கதைகள்

“ஊத்தா குத்து” ….. சிறுகதை ….. 27 ….. அண்டனூர் சுரா.

ஐந்து மணிக்கெல்லாம் ஊத்தாவைத் தூக்கிக்கொண்டு கிராமத்தார்கள் கண்மாய்க் கரைக்கு வரத்தொடங்கினார்கள். பொங்கிய கருப்பு நுரையாக மனிதத் தலைகள்.

குளத்தின் நீள்பரப்பு வறண்டு நடுவில் பெருவாய்க்காலாக தண்ணீர் கிடந்தது. அதற்குள் மீன்கள் நெகிழித் துடிப்புத் துடித்து, உடம்பை வளைத்து குதியாட்டம் போட்டன. வட்டம் வட்டமாக நீரலைக் கோலங்கள் வரைந்தன. தண்ணீர் பாசனத்திற்கு வடிந்தது போக, கோடை வெயிலுக்குக் காய்ந்தது போக, கண்மாயின் கையால் கைச்சிரங்கை அளவிற்குத் தண்ணீர் கிடந்தது. வயோதிகத் தண்ணீர் அது. ஓடவோ பாயவோ முடியாமல் குட்டையாகத் தேங்கிக்கிடந்தது. ஓடும் தண்ணீர் ரத்தம். தேங்கும் தண்ணீர் கண்ணீர். பெருங்குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீர் சும்மா இருந்தாலும் மீன்கள் விடுவதாக இல்லை. மேனாமினுக்கி மீன்கள் அவை. உடம்பை வளைத்து நெழித்து ‘சிம்ச்சாலு’ செய்தன.

ஏழு மணிக்கு மேலக்கரை அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் பறை கொட்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருந்தது. திருவிழா முழக்கு அது. ‘டணட்டண, டணடணடண’ முழக்குப் போட்டதும் வீட்டுக்கு ஒருத்தர் கோமணம், பட்டாப்பட்டி டவுசர், கால்ச்சட்டை, இறுக்கிக்கட்டிய தொடைக்கட்டு கைலி, வேட்டி…எனக் கட்டிக்கொண்டு கண்மாய்க்குள் இறங்குவார்கள். அவரவர் கொண்டுவந்திருக்கும் ஊத்தாவைக் கண்மாய்க்குள் கவிழ்க்க மீன் பிடித்திருவிழா தொடங்கிவிடும்.

இந்த முறையும் மீன் பிடித்திருவிழா வீட்டுக்கு ஒருத்தர்தான். கைவலை, பெருவலை திருவிழா அல்ல. ஊத்தா குத்து திருவிழா. ஊர், அரசமரத்தடியில் குந்திப் பேசி அப்படியாகத்தான் முடிவெடுத்தது. இதனால் சிலருக்கு ஏமாற்றம். பலருக்குக் கொண்டாட்டம். “அம்பலாரே, நானும் என் பொஞ்சாதியும் தனிக்குடித்தனமா இருக்கோம். எங்களுக்குப் பொறந்த பய எங்க ரெண்டுபேரையும் மலக்குடலா பிதுக்கி எறிஞ்சிட்டான். கொடுக்க வாங்க இல்ல. பேச்சு வார்த்த இல்ல. அவன் மொகத்துல நாங்க முழிக்கிறதில்ல. இனி அவன் யாரோ நாங்க யாரோ. என் பங்குக்கு நான் ஊத்தா குத்திக்கிறே. ஊரும் சனமும் இதுக்கு என்னெ அனுமதிக்கணும்” குழைந்து கேட்டிருந்தார் சுப்பு. இதைக் கேட்டதும் கூட்டத்தில் தேனீக் கூட்டில் கல்லெறிந்த சலசலப்பு எழுந்தது.

“நல்லா கேட்டேப்பு நீயி. இருக்கிறது ஒரு குளம். அந்த ஒத்தக் குளத்துக்கு நூறு குடி. ஒரு குடும்பத்தில ரெண்டு பேரு எறங்கினா மத்த குடிக என்ன விரலையா நெத்திலிப் பொடினு கடிக்கும்? அதெல்லாம் முடியாது. குடும்பத்துக்கு ஒருத்தர்தே. இந்த விசயத்தில ஊர் கறாரா இருக்கணும். இல்ல ஊத்தாகுத்து நடக்காது. சொல்லிட்டேன் ஆமா” கூட்டத்தில் ஒரு பெருங்குரல் கர்ஜித்தது.

“ஆமாம்ப்பெ குடும்பத்துக்கு ஒருத்தர்தே கண்மாயில இறங்கணும்” ஒரு வாலிபன் துடுக்குத் தனமாக குதித்து சொன்னான்.

“சுப்பு, ஓம்புள்ளெய நீ ஒதுக்கினேங்கிறதுக்காக ஊர்வாய் அவன ஒதுக்க முடியுமா? அவன் உன் புள்ளெ இல்லேனு உன் வாய்ச் சொல்லலாம். உன் ரெத்தம் சொல்லுமா? நீ சொல்லலாம் உன் புள்ளே இல்லேனு. ஊர் வாய் அப்படிச் சொல்லிடாது. மீன் பிடிக்க அவன் இறங்குனான்ன, நீ எறங்குனான்னா. எங்களப் பொறுத்த வரைக்கும் நீங்க ரெண்டுபேருமே ஒன்னுதான். பிடிக்கிற மீனுல ஆளுக்குப் பாதி, என்னப்பா நான் சொல்றது?” கேட்டும் சிரித்தும் வைத்தார் ஊர் அம்பலம்.

“சரிதாங்க. இந்தத் திருவிழாவே முறிஞ்ச உறவ ஒட்டத்தானே. பொல்லாங்கு, பொல்லாப்பு, மொறப்பாட்ட தீர்க்கத்தானே. ஒரு காலத்துல நம்ம ஊரும் தெருவும் நாலா துண்டா உடஞ்சிக் கெடந்துச்சு. ஊர்க்குள்ள ஒரு நல்லது நடக்கல. கொளம் குட்ட நெறயல. உருப்படியா வெளையல. யாரும் வாழ்ந்தா

செத்தா ஊர்க்கூடி ஒரு கை கொடுக்கிறதில்ல. சாமக்கோடாங்கி ஒரு நாள் ஊருக்குள் இறங்கி, வீடு தவறாம பாடிட்டுப் போனான். ஊருக்குள்ள ஒத்தும இல்ல. ஒத்துமையாக ஊரே அய்யன கையெடுத்து மீன்பிடித் திருவிழா நடத்தணுமென. அதற்குப் பொறகுதே ஊருக்குள்ள எல்லாரும் அண்ணன் தம்பியா பழகுறோம். ஊர்க்குள்ள யாரும் யார் மேலேயும் மொறப்பாடு கட்டக்கூடாது. பில்லி வச்சிக்கிட்டு திரியக்கூடாதுனு ஊர் குந்திப் பேசி முடிவெடுத்தோம். இப்ப பெத்த புள்ள ஆகாதுனுச் சொல்லி புள்ளைக்குப் போட்டியா அப்பனும் ஊத்தா குத்த இறங்கினா இந்தத் திருவிழா நடத்துறத்துல எதாவது அர்த்தமிருக்கா, என்னப்பா நான் சொல்றது?” கேட்டு நிறுத்தினார் ஒரு பெரியவர்.

“ஆமாம்ப்பா சுப்பு. விட்டுக்கொடு. உன் மவனே ஊத்தா குத்தட்டும்” என்றார் அம்பலத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரியவர்.

சுப்பு முறுக்கிக்கொண்டு நின்றார். அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. “எப்பவும் ஊத்தா குத்து நான்தே குத்துவேன். இந்த முறையும் நான்தான் குத்துவேன்” .

“இதுக்கு ஊர் ஒன்னும் செய்ய முடியாது. உன் மவன் நூறு ரூவா ஊர்ப்பணம் கட்டி ஊத்தா ரசீத மொத ஆளா வாங்கிப்புட்டான். அவன நாங்க கண்மாய்க்குள்ள எறங்கப்புடாதுனு சொல்ல முடியாது. நீனா கேட்டுப்பாரு. இல்லே, அவனா விட்டுக்கொடுத்தா உண்டு” என்ற அம்பலம், சின்னான் பக்கமாகத் திரும்பி “என்னடா சின்னா, ஊத்தா உரிமைய உன் அப்பனுக்கு விட்டுக்கொடுக்குறீயா?” எனக் கேட்டார். சின்னான் அத்தனை வீராப்பாக நின்றவன் தலையைக் கோவில் காளையைப் போல சிலுப்பிக் கொண்டான்.

“முடியாதுங்க. என் ஊத்தாவுல பிடிபடுற மீனுல பாதிய பங்காக் கொடுக்கிறேன். ஆனா ஊத்தா நான்தான் குத்துவேன்”

சுப்பு தலை குனிந்தவராய் நின்றார். ஊத்தா குத்த முடியாத தன்னை அவர் அந்நியராக உணர்ந்தார். ஊரும் தெருவும் அவரைப் பார்த்து சிரித்தது.

“சுப்பு, நீ பெத்த புள்ளெயே சொல்லிட்டான். பெத்தப் புள்ளக்கிட்ட தோத்துப்போறதொன்னும் தப்பில்ல. விட்டுக்கொடுத்துப்போ சுப்பு. கருவாடு கறைஞ்சி ஏங்கே போயிடப் போவுது, குழம்புச் சட்டியிலதானே கெடக்கப்போவுது” என்றவாறு ஊர்க்கூட்டம் கலைந்தது.

ஊத்தா குத்துக்குப் பேர் போனவர் சுப்பு. ஊத்தாவை அவரே முடைவார். மூங்கிக் குறுத்து ஊத்தா. இதற்கென்று வீட்டுக்கொல்லையில் மூங்கிலைக் காடு போல வளர்த்து வந்தார். வாலிபப் புல்லாக வெட்டி, சிம்புச்சிம்பாகச் சீவி, காய வைத்து, மொழி, பிசிறு, கணுக்களைக் கழித்து வரிச்சை வரிச்சையாகப் பகுந்து, தினமும் கை பார்த்து அவரே முடைந்தது. குருது அடியைக் குடைந்து அதைப் பாதியாக அறுத்து கவிழ்த்து வைத்ததைப் போன்ற ஊத்தாக்கள். ஊர் கண்மாய் பருவ மழைக்கு நிரம்பினால் ஊத்தா முடையத் தொடங்கிவிடுவார். மரம் ஏறிய குரங்கு இறங்கியாகணும். நிறைஞ்ச குளம் வடிஞ்சாகணும். இது சுப்புவின் கணக்கு. கண்மாய் வடியத் தொடங்குகையில் முடைந்த ஊத்தாக்கள் விற்பனைக்கு வரும். சிலர் முன்கூட்டியே சொல்லி வைத்து, வீட்டுக்கே வந்து வாங்கிச் செல்வார்கள். ஊத்தா விற்பனையை வைத்து மீனின் செழிப்பை அறிந்துவிடுவார் சுப்பு.

மீன்பிடித் திருவிழா கூடிவிட்டால் சந்தையில் ஊத்தா கிடைக்காது. கிராக்கியானால் ஊத்தா நல்ல விலைக்கட்டும். எல்லா ஊத்தாவையும் அவர் விற்பதில்லை. ஊத்தா குத்துக்கும் முதல் நாள் நம்பிவந்து கேட்கிறவர்களுக்கு நல்ல விலை வைத்து விற்பார்.

அவரது வீட்டுப் பரணியில் எப்பொழுதும் ஒன்றிரண்டு ஊத்தா தொங்கிக் கிடக்கும். அவர் வீட்டுக்கோழிகள் கேக்கரைக் கத்திக்கொண்டு முட்டையிட இடம் தேடுகையில் ஊத்தாவைத்தான் திண்ணையில் கவிழ்த்து வைப்பார். ஊத்தாவுக்குள் நுழையும் கோழியால் அதிலிருந்து வெளியேற முடியாது. மீனும் அப்படித்தான்.

ஊரார்கள் அவரிடம் ஊத்தா வாங்கி மீன் பிடிக்கச் சென்றார்கள். அவரது மகன் சின்னான் சந்தையில் யாரோ முடைந்து விற்ற ஊத்தாவுடன் நிற்கலானான். அப்பனை வென்றுவிட்ட திளைப்பில் அவன் நின்றுகொண்டிருந்தான். மகனிடம் தோற்றுவிட்ட திகைப்பில் சுப்பு நின்றார்.

ஊத்தா குத்தும் லாவகம் தெரிந்தவர் சுப்பு. ஊத்தாக்குத்துப் போட்டியில் எத்தனையோ முறை முதல் பரிசு வாங்கியிருக்கிறார். அவரது குத்தில் விழும் மீன்களை அவர் ஒருவரே வீட்டுக்குக் கொண்டுசெல்பவர் அல்ல. மீன் கிடைக்காத குடும்பங்களுக்குக் கொடுக்கச் செய்வார். ஊத்தாவிற்குள் மீன் மாட்டிக்கொள்கையில் துடுப்பால் அடிக்கும். புறங்கையால் அதன் அதிர்வைப் பார்ப்பார். ஊத்தா வாய்க்குள் கையை நுழைத்து, மீனைப் பிடித்துத் தூக்குவார். மீன்கள் வளைந்து குழைந்து துதியாடும்.

ஊரே திரண்டு ஊத்தா குத்துகையில் அதிக மீன் பிடிப்பவர் சுப்பாகவே இருப்பார். அவரது ஊத்தா குத்தைப் பார்ப்பதற்கென்றே மக்கள் கரைக்கட்டி நிற்பார்கள். நான்கு குத்துக்கு ஒரு மீன் அவரது ஊத்தாவில் சிக்கும். பிடித்த மீன்களைக் கரையில் நிற்கும் அவரது பொஞ்சாதி ருக்குவிடம் தூக்கி எறிவார். அவரது முகம் செதில்களைப் போல மின்னும். அவரது முகம் பெருமை பூரிக்கும். ஊத்தா குத்துவதற்கே தான் பிறந்திருப்பதைப் போல முகத்தால் செழிப்பார்.

கண்மாய்க்குள் மீன்கள் விழாக் கோலம் கொண்டு துள்ளிக் குதிப்பதாக இருந்தன. கரையில் மக்கள் நிரல்கட்டி நின்றார்கள். கோமணம், தொடைக்கும் மேலாகத் தூக்கிக்கட்டிய கைலி, பட்டாப்பட்டி, கால்சட்டை,…என கீழாடை உடுப்புகள். தோளில் ஊத்தாவைத் தூக்கி வைத்துக்கொண்டு பறை முழக்குக்காக காத்திருந்தார்கள். முழக்குக்கொட்டி முடிக்கையில் மக்கள் ஊத்தாவுடன் கண்மாய்க்குள் எறங்கணும். இறங்கத்தான் முழக்கு. ஏறுவதற்கு இல்லை.

இத்தனை நாட்கள் மகனிடம் சாடையாகப் பேசிய ருக்கு இப்போது நேராகப் பேசினாள். “எப்பவும் உன்னப்பாதான்டா ஊத்தா குத்துவார். இந்த வருசமும் அவரே குத்தட்டும். விட்டுக்கொடு” என்றாள். இதைச் சொல்கையில் கெஞ்சலும் வேண்டலும் சொற்களில் பசபசத்தன. சின்னான் பதிலுக்கு ஒன்றும் பேசவில்லை. வீம்பாக விறைப்பாக நின்றான்.

சுப்புவுக்கு ஒத்த மகன் சின்னான். தன் மகள் பேத்தி ரேவதியை அவனுக்குத் திருமணம் முடித்து வைக்க ஆவல் கொண்டிருந்தார். இதையே சொல்லி மகனை வளர்த்துவந்தார். கல்யாண வயதில் அப்பன் கிழித்த கோட்டில் மகன் நிற்கவில்லை. அவனது அக்கா மகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. வயது வித்தியாசத்தைக் கணக்கிட்டு பார்த்தான். அக்காவின் முகம் அவளது மகளின் முகத்தில் அப்பியிருந்ததைப் பார்த்தான். தூக்கி வளர்த்த பிள்ளையை எப்படித் திருமணம் முடிப்பது? அதை நினைக்கையில் அவனுக்கு அருவருப்பாக இருந்தது. அப்பா கிழித்த கோட்டைத் தாண்ட மட்டுமல்ல, அழிக்கவும் செய்தான்.

அவனுக்கொரு காதலி இருந்தாள். அவளையே திருமணம் செய்துகொள்வேன், என ஒற்றைக் காலில் நின்றான். அது ஒருபோதும் நடக்காது, வீம்பு கட்டினார் சுப்பு. அவரிடம் எப்படியெல்லாமோ சொல்லி, கெஞ்சிப் பார்த்தான். சுப்பு அசையவோ, இசையவோ இல்லை.

அவரது விருப்பப்படி மகனுக்குப் பேத்தியைக் கட்டி வைக்க தேதி குறித்தார் சுப்பு. அந்தத் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் விரும்பிய பெண்ணை மனம் முடித்து, வீட்டில் கொண்டுவந்து நிறுத்தினான் சின்னான். தன் விருப்பத்தை நிறைவேற்றாத மகன் மீது அவருக்கு வெறுப்பு வந்தது. கோபம் பெருமூச்சாக உருண்டுத் திரண்டு நாசியின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.

அப்பா தன் மீது காட்டும் கோபத்தைப் பதிலுக்குத் தானும் காட்ட நினைத்தான் சின்னான். அப்படியாக அவனை தயார்ப்படுத்தினாள் அவனது மனைவி நந்தினி. இந்த முறை மீன்பிடித் திருவிழாவின் போது நீங்கள்தான் ஊத்தா குத்தணுமென தயார் செய்தாள்.

அவள் சின்னானைத் திருமணம் செய்துகொண்டு வருகையில், தெரு கூடி பஞ்சாயத்து பேசியது. ஊரார்கள் சுப்புவிடம் எடுத்துச் சொன்னார்கள். நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது, என்றார் சுப்பு. அவர் சொன்னதைப் போல நடந்துகொள்ளவும் செய்தார். அவரது அன்றாட நடவடிக்கை நந்தினியைப் பெரிதும் அவமதித்திருந்தது. அதற்காக இந்த வாய்ப்பை அவள் பயன்படுத்திக்கொண்டாள்.

மகன் சின்னானிடம் கெஞ்சிக் கேட்டாள் ருக்கு. சின்னான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. தன் மனைவி எப்படிச் சொல்லிக் கொடுத்தாளோ, அப்படியே அவளது பாவனையில் பதில் சொன்னான். “முடியாது, ஊத்தா நான்தே குத்துவேன்”

“ஏன்டா இப்படி நீ அடம் பிடிக்கே?”

“அவர் அடம் பிடிக்கலாம். நான் பிடிக்கக் கூடாதா?” என்றவன் தாயை ஒரு முறை ஏறிட்டு பார்த்துவிட்டு, “ இந்தத் திருவிழாவ என் மாமன் மாமியாருக்குச் சொல்லிருக்கேன். எல்லாரும் வருவாக. உங்கள ஊத்தா குத்த விட்டா பிடிச்ச மீன பிடிக்காதவங்களுக்குப் பங்கு வச்சிக் கொடுத்துட்டு கொஞ்சத்தெதே வீட்டுக்குக் கொண்டு வருவீக. அதான் இந்த முறெ நானே இறங்குறேன். பிடிக்கிற மீன சொந்தப் பந்தங்களுக்கு ஆக்கிப்போடணும்..” கரை ஒதுங்கிய மீனைப் போல அவனது பேச்சு துள்ளலில் இருந்தது.

ஊர்க்கரை ஆவலை முடுக்கிவிடுவதைப் போலவும் எச்சரிப்பதைப் போலவும் பறைக்கொட்டு கொட்டியது.

“இதனாலே தெரிவிச்சுக்கிறது என்னன்னா, ஊத்தாக்குத்த குடிக்கு ஒருத்தர்தே கண்மாய்க்குள்ளே எறங்கணும். மீறி எறங்குனா ஊருக்குத் தண்டங்கட்டணும் சாமியோவ்…” தண்டோரா முழக்கம் நீட்டி முழங்கி ஒலித்தது.

“தண்தண்தண் தனத் தனத் தனத்”

மக்கள் கண்மாய்க்கரை அய்யனாரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். பறைக்கொட்டுக்கேற்ப கண்மாய் மீன்கள் துள்ளாட்டம் போட்டன. கரையைச் சுற்றி வட்டமிட்டக் கொக்கு, நாரைகள் வெண்மேகமாக வட்டங்கட்டின. அந்தச் சத்தத்தினூடையே சுப்பு, ருக்குவின் காதிற்குள் முணுமுணுத்தார் “அடி ஊத்தாவ இப்பவாச்சும் ஏங்கிட்ட கொடுக்கச் சொல்லேன்டி. மீன் ஏமாத்துனா ஊர் நம்மள ஏமாத்துன மாதிரியாயிடும் ” அவரது குரல் இதுநாள் வரைக்குமில்லாது குழைந்து, நா தழுதழுத்தது.

“கேட்டுப் பார்த்துட்டேன். மாட்டேங்கிறான். அவன் கூட்டிவந்த பொண்ண ஏத்துக்க முடியாதுனு நீங்க ஒத்தக் கால்ல நின்ன மாதிரி, பதிலுக்கு அவன் நிக்கான். இதுக்கு மேலே என்னால கெஞ்ச முடியாது. விடுங்க. அவன் ஊத்தா குத்துற லட்சணத்த பார்த்துப்புடுவோம்” விடைத்து நின்றாள் ருக்கு.

பறை முழக்கம் நின்றதும் மீன்பிடித் திருவிழா களைக்கட்டியது. கண்மாய் ஆர்ப்பரித்தது. வெள்ளாடு இரை பொறுக்க வெள்ளாமை கொள்ளைக்குள் இறங்குவதைப்போல வீட்டுக்கு ஒருத்தர் ஊத்தாவைத் தூக்கிக்கொண்டு கண்மாய்க்குள் ஓடினார்கள். குஞ்சுத்தாய்க் கோழியைக் கூடையால் கவிழ்த்து பிடிப்பதைப்போல கவிழ்த்தார்கள். சுப்பு கரையில் நின்றபடி சின்னானைப் பார்த்தார். அவருக்குச் சுருள் சுருளாக பெருமூச்சு வெடித்தது.

ஊத்தாவில் மீன்கள் சிக்கத்தொடங்கின. கெளுத்தி, கெண்டை, வாவல், விரால், செல்லா, கச்சே,.. என மீன்கள். இவ்வளவு நேரம் தண்ணீருக்குள் குதியாட்டம் போட்ட மீன்கள் கரையில் உயிராட்டம் போட்டன. அவரவர் பிடித்த மீன்களை முதுகுப் பக்கமாகத் தொங்கிய பையில் போட்டு, நிரப்பி, கரையில் கொட்டினார்கள். குடும்பத்தவர்கள் அதை அத்தனை வேகமாகப் பொறுக்கி கூடைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

சுப்புவின் கை பரபரத்தது. அவரால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. சின்னான் மீன் பிடிக்கும் கோலத்தைப் பார்க்க முடியவில்லை. கட்டவிழ்ந்த சேவலைக் கூடையில் கவிழ்த்து பிடித்துவிடுவதைப் போல ஊத்தாவைக் கவிழ்த்தான். ஒரு மீனும் சிக்குவதாக இல்லை. இந்நேரத்திற்குச் சுப்புவாக இருந்தால்

ஒரு குடும்பத்து மீன் பிடித்திருப்பார். எல்லா மீனும் அவருக்குப் பிறந்ததைப் போல அவரது ஊத்தாவில் மாட்டும்.

சின்னானிடம் இரண்டு மீன்கள் சிக்கியிருந்தன. அதைப் பிடிக்கத் தெரியாமல் பிடித்து, வழுக்கி கண்மாய்க்குள் தவறவிடச் செய்தான். வெயில் உச்சிக்கு வந்திருந்தது. கண்மாய் சேறும் சகதியும் ஆனது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பது பழமொழி. சின்னானைப் பொறுத்தவரை அது வெறும்மொழியானது.

பிடித்த மீன் போதுமென்று மீன் பிடிக்காரர்கள் கரையேறத் தொடங்கினார்கள். பால்காரன் பால் கறக்கையில் கன்றுக்குட்டிக்காகக் கொஞ்சப் பாலை மடியில் விட்டுச்செல்வதைப் போல, கொக்கு, நாரைக்காக குட்டி மீன்களை விட்டுச் சென்றார்கள். சின்னான் விடாது ஊத்தாவைக் கவிழ்ப்பதாக இருந்தான். அவனது முகம் ஏமாற்றத்தால் தொங்கிப்போயிருந்தது. அதைச் சுப்புவால் கண்கொண்டு பார்க்கவோ, நெஞ்சுக்குள் இறக்கவோ முடியவில்லை. கோபம் சுருளெடுத்தது.

“சுப்பு, நீவொண்ணும் கவலப்படாதே. நான் மீன் தர்றேன்” ஊர்க்காரர் ஒருவர் அவரை வழிமறித்து சொன்னது அவருக்கு நெஞ்சுடைத்து வந்தது. எத்தனையோ பேருக்கு மீனைப் பங்கு வைத்துக் கொடுத்தவர் சுப்பு. பிறர் கொடுக்கும் மீனைக் கை நீட்டி வாங்க மனம் குறுகுறுத்தது.

“சுப்பு, நீ யோகக்காரன். கண்மாய் மீனு ஒனக்குத் தான் பொறந்திருக்கு. இந்தத் திருவிழாவே ஒனக்குத்தான்..” கடந்த திருவிழாவின் போது ஊரார்கள் அவரைப் பார்த்து சொன்னதை நெஞ்சுக்கும் தொண்டைக்குமாக உருட்டினார். அவரது கண்கள் கண்மாயைப் போலக் கலங்கின.

கரையில் ஊர்ப்பெண்கள் எதையோ சொல்லி, பேசிச் சிரித்தது தன்னைக் குத்திக்காட்டிப் பேசுவதாக நினைத்துச் சுணங்கினார். இந்தக் கண்மாய் ஊரார்களுக்கு ஆயிரம் கோடி கைகளால் வாரி வழங்கி சின்னானை மட்டும் ஏமாற்றியிருந்தது. சுப்பு தொன்னார்ந்த முகத்தோடு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

அவரது நினைவெல்லாம் திருவிழாவிற்கு வந்திருக்கும் உறவினர் மீதிருந்தது. மகள் வழி பேத்தி ரேவதி விடிந்தும் விடியாத காலையில் அம்மியில் அரசளவு சாமான்களை அரைத்தது நெஞ்சுக்குள் அரைப்பட்டது. இந்த வீட்டுக்கு மருமகளாக வரவேண்டியவள். அவளை ஏமாற்றப் போகிற பதைப்பு நெஞ்சைப் பிசைந்தது.

வீட்டுக்குப் போனதும் கேட்பாள், “எங்கே தாத்தா மீனு?” என்று. வாஞ்சையோடு கேட்கும் அவளுக்கு நான் என்ன சொல்வேன்? அவரால் அதற்கும் மேல் நடக்க முடியவில்லை. ஒழுங்கையோரம் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்துவிட்டார்.

உச்சி வெயில் நேரத்துக்கு சின்னான் அந்த வழியே வீடு திரும்பினான். அவனது முகத்தில் சேறு அறைந்திருந்தது. சுப்பு, ஒரு கணம் மகனை நிமிர்ந்து பார்த்தார். ருக்கு, அத்தனை வேகமாய் உதட்டிற்கு ஒரு விரலைக் கொடுத்து ஒன்றும் சொல்லிடாதீங்க, எனச் சமிக்ஞை செய்தாள். வாய் வரைக்குமாக வந்த வார்த்தைகளைத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டார் சுப்பு. கோபத்தில் பேசுகையில் வார்த்தைகள் முதலில் குதிக்கும். ஏமாற்றத்தில் பேசுகையில் வார்த்தைகளைக் கண்ணீர் முந்திக் கொள்ளும். இவருக்குக் கோபம். அவனுக்கு ஏமாற்றம். இந்நேரத்தில் இருவரும் வாய் திறந்தால் திருவிழாவும் அதுவுமாகப் படுகளமாகிவிடும். திருவிழாவுக்கு வந்த விருந்தாளிகள் கைக்கொட்டி சிரித்துவிடுவார்கள். அவர்களோடு சேர்ந்து ஊரும் சிரிப்பது எவ்வளவு பெரிய அவமானம்!

ஊரே மீன் பிடித்து அலசி, ஆய்ந்து கழுவி, குழம்புக் கூட்டி வைக்கையில் தன் வீட்டில் மீன் குழம்புக்குப் பதிலாக புளிக்குழம்பு கொதிக்கப் போவதை நினைக்கையில் முகத்தில் ஏமாற்றமும் விரக்தியும் ஒரு சேர அம்மின.

சுப்பு உட்கார்ந்திருந்த ஒற்றையடி பாதையிலிருந்து எழவோ, வீட்டுக்குச் செல்லவோ விரும்பாதவராய் அதே இடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல ருக்கு எவ்வளவோ முயன்றாள்.

நேரம் கழித்தே வீடு வந்தார் சுப்பு. வீடு உறவுகளால் நிரம்பி வழிந்தது. சமையல் வாசனை நாசியைத் துளைத்தது. ருக்கு மருமகளோடு இரண்டற கலந்திருந்தாள். அப்படியாக கலந்துவிட்டது சுப்புக்கு முதலில் கோபமாக இருந்தாலும் அந்தக் கோபம் இனி வேண்டியதில்லையென இறங்கினார்.

நந்தினி, ஒரு செம்பு தண்ணீர்க்கொடுத்து “கை அலம்பிட்டு வாங்க மாமா, சாப்பிடலாம்…” என்றாள். மருமகளின் அப்படியான அழைப்பைச் சுப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளது அழைப்பு வியப்பாகவும் மரியாதையாகவும் இருந்தது. அவரது கண்கள் பேத்தி ரேவதியைத் தேடின. அவள் தாவணியில் நின்றவளாய், “தாத்தா” என அழைத்து, சிரித்து, கண்களால் சாப்பிடச் சொல்லி சமிக்ஞை செய்தாள். அவரது பொஞ்சாதி ருக்கு மருமகளோடு சேர்ந்து அடுப்பூதவும் புளி கரைக்கவுமாக இருந்தாள். கீரியும் பாம்புமாக இருந்த மாமியார் மருமகள் முயலும் பூனையுமாக ஆகியிருந்ததைப் பார்க்க அவரது கண்கள் பூச்சொரிந்தன.

வந்திருந்த விருந்தாளிக்குத் தண்ணீர் கொடுத்து, அத்தனை பேரையும் ஒரே பந்தியில் அமரவைத்து உணவு பரிமாறினாள் நந்தினி. கூடமாட ரேவதி தண்ணீர் தெளித்து சோறு பரிமாறினாள்.

சுப்புக்கு மருமகள் சமையலைச் சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னும்கூட கொஞ்சம் வீம்பு அவரது நாசியில் ஏறி அமர்ந்துகொண்டு இறங்க மறுத்தது. ரேவதி அவரைச் சமாதானம் செய்து அமர வைத்தாள். பேத்தியின் அன்புக்கு முன் அவர் எப்பொழுதும் முயல்குட்டிதான்.

கை அலம்பி பந்தியில் அமர்ந்ததும் குழம்பின் வாசனை அவரது பெருங்குடலைத் தூண்டியது. இலையில் ஆவிப் பறக்கும் சோறு. அதன் மீது நாசியைத் துளைக்கும் குழம்பு.

சோற்றைப் பிசைந்து பசியை ஆற்றிக்கொள்வதற்கும் முன்பாக மருமகளிடம் பேசிவிட நினைத்தார். இரண்டாவது ஆப்பைக் குழம்பு ஊற்றுகையில் மருமகள் காதில் விழும்படியாகக் கேட்டார். “ஏது இதெல்லாம், யார் கொடுத்தது?”

நந்தினி முந்தானையை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டவளாய், “அத்தைக் கொடுத்தாங்க” என்றவள் சோற்றை ஆப்பை முடிச்சால் குழி பறித்து, ஆவிப் பறந்த குழம்பை ஊற்றினாள். தன் பொஞ்சாதியை வாஞ்சையோடு திரும்பிப் பார்த்தார் சுப்பு. “ஏதடி இது?” எனக் கேட்பதைப் போல அப்பார்வை இருந்தது.

அவரைப் பார்த்து வெட்கமாக சிரித்து வைத்தாள் ருக்கு. வெட்கத்தில் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது. “சாப்பிடுங்க. நீங்க பிடிச்சதுதே” என்றாள்.

சுப்புக்கு ஒன்றும் புரியவில்லை. சூடு பறந்த சோற்றைப் பிசைந்து ஒரு கவளம் உருட்டி வாயில் வைத்தார். கருவாட்டுக் குழம்பு.

ஏது இந்தக் கருவாடு, என அசைபோட்டவராய் மென்றார். அவருக்கு நினைவு வந்தது. கடந்த மீன் பிடித் திருவிழாவில் பிடித்த மீனின் உப்புக்கண்டம், என்று.

மனைவி இத்தனை நாட்களாக தான் பிடித்த மீனைக் கருவாடாக பக்குவப்படுத்தி வைத்திருந்ததும் மருமகள் கருவாட்டுக் குழம்பை மீன் குழம்பாக சமைத்ததையும் நினைக்கையில் இன்னும் ஒரு வாய் சொறு சேர்த்து சாப்பிடணும் போலிருந்தது. சாப்பிட்டு ஒவ்வொரு விரலாகச் சூப்பி, சொட்டம் போட்டார் சுப்பு. கை அலம்ப வருகையில் ருக்கு ஒரு செம்புத் தண்ணீரை நீட்டியவளாய் சொன்னாள். “ஒன்னும் கவலைப்படாதீங்க. அடுத்த ஊத்தா குத்துல இந்த வருசம் பிடிக்காத மீனெ சேர்த்துப் புடிச்சிப்புடலாம்”

சுப்பு கையைக் கழுவி, துண்டில் துடைத்துக் கொண்டவராய் சொன்னார். “பிடிக்கலாம்தே. அதுக்கு மழெ பெய்யணும். மீன் செழிக்கணும். ஊர் சண்டெ சச்சரவில்லாம இந்த வருசம் போல ஒத்துமையா இருக்கணும். அடுத்த திருவிழா வரைக்கும் நாம உசிரோட இருக்கணும். இதெல்லாம் விட, நம்ம ஊரான்கள் கண்மாயைப் பட்டாப் போடாம விட்டு வைக்கணுமேடி. இன்னைக்கு நீ பார்த்தே தானே. கண்மாய்க்கரைய எவ்ளோ தூரத்துக்கு கொடஞ்சிருக்காங்கனு…”

ருக்கு, ஆமாம் என்று சொல்வதைப் போல தலையை ஆட்டினாள். திண்ணையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த யாருக்கோ புரை ஏறியது.

Loading

2 Comments

  1. ஊத்தாகுத்து திருவிழாவில் இத்தனை குடும்ப நல்லுரவுக்கு வழி இருப்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.கதைபோக்கு அருமை.

  2. என்ன சார் இப்படி எழுதி இருக்கீங்க.

    சிறு வயதில் ராஜேஸ்குமாயும், பாலகுமாரனையும் என் தலைமாட்டில் இரவு 12 மணி வரை இருக்கும்.

    வரிவரியாக படித்து அந்த கதைக்குள்ளேயே போய்டுவேன்.

    அதுக்கு அப்புறமா வரி விடாம படிக்கிறது உங்க கதையாகதான் இருக்கிறது.

    மிகைபடுத்தல..

    வாழ்வியலையும், வட்டார மொழியையும் அழகாக பயன்படுத்தி அந்த கதைக்குள் கொண்டு போகிற…உங்கள் எழுத்தில் மயங்கியே சொல்கிறேன்.

    அருமை சார்👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    அண்ணாத்துரை
    அறந்தாங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *