கதைகள்

“ரவிக்கையை நனைத்த கண்ணீர்த் துளிகள்”…. சிறுகதை …. சங்கர சுப்பிரமணியன்.

சரியான உணவுப் பழக்கங்களும் மது, மாது மற்றும் புகை என்ற தீய பழக்கங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் முறையான தேகப் பயிற்சியையும் செய்துவந்தால் இளமை என்பது எளிதில் நம்மை விட்டு நீங்காது. அது முற்றிலும் சரி என்பதுபோல் இருந்தான் எழிலரசன். முப்பத்தி மூன்று வயதை தாண்டிய அவனைப் பார்த்தால் பத்து வயது குறைந்தவனாகவே தெரிவான்.அறையின் கதவு சாத்தியிருந்தது. ஊதுவத்தியின் சுகந்த மணம் அந்த அறையின் சூழ்நிலையையே மாற்றியதோடு மட்டுமின்றி சாத்தியிருந்த கதவை தள்ளிக் கொண்டு உள்வளேவந்த தாமரையின் தலையை அலங்கரித்த மல்லிகை மலர்களின் மணமும் சேர்ந்து கொண்டது.அந்த அறை முதலிரவுக்காக அலங்கரிக்கப் பட்டுருந்தது. உள்ளே வந்த தாமரை கதவைத் தாளிட்டை எழலரசன் அருகே வந்து அமர்ந்தாள். வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படும் பால்செம்பு அவள் கையிலும் இல்லை அவள் அவன் காலில் விழவுமில்லை.அந்த அறையின் ஜன்னல் திறந்திருக்க தென்றல் இதமாக வீச வெண்ணிலாவும் காய்ந்து தன் ஒளிக்கற்றைகளை அறைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது. ஆனால் எழிலரசன் மனதை மட்டும் கவலை அழுத்திக் கொண்டிருந்தாலும் எட்டு ஆண்டுகளுக்கு முன் தன்னருகே சுடர்விழி அதே அறையில் இருந்ததையும் எண்ணினான். கார்முகிலுக்குள் நிலவு கண்சமிட்டுவதுபோல் கவலைக்கிடையிலும் சுடர்விழி நினைவூட்டிய பாடலும் மகிழ்ந்திருந்த அந்தநேரமும இப்போதும் கண்முன்னே விரிந்தது.“அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே…..”

மனத்திரையில் ஓடிய பாடல் நின்றதும் விழிகளை மூடியிருந்த நீர்த்திரை கன்னத்தின் வழியாக வடிந்தோடியது. அதைக்கண்டவுடன் சற்றும் பதறாத தாமரை,“என்ன அத்தான் அக்காவின் ஞாபகம் வத்துவிட்டதா?” என்றாள்.“எளிதில் அவளை மறந்து விடமுடியுமா?”பதிலளித்தான் எழில்.“அதை உங்கள் கன்னத்தில் வடிந்தோடும் கண்ணீரே சொல்கிறதே” என்று சொல்லியபடியே புடவைத் தலைப்பால் அவனது கன்னத்தில் வடிந்தோடிய கண்ணீரைத் துடைத்தாள்.எட்டு ஆண்டுகளுக்கு முன் எழிலுக்கும் தாமரையின் அக்கா சுடர்விழிக்கும் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஆறுமாதமே ஆகியிருந்தவேளை ஒருநாள்திடீரென குளிர் காய்ச்சல் வந்தவள் அதிலிருந்து மீளாமலே எல்லோரையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாள்.ஆறுமாதக் குழந்தையை வைத்துக் கொண்டு திண்டாடியவனுக்கு அவனது மாமனார் வீட்டில் ஆதரவாக இருந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுடர்விழியின் தங்கைதாமரைதான் குழந்தையை வளர்த்தாள். அக்குழந்தைக்கு முகில் என்றும் அவளே பெயர் வைத்தாள். முகிலுக்கு இப்போது ஐந்து வயதாகி விட்டது. அவனும் தாமரையுடன் நன்றாக ஒட்டிக் கொண்டதோடு அவளை அம்மா என்றுதான் அழைப்பான்.எழில் தனிமரமாக இன்னும் எத்தனை காலம் இருப்பான்? சுடர்விழி இறந்தும் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். எவ்வளவோ மறுத்தாலும் முகிலுக்காகவாது திருமணம் அவசியம் என்பதை வற்புறுத்தி சம்மதிக்க வைத்னர்.முகிலை தனது பிள்ளைபோல் வளர்த்துவந்த தாமரைக்கு இந்த திருமண ஏற்பாடு ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. முகிலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் வரும் புதிய உறவால் அத்தான் நம் குடும்பத்தை விட்டு போய்விடுவாரோ என்ற கவலையும் சேர்ந்து அத்தானை தானே மணக்கலாம் என்று எண்ண வைத்தது.ஆனால் இதை எப்படி வீட்டில் சொல்வது? அத்தான் ஏற்றுக்கொள்வாரா என்ற பலநினைவுகளால் அவள் உழன்று கொண்டிருந்தாள். அவளிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்ட பெற்றோர் அவளை அணுகி விசாரிக்கவும் இதுதான் தக்க சமயம் என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள். இதைக் கேட்டதும் பெற்றோர் அதிர்ந்தனர். ஆனால் இதற்கு சம்மதிக்காவிட்டால் எனக்கு திருமணமே வேண்டாம் முகிலை நானே வளர்க்கிறேன் என்று சொன்னாள்.இதை எழிலிடம் சொன்னபோது எழிலுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. சிலமாதங்கள் சென்றன. தாமரையின் பிடிவாதம் மாறவேயில்லை. தனது மனைவியைத்தான் சில ஆண்டுகளில் இழந்தான். இப்போது தன் குழந்தையையும் பிரியவோ அல்லது தாமரையிடமிருந்து பிரிக்கவோ விரும்பவில்லை. மேலும் புதிதாக வருபவள் முகிலை நன்றாக பார்த்துக் கொள்வாளா என்ற சந்தேகமும் தோன்றவே தாமரையை மணக்க சம்மதித்தான். தாமரையுடன் திருமணம் முடிந்து இன்று அவளுடன் தனியாக அறையில் இருக்கிறான். அவளைப் பார்த்து,“வீணாக எனக்காகவும் முகிலுக்காகவும் உன் வாழ்க்கையை பலியிட்டு விட்டாய்” என்றான்.“அத்தான் என்னை ஏற்பீர்களோ மாட்டீர்களோ என்ற வேதனையில் இருந்தேன். என்னை நான் பலியிடவில்லை. நீங்கள்தான் முகிலை எனக்கு தந்துள்ளீர்கள்.முகிலை விட்டு  என்னால் பிரிய முடியாது அவனை மறைந்த என் அக்காவாகவே பார்க்கிறேன்” என்றவள் அவனைத் தன் தோளில் சாய்த்தாள்.தாமரையின் தோளில் சாய்ந்திருந்தவன் கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த் துளிகள் தாமரையின் ரவிக்கையை நனைத்துக் கொண்டிருந்தன.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *