கட்டுரைகள்

ஆபிரிக்காவில் ரஷ்யாவின் இராணுவ தலையீடு: நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மேற்கு ஆபிரிக்க நாடான நைகரில் (Niger) இராணுவம் ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டு ஜனாதிபதி முஹமது பசூமை (Mohamed Bazoum) சிறைப்பிடித்துள்ளது. கடந்த (26/07/2023) புதன்கிழமை படையினர், அரசியலமைப்பு ரத்துச் செய்யப்பட்டதாகவும், அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், நைஜர் அதிபருக்கு தங்களது தடையற்ற ஆதரவை தொடர்ந்து வழங்கும் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்டுள்ள சரிவு, மோசமான சமூக மற்றும் பொருளாதார நிர்வாகத்தை தொடர்ந்தே இந்த ஆட்சி மாற்ற முடிவு எடுக்கப்பட்டது என்று இராணுவம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகள் இதில் தலையிட வேண்டாம் என்றும் இராணுவம் கேட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பை கலைத்து விட்டதாகவும், அனைத்து அரசியல் நிறுவனங்களையும் இடைநீக்கம் செய்து தேசத்தின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
 ரஷ்ய ஆதரவு கோஷங்கள் :
நைகர் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் அங்குள்ள பிரெஞ்சுத் தூதரகத்துக்கு முன்பாக குவிந்த மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகரான நையேமி
Niamey இல் உள்ள பிரெஞ்சு தூதரகம் முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ரஷ்ய மற்றும் நைகர் நாட்டின் கொடிகளை பிடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நைகர் நாட்டின் ஜனாதிபதி ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு ஆதரவாக குரல் எழுப்பிய அவர்கள், அவ்விடயத்தில் பிரான்ஸ் தலையிடுவதை விரும்பவில்லை எனவும் கோஷமிட்டனர். “Vive Poutine”, “vive la Russie”, “à bas la France”, ரஷ்யா நீண்டு வாழவேண்டும். புட்டின் நீண்டு வாழவேண்டும். பிரான்ஸ் ஒழிக போன்ற பல்வேறு கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
 
ரஷ்யா உறவும் இராணுவ உதவியும்:
ரஷ்யா ஆபிரிக்காவிற்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு பங்காளியாக நீண்டகாலமாக உள்ளது. அத்துடன் இப்பிராந்தியத்திற்கு ஆயுதங்களை வழங்குவதில் முக்கிய பங்கும் வகிக்கிறது. ‘ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ (SIPRI) படி, 2014-19 க்கு இடையில் ரஷ்யாவின் முக்கிய ஆயுத ஏற்றுமதியில் 16% ஆபிரிக்காவிற்கு கிடைத்தது.
இக்காலத்தில் ஆபிரிக்காவிற்கான ஆயுத ஏற்றுமதியில் 80% அல்ஜீரியாவிற்கு சென்றது. எனவே, அளவைப் பொறுத்தவரை, துணை-சஹாரா மாநிலங்களுக்கு பாதுகாப்பு ஏற்றுமதி சிறியதாக உள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு உறவுகள் வளர்ந்து வருகின்றன – மேலும் 2015 முதல், 20 ஆப்பிரிக்க நாடுகளுடன் ரஷ்யா இராணுவ ஒத்துழைப்பு ஆஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உள்ளது.
2017-18 ஆம் ஆண்டில், அங்கோலா, நைஜீரியா, சூடான், மாலி, புர்கினா பாசோ மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுடன் ரஷ்யா ஆயுத ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது. போர் விமானங்கள், போர் மற்றும் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களுக்கான இயந்திரங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ரஷ்ய படையின் செயற்பாடு:
ரஷ்யாவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் ஆயுத ஏற்றுமதியுடன், மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) தீவிரமாக செயல்பட்டு வருகிறது, கிளர்ச்சிக் குழுக்களின் எதிராக ஐ.நா-ஆதரவு அரசாங்கத்தை ஆதரிக்க ரஷ்யா அதிகாரப்பூர்வமாக உதவுகிறது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் ரஷ்யாவின் தனியார் இராணுவம் பாதுகாப்பை வழங்குகிறது. நீண்ட காலமாக தனியார் ரஷ்ய இராணுவப் படைகளும் அங்கு பணியாற்றி வருகின்றன, அரசாங்கத்திற்கு பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் முக்கிய பொருளாதார சொத்துக்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
வாக்னர் குழுவை உள்ளடக்கிய ரஷ்ய தனியார் இராணுவ நடவடிக்கைகள் சூடான், ஆபிரிக்க கண்டத்தின் பிற நாடுகளிலும் பதிவாகியுள்ளது. ரஷ்ய உயர் அதிகாரிகள் பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளை நிராகரிக்கிறார்கள். ஆயினும் இந்த குழுக்களுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையே சரியான தொடர்புகள் உள்ளது உண்மையே.
ஆனால் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச அமைதிக்கான கார்னெகி எண்டோவ்மென்ட்டின் மூத்த ஊழியர் பால் ஸ்ட்ரோன்ஸ்கி, தனியார் ரஷ்ய பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் மாஸ்கோவிற்கு பயனுள்ள நோக்கத்திற்காக சேவை செய்கிறார்கள் என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பெரும்பாலும் முக்கிய வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் தங்கள் பணியின் மூலம் சுய நிதியுதவி செய்கிறார்கள். ரஷ்ய அரசுக்கு ஆபிரிக்க நாட்டில் அதன் பாதுகாப்பு இருப்பு மற்றும் அரசியல் செல்வாக்கை எந்த வகையிலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸின் காலனி நாடு:
நைகர் ஜனாதிபதியை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துருப்புகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நைகர்
பிரான்ஸின் முன்னாள் காலனி நாடாகும். 1960இல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் நைகரில் நான்கு இராணுவ சதிப்புரட்சிகள் இடம் பெற்றிருப்பதோடு பல தடவைகள் இதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன
நைகர் உள்நாட்டு விவகாரத்தில் பிரான்ஸ் இராணுவ ரீதியாக தலையிட விரும்புவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமெட் பாஸூமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நைகரில் ஆட்சியைக் கவிழ்ந்துள்ள இராணுவ தளபதி, பிரான்ஸ் இராணுவத்தை பயன்படுத்தி முகமட் பாஸூமை விடுதலை செய்ய முற்படுகிறது எனவும் தேசிய தொலைக்காட்சி ஊடாக தெரிவித்துள்ளார்.
உதவியை நிறுத்த பிரான்ஸ் எச்சரிக்கை:
நைகர் ஆட்சிக்கவிழ்ப்பால் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நைகரின் முன்னைய காலனித்துவ ஆட்சி புரிந்த பிரான்ஸ் உடனடியாக அங்கு ஜனநாயம் திரும்பவேண்டும் என அறிவுறுத்தி, இல்லாவிட்டால் அனைத்து வழிகளிலுமான உதவிகள் நிறுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்சின் வெளிவிவகார அமைச்சகம், நைகரில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விதங்களிலான உதவிகளும் நலத்திட்டங்களும் நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
2020இல் இரராணுவ தளபதி நீக்கம்:
2020 இரு பெரும் தாக்குதல்களைத் தொடர்ந்து நைகர் நாட்டின் இரராணுவத் தளபதியை பதவியில் இருந்து நீக்கியது அப்போதய அரசு. தொடர்ச்சியாக இடம்பெற்ற இரு தாக்குதல்களில் 160 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவத்தளபதி ஜெனரல் அகமட் மொகமீட் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
புதிய இராணுவத்தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் சலிபோ மோடி நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் ஜேர்மனியில் உள்ள நையீர் நாட்டின் தூதரகத்தில் படைத்துறை ஆலோசகராக பணியாற்றியவர்.
கடந்த இரண்டு வருடங்களாக இராணுவத்தளபதியாக அகமீட் பதவி வகித்தபோதே தாக்குதல்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
ஜ.எஸ்.ஜ.எல் மற்றும் அல்கைடா ஆகிய ஆயுதக்குழுக்களே இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படையினரும் நைகர் நாட்டுப் படையினருடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆயுதக் குழுவினர் மாலி, பெர்கியா போசோ ஆகிய இடங்களில் இருந்து வந்து தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படது. 2019ஆம் வருடம் இடம்பெற்ற தாக்குதல்களில் 400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். நைகர் நாட்டில் 2014 ஆம் ஆண்டில் இருந்து ஜி-5 எனப்படும் ஐந்து நாடுகளின் படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெறும் தாக்குதல்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாடு தனது 4500 படையினரை அங்கு நிறுத்தியிருந்தது.
ஐரோப்பிய பிரஜைகள் வெளியேற்றம்:
நைகரிலிருந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு ஆரம்பித்துள்ளது. நைகரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரான்ஸ், ஐரோப்பிய பிரஜைகளை நைஜரிலிருந்து வெளியேற்றுவற்கு 3 விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நிலையில், உலக நாடுகளுக்கு நைகர் இராணுவ தளபது எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இராணுவ ஜெனரல் Abdourahamane Tiani,தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும், தேர்தல் நடத்துவதற்கு நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார். இராணுவப் புரட்சியை அடுத்து நைகருக்கு மின் விநியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோவியத் காலத்திலிருந்தே உறவுகளை கட்டியெழுப்பிய மாஸ்கோ ஆபிரிக்காவில் அதன் இருப்பை மிகவும் பரந்த அளவில் பார்க்கிறது என்பது தெளிவாகும். அத்துடன்
ரஷ்ய தனியார் இராணுவ ஒப்பந்தங்களால் லிபியாவில் நூற்றுக்கணக்கான படைகளைக் கொண்டுள்ளது. இப் படைகள் ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், மாஸ்கோவில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் வலுவான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஆபிரிக்காவில் ரஷ்யா ஆதிக்கம்:
ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் ஆபிரிக்காவும் ஒன்று என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அண்மையில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி, பொருளாதார உதவி, நோய் கட்டுப்பாட்டு ஆலோசனை, மனிதாபிமான நிவாரண உதவி, கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை ஆபிரிக்காவில் ரஷ்யா வழங்குவதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பல ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் மாஸ்கோவிற்கு வருகை தந்தனர். அவர்கள் ரஷ்யாவுடன் தமது
இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை விட அதிக உதவிகளை ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்குகின்றன. அத்துடன் ஆபிரிக்காவில் அதிக முதலீடுகளையும் செய்கின்றன.
ஆயினும் முன்னைய காலத்தில் சோவியத் யூனியன் ஆபிரிக்க கண்டத்தில் அனுபவித்த அந்தஸ்தை ரஷ்யா எங்கும் மீட்டெடுக்கவில்லை என்பதும் உண்மையே.
ஆப்பிரிக்காவில் ரஷ்யாவின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்ட மூலோபாய முக்கியத்துவத்துடன் ஒரு சில நாடுகளுடன் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய போரின் பின்னர் தனது ஆதிக்கத்தை ஆபிரிக்காவில் நிலைநிறுத்த ரஷ்யா தீவிரமாக முனைகின்றது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *