“நடுகைக்காரி” …. 56 ….. ஏலையா க.முருகதாசன்.

புஸ்பகலா பாடங்களில் கவனம் செலுத்தவே இல்லை.புஸ்பகலாவின் மனதை அறிந்த கறுவல் செல்லத்துரை மாஸ்ரரும் மெய்யே தனபாலசிங்கம் கொர்லிக்ஸ் கிர்லிக்ஸ் கொண்டு போய்க் கொடுத்து உங்கடை பிரண்ட் ஞானத்தை வருத்தம் பார்க்கப் போகேலையோ என்று புஸ்பகலாவை கடைக்கண்ணால் பார்த்தபடியே வார்த்தைத் தூண்டில் போட,தன்னைத்தான் சாடைமாடையாகச் சொல்கிறாரோ என அவளுக்குத் திக்கென்றது.
இல்லை சேர் நான் குடுக்கேலை நான் அவனுக்குக் கிட்டத்தானே இருக்கிறன் மற்றவை ஆரேனும் கொண்டு போய்க் குடுக்கினமோ தெரியாது என்றிழுக்க முக்கியமானவர்கள் கொண்டு போய்க் குடுக்கட்டும் எமக்கென்ன என்றவர் சரி படிப்பம் என்று ஆங்கிலப் புத்தகத்தை எடுக்கிறார்.
ஆங்கில வகுப்பு முடிவதற்கு மணியடிச்சதும் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு முதல் பாடம் கணக்குப் பாடந்தானே என்று மாணவர்களைப் பாரத்துக் கேட்க ஓம் சேர் என்று ஒருசில மாணவர்கள் பதில் சொல்கிறார்கள்.
வகுப்பைவிட்டு கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் போனதும் அவசரம் அவசரமாக புஸ்பகலா தனபாலசிங்கத்திடம், அவனுக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போகேக்கிலை என்னையும் கூட்டிக் கொண்டு போய் ஞானத்தின்ரை வீட்டைக் காட்டிறியா அவரை வருத்தம் பார்க்கப் போக வேணும் என்று கேட்க அவனம் ஓம் என்பது போலத் தலையாட்டுகிறான்.
புஸ்பகலா கெட்டிக்கார மாணவிதான் ஆனால் இரண்டு நாட்களாக அவளால் ஒழுங்காக படிப்பிக்கும் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஞானத்திற்கு காய்ச்சல் வந்து அவன் கல்லூரிக்கு வராததால் அவனைப் பார்க்க முடியவில்லையே என்பது மட்டுமல்ல,மருந்துரைச்ச சிரட்டைப் பிரச்சினையால் தனக்கு மாதவிடாய் சரியான நாளில் வந்திடுமா என்பதை தாய் அறிவதற்காக தன்னை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறாரோ என்பதும் அவளின் மனதை அலைக்கழிக்க அவள் மனதளவில் குழம்பிப் போயிருந்தாள்.
அடுத்தடுத்த வகுப்புகள் சரியான நேரத்தைத் தாண்டி நடந்து கொண்டிருந்தாலும் அவை மிக மெதுவாக நடைபெறுவதாக அவள் எண்ணினாள்.
காலமை எட்டு நாற்பத்தைந்து ஆரம்பிக்கும் வகுப்புகள் தேநீர் இடைவேளைக்கு முன்பு மூன்று வகுப்புகளும்,அதற்குப் பிறகு இரண்டு வகுப்:புகளும் நடைபெற்று பிறகு மத்தியான சாப்பாட்டு இடைவேளை விடப்படும்.
மத்தியானச் சாப்பாட்டு இடைவேளைக்கு முன்னர் நடைபெறும் எல்லா வகுப்புகளும் எப்பொழுது நடைபெற்று முடியப் போகுதோ என புஸ்பகலா தவிச்சுக் கொண்டிருந்தாள்.
புஸ்பகலாவிற்கு ஞானத்தின் மீது காதல் வந்ததன் பின்பு அவளுக்குக் கல்லூரிக்கு வருவதென்றாலே ஒரு பூங்காவிற்கு போவது போன்ற மகிழ்ச்சித் தொடரில் இருந்தாள்.
இன்று தனது காதலனைப் பார்க்கப் போகிறேன் என்ற மனத் துள்ளலும் அதே வேளை இந்த வகுப்புகள் என்ன இழுத்துக் கொண்டேயிருக்கிறதெனவும் எண்ணினாள்.
மத்தியானச் சாப்பாட்டு இடைவேளை விட்டதும் வேகமாக எழுந்து கொண்டே தனபாலசிங்கம் வா வா கெதியிலை என்று தனபாலசிங்கத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே தனது சைக்கிளை விட்ட இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தாள்.
புஸ்பகலா எப்பொழுதும் வகுப்புக்குத் தேவையான புத்தகங்கள் கொப்பிகளை ஒரு சீலைப் பைக்குள் வைச்சுத்தான் கொண்டு வருவாள்.இன்று அந்தப் பைக்குள் கொர்லிக்ஸ் போத்தலும் இருந்தது.புத்தகங்கள் கொப்பிகளைவிட கொர்லிக்ஸ் போத்தலிலேயே அவளின் கவனம் இருந்தது.
அந்தப் துணிப் பைக்கு அழகான பூக்களை தைச்சிருந்தாள் .தோளில் கொழுவிக் கொண்டிருந்த அந்தப் பைக்குள் இருந்த கொர்லிக்ஸ் போத்தலை கையால் பிடிச்சபடி நடந்தவள் தனது சைக்கிளடிக்கு போய் காண்டிலில் கொழுவியிருந்த கூடைக்குள் வைச்சு சைக்கிளை எடுத்து உருட்ட அவளுக்குப் பின்னாலேயே வந்த தனபாலசிங்கமும் தனது சைக்கிளை எடுத்து இருவருமாக கல்லூரிக் கேற்வரைக்கும் உருட்டிக் கொண்டு போய்; வீதியடியிலிருந்து ஏறி இருந்து ஓடத் தொடங்கினர்.
வழமையாக ஞானமும் தனபாலசிங்கமும் மத்தியானச் சாப்பாட்டு இடைவேளையின் போது அம்பனைச் சந்திவரை சைக்கிள் பெடலில் ஏறி நின்று விளக்கி வேகமாகப் போய் அந்த வேகத்துடனேயே தங்கள் தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.
ஆனால் இன்று புஸ்பகலாவும் சைக்கிளில் வருவதால் அவள் சைக்கிளை விளக்கும் வேகத்திலேயே தனபாலசிங்கமும் சைக்கிள விளக்கிக் கொண்டிருந்தான் .
இரண்டு பேரும் சமாந்தரமாகப் போய்க் கொண்டிருந்தனர்.அம்பனைச் சந்தியைத் தாண்டி பன்னாலைக்குத் திரும்பும் வீதிப் பக்கமாக திரும்பும் போது அந்த முகரியில் வடக்குப்பக்கமாக இருக்கின்ற மணியத்தின்ரை கடைப் படியடியில் நின்று மணியத்துடன் கதைச்சுக் கொண்டிருந்த கொண்டக்ரர் மணியம் தனபாலசிங்கத்தையும் புஸ்பகலாவையும் கூர்ந்து குறிப்பாகப் பார்த்தவர் இதார் புதுப் பெட்டையாக் கிடக்கு,கைலாயத்தின்ரை பொடியனோடை போகுது என்று சொல்வது புஸ்பகலாவிற்கும் தனபாலசிங்கத்துக்கும் கேட்கவே இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்கின்றனர்.
உந்தக் கொண்டக்ரர் மணியத்துக்கு உதுதான் வேலை அந்தக் கடையிலை நின்று கொண்டு ஆர் போகினம் வருகினம் என்று விடுப்புக் கதைச்சுக் கொண்டிருப்பார்.அவருக்கு விடுப்பு மணியம் சவாரி மணியம் என்ற பட்டப் பெயர்களும் இருக்குது அவற்றை கதையை காதிலை விழுத்தாதையுங்கோ
எங்கடை சனத்திலை இப்படியும் ஆட்கள் இருப்பினம் என்று புஸ்பகலாவைச் சமாதானப்படுத்துகிறான் தனபாலசிங்கம் .
ஞானத்தின் வீடு வந்ததும் அவனின் வீட்டு வளவுக் கேற்றைச் தனபாலசிங்கம் சைக்கிளில் இருந்தபடியே தள்ளித் திறந்து வீட்டை நோக்கி சைக்கிளில் போக,புஸ்பகலா சைக்கிளை விட்டு இறங்கி சைக்கிளை உருட்டிக் கொண்டு அவன் பின்னால் போகிறான்.
தனபாலசிங்கம,; முற்றத்தில் சைக்கிளில் நின்றபடியே ஞானம் என்று கூப்பிட அறைக்குள்ளிருந்து வெளியே வந்த ஞானம் புஸ்பகலாவைக் கண்டதும் திகைப்பு ஒருபுறமும் அவளைப் பார்த்த மகிழ்ச்சி ஒருபுறமுhக வாருங்கோ என்கிறான்.![]()
அடுப்படிக்குள்ளிருந்து வெளியே வந்த ஞானத்தின் தாய் ஒரு பொம்பிளைபிள்ளை முற்றத்தில் நிற்பதைக் கண்டதும் இது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கும் போதே அம்மா இவா என்னோடை படிக்கிறவா என்னை வருத்தம் பார்க்க வந்திருக்கிறா என்று ஞானம் சொன்னதும்,சரி ஞானம் நான் வீட்டிலை சாப்பிட்டிட்டு வாறன் போகிற போது உங்களைக் கூட்டிக் கொண்டு போறன் என்று புஸ்பகலாவின் பக்கம் திரும்பி தனபாலசிங்கம் சொல்லியபடியே தனது வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
வா பிள்ளை வந்து இரு என்று கதிரையைக் காட்டுகிறாள். ஞானத்தின்ரை தாய்.சீலைப் பைக்குள்ளிருந்து கவனமாக கொர்லிக்ஸ் போத்தலை எடுத்தபடியே விறாந்தையிலை ஏறிய புஸ்பகலா ஞானத்திற்கு அருகில் நின்றபடியே எதுவும் சொல்லாமல் கொர்லிக்ஸ் போத்தலை ஞானத்தை நோக்கி நீட்டுகிறாள்.
அதை வாங்கிய ஞானம் விறாந்தையிலிருந்த மேசையில் கொர்லிக்ஸ் போத்தலை வைச்சபடி, இருங்கள் என்று சொல்ல புஸ்பகலாவும் இருக்க அவனும் இருக்கிறான்.
பிள்ளை சாப்பிட்டியா என்று ஞானத்தின் தாய் கேட்க இல்லை இனித்தான் என்று பதிலளிக்கிறாள் புஸ்பகலா.
பிள்ளை இஞ்சை சாப்பிடு வாளைமீன் குழம்பும் பொரியலும் கோவா வறையும் வச்சிருக்கிறன்.ஞானத்திற்கு கீளி மீனில் சரக்குக் கறி வைச்சிருக்கிறன் என்று சொல்லி முடிக்க முந்தி அம்மா சரக்குக் கறி வேண்டாம் வாளை மீன் குழம்பைத் தாருங்கள் என்கிறான்.
மாமி காய்ச்சல்காரர் உறைப்புச் சாப்பிடக்கூடாது சரக்குக் கறிதான் நல்லது.சரக்குக் கறியோடை சோறு சாப்பிட்டால்தான் காய்ச்சல் மாறும் என்று சொல்லிக் கொண்டே குறும்புச் சிரிப்புடன் ஞானத்தைப் பார்க்கிறாள் புஸ்பகலா.
மாமி என்று புஸ்பகலா ஞானத்தின் தாயை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியாமல் எதேச்சையாக கூப்பிட்டாளா அல்லது ஞானத்தைக் கல்யாணம் செய்வதால் ஞானத்தின் தாய் மாமிதானே என்ற உரிமையில் கூப்பிட்டாளா என்பது தெரியவில்லை.
மாமி என்று புஸ்பகலா ஞானத்தின் தாயைக் கூப்பிட்டதும் ஒருவித திகைப்பு ஞானத்துக்கும் தாய்க்கும் ஏற்பட்ட போதும் அது ஒரு மகிழ்ச்சியான திகைப்பாகவே இருந்தது.
மாமி என்ற சொல் ஞானத்தின் தாயின் மனதைக் குளிர்ச்சிப்படுத்தியதை அவரின்: முகம் காட்டியது.
அது சரி பிள்ளை மத்தியானம் சாப்பிடவெண்டு என்ன கொண்டு வந்தனி என்று ஞானத்தின் தாய் கேட்க புட்டை முட்டைப் பொரியலுடன் அம்மா கலந்து தந்தவா என்று புஸ்பகலா சொல்ல அதை என்னட்டை தந்திட்டு நான் தாறதைச் சாப்பிடு என்கிறாள் ஞானத்தின் தாய்.
விறாந்தையிலிருந்து இறங்கிப் போய் சீலைப் பைக்குள்ளிருந்து புட்டுப் பார்சலை எடுத்துக் கொண்டு ஞானத்தின் தாயிடம் குடுத்துக் கொண்டிருக்கும் போது ———–
(தொடரும்)
![]()