கதைகள்

“விடற்கு” …. சிறுகதை – 29 …. அண்டனூர் சுரா.

மகளை அக்கோலத்தில் பார்த்ததும், கண்ணையா நடுநடுங்கிப் போனார். அவரது உதரவிதானத்துடன் கூடிய நெஞ்சுக்குழி தாங்குவதைப் போலிருந்தது. அவருக்கு அந்நேரத்தில் அப்படியொரு பலம் எங்கேயிருந்துதான் வந்ததோ. கதவை உடைத்துக்கொண்டோடி, மகளைக் கட்டி அணைத்து தூக்கினார். “என் கண்ணே, என்ன காரியமடி செய்றே”, அவரது தசைகள் தனியே ஆடின. கிழட்டு உடம்பு வியர்த்து, ஆடைகள் நனைந்து, சடசடத்தது. இரு கைகளாலும் மகளின் இடுப்பை இறுகப் பற்றி மேலே தூக்கியபடி மகளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். கண்ணீர் குளமென, கடைவிழிகள் வழியே வழிந்தது. அவரது உதடுகள் தவிக்க, துடிக்க “ ஆயா, ஆத்தா, என்ன தாயீ இது…” என்பதாகப் பரிதவித்தார்.

“ நான் மோசம் போகயிருந்தேனே, ஆயா, ஒனக்கு நான் என்னடிம்மா குறை வச்சேன்…” மகளைத் தூக்கி இறக்கி, கீழே உட்கார வைத்தவர், அந்தத் தள்ளாடும் வயதிலும் நாற்காலியில் ஏறி, கயிற்றை அவிழ்த்து, வீட்டிற்கும் பின்பக்கமாகக் கொண்டுச்சென்று, கயிற்றை எரித்து, கைகளை உதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி வருகையில் அமலா குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கால்களையும் இறுகக் கட்டிக்கொண்டு முகத்தை அதற்குள் புதைத்து கண்ணீரால் கன்னத்தைக் கரைத்துக்கொண்டிருந்தாள்.

மகள் முன் மண்டியிட்டு அமர்ந்தார் கண்ணையா. முகவாய்க்கட்டைக்கு ஒரு கையைக் கொடுத்து அவளை நிமிர்த்திப் பார்த்தார். இரு அன்னங்களுக்கிடையில் நூலிழையாக எச்சில் ஓடி கண்களின் இரு விளிம்புகளிலும் கண்பூழை வெளியே தள்ளியிருந்தது.

“என்னை மன்னிச்சிருங்கப்பா…” அவள் உடல் குலுங்கினாள். அவளது முகவாய்க்கட்டை தனியே ஆடியது. அவளை இதற்குமேல் அழவிட்டால் பக்கத்து வீட்டிலிருந்து யாரும் வந்துவிடுவார்களென பயந்தவராய் ஓடிச்சென்று கதவுகளை அடைத்து அவளது கூந்தலை அள்ளி கொண்டையிட்டு தன் வேட்டி முந்தியால் முகத்தைத் துடைத்துவிட்டார்.

அவரால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. ஓடி, பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டுவந்து மகளிடம் நீட்டினார். அப்பா கொடுப்பதை வேண்டாமென்று மறுக்காதவளாய் அதை வாங்கிய அமலா இரண்டு மிடறுகள் பருகி, தொண்டையை நனைத்துக்கொண்டாள்.

“ இன்னும் கொஞ்சம் குடியடிம்மா..”

“ போதும்ங்கப்பா….”

“என்ன தாயி பிரச்சனை, ஏன்தாயி இந்த முடிவெடுத்த?” அவரது தலை கழுத்திலே நிற்கவில்லை. அவரது கேள்விக்கு அவளிடமிருந்து வெறும் குலுங்கலாகவே பதில் வந்தது.

“ ஆயா, யாரையும் நீ காதலிக்கிறீயா, அவன் ஒன்ன ஏமாத்திட்டானா, உன்னோட காதலுக்கு நானேதும் தடையா இருக்கேனா..?”

அவளது கண்கள் ஏறிட்டுப் பார்த்தன. இல்லை என்பதாக தலை தனியே ஆடியதில் ஒரு துளிக் கண்ணீர் அவரது கன்னத்தில் பட்டுத் தெறித்தது.

“ வேறென்ன தாயி, அம்மா எதுவும் சண்டைப்போட்டாளா, அண்ணன் எதுவும் சொன்னானா..?”

“ இல்லேங்கப்பா…”

“ காலேஜ் பிடிக்கலையா?”

“ பிடிக்குதுங்கப்பா..”

“ ஹாஸ்டல்ல எதுவும் பிரச்சனையா..?”

“ இல்லேங்கப்பா…”

“ வேற என்னதான் தாயி பிரச்சனை? ஏன் தாயி இந்தக் கோழைத்தனமான முடிவ எடுத்த?” கண்களில் பொங்கிய கண்ணீர் அவரது பார்வையை மறைத்தது.

“ உன்ன வைத்து நான் எவ்ளோ கனவு கண்டிருக்கேன் தெரியுமா? மேலே மேலே உயர்வேனு நினைச்சேன் தாயீ. ஆனால் நீ, இப்படியொரு முடிவ எடுத்திருக்கே. நீ இல்லாம எங்களால வாழ முடியுமென நினைக்கிறீயா? உன் அம்மா இதய நோய்க்காரி. இதைக் கேட்டாலே அவ இதயம் வெடிச்சிடுமேயாத்தா, அய்யோ,..” அவளைத் தூக்கி வளர்த்த உள்ளங்கையை வெறிக்கப் பார்க்கவும் முகத்தில் கைகளைப் பொத்தி குலுங்கவும் செய்தார்.

அமலா நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். அவளது வாய் ஓலமிட்டபடி ஆ…வெனத் திறந்திருந்தது. அவளது குலுங்கலை நிறுத்தி அவளது தலையை அவரது மடியில் கிடத்திக் கொண்டு, மகளின் தலையை கைகளால் வருடிக் கொடுத்தவாறு கேட்டார். “எப்பவும் போனும் கையுமா இருப்பீயே. அதனாலே எதுவும் பிரச்சனையா…?”

அவள் தலை மடியிலிருந்து மெல்ல நிமிர்ந்தது.

“ நான்தான் அப்பலேருந்தே படிச்சிப் படிச்சி சொன்னேனே, நீ கேட்டாத்தானே,…” என்றவர் மகளை நிமிர்த்தி சுவற்றில் சாய்த்து உட்கார வைத்துவிட்டு ஒரு மூலையில் எறிந்துகிடந்த அந்த ஆண்ட்ராய்டு மொபைலை எடுத்துப் பார்த்தார். அலைபேசியின் மென்திரை தாறுமாறாக விரிசல் விட்டிருந்தது. அதை தன் விரல்களால், தடவிப் பார்த்தவர், அதை இயக்கினார். அலைபேசி ரகசியக் குறியீடு கேட்டது.

“ பாஸ்வேர்டு என்னடிம்மா?”

“ உங்கப் பேருங்கப்பா…”

அவரது உதடுகள் விம்மின. கண்களில் கண்ணீர் சூல் கொண்டது. “இப்படியெல்லாம் என் மேலே பாசமா இருந்திட்டு ஏனடிம்மா என்னை விட்டுப் போகயிருந்தே.”

தண்ணீரில் விழுந்த கோழிக்குஞ்சின் இறகுகள் உடம்போடு ஒட்டிக்கொள்வதைப்போல அவளது இமைகள் கண்ணீரால் பிசுபிசுத்து ஒட்டிக்கொண்டன.

கண்ணையா அலைபேசிக்குள் நுழைந்தார். அவளுக்கு இரண்டு நாட்களாக வந்திருந்த அழைப்புகளைப் பார்த்தார். இரண்டு அழைப்புகள் மட்டுமே வந்திருந்தன. இரண்டும் அவளுடைய தோழியின் அழைப்புகளாக இருந்தன. குறுஞ்செய்தி, புலனச் செய்திகளைப் பார்த்தார். மனதை உடைக்கும்படியாக எந்தவொரு செய்தியும் அதில் இருந்திருக்கவில்லை.

அவளது கை அலைபேசியை நோக்கி நீண்டது. விரல்கள் மிதமெல்ல திரையில் ஊர்ந்தன. அவள்,ஒரு புகைப்படத்தை எடுத்து அப்பாவிடம் நீட்டியவள் தலையைச் சுவற்றில் முட்டிக்கொண்டாள்.

கண்ணையா அதை வாங்கிப் பார்த்தார். திரையில் அரை நிர்வாணத்தில் ஒரு பெண் இருந்தாள். அரை நொடி அளவிற்கே அதை அவர் பார்த்தார். அவரையும் அறியாமல் அவரது விரல்கள் அதை டெலிட் செய்தன.

“ இது யார் தாயீ, இதுக்கு ஏன் நீ அழுற..?”

“ நான்தான்ங்கப்பா அது” அவளது பற்கள் கற்றிற்றன.

“ அடச்சீ, வாயை மூடு. இது நீயல்ல. உன்னப் போலருக்கிற வேறு யாரோ…”

அவளது பார்வை அப்பாவை நோக்கி நிமிர்ந்தது. “ நான்தான்ங்கப்பா அது. யாரோ ஒருத்தன் என்னோட முகநூலுக்கு டேக் பண்ணிருக்கான்..”

“ யாரவன்…?”

“ பெயர் தெரியலப்பா. அவனோட புரோபைல்ல இந்தப் போட்டவதான் வச்சிருக்கான்…

கண்ணையாவிற்கு நெஞ்சு அடைப்பதைப் போலிருந்தது. அதை வெளிக்காட்டாதவராய் உடம்பை முறுவலித்தார். மகளை எப்படியேனும் தேற்றியாக வேண்டிய நிலைக்கு அவர் வந்திருந்தார்.

“ அவன் யாரு, எந்த ஊரு, உன் காலேஜ்ல்ல படிக்கிறவனா…?”

“ தெரியலங்கப்பா…”

இருவருக்குமிடையில் வெக்கையாக பெருமூச்சு முட்டியது.

“ அது நீ இல்ல ஆத்தா. உன்னை எனக்குத் தெரியாதா”

“ நான்தான்கப்பா அது. இந்தப் படத்த செல்பியா நான்தான் எடுத்தேன்…”

கண்ணையா முகத்தை சுவர்ப் பக்கமாகத் திருப்பிக்கொண்டார். நெஞ்சு தாங்தாங்கென இருந்தது. அவரது தொங்கிப் போன உடம்பு திரவமாக உருகி, கால் வழியே வழிந்தோடுவதைப் போலிருந்தது.

“ அப்பா, என்னை மன்னிச்சிருங்கப்பா” அவளது முகத்தில், பிடிப்பட்ட கோழிக்குஞ்சின் கெஞ்சல் தொற்றி இருந்தது.

“ நீயாக எடுத்தியா! ஏனெடுத்தே?”

“அன்னைக்கு ஹாஸ்டல்ல, ரூம் மெட்ஸ் யாருமில்லைங்கப்பா. நான் மட்டும் தனியா இருந்தே. டீவியில ஓடின ஒரு படத்தில, ஹீரோயின பல சாட்டா காட்டுனாங்க. அதைப் பார்த்ததும் எனக்குள்ள ஒரு

ஆசை. அவளைப் போலவே பல கோணத்தில படம் எடுத்துக்கிட்டேன். சேலை, சுடிதார், கவுன், நைட்டி, பேண்ட் சர்ட், கூந்தலைக் கலைச்சி, பின்னி, கொண்டைப்போட்டு,… எல்லா காஸ்டீயூம்லயும் நின்னு படம் எடுத்த நான், அப்படியே பாத்ரூம்ல குளிக்கிறத்தையும் எடுத்திட்டேன்கப்பா…”

“ தப்புனு தெரியாதா..?”

“ என் உடம்பு என்னோட மொபைல், அப்படினு நினைச்சி எடுத்திட்டேன்ப்பா. சாமிச் சத்தியமாச் சொல்றேன்ப்பா, அப்பவே அதை நான் அழிச்சிட்டேன். ஆ..னா, அந்தப் போட்டோ எப்படி வெளியே போனுச்சினே தெரியலங்கப்பா…” அவள் சொல்லி நிறுத்திய செய்தி அவருக்குச் சேறும் சகதியுமாக இருந்தது.

கண்ணையா கற்றை அதிர்ச்சியோடு நின்றார். சுவாசம் மூச்சு மூச்சாக வெடித்தது. மகளை வெறுப்போடு பார்த்தார். அவள் குற்றவுணர்வால் தழும்பி, ததும்பியவாறு நின்றாள்.

“ அட விடு அமலா. யாருக்குத்தான் இந்த ஆசை இல்ல, சொல்லு. பாத்ரூம்ல கண்ணாடி வைக்கிறோமே ஏன், அவரவர் உடம்ப அவங்கவங்க பார்க்கத்தான். அப்படிதான் நீயும் பார்த்திருக்கே, என்ன ஒன்னு கண்ணாடி இல்லைங்கிறதனாலே உன்னோட மொபைல்ல படம் எடுத்து பார்த்திருக்கே, இது என்ன கொலைக் குற்றமா…?”

அவளது அழுகை ஒரு புள்ளியில் வந்து நின்றது.

“ எனக்குக்கூடதான் இந்த ஆசை இருக்கு. இதோ என்னைப் பாரு, நான் பேங்க் கேசியரா இருந்து ஓய்வுபெற்று வருசம் அஞ்சு ஆச்சு. முடியெல்லாம் புளிச்சை நாறாட்டம் நரைச்சிப் போயிருச்சு. ஆனா டை அடிக்கிறேனே, ஏன்? என்னை நான் இளமையா காட்டிக்கணும் என்கிற நப்பாசைதான். உன் அம்மா மட்டும் என்னவாம், அவள் கண்ணாடியில வகிட்டு நரையைப் பார்த்து முகம் கோணுறாளே ஏன், எல்லாம் இளமையாக இருக்கணும், அழகா இருக்கிணுங்கிற ஆசையைத் தவிர வேறென்ன. இதுக்குப் போய் நீ தற்கொலை வரைக்குமா போகணும்…”

அமலாவிற்கு கண்ணீர் வற்றி ஆசுவாசம் பிறந்தது. அவள் தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து முகத்தோடு சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டாள்.

“ காவல் நிலையத்தில புகார் கொடுப்போமா…?”

“ வேண்டாங்கப்பா, முகநூல்ல புகார் பண்ணிருக்கேன்”

“ ரிப்ளே வந்ததாம்மா…?”

“ இந்தப் படம் இனி, பதிவேற்றம் செய்தா, முடக்கிவிடுவதாக பதில் கொடுத்திருக்காங்க..” என்றவள், அதை எடுத்து அப்பாவிடம் காட்டினாள். அதை வாங்கிப் பார்த்த அவர், பிறகு எப்படி மெசேஞ்சர்ல அனுப்பினான்…?

“ ஸ்கிரீன்சாட் எடுத்து வச்சிருப்பான் போலிருக்குப்பா…”

“ எடுத்த செல்பிய உன்னையும் அறியாம உன் பிரண்ட்ஸ் யாருக்கும் அனுப்பிட்டீயோ, என்னவோ..?”

“சத்தியமா இல்லங்கப்பா. ஆனா, நான் போட்டோ எடுத்தப்போ, மொபைல் ஆன்லைன்ல இருந்ததுங்கப்பா..”

“ அதான்…!” என்றவர், மகளின் தலையை வருடிக்கொடுத்தார். “மின்சுவிட்சும் ஆன்லைனும் ஒன்னடிம்மா. தேவைப்படுறப்ப ஆன் பண்ணிக்கணும். எப்பவும் ஆன்லயே வச்சிருந்தா இப்படிதான். மொபைல்தான் உன்னோடது, இணையமுமா உன்னோடது, இம்…?..” என்றவர் மகளின் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தார். அவளது கன்னம் கொதித்திருந்தது. “ஒரு நொடி தாமதிச்சு வீடு திரும்பியிருந்தா, கொதிக்கிற இந்த உடம்பு ஜில்லிட்டு போயிருக்குமே…” அதைச் சொல்கையில், அவரது மனதிற்குள் திராவகம் கொதித்தது, “நா”வுடன் சேர்ந்து உதடுகள் தழுதழுத்தன.

“இதுக்கு ஏன் தாயீ, கயிறு வரைக்கும் போனே…?”

“ அண்ணன், மாமா, சொந்தக்காரங்க யாரும் பார்த்திருவாங்கோனு பயந்திட்டேன்ப்பா…”

“ பார்த்தா என்ன, இம் பார்த்தால் என்னங்கிறேன்…” அவரது நெல்லிருண்டை தொண்டை முடிச்சு ஏறி இறங்கியது.

“அப்பா!” அதற்கு மேல் அவளால் பேச முடிந்திருக்கவில்லை. விம்மல் உதடுகளில் முட்டியது.

கண்ணையா சற்றுநேரம் அமைதியாக நின்றவர், அவரது பிரோவைத் திறந்து, அடுக்கியிருந்த புத்தக நோட்டுகளைக் கலைத்து நான்கைந்து புகைப்படங்களை எடுத்துவந்து மகளிடம் நீட்டினார். கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அவை. ஒரு குழந்தை வெள்ளி அருணாக்கொடியுடன் ஆடையில்லாமல் நின்றிருந்தான். “இது யார்னு தெரியுதாடிம்மா?”

அவள் படத்தை வாங்கி ஓரிரு நிமிடம் பார்த்தாள். “ அண்ணன்கப்பா….”

இன்னொரு புகைபடத்தை அவளிடம் நீட்டினார். அது, பள்ளி வயது பருவத்தினராக இருந்தது. “இது யார்…?”

“ இதுவும் அண்ணன்தானுங்கப்பா…”

அவருடைய உதடுகள் முறுவலித்தன. இன்னும் நான்கைந்து புகைப்படங்கள். ஒவ்வொன்றையும் கண நேரம் பார்த்தவளுக்கு அத்தனை படங்களும் இதற்கு முன் அவள் எங்கேயோ பார்த்த படங்களாக இருந்தன.

“ இது எல்லாமே அண்ணன்களாப்பா…?”

அவர் சிரித்தார். “ இல்லடிம்மா, எல்லாமே நான்தான்…”

“ அப்பா…!”

அவரது உதடுகள் புன்னகைத்தன. “ பார்த்தாயா, உன் அப்பாதான் நான். உனக்கு வயசு இப்ப இருபது ஆயிருச்சு. இத்தன வருசமா என்ன நீ பார்த்திக்கிட்டேதான் இருக்கே, இந்த போட்டோவுல இருக்கிறது நான்தானென உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சதா, முடியல. அப்படித்தான் உன்னோட புகைப்படமும். அது உன் படமாகவே இருந்தாலும் யாரோ ஒருவருடைய படமாக அது உருமாறிக்கொண்டிருக்கும். உனக்கு மட்டும்தான் தெரியும், அது நீயென…”

அமலா ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருந்தாள். அவளது கண்களில் பழைய ஒளிவட்டம் வந்திருந்தது. உதடுகளில் விம்மல் மறைந்து குறுநகை அரும்பியது.

“ நீங்க என்ன சொல்றீங்கனே புரியலங்கப்பா…”

“ மனுச பிறப்பு இருக்கே, அது சோளப் பயிர் மாதிரி, நாளுக்கு ஒரு மாற்றம். நேற்றைக்கு இருந்த மாதிரியா இன்றைக்கு நீ இருக்கே, கிடையாது. இன்றைக்கு இருக்கிற மாதிரியா நாளைக்கு நீ இருக்கப்போற, முடியாது. நீ என்ன கொலைக் குற்றமா செஞ்சிட்டே. இல்ல வங்கியில கடன்வாங்கிக்கிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சி போயிட்டியா? கிடையாதே! யாரும் எதுவும் கேட்டா ஒருத்தரைப் போல இந்த உலகத்தில் ஏழு பேருண்டுனு சொல்லிட்டு போக வேண்டியதுதான். இதுக்காக தற்கொலை வரைக்கும் போனா உன்னோட வாழ்க்கைய யார்டா வாழ்றது. உன்ன வளர்த்து ஆளாக்கிய எங்களுக்கு நீ கொடுக்கிற பரிசு இந்த மரணம்தானா?”

அகிலா, அப்பாவின் கைகளைப் பிடித்தாள். “ சாரிங்கப்பா”

“ ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோடிம்மா. உன்னோட புகைப்படத்த யாரோ ஒருத்தன் திருடி அதை இணையவெளியில பரப்புறதுக்கு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியது அவன்தானே தவிர நீ இல்லடிம்மா…”

அமலாவின் ஆழ்மன நொதிப்பு மெல்ல அடங்கி வந்தது. அப்பாவை அவள் ஒரு புதிரைப் போலப் பார்த்தாள். அவளுக்கு அப்பா முன்னே விடவும் ரொம்பப் பிடித்துப் போயிருந்தார். கண்ணையா மகளை இறுகக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார். அப்பாவின் முத்தம் எத்தனை உயர்வானது? அவளது நெற்றி முத்தத்தை மெல்ல உள்வாங்க மனம் இளைப்பாறி வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *