“டாமி ரோஸ்” …. சிறுகதை…. 30 ….. அண்டனூர் சுரா.

அன்றைக்கான மதிய உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் டாமி. அதையும் இந்திய
உணவாகத் தயாரித்தாள். அவளுக்குத் தெரிந்த ஒரு வணிகர் மூலம் தாய்லாந்து நாட்டிலிருந்து பிரத்யேகமான ஒரு புதுரக அரிசியை வரவைத்திருந்தாள். அவரிடமே இந்திய நாட்டுக் காய்கறிகளை வாங்கியிருந்தாள். அதனைக்கொண்டு சாதம், சாம்பார், சமைத்து காலிப்பிளவர் கொண்டு கூட்டுப் பொரியல் செய்தாள். அவள் கையில் வைத்திருந்த சமையல் குறிப்புகளைக் கொண்டு இவ்வளவையும் செய்தாள். ரசம் வைக்க வேண்டியிருந்தது
சமையலுக்குப் பிறகு நிறைய வேலைகள் அவளுக்காகக் காத்திருந்தன. சற்றுமுன் துவைத்துக் காய வைத்திருக்கும் உடைகளை இஸ்திரி செய்து மடித்து வைக்க வேணும். சுவரில் சட்டம் போட்டு தொங்கிக்கொண்டிருக்கும் வினோவின் குடும்பப் புகைப்படங்களைத் துடைக்க வேணும். வினோ வழக்கமாக அணியும் ஷுக்களுக்குப் பாலீஸ் இட வேணும். அறைகளை ஈரத்துணிக்கொண்டு சுத்தம் செய்ய வேணும், இப்படி எத்தனையோ வேலைகள் அவளுக்குக் காத்திருந்தன.
“வினோ, என்னடா செய்கிறாய்?” சத்தமிட்டாள் டாமி. வினோத் என்பதை அவள் வினோ என்றே அழைப்பாள். அப்படியாக அழைப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. டாமியா ரிதிக்ஷா என்பதை அவன் செல்லமாக டாமி என அழைப்பதைப் போலதான் அவள் வினோத் என்பதை வினோ என்று அழைத்துவந்தாள். அவள் அழைப்பிலிருந்த தொனி, அவளது மென்மெல்லிய உச்சரிப்பு கேட்பதற்கு ஜப்பானிய ஹைக்கூ போன்றிருந்தது. இன்னும் எத்தனை தடவை இந்தப் பெயரை இவள் உச்சரிக்கப் போகிறாள்…?. அவனுடைய மனவோட்டம் கணக்குப் போட்டது. பத்து தடவை? அதுவே அதிகம்தான். நாளை விடிந்ததும் அவள் ஒட்டாவா நகரத்திற்குச் செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்துகொண்டதற்குப் பிறகு அவள் விட்டுச்செல்லும் நினைவுகள் கனவுகளாக வந்து “ வினோ “ என்று அழைத்தால்தான் உண்டு.
“வினோ, கேட்கிறேன், ஒரு சத்தத்தையும் காணோம். உள்ளே என்ன செய்கிறாய்?” அவள் கேட்டதில்லாமல் சமையல் அறையிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். அவன் கட்டிலில் விரித்திருந்த போர்வையை எடுத்து உதறி மடித்துகொண்டிருந்தான். ஓடிவந்த அவள் அதை உரிமையோடு பிடுங்கினாள். “வினோ, அதை இப்படிக்கொடு. உன்னை யார் இதையெல்லாம் செய்யச் சொன்னது? அதை நான் மடிக்கிறேன்” என்றவள் கம்பளிப் போர்வையைக் கட்டிலில் விரித்து, பிறகு அதை நேர்த்தியாக மடித்தாள். அவளது கைக்கு அந்தப் போர்வை அவ்வளவு அழகாக மடிந்தது.
“வினோ, நாளை முதல் நீ யாரோ, நான் யாரோ?“ கேட்டுவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு அவன் முன்பு அத்தனை அமைதியாக நின்றாள். அவளைப் போலவே அவனும் கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தான். டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் உயிருடன் அவன் முன்பு நிற்பதைப் போலிருந்தது.
டாமி மயில் கழுத்து நிறத்தில் ஒரு அரைகுறையான மேலாடை மட்டும் அணிந்திருந்தாள். முழங்கால் வரைக்குமாக அது நீண்டுத் தொங்கிக் கிடந்தது. அதன்மீது மார்பிற்கும் வயிற்றிக்குமிடையே சமையலாடை அணிந்திருந்தாள்.
“ வினோ, ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்? நான் உன்னை விட்டு போகப்போகிறேன் என்றா?” கேட்டவள், கண்களைப் படக், படக் என அடித்துகொண்டாள். அவளுடைய கண்கள் அபிநயித்தன. அப்போது அவள் அதுவரைக்குமில்லாத சராசரியான அன்புத்தன்மை நிறைந்த பெண்ணாகத் தெரிந்தாள். முட்டையின் வெள்ளைக்கருவால் செய்யப்பட்டது போன்ற அவளது உதடுகள் துடித்தன. சிடுக்காயிருந்த பின்னல், சிகை அலங்காரம் அவளை ஆப்பிரிக்க கறுப்பினப் பெண் என்றும் வாழை உள்தண்டு போன்ற வெளீரிய கால்கள் அமெரிக்க வம்சாவழி என்றும் காட்டின.
“ வினோ, நாளை காலை இந்நேரத்திற்கு ஒட்டாவா நகரத்திற்குச் செல்லும் ரயிலில் பயணித்துகொண்டிருப்பேன்.”
“ உன் கூட யார் வருகிறார் டாமி?“ கேட்டான் வினோ. அந்தக் கேள்வியில் ஒருவிதமான ஏக்கம் தொற்றியிருந்தது.
“ யாருமில்லை”
“ கூட நான் வருகிறேன்”
“ நீ வான்கூவர் நகரம் வரைக்கும் வந்து ஒட்டாவா போகும் ரயிலில் சன்னல் ஓரமாக பார்த்து ஓரிடம் பிடித்துகொடு அதுபோதும். அதன்பிறகு ஒட்டாவா நகரத்திற்கு நான் தனியாகப் போய்கொள்கிறேன் ”
“ டாமி, குழந்தை மாதிரி பேசாதே. வான்கூவர் நகரத்திலிருந்து ஒட்டாவா நகரத்திற்கு இரண்டு நாள் பயணிக்க வேண்டும். ஓர் இரவு இரண்டு பகல்“

“ வினோ, ஒட்டாவா எனக்கொன்றும் புதிதில்லை. பல முறை அந்த ஊருக்கு நான் தனியாக சென்று வந்திருக்கிறேன்”
வினோ, கைகளை இடுப்பிற்குக் கொடுத்து நிமிர்ந்து அவளை விழுங்கிவிடுவதைப் போல வெறிக்கப் பார்த்தான்.
“ இதற்கும் மேல் உன் முடிவில் நான் குறுக்கிட விரும்பவில்லை” என்றவன் கோபித்துக் கொள்வதைப் போல முகத்தை வைத்துக் கொண்டான்.
கொஞ்சநேரம் இருவருக்குமிடையில் அமைதி நிலவியது.
“ நீ எனக்கு ஏதேனும் தர விரும்பினால் தந்துவிடு வினோ ”
“ உனக்கு நினைவுப் பரிசு தரும் அளவிற்கு என்னிடம் என்ன இருக்கிறது ?”
“ ஏன் அப்படி சொல்கிறாய்? எனக்குத் தேவையான ஒன்று உன்னிடம் இருக்கிறது அதை நான் எடுத்துகொள்ளட்டுமா?”
எதை அப்படிக் கேட்கிறாள், என யோசித்தவனாய் அவளைப் பார்த்தான்.
“ உனது டைரி எனக்கு வேணும்?”
அவன் மெல்ல தலையை அசைத்தபடி சிரித்தான்.
“ ஏன் சிரிக்கிறாய் வினோ?”
“ டாமி, போயும் போயும் டைரியைக் கேட்கிறாயே”
“ உன் கையெழுத்து எனக்குப் பிடிக்கும்டா” .
“ என் தமிழ் மொழி உனக்குப் புரியுமா?”
“ புரியாது வினோ. அதனால்தான் அதை கேட்கிறேன் “
வினோ அவனது அறைக்குள் சென்று டைரியைத் தேடினான்.
“ என்ன தேடுகிறாய் வினோ?“
“ டைரி ”
“ சாரி, அதை நான் நேற்றைய தினமே எடுத்து வைத்துகொண்டேன்“ என்றவள் வினோவின் கைகளை இறுகப் பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டாள்.
டாமியை வழியனுப்பும் பயணமாக மறுநாள் பயணம் அமைந்தது. அவளுடன் வினோவும் சென்றான். அவன் செல்வது வான்கூவர் ரயில் நிலையம் வரைக்கும்தான்.
டாமி, வினோ தொடையில் ஒரு கையை வைத்தபடி அவனைத் தொட்டும் செல்லமாக அடித்தும் பேசிக் கொண்டு வந்தாள். தினசரிகளில் வாசித்த நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லி அவனைச் சிரிக்க வைக்க முயற்சித்தாள். அவன் சிரிக்கவில்லை. முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான். இன்னும் சற்றுநேரத்தில் அவளை விட்டு பிரியப்போகும் சோகத்தில் அவனது முகம் பெரும் மூட்டம் கண்டிருந்தது.
தன் பையைத் திறந்து ஒரு சூயிங்கத்தையெடுத்து வினோவிடம் நீட்டியவள், “ நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு பதிலும் பேசாமல் என்னை உயிர்ப் பலி கொடுத்ததைப் போல உட்கார்ந்திருக்கிறாய். நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை. இதை உன் வாயினுள் போட்டு மென்றுக்கொண்டியிரு. பார்க்கும் யாருக்கும் பேசுவதைப் போல தெரியட்டும்” என்றாள். அதை வாங்கிய அவன் வாயில் போட்டுக்கொண்டு மெல்லத் தொடங்கினான்.
ரயில் வான்கூவர் நகரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. வான்கூவரை அடைய இன்னும் மூன்று மணி நேரம்தான். ரயிலின் மீது அவனுக்குக் கோபம் வந்தது. இந்த ரயிலுக்கு என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் மெதுவாகச் சென்றால்தான் என்ன, ரயிலோடு காலத்தையும் சபித்தான். ரயில் அரை மணி தூரத்தைக் கடந்திருந்தது.
இன்னும் இரண்டரை மணி நேரம் மட்டுமே டாமி அவனுக்குச் சொந்தம். அதன்பிறகு டாமி யாரோ ஒருவனுக்கு மனைவியாகிருப்பாள். அதன்பிறகு அவளது நாட்கள் அவனுடனான நாட்களாகிவிடும். தொலைப்பேசி வழியே தொடர்பு கொள்வதாக இருந்தால் கணவன் அனுமதி பேரிலேயே தொடர்புகொள்ள முடியும்.
“ வினோ, கொஞ்ச நேரம் உன் மடியில் நான் படுத்துகொள்ளட்டுமா?” கேட்டாள் டாமி. அவன் சம்மதிக்கும் முன்பே அவனது மடியில் படுத்தாள். பட்டுப் போன்ற சுருள் சுருளான கூந்தல் முடிகள் காற்றில் மிதந்து அவனுடைய முகத்தில் படர்ந்தது. கூந்தலிலிருந்து எழுந்த நறுமணம் அவனைச் சுற்றி பெரும் வாசனையை விதைத்தது. அவளை மெல்ல சுவாசித்தான்.
ரயில் இந்திய ரயில்களைப் போல சிக், புக், டக், டுக், பாம் , கிரிச் ,… என இல்லாமல் மிஸிஸிபி நதியைப் போல அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.
வினோ, டாமியின் முகத்தைப் பார்த்தான். மொட்டு இதழ்களால் மூடியிருப்பதைப் போல அவளது இமைகள் மூடியிருந்தன. அவளது ஆடை சற்றுகீழே இறங்கி தோள்ப்பட்டை வரைக்குமாகத் தெரிந்தாள். அவளது தேகம் தோல் உரிக்கப்பட்ட கோழியாக இருந்தது.
கனடா, புவிக்கோளத்தின் வட துருவத் தேசம். உலகின் மிகப்பெரிய ஐந்து நாடுகளில் ஒன்று. மாதுளம் பழத்தை பூமியாக கருதினால் பழத்தின் குடுமி இருக்குமிடம் கனடா, அப்படியாகத்தான் கனடாவை வினோ உருவகப்படுத்திக்கொள்வான். ரயில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஊர்வது அவனுக்கு ஆர்டிக் துருவத்திலிருந்து இந்தியா வழியாக அண்டார்டிகா நோக்கி ஊர்வதைப் போலிருந்தது.
ரயில் மலைகளுக்கிடையில் மலைப் பாம்பாக ஊர்ந்துகொண்டிருந்தது. சிகரங்களாக மலை உச்சிகள். அதில் படர்ந்துப்போயிருந்த மரங்கள். இடையிடையே கண்ணைக் கவரும் மாளிகைகள், வானுயர நட்சத்திர விடுதிகள்..
டாமி அரை தூக்கத்தில் பிறையைப் போல சிரித்தாள். அவளது அழகை அள்ளி மார்போடு அணைத்துகொள்ள வேணும் போலிருந்தது. அவளது உடலின் ஒவ்வொரு தசை துவாரத்திலும் நுழைந்து அவளை இம்சிக்க வேண்டுமென நினைத்தான். அவன் இத்தனை நாட்கள் உண்ட உப்பு, சோறு, இந்திய நீதிப் போதனைகள்,…. அவன் முன் நாக்குத் துருத்தி நின்றன.
டாமி விழித்தாள்.
“வினோ, நீ எதையோ என்னிடம் சொல்ல நினைக்கிறாய். எதையும் சொல்வதாக இருந்தால் இப்பொழுதே சொல்லிவிடு”, உன்னைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும் எனச் சொல்வதைப் போல சிரித்தாள்.
“ ஆமாம் டாமி ” சொன்னவன் முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
“ என்ன சொல்ல நினைக்கிறாய் வினோ?”
“ நீ ஒட்டாவா நகரத்திற்குச் செல்லத்தான் வேணுமா?” கேட்டவன் முகத்தை அவளது பக்கமாகத் திருப்பவில்லை.
“ பின்னே இல்லையா, நான் திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை அங்கேதானே இருக்கிறார். எனக்கு அங்கு வேலை கிடைத்திருக்கிறது. அரசு வேலை”
வினோ இத்தனை நாட்கள் அவளிடம் கேட்க நினைத்தது இதுதான். இதைக் கேட்டால் டாமி என்ன பதில் சொல்வாளென கணித்திருந்தானோ அதையே அவள் பதிலாகச் சொல்லியிருந்தாள். இதன்பிறகு வினோ சொல்வதற்கோ, கேட்பதற்கோ ஒன்றுமில்லை. அவன் வெறும் சடமாக உட்கார்ந்திருந்தான். பனிக்காற்று அவனது உடல் வெப்பத்தை மெல்லத் தணித்துத் தழுவியது.
ரயில் வான்கூவர் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மனித நிரல். சாரை, சாரையாக நடமாட்டம்.
டாமி அசதியுற்றிருந்த மூளைக்குச் சுறுசுறுப்பூட்டினாள். கைப்பெட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஒரு கையில் ஒரு பையைப் பிடித்துக்கொண்டு மறுகையில் வினோவின் கரங்களைப் பிடித்தவளாய் ரயிலிருந்து இறங்கினாள். பஞ்சு போல பனி கொட்டிக்கொண்டிருந்தது.
இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள். அவளது பையிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்து, திறந்து அவனிடம் நீட்டினாள். “ வினோ, கொஞ்சம் எச்சில் செய்துவிட்டுக் கொடேன்” கெஞ்சுவதைப் போல கேட்டாள்.
உதடுகளைச் சுழித்தான் வினோ. “ ஒயின் நான் அருந்துவதில்லையே..”
அத்தனை பிரமிப்பாக அவனை அவள் பார்த்தாள். “உன் அளவிற்கு வேறு யாரும் என்னைப் பிரமிக்க வைத்ததில்லை. எனக்காக படைக்கப்பட்டதை விடவும் நீ எனக்கு மேலானவன்” என்றவள் அவனது கைகளை இறுகப் பற்றினாள்.
“ ஏன், அப்படிச் சொல்கிறாய்?” கேட்டான் வினோ.
“உன்னைப் போல மீத்திறன்மிக்க மாணவனை வேறு எங்கேயும் நான் எதிர்கொண்டதில்லையே”
“ அப்படியெல்லாம் இல்லை டாமி” என்றவன், அவளது பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொள்ள முனைந்தான்.
“ உன் அறிவு எத்தகையதென்று உனக்குத் தெரியவில்லை வினோ. நீயும் என்னைப் போல படிப்பை முடித்துவிட்டாய். இன்னும் ஒரு வாரத்தில் உனது நாட்டுக்குச் செல்லப் போகிறாய். உனது அறிவைக் கண்டு உன் நாட்டினர் உன்னை மெச்சப் போகிறார்கள்…”
வினோ, இதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்தான். இருவரின் உடல்கள் அவர்களையும் அறியாமல் நெருங்கின. கண்களில் மேலாடையைப் போல நீர்த் துளிர்த்தன.![]()
இருவரும் இறுக கட்டி அணைத்துக்கொண்டார்கள். கரங்களில் முத்தங்கள் ஊர்ந்தன.
டாமி பயணம் செய்யப் போகும் ரயில் அறிவிப்பு கொடுத்தது. வினோவிடமிருந்து மெல்ல விலகினாள். மணியைப் பார்த்தாள். ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இடம் பிடித்துக்கொண்டாள்.
நடைமேடையில் நின்றிருந்தான் வினோ. அவளது கரத்தை அவன் இறுகப் பற்றியிருந்தான்.
“ டாமி, எனக்கொரு சந்தேகம். இத்தனை நாட்களுமில்லாமல் நேற்று எனது அறைக்கு வந்து எனது ஷுக்குப் பாலீஸ் போட்டாய். எனது ஆடைகளைத் துவைத்து, மடித்து வைத்தாய், சமைத்துக் கொடுத்தாய், இதெல்லாம் ஏன் செய்தாய்?”
டாமி அவனது கேள்வியைப் பெரிதும் ரசித்தாள். “வினோ, எங்கள் நாட்டின் கலாச்சாரம் இது. எங்களை விட புத்திசாலியான ஒருவர் எங்களுக்கு வேலைக்காரனாக வாய்க்கையில் அவர் எங்களுக்கு என்னவெல்லாம் பணிவிடைகள் செய்தார்களோ, அதை ஒருநாள் அவருக்குச் செய்துவிட்டு விடைபெறுவோம்”
ரயில் கூவிக்கொண்டு கிளம்பியது. –
![]()