ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….9……சங்கர சுப்பிரமணியன்.

உழைப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரும் வகையில் அவர்களை பணியமர்த்தும் முதலாளிகள் நம்மினத்தில் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் வேற்றினத்து முதலாளிகள் அவர்களது இனத்து மக்களை நடத்துவதுபோல் இவர்கள் நம்மக்கள் நடத்துகிறார்களா?இல்லை இல்லை. அங்கே சாதி என்ற சனியன் குறுக்கே நம்மின முதலாளிகளின் கண்களை மூடி மறைக்கின்றன. ஒருவேளை கண்கள் அதிசயமாகத் திறந்தாலும் அது சுரண்டலுக்கு பயன்பட்டு ஏழைகளின் கூலியில் கைவைத்து அவர்களை ஒரு அடிப்படையான வசதியோடு கூட வாழ விடாமல் தடுக்கின்றன.
இந்த கொடுமை இவ்வாறிருக்க வேற்றின மக்களிடம் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாம் தான் வந்தாரை வாழவைப்பவர்கள் ஆயிற்றே. அந்த பெருமை ஒன்றே போதாதா? அதனால் அவர்களிடம் கூலி வேலை பார்ப்பதும் நமக்கு பெருமைதான் இல்லையா?சரி நாம் பெருமையாகச் செய்தாலும் நமக்கும் வாயும் வயிறும் இருக்கிறதே? அதற்காக மண்புழுவாக வாழ்ந்தாலும் எப்பவாவது கொஞ்சம் அதிகம் கூலிகேட்கும் துணிவு அதிசயமாக நிகழ்கிறது. அப்போது முதலாளிகள் வந்தாரை வாழவைக்கும் இந்த ஏழை இனத்தின்மீது இரக்கம் காட்டினார்களா?இல்லை. நாம்மட்டுமே கிளிப்பிள்ளை போல் இந்த தாரக மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வந்தவர்களுக்கு அந்த நல்ல குணத்தை மதித்துப் போற்றும் பண்பு இருக்க வேண்டுமே? அவன் அப்பண்பைப் பற்றியெல்லாம் சிறிதும் கருத்தில் கொள்வதோ கடைப்பிடிப்பதோ இல்லை.அவனோ மாறாக நீ ஏமாளியாக அந்த தாரக மந்திரத்தை சொல்லிக்கொண்டிரு. நாங்கள் எங்கள் பண்பு எதுவோ அதைக் காட்டுகிறோம் என்று அவர்களின் உயர் பண்பைக்கட்டினார்கள். கூலி அதிகம் கேட்டவர்களின் குடும்பங்களை வீட்டோடு சேர்த்து கொளுத்தினர்.பொது உடமை பேசும் பெருமக்கள் பேசாமடந்தாகி வேடிக்கை பார்த்தனர். தமிழ்மொழி காக்க போராடிய அரசும் தமிழர்களை கொன்று குவித்வர்களை குளிர்வித்தனர். லட்சக் கணக்கில் நம் மக்கள் அழிவதற்கு துணை போனவர்கள் ஐம்பதுக்கும் குறைந்தவர்கள் மாண்டால் அலட்டிக் கொள்வார்களா என்ன?இன்றும் தமிழருக்காக குரல்கொடுக்க தமிழினத்தை ஆள்பவர்கள் எவ்வளவு தூரம் முயல்கிறார்கள்? உள்ளங்கை நெல்லிக்கனியாக உரைகல்லாக நின்று செயல்படுவதை கண்கூடாக கண்டுதான் வருகிறோம். வேலியே பயிரை மேய்வதற்பொப்ப வேலைகள் யாவும் வீறுடனே வெற்றிநடை போடுகின்றன. அவற்றை எல்லாம் வேண்டாம் என்போரைவேதனைக்குள்ளாகின்றான்.
நிலத்தடி நீர்வளத்தை எல்லா நாடுகளுமே பொன்னைப்போல் பாதுகாத்து வருகின்றன. ஆனால் நீர்வளமிக்க நாடான நம்மண்ணில் நீர் வளம் பாதுகாக்கப்படவில்லை. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயல்வதைப்போல நம் நிலையை மாற்றிவிட்டனர். மழைகொடுக்கும் வரத்தை மதிகொண்டு பயன்படுத்திக் கொள்ளாமல் மதியற்று நிலத்தடி நீரை உறிஞ்சும் கேடுகெட்ட வேலையில் இறங்கவிட்டனர்.பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதையாக நீருக்காக வளத்தை அழிக்கிறான். காடுகளை அழித்துவிட்டு மழை இல்லாமல் தவிக்கிறான். அறிவான செயலாய் காடுகளை அழிப்பதை கைவிடவில்லை. காடுகள் செய்வதை யாகம் செய்யுமென மழைக்காக யாகம் செய்கிறான். வள்ளுவத்தை பரப்புவதாக வாய்கிழியப் பேசுகிறான்.செய்வதோ படிப்பது ஒன்றென்றால் இடிப்பது வேறொன்றாய் இருக்கிறது. ஆமாம் வள்ளுவன் சொல்லும் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்பதை இன்னாது கூறலுக்கு மட்டும் என்று எண்ணி வள்ளுவரையே கூண்டுக்குள் அடைக்கப்பார்க்கிறான்.வள்ளுவன் சொன்னது இன்னாது கூறலுக்கென்றாலும் அதை மற்ற தளங்களிலும் பயன் படுத்தலாம் என்ற மதிநுட்பத்ததை அழித்து விட்டான். எப்படி அழித்தான்? மதுவால் அழித்து விட்டான். மதுவைக் கொடுத்து அழித்தான். மதுவுக்கு பழக்கப் படுத்தி தமிழனை மதுவுக்கு அடிமையாக்கி மதிமயங்க வைத்தவர்கள் யார்?இவ்வாறு மதிமயங்கியவன் வாழ்க்கையைப் பற்றுயோ இனத்தைப் பற்றியோ மொழியைப் பற்றியோ என்ன ஆற்றலை இழந்தான். இப்படி ஆற்றலை இழந்தவன் வாழவழின்றி வருமானமும் இன்றி இழிநிலைக்குத் தள்ளப்பட்டான். ஆதலால் இலவசத்துக்கு பின்னால் ஓடி இயல்பாக செலுத்தக் கூடிய வாக்குகளையும் பணத்துக்காக விற்கிறோமே என்ற மதிநுட்பத்தையும் இழந்தான்.போதைக்கு அடிமையானதாலும் சரியான வருமானம் ஆட்ட முடியாததாலும் மலிவாக கிடைக்கப்படும் மதுவுக்கும் அடிமையாகி உயிரைவிட்டான். தமிழினத்தில் இளம் விதவைகள் மதுவின் கோரப்பிடியால் பெருகினர். மதுவினால் விதவையானவர்கள் ஒருபுறம் என்றால் மானமறவர்கள் என்று குரல் எழுப்பியதன் காரணமாகவும் இளம் விதவைகள் தோன்றினர்.இப்படியாக மாற்றப்பட்ட இனத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படாதா என்ற எண்ணம் சிலர் மனதில் தோன்றியது. அதை உண்மை என உணர பலர் தோன்றியுள்ளனர். அந்த பலரின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி மலருமா அல்லது மொட்டிலே கருகுமா? என்பதை காலம்தான் கணிக்கும்.(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()