பி பார்த்தது. அவன் எதுவும் தெரியாதவனைப்போல் தன்னைக் காட்டிக் கொண்டான்.
லோகநாதனின் பெற்றோர் படிப்பறிவில்லாதவர்கள் என்பதால் இவன் வைத்ததுதான் சட்டமாக இருந்தது.
கல்லூரி படிப்பை முடித்ததும் தனியார் நிறுவனமொன்றில் நல்ல ஊதியத்தில் பணிபுரிந்து வரும் லோகநாதன் தன் மனைவி குழந்தைகளுடன் காரைக்குடியில்தான் வீடுகட்டி குடியிருந்து வருகிறான்.
”ஏம்புள்ளைகளை நல்லா வளர்க்கனும். நாந்தான் இந்த ஊருகாட்டுல கெடந்து வதங்குனேன்னா ஏம்புள்ளைகளும் வதங்கனுமா..? இதெல்லாம் ஊரானு கேக்குறேன்…. இங்கேருந்தா கண்ட காவாலி பசங்கள பாத்து இவனுகளும் கெட்டுப் போயிருவானுக. காரைக்குடி என்ன ரொம்ப தூரத்துலயா இருக்கு. இருபது கிலோமீட்டர்தானே. ஒங்கள அப்பதிக்கிஅப்பத வந்து பாத்துக்குறேன். ஒங்க காலம் மாதிரி இந்தக் காலம் கெடையாது. ஏம்புள்ளைகளப்பத்தி ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது”. சிவாவை கைநீட்டி ”இவனுக்கு ஏழுகழுத வயசாகுது. உருப்புடுறதுக்கான எந்த வழியாச்சும் தெரியுதா..?. படிப்பும் ஏறல. ஒரு மண்ணும் வெளங்கல. இப்புடி இவனே இருக்கும்போது எம் பசங்களுக்கு இந்த ஊரு எப்புடி செட்டு ஆகுங்குறீக…” அவனது அப்பா தங்கமணியிடம் பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
கொல்லையில் கடலை விதைப்பதற்கு பணம் கேட்டு வந்த அவன் அப்பாவிடம் ”ஒனக்கு ஒன்னும் தெரியாது. முத்து அண்ணங்கிட்ட பணம் கொடுத்துருக்கேன். அவரு கடல வெதய வாங்கி வெதச்சுருவாரு. நீ பேசமா முள்ளுகிள்ள சுத்தம் பண்ணிட்டு காக்கா குருவி திங்காம பாத்துக்க. அந்தப்பயலுக்கும் ஒன்னும் தெரியாது. சும்மா கோழிகீழிய வளக்குறேனு காசப் போட்டு நாசம்பண்ணி திரியாம காரக்குடில சரவண விலாஸ் ஓட்டல்ல வேலக்கி சொல்லிருக்கேன். அவன அங்க போகச் சொல்லு…” லோகநாதன் பேச்சுக்கு தலையாட்டியவாறு அவன் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தார் தங்கமணி.
லோகநாதனின் நான்கு வயது மகன் சுலோகன் சளியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பார்க்க வந்த தங்கமணி ”இது சாதாரண சளிதாப்பா. தேங்கா எண்ணய கையில தேச்சு நெருப்புல காட்டி அத வெத்தலயில தடவி நெஞ்சுல ஒட்டி வந்தாலே சரியாயிருக்கும்பா. இல்லேன்னா ரெண்டு மூனு தடவ தும்பைய இடிச்சு கொடுத்தாலே சளி காணாம போயிருக்குமேப்பா. பேரப்புள்ளைக கேக்குதுனு கண்டத வாங்கிக் கொடுக்கலாமா….. ” என்று வருத்தப்பட்டார் தங்கமணி.
” ஒனக்கு ஒன்னும் தெரியாது. இன்னும் அந்தக் காலத்துல மாறியே இரு. நாங்கதான் ஒத்த ஐஸ்சு வாங்குறதுக்கு பழைய இரும்பு, பாட்டுல தேடி அலஞ்சு எடுத்து வந்து ஐஸ்காருகிட்ட கொடுத்து வாங்கித்தின்னோம்னா ஏம்புள்ளைகளும் ஏமாறனுமா. கைநெறையா சம்பாரிக்கிறேன். ஆசப்பட்டத திங்கட்டுமே. இது வரக்கிம் இருபதாயிரத்துக்கும் மேல செலவாயிருச்சு… என்னைக்காச்சும் நா முடியாம கெடந்து இந்தமாறி ஆசுபத்திரில காமுச்சுருப்பியா…? ஏதாவுதுனா…. எதையாவது இடிச்சு ரசம் வச்சு கொடுக்குறது. இல்லன்னா தின்னூரு மந்திரிச்சு நெத்தி பூரா பூசிவிடுறது. இதவிட்டா ஒனக்கு என்ன தெரியும்” அலுத்துக்கொண்டான் லோகநாதன்.
வெவரம் தெரிஞ்ச காலத்துலருந்து இப்புடி எடுத்தெறிஞ்சு பேசுவதையே வாடிக்கையா வைத்திருந்தான் லோகநாதன். கங்கருத்தப் புள்ளைக்கிட்ட வாக்குவாதம் பண்ணி என்ன பண்ணப் போறோம். அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானு தங்கமணியும் விட்டுவிட்டார்.
”நாங்களும் ஒங்கள பெத்து வளக்கலயா. நோய் நொடி வந்தா ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச நாட்டு மருந்த கொடுத்துதான் காப்பாத்துனோம். அதுக்காக ஒங்கள பாக்காமயா விட்டுட்டோம். எதுக்கெடுத்தாலும் ஒனக்கு ஒன்னும் தெரியாது.. ஒனக்கு ஒன்னும் தெரியாதுனு சொல்லிச்சொல்லியே வாயடச்சுப்புடுறது. நாங்க இல்லாம மானத்துலருந்தா குதிச்சு வந்த…” என்று லொகநாதனிடம் சொல்லவேண்டுமென நினைத்தாலும் “வாய்விட்டு புள்ளைக்கிட்ட சொன்னா சங்கடப்படுவான். இத்தன காலம்
ஓடிருச்சு. இனிமே என்ன கொஞ்சகாலம் ஒன்னும் தெரியாமலயே இருந்துட்டுப் போவோம்னு” நினைத்துக் கொண்டார் தங்கமணி.
லோகநாதனின் சித்தப்பா பையன் பாஸ்கரும் அவனது நண்பன் வினோத்தும் வீட்டிற்கு வந்திருந்தனர். நீண்ட நேரம் புத்திமதி என்கிற பெயரில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தான் லோகநாதன். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. காரைக்குடிக்கு ஒரு வேலையா வந்தோம். இவ்ளோ தூரம் வந்துட்டமே. ஒரு எட்டு அண்ணனப் பாத்துட்டு போவோமேனு வந்தாக்க…. வந்த எடத்துல ஒருகொவள டீயக் கொடுத்துட்டு மனுசன் நம்மல கொன்னு எடுக்குறாரே….” என நினைத்துக்கொண்டே வினோத்தைப் பார்த்தான் பாஸ்கர்.
“ஏன்டா…. நீதான் காயுறன்னா…. நானும் ஏன்டா காஞ்சு தொலையனும். ஓங்கூட வந்ததுக்கு இந்த தண்டனையா….” நறநறவென பல்லைக் கடித்துக்கொண்டே பாஸ்கரைப் பார்த்தான் வினோத்.
என்ன செய்வதென்று தெரியாமல் உதட்டைப் பிதுக்கு லேலாசாக சிரித்தான் பாஸ்கர். கோபத்தை அடக்கிக்கொண்டே நெளிந்தான் வினோத். ஒருகட்டத்தில் “சரிப்பா… நா..பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல… நா படிக்கிற காலத்திலயே அவ்ளோ போட்டி இருந்துச்சு. அதுலயெல்லாம் சமாளிச்சுதான் இந்த வேலக்கே வந்தேன். இன்டர்வியூல பாத்து கவனமா பேசுங்க. ஆமா… வண்டிலயா வந்தீங்க. இவன எதுவும் ஓட்டச் சொல்லிறாதப்பா. இவனுக்கு ஒன்னும் தெரியாது. மொதல்ல நீ வண்டில ஒக்காரு..” என பாஸ்கரை வண்டியில் உட்காரச் சொன்னான்… லோகநாதன்.
“தனியார்ல வேல பாக்கும்போதே இப்புடினா… அரசாங்க வேலையா இருந்துருந்தா ஆத்தாடி… மனுசன் என்னபாடு படுத்துறாரு….” ஆளை விட்டால் போதும் என்பதாக இருவரும் தலைதெறிக்க ஓடினர்.
வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் லோகநாதன் வேலைக்குச் செல்லும்போதுதான் அந்த விபத்து நடந்திருந்தது. முருகன் டீக்கடையில் டீ குடித்துவிட்டு செல்போனை கழுத்தில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வண்டியில் சென்றான் லோகநாதன். வளைவில் திரும்பியபோது வேகமாய் வந்த மினி லாரி லோகநாதன் வண்டி மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டான். செல்போன் சாலையில் விழுந்து சுக்குநூறாய் போனது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூடிவிட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கண்ணன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான்.
விபத்து நடந்த விபரம் கேள்விப்பட்டு வேலைபார்க்கும் நிறுவனத்தில் மேலாளர் தவிர வேறு யாரும் பதட்டப்பட்டதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. மண்டக்கனம் புடுச்சவன் பாதையப் பாத்து ஒழுங்கா போயிருக்க வேண்டியதுதானே… என்றே பலரும் நினைத்தனர்.
நீண்ட நேரத்திற்குப் பிறகே கண் விழித்துப் பார்த்தான் லோகநாதன்.
“நா கும்பிட்ட பட்டவன்சாமி நம்மல கைவிடலங்க. வந்து ரெண்டு நாளு ஆகுது. என்னாச்சு ஏதாச்சுனு ஒரு மக்க மனுச கூட எட்டிப் பாக்கலங்க. ஒங்க தம்பிதான் அன்னந்தண்ணி ஆகாரமில்லாம…. அங்கிட்டும் இங்கிட்டும் அலஞ்சு திரியுறாரு. எதுக்கெடுத்தாலும் அவனுக்கு ஒன்னுந் தெரியாதுடி…. ஒன்னுந் தெரியாதுடினு சொல்லியே ஏம்புட்டு வாயவும் அடச்சீங்களே… ” லோகநாதனின் முகத்தைத் தடவியவாறு கண் கலங்கினாள் வனிதா.
தன் குடும்பத்தாரை தவிர மற்றவர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை உணர்ந்தான். அப்போது அவன் பணியாற்றும் நிறுவனத்தின் வாட்ச்மேன்
சண்முகத்துடன் அழுது சிவந்த கண்களோடு மருந்துகளை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான் சிவா.
கண்களை மூடித் திறந்த லோகநாதனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
”ஒடம்பு சரியானதும் அவன் ஆசப்பட்ட மாதிரி சிவாவுக்கு ஒரு நாட்டுக் கோழிப் பண்ணைய வச்சுக் கொடுத்துறனும்….” என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் லோகநாதன்.
_____________×××_______
![]()
தவளை தன் வாயால் கெடும், அதுமாதிரி சில மனிதர்கள் தற்பெருமை பேசியே கெடுவார்கள். நல்ல எழுத்து மூலமாக பல பேருக்கு புரிய வைத்து விட்டீர்கள்.