கதைகள்

“அட்டணக்கால்” ….. சிறுகதை ….. சோலச்சி.

தேர்தல் வரும் போதெல்லாம் அரங்கியான்பட்டிக்கு பாலம் கட்டித்தருவதாக வாக்கு கொடுத்துசெல்வதோடு சரி. வெற்றி பெற்றவர்கள் யாரும் கட்டித்தர முன் வந்ததே இல்லை. கால்வாயானது ஒன்றரை ஆள் மட்டம் உயரமும் ஒரு பனை தூரம் அகலமும் இருந்தது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீர் ஊருக்குள்ளும் வந்துவிடும்.

”எங்களுக்கு மாட்டு வண்டிகள் இருக்கிறது. கலெக்டர் எங்க சாதிக்காரு. அவர பகச்சுக்கிட்டு எங்களால போராட முடியாது. அதுவும் பட்டினி போராட்டம்னா ஒத்தே வராது. அதுவும் அந்தத் தெருக்காரங்ககூட சேர்ந்து போராட நமக்கு சரிப்பட்டு வராது” என்று மேலத்தெரு மக்கள் சொன்னதால்தான் ஆத்தூர் முத்துக்குமரன் கீழத்தெரு மக்களை ஒன்றுதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூன்றுநாள் போராட்டத்திற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் செழியனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ”உயிரை பணயம் வைத்து போராடியது கீழத்தெரு மக்கள். அதனால் அவர்கள் பகுதிக்கு நேராக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததார் முத்துக்குமரன். அதை எதிர்த்து மேலத்தெருக்காரர்கள் பஸ் மறியல் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

”அவங்க தெருவுக்குள்ள போயி நாம வர்றதா.. பாலமே கட்டாட்டியும் பரவாயில்லை. வண்டி வாசில போறவுக எப்பவும்போல காவாய்க்குள்ள எறங்கியே போகட்டும்….”

‘காவாய்க்குள்ள எறங்கி ஏறுனா சத ஒன்னும் கொறஞ்சு போகாது…”

”எல்லாத்துக்கும் ஆத்தூர்காரன்தான்ய்யா காரணம். நமக்கிட்ட வயவேலக்கி வரணும்னுதான் அந்த பஞ்சுமில்ல என்னன்னத்தையோ பண்ணி தொலச்சு இழுத்து மூட வச்சோம். அதையும் அவன்தான் தெறக்கவச்சு அவனுகள வேலக்கி போக வச்சான்.. அவன நம்ம கட்சில சொல்லி அடக்கி வைக்கச் சொல்லனும்…” மேலத்தெருவுக்குள் பேசிக்கொண்டனர்.

வந்த பாலத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே கீழத்தெரு மக்களை முத்துக்குமாரன் சமாதானப்படுத்தி மேலத்தெருப்பக்கம் பாலம் கட்ட சம்மதித்தார். பாலம் கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாதங்களிலேயே கீழத்தெரு பகுதிக்கும் பாலம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.

பாலம் கட்டியதிலிருந்து பஞ்சாயத்து மேடையாகவே மாறிப் போயிருந்தது மேலத்தெரு பாலக்கட்டை. மேல பாலக்கட்டை அருகே கட்சிக் கம்பங்கள் கட்சிக் கொடிகளை தாங்கி பறக்க ஆரம்பித்தன. பாலக்கட்டையையும் கட்சிக் கொடியும் இருப்பதுதான் ஊர் இருப்பதற்கான அடையாளம் என்று சிலாகித்துக் கொண்டனர் மேலத்தெருவில் உள்ளவர்கள்.

பொழுது சாயும் போதும் விடியும் போதும் மேலத்தெரு பாலக்கட்டையில் பத்து பேருக்கு குறையாமல் இருப்பார்கள். மேலத்தெருக்காரர்கள் பலரும் பாலக்கட்டையில் உட்கார்ந்துதான் பல் துலக்குவார்கள். அதில் உட்கார்ந்து பல் துலக்குவதென்பது கௌரவமாக கருதப்பட்டது.

கீழத்தெரு பாலத்தில் ஒன்றிரண்டுபேர் மட்டுமே எப்போதாவது இருப்பதுண்டு. பலரும் பஞ்சாலைக்கு பகலிலும் இரவிலும் மாறிமாறி வேலைக்குச் செல்பவர்களாக இருந்ததால் பாலக்கட்டையை கடந்து தெருவுக்குள் வருவதோடு சரி. அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருந்ததில்லை. தெருவுக்குள் இருக்கும் வேல்வீரன்சாமி கோயிலின் திண்ணையில்தான் எப்போதாவது கீழத்தெரு இளைஞர்களின் அரட்டை அரங்கம் நடந்தேறும்.

மேலத்தெரு பாலக்கட்டையில் எப்போதும் திருவிழாக்கோலம்தான். பாலம் கட்டி முடிக்கப்பட்ட நான்கைந்து நாளிலேயே வீரப்பன் தனது பெயரை கல்லால் செதுக்கியிருந்தான். கள்ளிச் செடியில் இதயத்தை வரைந்து அதில் அம்பு வரைந்து தங்கள் பெயர்களின் முதல் எழுத்தை பதிவு செய்தவர்கள் எல்லோரும் தற்போது பாலக்கட்டையில் பதிவு செய்வதை பெருமையாக கருதினர்.

பாலக்கட்டையின் மேல் கு.செல்வி என்று செதுக்கப்பட்டிருந்தது. மேலத்தெரு குமரேசன் மகள்தான் செல்வி. ”எந்த ஈனசாதிக்கு பொறந்தவன்டா எம்மக பேர எழுதுனது. அவுக ஆத்தா.. உள்ள சாதிக்குள்ள முந்தான விரிச்சுருந்தா இந்தப் புத்தி வந்துருக்குமா. ஊர்ல பெத்ததாலதான் அமுக்கிக்கிட்டு இருக்க முடியலபோல. நமக்குள்ள வம்புதும்பு வந்துரக்கூடாதுனு பாக்குறேன்…. ” கத்திக்கொண்டே கையில் வைத்திருந்த அரிவாளால் அந்தப் பெயரைக் கொத்திக் கொத்தி அழித்துக் கொண்டிருந்த குமரேசனிடம்…

”ஏம்பா அந்த தெருக்காரங்களத்தான் நாம ஆகாதுனு ஒதுங்கி இருக்கோம். நமக்குள்ள அடிச்சுக்கிட்டா பாக்குறவனுக காரித் துப்ப மாட்டானுகளா. அந்தக் கருமத்தயெல்லாம் சிமெண்ட்ட வச்சு பூசித் தொலஞ்சுருவோம்….” நாகப்பன் சொன்னபோது பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பதினாறு எண் பதித்த அரசு பேருந்துதான் பலருக்கும் சொகுசு வாகனமாக இருந்தது . அந்தப் பேருந்துதான் காலையும் மாலையும் வந்து செல்கிறது.

கருப்பன் தன்மகனுடன் அந்தப் பேருந்தில் ஏறினார். இருந்த ஒரு இடத்தில் சிறியவனான அவரது மகன் உட்கார்ந்து கொண்டான்.

அவர்கள் பின்னாலயே ஏறிய மேலத்தெரு பொன்னையா ”ஏன்டா கருப்பா… ஒனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா… நா ஏறுறது தெரிஞ்சும் ஓம் மவன ஒக்கார வைப்ப… தனியா சம்பாதிக்கிறீங்கள்ள. அதான் துமுரு வச்சுப் போச்சு. அந்தப் பஞ்சு மில்ல இழுத்து மூடுனா சோத்துக்கு அய்யா… நொய்யானு எங்ககிட்டதானே வரனும்…” சொல்லிக்கொண்டே அவனை வெளியில் இழுத்து தள்ளிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.

”நாங்களும் பணம் கொடுத்துதானே போறோம் ஓசிலயா போறோம்….”என்று சொல்ல நினைத்தாலும் அவரால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. அவருக்கு சுப்பனின் சாவுதான் கண்முன் வந்து சென்றது.

ஊராட்சி மன்றத் தேர்தலில் வார்டு உறுப்பினருக்குப் போட்டியிட்ட சுப்பன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட இரண்டொரு நாளில் அந்தப் பேருந்தில் சென்றபோதுதான் சுப்பன் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

 

அனைத்து கட்சி தலைவர்களும் அந்த ஊரில் முகாமிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றபோதும் அமைதி நிலவவில்லை. கீழத்தெரு மக்கள் பதவிக்கு வரக் கூடாது என்பதில் மேலத்தெருக்காரர்கள் உறுதியாக இருந்தனர். அன்றிலிருந்து உள்ளாட்சி

தேர்தல் வரும்போதெல்லாம் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டாலும் கீழத்தெரு பகுதி வார்டு உறுப்பினருக்கு யாரும் போட்டியிட வருவதேயில்லை. பலரின் வற்புறுத்தலுக்குப்பிறகு யாராவது போட்டியிட்டாலும் சிலதினங்களில் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

காலையில் கீழத்தெரு இளைஞர்கள் சிலர் பாலத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அதன் வழியே சென்ற மேலத்தெருக்காரர்கள் சிலர் முறைத்துக்கொண்டு சென்றனர்.

”ஒங்க பாலமாச்சும் கட்டுன மேனிக்கு நல்லா இருக்குதுப்பா… எங்கப் பக்கம் உள்ள பாலத்தப்பாரு… எல்லாம் வானரத்துக்குப் பொறந்ததுக. சொரண்டி தின்னுருச்சுக…” சொல்லிச் சென்றார் நாகப்பன்.

 

அன்று இரவு கீழத்தெரு பாலத்தில் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வருவதற்குள் அந்த ஜேஜிபி வண்டி நீண்ட தூரம் சென்றிருந்தது.

”பாலக்கட்டைய அவுகளே ஒடச்சு தள்ளிப்புட்டு எங்கமேல பழியப் போடுறாக. ரொம்ப நாளாவே எங்ககிட்ட ஒரண்டை இழுக்க அலையிறாக” என்று மேலத்தெருக்காரர்கள் பேச ஆரம்பித்தனர்.

‘எந்த வம்புதும்புக்கும் போகாம எங்க சோலியப் பாத்துக்கிட்டு இருந்தாலும் ஒரண்டை இழுக்குறதே வேலயா வச்சுருக்காங்க. நாங்களும் தலநிமிந்து வாழனும்னு நெனக்கிறோம். எங்கனாலயும் எதுவும் பண்ண முடியும் சார். அவுகள எங்கபக்கம் தலகாட்டாம இருக்கச் சொல்லுங்க… ஒரு எடஞ்சலும் வராது…” வன்னியரசு பேசியபோது

”இத்தனை ஆபிசருகளும் அவுக அவுக சோலிய பாக்க கெளம்பிருவாகய்யா. நால பின்ன நாம அந்த பாதயில போறதா இல்லயா.. சுப்பன் பெரியப்பா கத தெரியும்ல… நமக்கு எதுக்குய்யா ஊர் வம்பு…” அவனது அம்மா வள்ளி சொல்லிக்கொண்டே முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

”அந்தப் பெரியப்பாவ கொன்னதச் நெனைக்க வச்சு நமக்கு பயம் காட்றானுக. திருப்பி அடிச்சாதான் நிமிர்ந்து வாழ முடியும் ” வன்னியரசு தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டான்.

”நேத்து காலயில கூட நாங்க அந்த வழியா வரும்போது .. இந்தப் பாலக்கட்டைய நாங்களே ஒடச்சுப்புட்டு ஒங்க மேல கேசப் போடப்போறோம்னு மிரட்டுனானுக. வன்கொடும சட்டத்துல கேச கொடுத்தம்னா நீங்க தப்பிக்கவே முடியாதுனு அவனுக சொன்னப்ப.. நாகப்பன் அப்பச்சிதான் சண்ட சல்லு போட்டுக்காதீகப்பானு சொன்னுச்சு. பெரிய மனுசனு பாக்காம அவர வாய்க்கி வந்தபடி பேச ஆரம்பிச்சுட்டானுக… நாலு காசு கையில வந்ததும் ஆடுறானுக சார்…” ஒருவன் சொல்ல இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தனது பார்வையை கீழத்தெரு மக்கள் பக்கமாக திருப்பினார்.

”ஒங்களுக்கு ஆதாயமா சட்டம் இருக்குனா என்னவேணாலும் பண்ணுவீகளா… அந்தச் சட்டத்த தூக்குனாதான் நீங்கள்லாம் அடங்குவீங்க…” இன்ஸ்பெக்டர் சொன்னபோது முத்துக்குமரன் குறுக்கிட்டார்.

”சார் ஒருபக்கமா பேசாதீங்க.. அந்த ஊருக்கு ரெண்டு பாலம் வந்ததே கீழத்தெரு மக்களாலதான்… அவுகளுக்கு தொண்டூழியம் பாக்க வரலனு மிரட்டிப் பாக்குறாக.. நீங்க பொது ஆளு. அவுகளுக்கு ஏத்துக்கிட்டு பேசாதீக சார்..”

” மிஸ்டர் செந்தில்வேல் நீங்க பாதுகாப்புக்குத்தான் வந்துருக்கீக. நாங்க பாத்துக்குறோம். பிரச்சினைய நீங்க தூண்டிவிடாதீக” என்றார் மாவட்ட ஆட்சியர்.

”இந்த ஊர்க்காரனுகளுக்கு பஞ்சாயத்து பண்ண முடியாம எத்தனயோ கலைக்டருக மாத்திக்கிட்டுப் போயிட்டாக. இவரு இப்பதானே வந்துருக்காரு. போகப்போக தெரிஞ்சுக்குவாரு. எனக்கு, வேறு ஒரு எடம் கெடைக்க மாட்டேங்கிது” வட்டாட்சியர் முனுமுனுத்துக் கொண்டார்.

இரு தரப்பினரிடமும் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் யாரும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஒன்றியக்கவுன்சிலர் நிதியிலிருந்து உடைந்த பாலத்தை சீரமைக்க பணிகள் அப்போதே தொடங்கப்பட்டன.

மேலத்தெரு பாலக்கட்டை அருகில் டீக்கடை ஒன்றும் இருந்தது. காலையும் மாலையும் டீக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கீழத்தெரு மக்கள் யாரும் அங்கு செல்வது இல்லை.

”எல்லாரும் வரனும்னுதான் கடைய வச்சேன். ஒங்க தெருவுலருந்து ஒருத்தரும் வர மாட்றீக… ஊருவிட்டு ஊருவந்து கடைய வச்ச நா, நட்டத்துலயா போறது. எனக்கு எல்லாரும்தாம்பா வேணும். ஒங்களுக்குனே தனியா கண்ணாடி கிளாசு குட வாங்கி வச்சுருக்கேன்பா..”டீக்கடை முத்துராமன் செட்டியார் சொன்னபோது ”எங்கள எதுக்குய்யா வம்புக்கு இழுக்குறீக” என்பதாக அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு போனார் மாணிக்கம்.

இரவுநேரத்தில் மேலப்பாலக்கட்டையில் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்தனர். பாலக்கட்டையின் கீழ் ஏராளமான கான்ஸ் பாக்கெட்டுகள் காலியாகி கிடந்தன. டீக்கடையில் டீ விற்பனையைவிட கான்ஸ் பொட்டலங்களின் விற்பனைதான் சூடு பிடித்திருந்தது.

ஊராட்சியில் வேலை பார்க்கும் சிலம்பனுக்கு இதைக் கூட்டிப் பெருக்குவதுதான் முதல் வேலையாக இருந்தது. பழையபடி பாலக்கட்டையில் அவரவர் பெயரைச் செதுக்கும் பணிகளும் மும்முரமாக இருந்தன.

மாலை நேரம், பாலக்கட்டையின் எதிரே இருந்த காட்டுப்பகுதியிலிருந்து ஆட்டுக்குட்டிகளை ஓட்டிக்கொண்டுவந்த முருகேசன் எதிர்பாராதவிதமாக முள்ளில் மிதிக்க காலில் குத்தி முறிந்துவிட்டது. உயிர் போகும் வலியாக இருந்தது.

“நாசமா போன முள்ளு, எழச்சவன் காலுலதான் குத்துமோ. இத்தன ஆடு வித்தும் ஆனாப்ல ஒரு செருப்பு வாங்க முடியல. சாணு ஏறுனா மொழம் வழுக்குது. வெடிச்சு கெடக்குற காலுல முள்ள எடுக்குறதுக்குள்ள மறு பொழுது வந்துரும்” தனக்குள் பேசிக்கொண்டே ஆடுகளை வீட்டுப்பக்கம் பத்திவிட்டுவிட்டு கீழத்தெரு பாலக்கட்டையில் வலது காலை தரையில் ஊன்றி அட்டணக்கால் போட்டவாறு இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த முள்புடுங்கியால் முள்ளை எடுக்க ஆரம்பித்தார்.

”இவனுகள இப்புடியே வளர விட்டோம் நம்மல ஊர்ல வைக்க மாட்டானுக. எவ்வளோ துணிச்ச. வேணும்னே மூக்கன் மயன் காலுமேல கால் போட்டு ஒக்காந்துகிட்டு இருக்கான். நம்மல பாக்காதது மாறி காட்டிக்கத்தான் அந்தப்பக்கமா திரும்பி ஒக்காந்துருக்கான். யார்யாரோ கட்சிக்காரனுக வந்துட்டுப் போகவும் குளுரு விட்டுப்போச்சு. இந்த எலவுக்குத்தான் அந்த நாள்ல இருந்து பாலம் கட்டாம போட்டது. நம்ம ஆளு எம்எல்ஏவா இருந்தும் ஒன்னும் புடுங்க முடியல. அட்டணக்கால் போட்ருக்க அந்தக் கால வெட்டுங்கடா…” பெரியதம்பி தனது மீசையை

தடவுக்கொண்டு சொல்ல ஒருவன் பாய்ந்து சென்று முருகேசனின் இடது காலை அரிவாளால் வெட்டினான்.

”சட்டை போடவே பயந்த நாய்களுக்கு நீலச் சட்டை ஒன்னுதான் கொறச்சலோ. முருகேசனின் சட்டையை கிழித்து எறிந்தான். வலியால் துடித்து கத்தினார் முருகேசன். எதுவும் தெரியாததைப்போல் டீக்கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வண்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தார் முத்துராமன் செட்டியார்.

அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு திசையாய் ஓடி மறைந்தனர். முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு கீழத்தெரு மக்கள் ஓடி வந்தனர்.

 

”நம்மல கொட்டுறதே இவனுகளுக்கு வேலயாப் போச்சு. இதுக்கு ஒரு முடிவு கட்டனும் சித்தப்பா. ஓம்புட்டு வேட்டிய அவுரு…” வெட்டப்பட்ட காலை இரத்தம் வராமல் வேட்டியால் இறுக்கிக் கட்டினான் வன்னியரசு. ஒருவர் டீவிஎஸ் பிப்டி வண்டியை ஓட்ட வன்னியரசு முருகேசனை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியெங்கும் இரத்தம் நிற்காமல் சொட்டுச் சொட்டாய் சிந்தியது.

நூற்று நாற்பத்துநான்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விடிற்காலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வட்டாட்சியரும் மாவட்ட ஆட்சியரும் வருவதாக இருந்தது. ஒருசிலரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். சிலர் தலைமறைவாக இருந்தனர்.

சாமக்கோழி கூவத் தொடங்கியது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு காரிருள் ஊரையே போர்த்திக்கொண்டு இருந்தது. மேலத்தெருவில் இருந்த வைக்கோல் போர்கள் ஆங்காங்கே கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. மேலத்தெரு மக்கள் வெளியில் ஓடி வந்து அலறிக்கொண்டு இருந்தனர். எந்தச் சலனமும் இல்லாமல் கீழத்தெரு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது.

————*****———–

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *