“வளவன் என்னும் நான்” …. சிறுகதை …. சோலச்சி.

ஒவ்வொரு இரவும் அவனை தூங்கவிடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. இரவோடு நாள்தோறும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தான். இரவைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே சாயுங்காலமே விளக்கேற்றிவிடுவான். இருந்தாலும் வெளிச்சத்திற்கு அப்பாலும் இருட்டு தெரிந்தது. வாழ்வின் இருளை விரட்டியடிக்கும் சூரியனைத்தான் வளவன் நெடுநாட்களாகவே தேடிக்கொண்டு இருந்தான்.
கடற்கரை ஓரமாக இருக்கும் கிழவன்களம்தான் வளவனின் ஊர். இருநூறுக்கு குறையாமல் மக்கள்தொகை. தேடாநாதியாக இருக்கும் கிழவன்களம் தேர்தல் நேரத்தில் சுறுசுறுப்பாகிவிடும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கிழவன்களத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கும். சுனாமி பேரலையில் கிழவன்களம் சூரையாடப்பட்டபோது கட்டுமாவாடி வரை வந்த அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் கிழவன்களத்தை ஏரெடுத்து கூட பார்க்கவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் ஏதோ கடமைக்கு எட்டிப்பார்த்துவிட்டு சென்றதுதான். தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் பிஸ்கட் ஒரு போர்வை கொடுத்ததார்கள். அதுவும் பாதிபேருக்கு மேல் கொடுக்கவில்லை. இவ்ளோதூரம் எங்கனால கொண்டு வர முடியாது. வேணுன்னா கட்டுமாவாடிக்கு வாங்கனு சொல்லிவிட்டுப் போனார்கள்.
கிழவன்களம் கட்டுமாவாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளை வேலிக்கருவை மரங்கள்தான் காவல் காத்தன. முழு போதையில் தள்ளாடும் மனிதனைப்போல்தான் வாகனங்கள் சாலையில் செல்ல முடியும். மண்சாலை என்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பெரும் பள்ளமாய் பல் இளித்து காட்சி தரும்.
கிழவன்களத்து மக்கள் எப்போதாவது சாலையை மண்வெட்டியால் சீர்செய்வதுண்டு. அதுவும் மழைக்காலங்களில் அரித்துக்கொண்டு போய்விடும். பல நேரங்களில் மண் சாலை ஒற்றையடிப் பாதையாகவே மாறி இருக்கும். ஊருக்குள் நுழைந்தால் கருவாட்டு வாசனையும் மீன் கவுச்சியும் மூக்கைத் துளைத்துக்கொண்டு செல்லும்.
முள்ளிக்குளம் சாலை முக்கத்தில் கிழவன்களம் சாலை சீரமைப்பு மதிப்பீடு ரூ 13.6 இலட்சம் என்று பலகையை ஊன்றி ஓவியா ஸ்டுடியோ முத்து தன் உதவியாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.
“ஏம்பா போட்டாகார தம்பி …. கெழவன்களத்து போர்ட இங்க வச்சு எதுக்கு போட்டா எடுக்குற” முள்ளிக்குளம் ராமசாமி கேட்டபோது நான்கைந்து பேர் கூடிவிட்டனர்.
“ஏனு தெரியலண்ணே. கட்டுமாவாடி ராசேந்திரன் கவுன்சிலர்தான் எடுத்து வரச் சொன்னாரு.” சொல்லிக்கொண்டே ஊன்றிய பலகையை முத்து தன் உதவியாளருடன் தூக்கிக் கொண்டு வண்டியில் கிளம்ப அங்கிருந்தவர்கள் செய்வதறியாது நின்றனர்.
செய்தியறிந்த கிழவன்களத்து மக்கள் ஏழெட்டு பேர் ராசேந்திரன் வீட்டுக்கே சென்றுவிட்டனர். “இதெல்லாம் பெரிய எடத்து வெவகாரம்ய்யா. கட்டுமரத்துலயோ வள்ளத்துலயோ போயி மீனுகீன புடிச்சமானு இல்லாம, பொழப்ப விட்டுப்புட்டு இங்க வந்துருக்கீக. நம்ம எம்எல்ஏ ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்தார்ல. நா உள்ளூர்க்காரன் எனக்கென்ன சும்மாவா போட்டீக. ஒங்களுக்கு தண்ணிக்கி மட்டுமே பெரிய தொகைய எழந்துருக்கேன். வளவா…. ஒங்க சாதிசனத்துலயே நீதானே கொஞ்சம் ஒசந்து![]()
படிச்சுருக்க. ஒனக்கு கூடவா நல்லது கெட்டது தெரியல” ராசேந்திரன் சொன்னபோது அவர்களால் எதிர்த்து பேசமுடியவில்லை.
“வந்தது வந்துட்டீக …சாயந்தரம் பள்ளிவாச பொட்டல்ல நம்ம கட்சி கூட்டம் நடக்குது. நம்ம நடிகருதான் வர்றாரு. நோட்டீசு ஒட்டிருக்குமே பாக்கலயா……”
“பாத்தம்ண்ணே….” சாமுவேலின் குரலில் தொய்வு விழுந்தது.
ஆயிரம் ரூபாய் பணத்தை மூர்த்தியிடம் கொடுத்து எல்லாரும் சரக்கு சாப்புட்டுட்டு, நம்ம ராவுத்தர் கடைல எம்பேர சொல்லி பிரியாணி சாப்புட்டுட்டு சாயந்தரமா வந்து சேருங்க. வளவா… ஒனக்கு அந்த பழக்கம் இருக்க. இருக்காது” சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனார்.
“கஞ்சிக்கும் துணிக்கும் ஆசப்பட்டு மதம் மாறுன பயலுக. இன்னக்கி அய்யா வீடா வந்துருவானுகளா. நம்மல பாத்தாவே நூறடி தள்ளி போறவனுக படியேறி வர்ற அளவுக்கு துளிர்விட்டுப்போச்சு. மதம் மாறுனாலும் சாதி என்னமோ அதே கருமம்தானே. இவனுககிட்ட ஓட்டு வாங்குறதுக்காக பல்லு இளிக்க வேண்டிருக்கு” கத்திக்கொண்டே கையில் இருந்த சொம்பை தூக்கி வீசியபோது தனலெட்சுமி திடுக்கிட்டு போனாள்.
கிழவன்களம் இயற்கையாகவே அமைந்த மீன்பிடி தளம். கட்டுமாவாடியோ இதை விட பல மடங்கு பெரிது. கிழவன்களத்தில் பத்துப்பதினைந்து கட்டுமரங்களும் ஏழெட்டு வள்ளமும்தான் இருந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கிழவன்களத்துக்கு வந்த சோன்ஸ் பாதர்தான் எல்லோரையும் மதம் மாற கேட்டுக் கொண்டார். மதம் மாறினால் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிசாதி என்ற இழிவுச் சொல் அகற்றப்படும் என்று சொன்னதை நம்பி ஒவ்வொருவராய் மாற நினைத்து எல்லோரும் மதம் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மதம் மாறியபோது கட்டிய அந்த தேவாலயம் இப்போது பழுதடைந்து கிடக்கிறது. எப்போதோ மதம் மாறி இருந்தாலும் சாதி மட்டும் தொப்புளோடு ஒட்டிக்கொண்டே இருக்கிறது.
கிழவன்களத்துகாரர்கள் வலையில் சிக்கிய மீனையும் நண்டையும் மிதிவண்டியில் வைத்து கட்டுமாவாடி மீன் சந்தைக்குத்தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வலையில் உயர் ரக மீன்களே சிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ”கிழவன்களத்துக்காரனுக கவுச்சி புடிச்சவனுகய்யா. அதான் ஒசந்த சாதி மீனா சிக்குது” என்று கட்டுமாவாடி நடுவீதி பாலு சொன்னார்.
யானைப் பாகன்ப் போல கிழவன்களத்து மக்களை கவுன்சிலர் ராசேந்திரன், வட்டிக்கார துரைச்சாமி, நடுவீதி பாலு மூவரும் அடக்கியே வைத்திருந்தனர். இவர்களை மீறி கட்டுமாவாடி மீன் சந்தையில் எதுவும் இயங்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.
மூவருமே தனித்தனியாக மீன் நண்டுகளை ஏலம் விடுவார்கள். கிழவன்களத்துகாரர்கள் இவர்களிடம்தான் வரவு செலவு செய்து வந்தனர்.
“எப்புடி பாத்தாலும் பத்து கிலோ தேறும். ஏலம் கேக்குறவுக கேக்கலாம். நூறு.. நூறு… எறநூத்தம்பது… முந்நூறு … முந்நூறு …. முந்நூறு ….. ம் ….. ராமசாமி நீ எடுத்துக்க. எறநூத்தி அம்பது ரூவாய அங்க குடுத்துரு. அம்பது ரூவாய கமிட்டில கட்டிரு….” இப்படித்தான் மூன்று இடத்திலும் ஏலம் நடக்கும். இவர்களுடைய ஆட்களை மீறி வேறு யாரும் ஏலம் எடுக்க முடியாது. சொற்ப தொகைக்கு ஏலம் விட்டு கொள்ளை இலாபத்திற்கு வெளியில் விற்றார்கள்.
சத்திரப்பட்டியிலிருந்து ஏலம் எடுப்பதற்காக வந்திருந்த அன்பரசனால் ஏலம் விடும் மூன்று இடத்திலும் ஏலம் எடுக்க முடியவில்லை. அன்பரசன் வாய் திறப்பதற்குள் அவர்களே ஒரு விலையைச் சொல்லி அவர்களுக்குள் எடுத்துக் கொண்டார்கள்.
“தம்பி.. ஊருக்கு புதுசா. வெளியூரு ஆளுக்கெல்லாம் ஏலம் கெடைக்காது. வேணும்னா நின்னு கடைல வாங்கிக்கலாம்..” ஒருவர் சொன்னபோது வட்டிக்கார துரைச்சாமியின் கண்கள் சிவந்து இருந்தது. அன்பரசனால் அந்த கண்களை இரண்டு நொடிக்கு மேல் பார்க்க முடியவில்லை. “அப்புறம் என்னத்துக்கு ஏலம் விடனும்னு….” தனக்குள் நொந்தவனாய் அங்கிருந்து வெளியேறினான்.
அறந்தாங்கியில் இருக்கும் நண்பன் வீட்டுக்கு செல்ல நினைத்து, போற வழியில்தானே அறந்தாங்கி மீன் சந்தை ஒரு எட்டு பாத்துட்டு போவோம் என்று எண்ணிய வளவன் பேருந்தை விட்டு இறங்கி மீன் கடை ஒன்றில் விலையை விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
“தம்பி… கட்டுனா வாங்குங்க இல்லனா எடத்த காலி பண்ணுங்க. கட்டுமாவாடிலயே வெல கிராக்கிதான். நாங்களே கிலோ எறநூறுக்குதான் எடுத்து வந்தோம். அசல் கெடச்சா போதும்ண்ணே” கடைகாரர் சொன்னபோது மயக்கமே வந்துவிட்டது அவனுக்கு.
” வெவசாய கூலியும் மீனு புடிக்கிறவனும் தலமுற தலமுறயா ஒழக்கிறான். ஒன்னும் உருப்புட முடியல. ஆனா வயலுலயே எறங்காத கடல் மொகத்தயே பாக்காத மொதலாளிக சொகுசா வாழுறானுக. ஒழச்சா முன்னேறலாம்னு நம்மல ஏமாத்தி வச்சுருக்கான். அடுத்தவன சுரண்டுறவன்தான் சொகுசா வாழுறான். நம்மாளுகனால ஒருநேரம் பொண்டாட்டி புள்ளயோட நிம்மதியா நல்ல சோறு சாப்புட முடியல” தனக்குள் எண்ணி வேதனைப்பட்டான் வளவன்.
“ஒருநாளு கடலுக்குள்ள போகலனாலும் நம்ம அடுப்ப பூன கிண்டி படுத்துக்குது. கருவாடு வித்து பொழக்கலாம்னாலும் அதயும் அவனுகளே மொத்தமா வாங்கிகிறானுக. எந்த கட்சிக்காரன் ஆண்டாலும் வேற கெரகத்து மனுசனாவே நம்மலப் பாக்குறானுக” வள்ளத்தில் போகும்போது வளவன் சொல்லிக்கொண்டு இருந்தான். பனைமரம் அளவுக்கு எழுந்த அலைகள் கடலுக்குள் செல்லச் செல்ல இடுப்பளவு அலைகளாக மாறி இனிதே வரவேற்றன.
இடையில் குறுக்கிட்ட தனிக்கொடி “தம்பி ஒன்னவிட வயசுல மூத்தவங்கிற மொறயில சொல்றேன். குறுக்கு வழில வர்ற வாழ்க்க ரொம்ம நாளைக்கு நெலக்காது. தான்தான் இனிமே எல்லாமேனு நெனச்சு கொடிகட்டி வாழ்ந்த நெறயபேரு எப்புடி செத்தாங்கனே இன்னக்கி வரைக்கும் மர்மமா இருக்கு. என்னோட வயசுக்கு நா எத்தனயோ பாத்துட்டேன்….”
“வளவன் சொல்றதுலயும் நாயம் இருக்குண்ணே. இருக்குற வரைக்கும் சொகுசா வாழ்றான்ல. அது யாரோட ஒழப்பு. சுனாமி வந்தும் வருசம் ஓடிருச்சு. எத்தன வீடுக கட்டிக் கொடுத்தானுக. அந்த வீடுகளும் இப்ப கொடலு வெடிச்சு கெடக்குது. நம்ம சாதி என்ன அவ்ளோ தள்ளுப்பட்ட சாதியா. நம்ம வேர்வய நக்குறானுக. நம்மளக் கண்டா ஆகாதோ” தணிகைவேலின் பேச்சு வள்ளத்தையே ஒரு நிமிடம் நிற்க வைத்துவிட்டது. ”எளசுக ஏதோ உருப்படியா பேசிக்கிட்டு வருதுக. எப்புடியோ கெழவன்களத்துக்குப் புடிச்ச சாபம் வெலகுனா போதும்” சரண்ராசு அய்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
“வயலுல ஒழக்கிறவன் பாடும் வத்தாத கடலுல ஒழக்கிறவன் பாடும்தான் பெரும்பாடு. நம்மல தின்னு கொழுத்துப்போயி இருக்கவனுக எத்தன நாளக்கி வாழ்ந்துறப் போறானுக” தனிக்கொடியின் பேச்சில் இறுக்கம் தெரிந்தது.
” உள்ளவன் இல்லாம ஊரு கெடாதுய்யா” இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சரண்ராசு அய்யா சொன்னார்.
“ஆண்டாண்டு காலமா மீனப் புடுச்சு பொழப்பு நடத்துறோம். நமக்குதான் தெரியும் நம்மோட எல்லை எதுனு. கோட்டைல இருக்கவங்களுக்கு நம்மோட கசுட்டம் எப்புடி தெரியும். மீனோட கவுச்சிதான் அவுகளுக்கு தெரியும். அதப் புடிக்கிறவனோட உசுரு தெரியாது. காட்ட அழிச்சு வீட்டக் கட்டிப்புட்டு யான வருது புலி வருதுன கதயா, நாம பொழங்குன எடத்த நம்மல கேக்காம தாரவாத்துக் கொடுத்துப்புட்டு நம்ம உசுரயே எடுக்குறாங்க. ஏதோ ஒட்ட வள்ளத்த வச்சாவது நாம பொழப்பு நடத்துறோம். மத்த ஊரு ஆளுக கூலிக்குத்தானே மாரடிக்கிறாங்க. பெருமுதலாளிகதான் ஆட்டிப் படைக்கிறானுக….” உதடுகளில் வெடித்துக் கிளம்பியது வளவனின் பேச்சு.
“அண்ணே… இந்த எடத்துல வீசலாமே…” தணிகைவேலின் பேச்சைக் கேட்டு எல்லோருமே சிரித்தேவிட்டார்கள்.
“ஏய்யா…. நீ தொழில்காரன்தானே. இந்த எடத்துல என்னைக்காச்சும் வலய போட்டுருக்கோமா. இங்கன கெடக்கிற சில்லுவண்டுகள புடுச்சு யாரு குடும்பத்த காப்பாத்துறதாம். சொல்லிக்கொண்டே வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி சுவைக்க தயாரானார் சரண்ராசு அய்யா.
“ஒங்க தகப்பனாரு… கொழும்பு ராணுவத்தையே தெகைக்க வச்சவரு. மனுசன் இப்ப சொகமில்லாம வீட்டுக்கும் வாசலுக்கும் திரியுறாரு. அவரோட பீச்சாங்கை தோள் பட்டைல பெரிய தழும்பு இருக்கே அது என்னனு தெரியுமா….” சரண்ராசு அய்யா கேட்டபோது “கொழும்பு ராணுவம்தான் சுட்டுச்சு…” தணிகைவேலின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டார்.
“சுட்டதே ஓம்புட்டு நேவிக்காரன்தான்ய்யா. காப்பாத்துனதுதான் கொழும்பு ராணுவம். அவரோட நானும்தான் இருந்தேன். ஏம்புட்டு கையப்பாத்தியா எவ்ளோ பெரிய தழும்புனு. வலது கையை காட்டினார். நாம புடிக்கிறதுல நேவிகாரங்களுக்கும் பங்கு கொடுக்கனும். கொடுக்கலனா அவுகளே சுட்டுப்புட்டு கொழும்புக்காரக மேல பழியப் போட்டுருவாக. எவ்ளோ பெரிய கம்பெனிகாரனா இருந்தாலும் இவங்களுக்கு அடிச்சுதான் அழுகனும். நாமளும் கொடுத்துக்கிட்டுதானே இருக்கோம்….”வழிந்த வெற்றிலை எச்சிலை துப்பிக்கொண்டார்.
“அவனுக கேட்டத கொடுக்கலனா ஒட்டுமொத்தமா அள்ளிக்கிட்டு அவனுக சொல்றமாதிரி நம்மள டீவி காரனுகிட்ட சொல்லச் சொல்லிருவானுக. நாமளும் திருதிருனு முழிச்சுட்டு நிப்போம். கடலுல நடக்குற கருமாதியெல்லாம் கரைல இருக்கவங்களுக்கு எப்புடி தெரியும். இந்த நாயத்த நேவிக்காரன்கிட்ட கேட்டதுக்குத்தான் அதுல ஒருத்தன் எங்கள சுட்டான். வலியோட கடல்ல குதிச்சு உசுருக்கு போராடுன எங்கள கொழும்பு ராணுவந்தான் காப்பாத்துச்சு. படகுல ஏறுனதும் அங்க இருந்த சின்ன கம்பினால குத்தி குண்ட எடுத்துட்டு மடில இருந்த ஊசி நரம்ப எடுத்து வேகவேகமா தையல் போட்டுக்கிட்டத பாத்து கொழும்புகாரகளே அசந்து போய்ட்டாங்க” சரண்ராசு அய்யா சொல்லிக்கொண்டு இருந்தபோது வள்ளம் வழக்கம்போல் மீன் பிடிக்கும் பகுதியை நெருங்கியிருந்தது. அந்தப் பகுதியில் ராமேசுவரம் மீனவர்களும் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.![]()
“ஒங்க தேசம் பெருசுதானே. எல்லைக்கி வந்து என்னக்கியாச்சும் ஒங்க நேவி ஒங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துருக்கா. ஒங்களுக்கு பாதுகாப்பே நாங்கதான். ஒங்க நேவிய நாங்க பாக்குறதே அரிதா இருக்கு. ஒங்க மேல எங்களுக்கு என்ன கோபம். எல்லைதாண்டுனா கைது பண்ணனும் … இதுதானே சட்ட விதி. எங்கள்ளயும் எல்லாரும் நல்லவனுகனு சொல்லல. ஒங்கள்ள சில பேரு மொதலாளிக பேச்சக்கேட்டு போடக்கூடாத வலைய போட்டா நாங்க என்னயா பண்றது. எங்கள ஆளுறவங்க எங்களுக்கும் நெருக்கடி கொடுக்குறாங்கய்யா. ஒங்ககிட்ட நெருங்கி
பழகுனா எங்களுக்கு ஒளவு பாத்து சொன்னதா சொல்லி ஒங்காளுக, சாகுறவரைக்கும் செயில் கம்பிய எண்ண வச்சுருவாங்க” அவர்கள் சொன்னதை வளவன் நினைவுபடுத்திக் கொண்டான்.
“ஒடம்புல தெம்பு இருக்க வரைக்கும் கடலுல ஒழைக்கிறோம். செத்த அன்னைக்கி சுரண்டித் தின்ன எந்த நாயும் வர்றதில்ல. கலெக்டருக்கு நம்ம ஊரு இருக்குறதே தெரியாது. அவருதான் ஈசியாரு ரோட்டவிட்டு எறங்க மாட்டேங்கிறாரே. ஆளுறவங்க நம்மல ஓட்டுக்கு மட்டும்தான் வச்சுக்கிறாங்க. இதுக்கான தீர்வு நமக்கிட்டதான் இருக்கு….” வளவன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
மீன்களை பாதுகாப்பாக பெட்டிகளுக்குள் வைத்துக்கொண்டு இருந்தனர். சரண்ராசு அய்யா தொழில் நுணுக்கங்கள் பலவற்றை சொல்லிக்கொண்டே வந்தார்.
“நாம ஒழச்சு அடுத்தவன்கிட்ட எதுக்கு கொடுக்கனும். நம்ம வீடுகள்லதான் ரெண்டு மூனு பேரு இருக்கோமே. கிழவன்களத்துலயே நாம ஏலம் விடுவோம். சாதி பாக்காம மனுசனா மதிச்சு வந்து கட்டுற மாறி ஏலம் கேட்டா கொடுப்போம். இல்லனா வியாபாரத்த நம்ம பசங்களையே பாக்கச் சொல்லுவோம். மிச்சப்பட்டா கருவாடு போட்டாவது காசு பாத்துருவோம். கஞ்சிக்கும் துணிக்கும் ஏமாந்தது போதும். நம்ம ஆளே நம்ம வயித்துல சுடும்போது. கொழும்புக்காரன் சுடுறதுல வியப்பே இல்ல. கடல்ல மீன் பிடிக்க வலையும் வேணும்.. நம்ம உசுர காப்பாத்திக்க நமக்குனு ஆயுதமும் வேணும்….” வளவனின் எண்ண ஓட்டம் இப்படியாக இருந்தது.
வள்ளம் கிழவன்களத்தை நெருங்கியபோது சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது.
————-*******———–
![]()
அருமை அண்ணா. சில நிமிடங்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற கிழவன் களத்தின் ஆட்கள் உடன் சேர்ந்து பயணித்து வந்தவன்.
வாழ்த்துகள்