“நூலைப் பிடி” …. சிறுகதை ,,,, சோலச்சி.

கோட்டைப்பட்டிணத்தில் நூற்றுக்கணக்கான வள்ளமும் நாட்டுப் படகுகளும் விசைப்படகுகளும் இருந்தன. அக்கம்பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் இங்குதான் மீன்பிடி வேலைக்கும் கருவாடு தயாரிக்கும் வேலைக்கும் வருவார்கள்.
கோட்டைப்பட்டிணத்தில் சீ குயின் நிறுவனம்தான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தது. நாட்டுப்படகும் கட்டுமரமும் விசைப்படகும் சொந்தமாக யார் வைத்திருந்தாலும் இந்த நிறுவனத்திடம்தான் மீன் நண்டுகளை விற்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
கோட்டைப்பட்டிணத்தில் சொந்தமாக விசைப்படகு ஒன்றை வைத்து ஆட்களை அமர்த்தி இயக்கி வந்தார் ஜலீல் பாய். சொந்த விசைப்படகுதான் என்றாலும் சீ குயின் நிறுவனத்திடம்தான் மீன் நண்டுகளை விற்க வேண்டும். ஏலத்தில் நிறைய பேர் கலந்து கொண்டாலும் சீ குயின் நிறுவனத்தைத் தாண்டி வேறு எவரும் வாங்க முடியாது. இங்கு ஏலம் விடுவது என்பது வெறும் சம்பிராதயமாக மட்டுமே நடந்தது.
சீ குயின் நிறுவனம் தனக்கு கட்டுபடியாகும் விலையை தரவில்லை என்று கூறி ஏலத்தை தனியாக நடத்தினார் ஜலீல் பாய். சீ குயின் நிறுவனத்தை முதன்முதலில் எதிர்த்தவர் ஜலீல் பாய்தான். ஜலீல் பாயிடம் பதினைந்து பேருக்கு குறையாமல் ஆண்களும் பெண்களும் வேலை பார்த்தனர்.
கடலிலிருந்து கொண்டு வரும் பொருட்களை ஆட்களை வைத்து மிரட்டி அடிமாட்டு விலைக்கு சீ குயின் நிறுவனம் வாங்கினால் வேலையாட்களுக்கு கூலி எங்கிருந்து கொடுப்பது…? சீ குயின் நிறுவனத்தை ஜலீல் பாய் எதிர்த்ததை எண்ணி மற்ற மீன்பிடிக்காரர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடைந்தாலும் பலரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏதாவது பிரச்சனை வந்தால் யாரு சமாளிக்கிறது என்ற பயம்தான்.
“பாயிக்கி இவ்ளோ துமுரு இருந்தா மத்தவனுகளும் இவனப் பாத்து நம்மல எதுக்க ஆரம்பிச்சுடுவானுக. அப்பறம் நாம உக்காந்து ஈய வெரட்ட வேண்டியதுதான். இப்புடியே விட்டோம்னு வையி ஈயும் காணாமப் போயி கொசு அடஞ்சுரும்… இதுக்கு ஒரு வழிபண்ணியே ஆகனும்…” மனசுக்குள் புழுங்கினார் சீ குயின் நிறுவனர் சுகந்தர்.
மீன்பிடித்துறை அருகே இருக்கும் கீத்து கொட்டகையில் சாயந்தர நேரத்து தொழுகையை முடித்துவிட்டு எழுந்தபோது அஞ்சாறு அடியாட்களுடன் வாசலில் நின்றார் சுகந்தர். அவர்களின் கைகளில் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை. ஆனாலும் அவர்களின் உருவமும் நிற்கும் தோரணையும் கடலலையே அச்சப்படும் வகையில் இருந்தது. கண்களை சுழலவிட்டார் ஜலீல் பாய். வாங்கனு சொல்ல வாய்திறப்பதற்குள் கொட்டகைக்குள் நுழைந்து அங்கிருந்த மர நாற்காலியில் உட்கார்ந்தார் சுகந்தர். சுகந்தரின் அருகே ஆச்சாராமாய் பெண் ஒருத்தியும் நின்றிருந்தாள். அவள் தலையில் ஒருமுழம் மல்லிகைப் பூவையும் நெற்றியில் வட்டமாக குங்குமத்தையும் வைத்திருந்தாள். இவள் சுகந்தரின் மனைவி என்பதைப் புரிந்து கொண்டார் ஜலீல் பாய். கருவாடு வாசத்திலேயே கட்டிப் புரண்டு கிடந்தவள் போல் மூச்சை உள்ளிழுத்து காற்றை சுவைத்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன பாயி…. கொழுத்துப்போயி ஆடுறியளோ… போனா போவுதுனு பாத்தா தனியா ஏலம் விடுறீயளோ. ஒங்க ஒட்டு ஒறவெல்லாம் பொத்திக்கிட்டு தானலே கருவாடு விக்கிறானுக. ஒனக்கு மட்டும் ஏலே சொந்தமா படகு ஓட்டி மீன் பிடிக்கனுங்குற ஆச. அறிஞ்சவன் அறியாதவனு…. எவனாச்சும் உங்கிட்ட இனிமேலும் ஏலம் எடுக்கட்டும். அப்பறம் எந்தப்பயலும் உசுரோட ஊர் போயி சேர மாட்டானுவலே. ஒங்களயெல்லாம் இத்தன வருசமா உசுரோட விட்டதே தப்புலே. அன்னைக்கே நாட்ட விட்டு ஓடுங்கடானு சொன்னா… மூட்டமுடிச்ச கட்டிக்கிட்டு போகாம எங்க உசுர ஏலே எடுக்குறீக….” சுகந்தரின் மிரட்டலுக்கு பதில் ஏதும் சொல்லாமல் மவுனம் காத்தார் ஜலீல் பாய்.
கடலைக் கிழித்து படகைச் செலுத்தும் ஜலீல் பாய்க்கு சுகந்தரை நாலுசாத்து சாத்துவதென்பது இயலாத காரியம் ஒன்றும் இல்லை. முறுக்கேறிய கைகளும் கட்டுமரம் போன்ற உடலும் கொண்டவர் ஜலீல் பாய். தன்னை நம்பி பல குடும்பங்கள் இருப்பதை எண்ணியே சுகந்தரிடமிருந்து விலகியே இருந்தார்.
“கொஞ்சம் கூட பயமில்லாம கட்டுமரம் கனக்கா நிக்கிறான். நாலு இழுப்பு இழுப்புன்னாக்க எல்லாம் நம்ம வழிக்கி தானா வருவானுக. வூட்டுல போயி பண்டம் பாத்துறத்த தூக்கிப்போட்டு நொறுக்கிட்டு வந்துருந்தா…. இந்நேரம் ஓ…அழுதுக்கிட்டு பாயம்மா ஒடியாந்துருக்கும். அதச் செய்ய வேணானு இங்க வந்தா நங்கூரம்கூட லேசுவாசா அசஞ்சு கொடுக்குது. நட்டு வச்ச லிங்கமாறி நிக்கிற. எங்காச்சும் வெடிகுண்ட வெடிக்க வச்சுட்டு எப்பவும் போல இவனுக மேல பழியப் போடுங்க. கருவாடா காஞ்சு கம்பி எண்ணியே சாகட்டும்.. இங்கேரு நானு ஊருக்குத்தான்
ஆச்சாரமானவ….” நாக்கைத் துருத்தினாள் சுகந்தரின் மனைவி அனித்தா.
“ஒங்களுக்குனுதான் தனியா நாடு நகரமெல்லாம் இருக்கே… அப்பறம் எதுக்குலே இங்க இருக்கீக. இப்ப நெனச்சா கூட ஓங்கிட்ட வேல பாக்குற அல்லக்கையி பயலுக கொழும்புக்கு கஞ்சா கடத்துனதா நேவிகாரனுககிட்ட போட்டுக்கொடுத்து தூக்கி உள்ள வைக்க சொல்லிருவேன். இல்ல கடலுல போட்டுத்தள்ளிட்டு எல்ல தாண்டுனதுக்கு சுட்டுக் கொன்னுட்டானுகனு பழிய அந்தப்பக்கம் போட்ருவேன். ம்… இவ்வளவும் தெரிஞ்சும் ஏம்பாயி விலாங்கு மீனுமாறி முண்டுற. அப்பறம் ஒனக்கும் அந்தக்கெதிதான்.. ஒழுங்கா நானு கொடுக்குற காசு வாங்கிட்டு படக கொடுத்துட்டு வேற எங்காச்சும் ஓடிப்போயி கருவாடோ பழைய இரும்போ வித்து பொழச்சுக்கோ..” சுகந்தர் புருவங்களை உயர்த்தி நாக்கை துருத்தி வலது கை ஆட்காட்டி விரலை ஆட்டிக் காண்பித்து சென்றதை நினைத்து ஜலீல் பாய் மனதளவில் சுக்குநூறாய் நொறுங்கித்தான் போனார்.![]()
”சுத்த சைவம்னு சொல்றான். ரொம்ப ஆச்சாரமானவனு சொல்லி நெத்தில தின்னூரு வச்சுக்கிட்டு ஊருநாட்ட ஏமாத்துறான். அசைவம் சாப்புடுறவனுகள கண்டாலே ஆகாதுனு வெளியில பீத்திக்கிறான். போதாக்குறைக்கு பத்துபாஞ்சு பேர கூலிக்கு அடியாளா வளத்து வச்சுக்கிட்டு அடிதடி பண்றான். கவுச்சி சாப்புடுற நமக்கும் கடலப்பருப்பு சாப்புடுற இவனுக்கும் என்ன சம்பந்தம்.. காசு பாக்குற அத்தன பெரிய எடத்துலயும் இவனுங்க இருக்கானுக. இந்த நாடு என்னமோ இவனுகளுக்கு மட்டும்தான் சொந்தமுனு கொஞ்சம்கூட கூச்சமில்லாம ஆடுறானுக. இவனுகளுக்கு ஜிஞ்சா போடுறதுக்குனே ஊருக்கு நாலு பேரு இருக்கான். எல்லா மனுசங்களயும் இவனுக்கு கீழதானே வச்சுருக்கான். இது புரியாம அத்தன பயலுகளும் நாங்கதான் ஆண்ட பரம்பர… அந்தப் பரம்பர… இந்தப் பரம்பரனு கூப்பாடு போட்டுக்கிட்டு அடிச்சுக்குறானுக” ஜலீல் பாயால் தனக்குள் புலம்பத்தான் முடிந்தது. யாரிடமும் வாய்விட்டு கருத்து சொல்ல முடியவில்லை.
ஒருசமயம், சாமி ஊர்வலத்துக்கு தலைமை ஏற்றிருந்தார் சுகந்தர். இருபது முப்பது பேர் சூழ சாமி ஊர்வலமானது பள்ளிவாசல் தெரு பக்கமாக திரும்பியது. சுகந்தர் தலைமையேற்று இருப்பதால் ஊர்வலத்தில் ஏதேனும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நூறு காவலர்களுக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கமாக செல்லும் பாதையை தவிர்த்து திடீரென பள்ளிவாசல் தெருபக்கமாக ஊர்வலம் திரும்பியதால் ”சார் இந்தப் பக்கம்
ஊர்வலம் போக அனுமதி இல்ல. வழக்கமா போற வழியில நீங்க போங்க. எதுக்கு சார்.. பதட்டத்த உருவாக்கிக்கிட்டு.. அரசியல்ல முக்கியமான இடத்துல இருக்கீங்க. உங்க ஒத்துழைப்பு இருந்தாத்தானே நாங்களும் நிம்மதியா வேலை செய்ய முடியும்” காவல்துறை ஆய்வாளர் தாமோதரனின் பேச்சில் சுகந்தர் உடன்படுவதாக இல்லை. ”ஓம்பேரு என்னய்யா…… ம்… காட்டு…..” காவல் ஆய்வாளரின் நெஞ்சுப் பகுதியைப் பார்த்துவிட்டு…. “ம்…. பேருக்கொன்னும் கொறச்சலில்ல. நீயெல்லாம் எங்க மதத்துக்காரனு சொல்லிக்கவே வெட்கமா இருக்குய்யா. யூ ஆர் ஆண்டி இண்டியன்ஸ்னு சொல்லுவேன். அவனுக கொடுக்குற காசவிட இன்னும் அஞ்சு மடங்கு சேத்து தர்றேன். போதும்மா… இல்ல பத்து மடங்கா வேணாலும் வாங்கிக்க. இந்தத் தெருவுல போக விடுய்யா. இட்டீஸ் டெமொகிரேசி இண்டியா. எங்க வேணாலும் வாழலாம். எங்க வேணாலும் போகலாம். எங்களுக்கும் சட்டம் தெரியும். ஓம்புட்டு டூட்டி என்னம்மோ அத மட்டும் பாரு. ஏங்……..எப்போதும் நாங்க ஒரே வழிலதான் போகனுமா. ஏன் இந்த வருசம் பள்ளிவாச தெருவுல எங்க சாமி போனா ஒத்துக்காதா. என்னய்யா பெரிய யோக்கியமாறி பேசுற. ஒங்க போலீஸ் லெட்சணம் தெரியாதா” சுகந்தரின் ஆக்ரோசமான பேச்சு அங்கிருந்தவர்களிடையே கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்தது.
”சார்… ஊர்வலத்த அமைதியா நடத்தனும்னு கோர்ட் உத்தரவு அதான்” காவல் ஆய்வாளர் தாமோதரனின் பேச்சை சுகந்தர் உள்வாங்குவதாக இல்லை. சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு போய் மிதிக்க வேண்டும் போல் சுகந்தரின் பேச்சும் செயலும் எரிச்சலை கொடுத்தாலும் நாமும் கோபப்பட்டு ஏதேனும் கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டார் தாமோதரன்.
மூக்கு வேர்க்க கொதித்தெழுந்த சுகந்தர், கொஞ்சமும் தாமதிக்காமல் சொற்களை மளமளவென கொட்டினார். ”கோர்ட்டாவது மயிராவது…. நாங்க நெனச்சா மாநிலத்தயே ரெண்டாக்குவோம். மனுசன துண்டாக்குவோம். நாங்கதான்ய்யா எல்லாமே. இப்பவே ம்….னு சொன்னேன். ஒன்ன தண்ணி இல்லாத ஊருக்கு பார்சல் பண்ணிருவானுக. இப்பவே மேல இருக்க எங்காளுக்குப் போனு போடவா. இப்புடி பாத்தன்னா போதும் தெருவுக்குள்ள நொழஞ்சு உண்டு இல்லனு எங்காளுக பண்ணிருவானுக” புருவத்தை உயர்த்தி வலது கை ஆட்காட்டி விரலை நீட்டிநீட்டி கத்தினார் சுகந்தர். அன்றைக்கு எல்லோரையும் மிரட்டி
அச்சுருத்திய சுகந்தர், அரைகுறை மனசோடு சாமி ஊர்வலத்தை வழக்கமான பாதையில் அழைத்துச் சென்றார்.
சுகந்தரின் பேச்சு பற்றி நீதிமன்றமோ அரசாங்கமோ எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. எதிர்கட்சிகள் மட்டும் இரண்டொரு நாள் எதிர்ப்பினை காட்டிவிட்டு அமைதியாகின. ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் ஜலீல் பாயால் எதிர்த்து பேச முடியவில்லை. நாம இது மாதிரி பேசிருந்தா இந்நேரம் தேச துரோகினு சொல்லி தூக்குலயே போட்டுருப்பானுக. சட்டமும் ஆட்சியும் சாமானியனுக்கு இல்லயே” என எண்ணி நொந்து கொண்டார் ஜலீல் பாய்.
ஊர்வலத்தில் பெரும் கலவரம் தடுக்கப்பட்டுவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டது கோட்டைப்பட்டிணம். ராத்திரியே ஜமாத்தார்கள் ஒன்று கூடி ஜலீல் பாய்க்கு சில ஆலோசனைகளை கூறினர்.
“நாம என்ன அவுங்க மாதிரி எங்கோருந்து பொழைக்கவா இந்த மண்ணுக்கு வந்தோம். தலமொறதலமொறயா இந்த மண்ணுல வாழுறோம். இந்த மண்ணுல இருக்க பிக்கல்புடுங்கல் தாங்க முடியாம எறநூறு வருசத்துக்கு முன்னாடிதான் நம் முப்பாட்டனுக இந்த மதத்துல தஞ்சம் புகுந்துட்டாங்க. தலகுனிஞ்சு வாழ்ந்த நாம தலை நிமிர்ந்தது இவனமாறி ஆளுகளுக்கு புடிக்கல. காலங்காலமா நாம கும்புட்டசாமிய விட்டுப்புட்டு புதுசா ஒரு சாமிய கும்புட ஆரம்பிச்சோம். இப்ப நாம எதுத்து கேட்டோம்னா இந்த இடத்துல அவுங்க சாமி இருந்துச்சு.. அத இடிச்சுட்டுத்தான் பள்ளிவாச கட்டிட்டானுகனு சொல்லி கெளப்பி விட்ருவானுக. அப்பறம் அந்தத்துறை இந்தத்துறைனு ஏவிவிட்டு ஆராய்ச்சி பண்ணுனு நீதிமன்றமே சொல்லிரும். நம்ம சனம் நிம்மதியா வாழ முடியுமா….? நாம இங்க வாழவே கூடாதுனு நெனைக்கிறவங்க… சொந்தமா தொழில் செய்ய விட்ருவாங்களா….? காலம் இப்புடியேவா இருக்கப் போவுது. அவுங்க ஆளுகனு சொல்றவங்களே ஒருநாள் உண்மைய புருஞ்சுக்குவாங்க…” சாதிக்பாட்ஷா சொன்னதை அசைபோட்டுக்கொண்டு இருந்தார் ஜலீல் பாய்.
விசைப்படகினை விற்றுவிட்டு வேறு எங்காவது போய்விடலாம் என்று அம்மாபட்டிணம் முகுந்தனிடம் கேட்டபோது அவரும் கைவிரித்து விட்டார்.
“நாங்களே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டு இருக்கோம். அதுவும் அந்தக் கம்பெனிக்கார ஆளப் பாத்தா அரசாங்கமே வாய பொத்திக்கீது. நாடுபூரா அவுங்க கொஞ்சபேரா இருந்தாலும் அதிகாரத்தையும் ஆட்சியவும் அவுக கட்டுப்பாட்டுல வச்சுருக்காங்க. பேசாம அந்தாளு சொல்லுக்கு கட்டுப்பட்டு போங்க பாய். ஏன்னா….
உங்கள கங்கனங்கட்டிக்கிட்டு பல குடும்பங்கள சீரழிச்சுப் புடுவானுக….” முகுந்தன் சொன்னது ஜலீல் பாய்க்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
சீ குயின் நிறுவனமான சுகந்தரிடமே விசைப்படகினை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் ஜலீல் பாய். அந்த நெனப்பும் தோல்வியிலேயே முடிந்தது. அதற்கு முழுக்காரணம் அவரது மூத்தமகள் ரகமது நிசாதான்.
“வாப்பா… இதையும் வித்துப்புட்டு, நம்ம அய்யாவோட அத்தா கருவாடு வித்து பொழச்சாராமே… அதுமாறி பொழைக்கப் போறீகளா. எங்களோட வாழ்க்கையும் இத வச்சுதான் ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு. அய்யா கருவாடு வித்து பசியும் பட்டிணியுமா கெடந்து வயித்தகட்டி வாயக்கட்டி வாங்குன படகு இது. கருவாட்டுகார பாய் வீடுங்குற பேரு மாறி கொஞ்சகாலமாதான் படகுக்கார பாய்வீடுனு சொல்றாக…” சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவளது கண்கள் அடைமழையில் கொட்டும் மழைநீரென கண்ணீரை வெளியேற்றிக் கொண்டு இருந்தன. துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாலும் கண்ணீர் நிற்கவே இல்லை.
“இதுலதான் நாங்க எல்லாரும் வெளையாண்டோம். ஆம்பளப்புள்ள இல்லனு நெனைக்காதீங்கடா. இந்த படகுதான் உங்களுக்கு ஒழச்சுப் போடுற அண்ணனு சொன்னீகளே அத மறந்துட்டிகளா வாப்பா. எங்கப் புள்ளைகளும் இந்த படகுலதான் ஒடி ஆடி வெளையாடுதுக. மாமு மாமுனு ஆசையா கொஞ்சுதுக. என்ன வாப்பா பண்றது. இந்த மதம்தான் நமக்கு குறுக்கே நிக்கிது…” என்று ரகமது நிசா சொன்னதும் தன்னையறியாமல் கண் கலங்கினார் ஜலீல் பாய்.
“ஏம்… பாய் புள்ளைக்கி நல்லது கெட்டது சொல்லித்தர மாட்டிகளா…அஞ்சாங்கிளாசு படிக்கும்போதே இந்தளவுக்கு பேசுறா… இன்னும் பெரிய கிளாசுக்கெல்லாம் போனா என்னென்ன பேசுவா. ஓம் புள்ளைய வூட்லயே வச்சுக்க. ஏன்னா… இருக்க புள்ளையுவும் குட்சிச்சுவராக்கிடுவா. அதான் நாலு போடு போட்டு வெரட்டிவிட்டேன்…” ரகமது நிசா பற்றி வாத்தியார் சொன்னபோது ஜலில் பாய்க்கு ஒன்றுமே புரியவில்லை. நாலு போடு போட்டேனு சொன்னதைக் கேட்டு மனசு பதறியது.
“வாத்தியாரய்யா.. மொட்டைக்கும் முருங்கைக்கும் வெறுமென முடிச்சுப் போட்டா நானு என்னனு தெரிஞ்சுக்கிறது…”
“ஒங்க ஆளுவள கண்டாலே எங்க சனம் ஏளனமா பாக்குதாம். அதுனால நாங்க ஒங்க மதத்துக்கு வரலாமானு கேக்குறா… இது ஒனக்கே அபச்சாரமா தெரியல” கடிந்து கொண்டார் வாத்தியார்.
“ஏம்புள்ளைகளுக்கு நானே வாத்தியாரா இருந்துக்குறேனு..” நாலு பொம்பளப் புள்ளைகளையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் நேரம் கிடைக்கும்போது தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுத்த நினைவுகள் ஜலீல் பாய்க்கு வந்து போனது.
கண்களைத் துடைத்துக்கொண்டே தரையில் மண்டியிட்டு கைகளை ஏந்தி மனசுக்குள் ஏதோ சிறிது நேரம் எதையோ நினைத்தவள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினாள் ரகமது நிசா.
“இந்தப் படகு ஓடுற வரைக்கும் ஓடட்டும். முடியாத காலத்துல நம்மோட வீட்லயே இருக்கட்டும் விக்காதீக வாப்பா” சொல்லிக்கொண்டே குழந்தையைப்போல் ஜலீல் பாயின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள் ரகமது நிசா. அவள் கைகளின் பிடியிலிருந்து அவரால் மீளமுடியவில்லை. ஜலீல் பாய் மனதை உலுக்கி எடுத்துவிட்டது. மூத்தவ அழுதா வூட்டுக்கு ஆகாதே என எண்ணி அவளை சமாதானப்படுத்தினார்.
![]()
மதம்தான் குறுக்கே நிக்கிது என்று தன் மகள் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை. கோட்டைப்பட்டிணம் கடலில் பேரலைகளும் பேரிரைச்சலும் ஒருநாளும் கேட்டதே இல்லை. கடல் எப்போதும் அமைதியாகவே இருக்கும். அன்றிரவு கடல் கொந்தளிப்பது போல் பேரிரைச்சல் கேட்டது. கூப்பிடு தொலைவில் தெரியும் கடலை வெளியில் எட்டிப் பார்த்தார். எப்போதும்போல் கடல் அமைதியாகவே இருந்தது. இந்தக் கடல் கோபப்பட்டு என்னைக்கிமே பார்த்ததில்லையே. ஏன் இந்தக் கடல் மட்டும் அமைதியாக இருக்கு என்ற யோசனையில் மூழ்கினார் ஜலீல் பாய்.
பொழுது விடிந்தது. ஜலீல் பாய் தனது உறவினர்களுடன் ஜமாத் பெரியவர் சாதிக் பாட்ஷா தலைமையில் சுகந்தர் வீட்டுக்கு சென்றார்.
“காலம் இப்புடியே இருக்காதுனு அன்னக்கி சொன்னேன்ல. இப்ப கனிஞ்சு வந்துருக்கு. ஏதாவது ஒரு விடிவு கெடைக்காமலா போயிரும்…” ஜமாத் பெரியவர் சாதிக் பாட்ஷா பேசுவதைக் கேட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றார் ஜலீல் பாய்.
வாசலில் கூட்டம் கூடி இருப்பதைப் பார்த்து வீட்டுக்குள் இருந்து சட்டை அணியாத மேனியுடன் நாமம் போட்டுக்கொண்டு உடம்பின் குறுக்கே கிடந்த நூலை சரிசெய்தபடி வாசலுக்கு வந்த சுகந்தருக்கு எதற்காக இத்தனை பேரும் வந்திருக்கின்றார்கள் என்று புரியவில்லை. எல்லோரையும் ஏற இறங்க பார்த்த சுகந்தர் தனது உதடுகளைச் சப்பி பிதுக்கினார்..
”நல்லா யோசிச்சுதாங்க இந்த முடிவுக்கு வந்துருக்கோம். எப்ப பாத்தாலும் எங்கள தீவிரவாதியா பாக்குறதும் விரோதியா பாக்குறதும் தொடர்கதையா இருக்கு. உருப்படியா ஒரு தொழில் செஞ்சு பொழைக்க முடியுதா…? நாமெல்லாம் ஒன்னு.. அவனுக வேறனு அப்பாவி சனங்கள உசுப்பேத்தி விட்றீங்க. அவுங்களும் ஜெய்…ஜெய்….ஜெய்னு ஆயுதங்கள தூக்க ஆரம்பிச்சிருறாங்க. எங்க மக்க மனுச நாடு பூரா நிம்மதியா வாழ முடியல.. இந்த மண்ணுலதான் இப்பவரைக்கும் எந்தக் கலவரமும் வந்ததில்ல. எப்போ நீங்க இந்தப்பக்கம் காலடுத்து வச்சீகளோ அன்னக்கே தாயாப்புள்ளையா பழகிக்கிட்டு இருந்த எங்கள பிரிக்க ஆரம்பிச்சுட்டீங்க. அதான் ஜமாத்துல ஒரு முடிவு பண்ணி வந்துருக்கோம்….” சாதிக் பாட்ஷா பேசுவது சுகந்தருக்கு குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது.. ஆனால் ஏதோ வில்லங்கத்தோடு வந்திருப்பதாக எண்ணினார்.
“என்னய விட உங்களுக்குப் பத்துப்பன்னெண்டு வயசுதான் கொறச்சு. இருந்தாலும் உங்களுக்கும் அறுவத தாண்டிருக்கும். தலைமை தாங்குறதுக்கு வயசு ஒரு கேடானு கேக்குறேன். நமக்கு ஆக வேண்டியது ஆனா சரிதான்….”
“என்ன…. ஜமாத்தையே கூட்டியாந்து கலாட்ட பண்ணனும்னு நெனைக்கிறீகளா…? எங்க அமைச்சருக்கு ஒரு போன் பண்ணி ப்பயரிங் ஆர்டர் கொடுக்கச் சொல்லி சுட்டுப் பொசுக்கி கடலுல தள்ளச் சொல்லிருவேன்…..” கொந்தளித்த சுகந்தரை அப்பாவித்தனமாக பார்த்தார் சாதிக் பாட்ஷா.
“ஒங்களப் பகச்சுக்கிட்டு ஒரு கட்டுமரத்த கடலுல செலுத்திற முடியுமா..?. அதான் உங்க கூட ராசியாப் போயிறலாம்னு வந்துருக்கோம். ஒங்க தலைமையில ஒங்க மதத்துலயே சேந்தர்லாம்னு சொல்றதவிட தாய்மதத்துக்கு திரும்ப வந்துருக்கோம். இப்ப நாடு பூரா ஒரே மதம் ஒரே சாதி ஒரே சுடுகாடுனு இருந்தா சண்டைசல்லு வராதுல்ல. வாங்க எங்களுக்கும் மாட்ட வேண்டியத மாட்டிவிட்டு மந்திரத்த சொல்லிக் கொடுங்க” ஜலீல் பாய் சொன்னபோது ”ஏய்….ஏய் என்னடா கலாட்டா பண்ணனும்னே வந்துருக்கீகளா’ பேரலையில் ஆடும் படகைப்போல் அங்கிட்டும் இங்கிட்டும் தாவிய… சுகந்தரிடம் காபியை கொண்டு வந்து நீட்டினாள் அனித்தா.
”நீங்க பெரியவாள் அப்படியெல்லாம் கத்தக் கூடாது. எங்க வூட்டு பொம்பளைகளும் முக்காட கழட்டிப்புட்டு நம்ம அம்மா மாறி ஆச்சாரமா இருக்கனும்ல…. அனித்தாவைப் பார்த்து… வணக்கம் தாயி….. என்றதும் அவளுக்கு பக்கென தூக்கி வாரிப் போட்டது. “நீங்கதான் எல்லாத்துக்கும்
ஒரு மந்தரம் வச்சுருப்பீங்களே….. ஒங்களுக்கு இருக்க பவர வச்சு எங்களயும் ஒங்க மதத்துல…. இல்ல இல்ல… சாதிசனத்துல சேத்துக்கங்க. நாங்களும் பாத்தியா ஓதுன வாயால மந்திரம் சொல்ல கத்துக்குறோம். நாங்களும் காசு பொழங்குற நாலு கோயில்ல மணியடிச்சாவது பொழச்சுக்குவோம்ல” சாதிக் பாட்சா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வந்தவர்கள் அனைவரும் அப்படி அப்படியே வாசலிலேயே உட்கார்ந்தனர்.
எதுவும் பேசாமல் பற்களை நறுநறுவென கடித்துக்கொண்டு தன் மேனியில் உள்ள நூலை மட்டும் கெட்டியாகப் பிடித்தவாறு ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார் சுகந்தர்.
எப்போதும் அமைதியாக இருக்கும் கோட்டைப்பட்டிணம் கடல் பேரலையை உருவாக்கி கரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
————-*******——–
![]()
முழுவதும் படித்து விட்டு கருத்து பதிவு இடுகிறேன்