கட்டுரைகள்

அரபு வசந்தத்தின் முடிவிலா அழிவில் சிரியாவில் தொடரும் நீண்ட போர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

சிரியாவின் உள்நாட்டுப் போரில் மார்ச் 2011 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2022 ஆம் ஆண்டு வரை 4.76,600 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆனால், இது உண்மையான எண்ணிக்கை இல்லை என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு இதுவரை சிரிய போரில் 4,94,438 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிபர் அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். தந்தை ஹஃபீஸிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டில், அதிபரானார் அல்-அசாத்.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக தொடங்கிய ஒரு போராட்டம், சில சர்வதேச நாடுகளின் தலையீட்டால் முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.
சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?
2011களில் அமைதியின்மை தொடரத் தொடர, போராட்டங்கள் பல வெடித்தன. முதலில் தற்காப்பிற்காகவும், பிறகு தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை விரட்டி அடிக்கவும், எதிரணியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். அந்நிய சக்தியின் உதவிகளை பெற்றுள்ள பயங்கரவாதிகளை முழுமையாக நசுக்கி நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவேன் என்று அதிபர் உறுதிமொழி அளித்தார்.
இந்த வன்முறைகள் மிக விரைவிலேயே அடுத்த நிலைக்கு சென்று உள்நாட்டு போராக மாறியது. அரசின் படைகளை எதிர்கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்தனர்.
இப்போரில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் உதவின. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஆரம்பக்கட்டத்தில் பாரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவின. பின்னர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் சில அரபு நாடுகள் உதவி இருந்தன.
12 வருடமாக தொடரும் போரில் சிரிய மக்கள் எண்ண முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். 6 லட்சம் மக்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக வேறு இடங்களுக்கு சென்றனர். சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு உட்பட மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்படாமல் போனது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டன.
12-வது ஆண்டில் தொடரும் போர்:
சிரிய நாட்டின் பெரிய நகரங்களை அரசு காட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் சில நகரங்கள் தற்போதும் உள்ளன.
12 ஆண்டுகளாக நடக்கும் சிரிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் சிரிய போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தற்போது வரை தோல்வியே அடைந்துள்ளன. இந்த நிலையில் சிரிய அதிபர் பஷார் பதவி விலகல் ஒன்றையே கிளர்ச்சியாளர்கள் சிரிய போரை முடிவுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர். கிளர்ச்சியாளர்களின் இந்தக் கோரிக்கையை பஷார் ஏற்கத் தயாராக இல்லை.
அதேவேளை சிரிய போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி உள்ளிட்ட நாடுகள் எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்த நிலையில்தான் சிரிய உள்நாட்டுப் போர் பன்னிரண்டாவது ஆண்டில் நுழைந்திருக்கிறது. அதிகாரத்திற்காக தொடங்கப்பட்ட சிரிய போர் இன்னமும் தொடர்கிறது.
சிரியாவில் ஒரு போர்க்களம்:
அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உலக சக்திகளின் தலையீடு இந்த போரில் முக்கிய விடயங்களாக அமைந்தன. அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகள் இப்போர் தீவிரமடையவும், தொடரவும் வழிவகுத்தன.
இதுவே பிற்காலத்தில், சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியது.
சிரியாவில் டெர்ரா நகரின் தெற்குப்பகுதியில், 2011ஆம் ஆண்டின் மார்ச் மாதம், அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட, ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒரு கண்டன போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போராட்டங்களை செய்வோரை நசுக்க, அரசு தனது படைகளை பயன்படுத்த, அதிபர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கின. சிரிய அதிபரின் ஆதரவுப் படைகளுக்கும், எதிரானவர்களுக்கு இடையிலான போர் என்ற வடிவத்தை தாண்டி மனிதாபிமான பேரழிவை இந்த போர் தாண்டியுள்ளது.
சுன்னி –ஷியா –அலாவித் பிரிவினை :
சிரிய நாட்டில் பெரும்பான்மையில் உள்ள சுன்னி பிரிவு இஸ்லாமியர்களை அதிபரின் ஷியா அலாவித் பிரிவுக்கு எதிராக தூண்டிவிட்டு, பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக வெளிநாட்டு சக்திகள்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த பிரிவு இருதரப்பிலிருந்தும் அத்துமீறல்கள் நடக்க ஊக்கமளித்தது. இதனால் உயிர்ச்சேதம் மட்டுமில்லாமல், பல மதஅமைப்புகள் பிளவுபட்டதுடன் மோதிக் கொண்டனர்.
பின்னர் இந்த பிரிவுகளில் ஜிகாதிக்குழுக்களும் இணைந்து கொண்டன. அவை மேலும், இந்தப் போரில் பல பகுதிகளை உருவாக்கின. அந்நாட்டின் வட-மேற்கு பகுதியின் பல பகுதிகளை ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற குழு கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. தஹ்ரிர் அல்-ஷாம் என்பது, அல்-கய்தா மற்றும் அல்-நுஸ்ராவின் கூட்டணியில் உருவான குழுவாகும்.
இதற்கிடையில் சிரியாவின் வட-கிழக்கு பகுதிகளின் பல பகுதிகளை இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழு கைபற்றியதும் அறிந்ததே.
ஷியா பிரிவினரின் புனித தலங்களை பாதுகாப்பதற்காக, லெபனான், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பல ஷியா கிளர்ச்சியாளர்கள் சிரியா அரசு ராணுவத்துடன் இணைந்து சண்டையிட்டு வந்தனர்.
ரஷ்யாவின் தலையீடு:
சிரிய அதிபருக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்ய அரசு, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சிரியா அரசை நிலையாக வைப்பதற்காக விமான தாக்குதல்களை முதலில் தொடங்கியது. பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்தபோதிலும், அதன் தொடர் தாக்குதல் என்பது, அமெரிக்க மேற்கத்தியர்களின் ஆதரவை பெற்றிருந்த கிளர்ச்சியாளர்கள் மீதும், பொதுமக்கள் வசித்த இடங்களிலும் நடந்ததாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் இந்த தலையீடு என்பது, போரின் திசையை சிரிய அதிபருக்கு ஆதரவாக மாற்றியது. 2016ஆம் ஆண்டின் பின்னாட்களில், கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு அலெப்போவில் ரஷ்ய விமானப்படையின் தாக்குதல் அதிகமாக இருந்தது.
பிறகு 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ரஷ்யாவின் சிறப்பு படையினர் மற்றும் பிற குழுக்களின் இணைந்த தொடர் தாக்குதல், டேர் அல்-சோர் நகரில் இருந்த ஐ.எஸ் குழுவின் உறுதியான கட்டுப்பாட்டை உடைத்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், ரஷ்ய படைகளின் சில பிரிவை பின்வாங்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆனால், சிரியா முழுவதும் அவர்கள் தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குதல்கள் நடத்தினர்.
போரின் தாக்கம் என்ன?
இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கண்காணிப்பு குழுவான, மனித உரிமைகளுக்கான சிரியாவின் ஆய்வகம், வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் 4.76,600 பேர் இறந்துள்ளதை ஆவணப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 1,03,000 பேர் பொதுமக்கள். இந்த கணக்கெடுப்பில், காணாமல் போயிருக்கலாம், இறந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்ட 56,900 பேர் சேர்க்கப்படவில்லை என்பதையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த விவகாரத்தால் 4.7லட்சம் மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் குழு கணக்கிட்டது. ஐ.நாவின் கணக்கின்படி 5.6 மில்லியன் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். சமீபகால வரலாற்றிலேயே இல்லாத அளவிலான இந்த புலம்பெயர்தலை சமாளிக்க, அருகாமை நாடுகளான லெபனான், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகியவை திணறின.
சிரியா அகதிகளில் 10சதவிகிதம் பேர் பாதுகாப்பான முறையில் ஐரோப்பாவில் தஞ்சம் சேர்ந்தனர். மேலும் 6.1 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டினுள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். 2018இல், சிரியாவினுள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் 13.1மில்லியன் மக்களுக்கு உதவ 3.5பில்லியன் தொகை தேவைப்படும் என ஐ.நா கணக்கிட்டது.
கிட்டத்தட்ட 70% மக்கள் மிகவும் கொடுமையான வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி மற்றும் உணவுத்தட்டுபாட்டால் ஆறு மில்லியன் மக்கள் உணவில்லாமல் இன்னமும் தவிக்கின்றனர். சில பகுதிகளில் உள்ள மக்கள் தங்களில் 15 முதல் 20 சதவிகித வருவாயை குடிநீரிற்காக செலவிடுகிறார்கள்.
மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் சென்று சேர முடியாத நிலையை போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உருவாக்கியுள்ளன. சுமார் 2.98 மில்லியன் மக்கள் உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் உள்ளனர்.
போர் முடிவுக்கான நடவடிக்கைகள்:
அரசியல் ரீதியான முடிவு மட்டுமே இந்த போருக்கு தீர்வாக இருக்கும் என்று சர்வதேச சமூகம் பல காலங்களுக்கு முன்பு முடிவு செய்தது. ஐநாவின் பாதுகாப்புக்குழு, 2012 ஜெனிவா குழுவை (2012 Geneva Communique) அமலாக்க அழைப்பு விடுத்தது. இந்த குழுவானது இருதரப்பின் கவனத்துடன் உருவாக்கப்பட்ட நிர்வாகக் குழுவாகும். 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஜெனிவா 2 என்ற அமைதி பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக ஐ.நா செயல்பட்டது.
ஒன்பது குழுக்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
அரசியலமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டுவரவும், சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறிய அளவிலான முன்னேற்றமும் ஏற்பட்டது.
போர்க்களத்தில் பல இடங்களில் பின்வாங்கியபோதும், பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து அதிபர் பதவி விலக வேண்டும் என்று கேட்கப்பட்டு வந்ததால், இந்த பேச்சுவார்த்தைகளின் மீது ஆர்வமில்லாதவராக இருந்தார் அதிபர் அசாத்.
மேற்கத்திய சக்திகள், இந்த பணிகளுக்கு இடையே, ரகசிய முறையில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனது கூட்டாளி அணிகள் தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதாக கூறுகின்றன. ரஷ்யாவில் சர்வதேச பேச்சுவார்த்தைக்கான மாநாடு நடந்தபோதிலும், பெரும்பாலான அரசியல் எதிர்கட்சிகளும், ஆயுதமேந்திய குழுக்களும் அதில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
அஸ்தானாவில் ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாகவே இந்த மாநாடு அமைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இந்த நாடுகள், சிரியாவில் நான்கு விரிவாக்க இடங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. ஆரம்பத்தில் தாக்குதல் குறைந்திருந்தாலும், மே மாதத்திற்கு பிறகு அதில் இரண்டு இடங்களில் அரசு தாக்குதல் நடத்த தொடங்கியது.
அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உலக சக்திகளின் தலையீடு இந்த போரில் முக்கிய பங்காளிகளாக அமைவதால் போரின் தீவிரம் தணிந்தாலும் , போர் இன்னமும் முடிவுறவில்லை.
               – ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *