கதைகள்

“டாலர்” …. சிறுகதை….. 26 ….. அண்டனூர் சுரா.

“ நீங்கள் வைதேகி?”

“ஆம், நான் வைதேகி”

“உங்கள் தகப்பனார் பெயர் மருதமுத்து. விவசாயக் குடும்பம். இருப்பிட முகவரி- கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு. தென்இந்தியா”

“ஆம், சரி”

“வாழ்த்துகள் “

“வாழ்த்துகளுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”

“முதல் மற்றும் இரண்டாம் நேர்முகத் தேர்வு சுற்றுகளில் தேர்வாகி மூன்றாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்”

“ அதற்காக உங்களுக்கும் நிறுவனத்தார்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

“முதல் சுற்றில் கலந்து கொண்ட ஆயிரம் பொறியாளர்களில் ஐம்பது பேர் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களிலிருந்து மூன்றாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டவர்கள் பத்து பேர் மட்டுமே. அப்பத்து பேரில் நீங்களும் ஒருவர்”

“நன்றி, நன்றி”

“இன்னொரு தகவலையும் இந்நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்”

“ஆம், சொல்லுங்கள்”

“முதல் இரு சுற்று அளவிலான நேர்முகத் தேர்வில் ஆங்கிலப் புலமை, நிர்வாகம் தொடர்பான கேள்விகள், துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதில் சொன்னதன் அடிப்படையில் நீங்கள் இரண்டாமிடத்தில் இருக்கிறீர்கள்”

“அப்படியா! நன்றி” .

“இத்தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?”

“பெருமையாகக் கருதுகிறேன்”

“இச்சுற்று உங்களின் கடைசி சுற்றாக இருக்கலாம். ஒருவேளை இச்சுற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மன நிறைவு தரும்படியாக உங்களது பதில் இருந்தால் அடுத்தச் சுற்றுக்கு அழைக்கப்படுவீர்கள்”

“முன்னறிவுக்கு நன்றி”

“அடுத்தச் சுற்றில் மூன்று கேள்விகள் கேட்கப்படும். அக்கேள்விகளுக்கு அப்பொழுதோ அல்லது இருபத்து நான்கு மணி நேரம் கழித்தோ உங்களது பதிலைச் சொல்லலாம். உங்கள் பதில் எங்கள் நிர்வாகத்தைத் திருப்தி படுத்தினால் அன்றைய தினமே உங்களுக்கான பணி நியமன ஆணை இணையம் வழியில் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கான அனுமதி சீட்டு மற்றும் பயணத்தொகையும் அனுப்பி வைக்கப்டும்…”

“இது எனக்கொரு வாய்ப்பு. அடுத்தச் சுற்றில் தேர்வு பெற்று உறுதியாக பணி நியமன ஆணை பெறுவேன்”

“எங்கள் நிறுவனத்தின் விருப்பமும் அதுதான்”

“உங்கள் விருப்பத்தினை நான் நிவர்த்தி செய்வேன்….”

“வாழ்த்துகள், நீங்கள் பள்ளி அளவிலான படிப்பைத் தாய்மொழி வழிக் கல்வியில் படித்திருக்கிறீர்கள். உயர்க்கல்வியை எங்கள் மொழியில் முடித்திருக்கிறீர்கள். மேனிலைக் கல்வியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற நீங்கள் பொறியியலில் முதலிடம் பெற்றிருக்கிறீர்கள். அதற்காகவும் எங்கள் நிறுவனம் உங்களை வாழ்த்துகிறது”

“நன்றி”

“இப்பொழுது உங்களுக்கான முதல் கேள்விக்கு வருகிறேன். உங்கள் நாட்டில் பள்ளிக் கல்வியை ஆங்கில வழியில் படித்தப் பலர் பொறியியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் கற்ற நீங்கள் ஒரே முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறீர்கள். இது எப்படி உங்களால் முடிந்தது?”

“நான் என் குடும்பச் சூழ்நிலையை நினைத்துப் படித்தேன். தேர்ச்சிப் பெற்றேன்”

“அப்படியானால், நீங்கள் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?”

“இல்லை, என் குடும்பத்தார்கள் என் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கையை நினைவாக்கும் பொருட்டு கடினமாக உழைத்தேன் எனச் சொல்ல வருகிறேன்”

“ உங்களது பதில் இதற்கு முன் யாரும் சொல்லாத மாறுபட்டப் பதிலாக இருக்கிறது”

“நன்றி”

“நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பொறியாளராக பணியமர்த்தப்பட்டால் உங்கள் உழைப்பை யாருக்காக அர்ப்பணிப்பு செய்வீர்கள்?”

“யாருக்காக, என்கிற சொல்லிற்குள் யார் யாரை கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது”

“உங்கள் குடும்பம். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பம். உங்களைப் போல பலருக்கும் எனக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் முதலாளியின் குடும்பம். இவற்றுக்குள் உங்கள் பதில் இருக்கிறதா?”

“இதற்கு வெளியிலிருந்து ஒரு பதிலைச் சொல்ல முடியும் என நினைக்கிறேன்”

“ நீங்கள் நினைக்கும் பதிலைச் சொல்லலாம்”

“என் உழைப்பை எனக்கும் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு செய்ய நினைக்கிறேன்”

“ஏன்?”

“நான் ஒரு வேலையைத் திறம்பட முடித்தால்தான் எனக்கும் கீழ் பணியாற்றுபவர்கள் அதன் தொடர்ச்சியைச் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒரு நிறுவனம் வளர்வதற்கு இது ஒன்றே வழி என்று நினைக்கிறேன்”

“நன்று. அடுத்தக் கேள்வி. நீங்கள் படித்தது உங்கள் தேசத்தில். ஆனால் எங்கள் நாட்டில் வேலைத் தேடக் காரணம்?”

“உங்கள் நாட்டிலும் எங்கள் மக்கள் இருக்கிறார்களே”

“உங்கள் படிப்பு, நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண், இதை வைத்துப் பார்க்கையில் உங்களுக்கு உங்கள் நாட்டில் நல்ல வேலை கிடைத்திருக்க வேணும். ஆனால் கி்டைக்கவில்லையே ஏன்?”

“என்னைப் போன்ற திறமையானவர்களை வேலையில் அமர்த்தினால் திறமைக்கேற்ப சம்பளம் கொடுக்க வேணுமென என் நாட்டு முதலாளிகள் நினைத்திருக்கலாம்”

“அப்படியானால் எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கக் காரணம் அதிக சம்பளம். அப்படித்தானே?”

“அது காரணமல்ல. அதுவும் ஒரு காரணம்”

“உங்களை எம் நிறுவனம் தேர்வு செய்து திறமையை முழுமையாக அங்கீகரித்ததன் பிறகு நீங்கள் இதை விடவும் அதிகச் சம்பளம் தருவதாக அழைக்கும் நாட்டிற்கோ, நிறுவனத்திற்கோ செல்ல மாட்டேன் என உறுதிமொழி தர முடியுமா?”

“அதற்கான அவசியம் எனக்கு நேரிடாது. காரணம் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது நிறைய சம்பளம் அல்ல. உழைப்பிற்கேற்ற சம்பளம். அந்தச் சம்பளம் எனக்கு கிடைக்கையில் நான் ஏன் வேறு நாட்டு நிறுவனத்தில் வேலை தேட வேண்டும்?”

“எங்கள் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்குச் செல்ல மாட்டேன் என உங்களால் உறுதிமொழி தரமுடியுமா?”

“ஆம், தருகிறேன்”

“அடுத்தக் கட்ட கேள்விகளுக்கு போவோம். உங்களுடையத் தனித் திறமை என்ன?”

“நன்றாக படம் வரைவேன். கட்டுரை எழுதுவேன்…..”

“ஒரு பொறியாளர் ஓவியராக இருக்க வேணும். அவசியமும் கூட. ஆனால் கட்டுரையாளராக இருக்க வேண்டியதில்லை. என் கருத்தின் மீது உங்கள் கருத்து என்ன?”

“பொறியாளர்களுக்கு ஓவியத் திறமை இருக்க வேண்டியது அவசியம் எனக் கருதும் நீங்கள் கட்டுரையின் மீது ஏன் முரண்படுகிறீர்கள்?”

“நன்றாகக் கேட்டீர்கள். நீங்கள் எழுதும் கட்டுரை உங்களுக்குப் பேரும் புகழும் வாங்கித் தரலாம். ஆனால் அதேக் கட்டுரை எங்கள் தேசம் மற்றும் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை சீர்க்குலைக்கும் படியாகவும் இருந்துவிடக்கூடும் இல்லையா!”

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஒரு பொறியாளர் பொறியியல் தொடர்பான கட்டுரைகளை எழுதும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் வரப் போவதில்லை. பொறியியல் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எங்கள் நாட்டு பொருளாதாரம்தான் காரணம் என எழுதிவிடுவீர்களாயின் நீங்கள் எம் நிறுவனத்தின் வழியே நாட்டிற்கு அவப்பெயர் தேடி தருவதாக இருந்துவிடக்கூடும். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்”.

“உங்கள் தந்தையார் என்ன செய்கிறார்?”

“பேச்சாளர்…”

“உங்களது பதிலைப் புரிந்துகொள்ள முடியவில்லை”

“இலக்கிய விழாக்களில் பேசக்கூடியவர்”

“எங்களின் முதல் நிபந்தனை இனி அவர் எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாது”

“நான் உங்கள் நாட்டில் பணியாற்றுகிறேன். என் தந்தையார் எங்கள் ஊரில் இலக்கியம் பேசுகிறார். அவரால் எனக்கு என்ன பிரச்சனை வந்துவிடும்?”

“உங்கள் தந்தையார் இலக்கியம் பேசி பொது மக்களைக் கவரும் நபர் என்றால் அவரால் உங்கள் பணி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது”

“அவரால் என் பணி எப்படி பாதிப்படையும்?”

“உங்கள் தந்தையார் இலக்கியம் மட்டும் பேசினால் பரவாயில்லை. இலக்கியக் கூட்டத்தில் அரசியல் பேசப் போய் அதைப் பத்திரிக்கைகள் வேறொரு விதமாகத் திருத்தி எழுத, உங்கள் தந்தையார் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் இல்லையா?”

“என் தந்தையார் கம்பராமாயணம் பேசக் கூடியவர். அவர் பேச்சுக்கும் அரசியலுக்கும் ஒரு தொடர்பும் இருக்கப்போவதில்லை”

“கம்பராமாயணத்தில் அவர் பேசப் போவது கம்பரைப் பற்றி அல்ல. இராமனைப் பற்றி! இதற்கு மேலும் நான் விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்”

“ஆம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”

“வெளிப்படையாக சொல்வதாக இருந்தால் அவரது இலக்கியப் பேச்சால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என எங்கள் நிறுவனம் கருதுகிறது”

“உங்கள் பதில் உத்தேசமானது”

“இருக்கலாம், ஒரு வேளை அவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார் என வைத்துகொள்ளுங்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் இருந்துகொண்டு அவருக்காக கவலைப்பட வேண்டிவரும்! இதனால் உங்கள் பணி தொய்வடைந்து நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். இது பற்றி உங்களது கருத்து என்ன?”

“சரிதான், என் அப்பா இனி இலக்கியம் பேசமாட்டார்”

“அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கடிதம் பெற்றுத்தர வேணும்”

“அவசியம் தருகிறேன்”

“அடுத்து நீங்கள் பதிலளிக்கும் தோரணை, கேள்விகளுக்கிடையில் கேள்வி கேட்கும் தொனி இவற்றை வைத்துப் பார்க்கையில் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என நினைக்கத் தோன்றுகிறது. என் சந்தேகத்திற்கு உங்களது பதில்?”

“இக்கேள்விக்கும் என் பணிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?”

“இருக்கிறது, எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றுகையில் எதிர்பாராவிதமாக விபத்து நேரிடலாம்”

“என்ன சொல்கிறீர்கள்?”

“ஒரு வேளை என நான் சொன்னதை நீங்கள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும்”

“இம், சொல்லுங்கள்”

“அப்படியாக விபத்து நிகழ்ந்தால் உங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட்கள் கொடிப் பிடித்துப் போராட்டத்தில் குதித்து விடுவார்கள். இழப்பீடு கேட்பார்கள். இழப்பீடு கொடுப்பதைப் பற்றி எங்களுக்கு தயக்கமில்லை. உலகம் முழுமைக்குமான எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சரிய வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமன்று, எங்கள் தேசப் பிரமுகர்கள் உங்கள் தேசத்திற்கு வருகையில் கறுப்புக்கொடி காட்டுவீர்கள். இதனால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படலாம். இத்தனைக்கும் காரணம் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக இருப்பதுதான். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“அப்படியொரு நிகழ்வு ஒருபோதும் நடந்தேறாது”

“ஒரு வேளை நடந்தால்?”

“போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் என் மொத்தக் கவனமும் இருக்கும்”

“ஒரு வேளை நீங்கள் விபத்தில் இறந்து விடுகிறீர்கள்”

“…………….”

“பார்த்தீர்களா, உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்காகத்தான் நீங்கள் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடாது என்கிறேன்”

“நாங்கள் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்ல”

“நீங்கள் ஈழத்தமிழ் ஆதரவாளராக இருக்கக்கூடாது. ஏனென்று கேட்கலாம். நீங்கள் ஈழத்தமிழ் ஆதரவாளர் என்றால் எங்கள் நாட்டில் வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கம் காட்டுவீர்கள். அவர்கள் வைத்திருக்கும் சங்கங்களில் ஐக்கியமாவீர்கள். எங்கள் அரசு எடுக்கும் வெளியுறவு கொள்கை முடிவுகளில் தலையிடுவீர்கள். அதற்கு எதிராகப் போராடுவீர்கள்…..”

“ஆம், நான் ஈழத்தமிழ் ஆதரவாளர் அல்ல…”

“ஈழத்தமிழர் மட்டுமல்ல, எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாளராக இருக்கக் கூடாது”

“மாட்டேன்”

“நீங்கள் உங்கள் உறுப்புகளைத் தானம் செய்திருக்கக்கூடாது”

“அது எனது விருப்பம்”

“இருக்கலாம். உறுப்புகளை நீங்கள் தானம் செய்தால் நீங்கள் இறந்ததன் பிறகு உங்களைப் பதப்படுத்தி உடனடியாக உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிவரும். இதனால் கூடுதல் செலவாவது ஒரு பக்கமிருந்தாலும் சில சட்டப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது”

“நான் இது நாள் வரைக்கும் என் உறுப்புகளை தானம் செய்யவில்லை”

“நல்லது. இதைத்தான் எங்கள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இத்துடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்துடன் கையெழுத்திட வேண்டும்”

“என்ன ஒப்பந்தம்?”.

“ஒருவேளை நீங்கள் பணியின் போது இறந்தால் உங்கள் உடலை எங்கள் நாட்டில் எரியூட்டுக்கொள்ள அனுமதி வேண்டும்”

“உங்கள் கேள்வி என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது”

“இக்கேள்வியால் நீங்கள் பயப்பட அவசியமில்லை. உங்கள் உயிர்க்கான முழு பாதுகாப்பும் எங்கள் நிறுவனத்தைச் சார்ந்தது. ஒரு வேளை என்பதற்குள் இவ்வகை ஒப்பந்தம் தேவையாக இருக்கிறது”

“ஆம், கையெழுத்திடுகிறேன்”

“எங்கள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்தால் பத்து வருடங்களுக்கு நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது”

“என் எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம் தலையிடுகிறது”

“ஒருவேளை திருமணம் செய்துகொள்வீர்களாயின் எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது”

“உங்கள் அனுமதியுடன் இரண்டையும் செய்வேன்”

“உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி”

“நன்றி”

“இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கற்பு பற்றி பெரிய அளவில் பேசப்படுகிறது. கற்பு பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?”

“கேள்வி புரியவில்லை”

“சரி, முதலில் நான் எங்கள் நிறுவன செயல் திட்டத்தைச் சொல்கிறேன். அதிலிருந்து உங்களின் நிலைப்பாட்டை சொல்லுங்கள்?”

“ஆம், சொல்லுங்கள்”

“வருடத்திற்கொரு முறை நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் பொருட்டு சர்வதேச சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வோம். உங்கள் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கும் தானே?”

“ஆம், ஒத்துழைக்கும்”

“அவ்வாறு அழைத்துச் செல்கையில் தங்கும் இடவசதி கிடைக்காததன் பொருட்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ நீங்கள் ஓர் ஆண் நபருடன் தனியாக தங்கும் நிலை ஏற்படலாம். உங்கள் கற்புநெறி அதற்கு ஒத்துழைக்கும் தானே?”

“இக்கேள்விக்கானப் பதில் உங்களிடமிருந்து வரவில்லையே!. அடுத்ததொரு கேள்வி. எங்கள் நிறுவனத்திற்குள் அல்லது வெளிநாட்டுப் பணியின் போது ஓர் ஆணின் பாலியல் சீண்டலுக்கு நீங்கள் உள்ளாகலாம். எங்கள் நிறுவனத்திற்கு வருகை தரும் சிறப்பு விருந்துனர்களின் விருந்திற்கு நீங்கள் அழைக்கப்படலாம். அங்கு உங்கள் மனம் நோகும்படியான விரும்பத் தகாத சம்பவம் நடந்தேறலாம்.

இத்தகைய சம்பவம் நிகழ்வது அரிதினும் அரிதான ஒன்று. ஒரு வேளை அப்படியாக நிகழ்ந்தால் நிறுவனத் தலைமையிடத்தில் இழப்பீடு கோர உங்களுக்கு முழு அனுமதி உண்டு. ஆனால் எங்கள் மற்றும் உங்கள் நாட்டின் நீதிமன்றங்களில் வழக்கு தொடரக் கூடாது. இந்த நிபந்தனையின் மீது உங்கள் பதில் என்ன?”

“அடுத்தொரு முக்கியமான கேள்வி. கடைசி கேள்வியும் கூட. எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கப் பெறலாம். அப்படியாகக் கிடைக்கையில் உங்கள் வாக்கை நாங்கள் விரும்பும் கட்சிச் சின்னத்திற்கு அளித்து அனுப்பி வைக்கும் உரிமை எங்களுடையது. இந்த நிபந்தனையின் மீது உங்களது பதில் என்ன?”

“இச்சுற்று இத்துடன் முடிவிற்கு வருகிறது. கடைசியாகக் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் அடுத்தச் சுற்றுக்கான கேள்விகள். இக்கேள்விக்கானப் பதிலை நீங்கள் இப்பொழுதே சொல்லிப் பணி நியமன ஆணையைப் பெறலாம். அல்லது நாளை இதே நேரம் சரியாகப் பத்து மணிக்கு மெய்நிகர் வழியில் தொடர்பு கொண்டு பதில் தெரிவிக்கலாம். முதல் கேள்விக்கானப் பதில் “ ஆம் அல்லது பரவாயில்லை “ இவற்றில் ஒன்றாக இருப்பது நல்லது.

அடுத்தக் கேள்விக்கான பதில் “ஆம்….” என்றே இருக்க வேண்டும்.

கடைசி கேள்விக்கு “ ஆம்…” ஒன்றே பதிலாக இருக்க முடியும்”

“வைதேகி, கடைசியாக எங்கள் நிறுவனம் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் ஒரு செய்தி…”

“ஆம் சொல்லுங்கள்….”

“மீண்டுமொரு முறை எங்கள் நிறுவனம் உங்களுக்குத் தர விரும்பும் சம்பளத்தை நினைவூட்டுகிறேன். எங்கள் நிறுவனத்தில் பொறியாளராக நீங்கள் பணி நியமனம் பெறுகையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை, எட்டு மணி நேரம் வேலையுடன் கூடிய முதல் மாத அடிப்படைச் சம்பளம் முப்பதாயிரம் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் சொல்வதாக இருந்தால் அதை எழுபதால் பெருக்கிக்கொள்ளுங்கள்”…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *