கட்டுரைகள்

தமிழர் உரிமைக்காக உலகெங்கும் ஓங்கி ஒலித்த முன்னாள் யாழ் எம்.பி. வெற்றிவேலு யோகேஸ்வரன்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் இளைஞர்கள், மற்றும் பொது மக்களிடையே மிகவும் என்றும் பிரபலமாக இருந்தவர். ஜீலை 13 அவருடய நினைவு தினமாகும்)
“இன்று என் குரல் மட்டும் என்னுடையது. ஆனால் என் உடைகள் அனைத்தும் கடன் வாங்கப்பட்டவை. நான் அணிந்திருக்கும் வேட்டி திருகோணமலை உறுப்பினரின் பரிசு, மேலாடை பனியன் கடன் வாங்கப்பட்டது, அதன் கீழ் நான் அணிந்திருக்கும் உல்லாடை என் தந்தையினுடயது. எனவே, நான் ஆரம்பத்தில் சொன்னது போல் என் குரல் மட்டும் என்னுடையது என ஜூன் 9, 1981 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் ஆவேசமாக யாழ்ப்பாணத்திற்கான எம்.பி. திரு. வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்.
அரச வன்முறையாளர்களின் கொலையில் இருந்து தப்பிய ஒரு எம்பியின் கதையை இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டாக சர்வதேசத்திற்கு பறைசாற்றும் வண்ணம் “அரசின் தமிழ் இன சுத்திகரிப்பு” எனும் தலைப்பில்வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் தமிழரின்
உரிமை போராட்டத்தை வெளிப்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற
முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் இளைஞர்கள், மற்றும் பொது மக்களிடையே மிகவும் என்றும் பிரபலமாக இருந்தவர். ஜீலை 13 அவருடய நினைவு தினமாகும்.
மறைந்த வெற்றிவேலு யோகேஸ்வரன் இனிமையான நடத்தை மற்றும் மகிழ்ச்சியான முகபாவனை கொண்ட அன்பானவர். யோகேஸ்வரன் அவர்கள் ஜுலை 1977 முதல் ஜூலை 1983 வரை யாழ்ப்பாணத்தின் வாக்காளர்களை பாராளமன்றில் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த புகழ் அவருக்கு ஜனநாயக அரசியலில், தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.
பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் யோகேஸ்வரன் பற்றி குறிப்பிடுகையில், அவர் வழுக்கையாக இருந்தாலும் அவர் மிகவும் புத்திசாலியும் மிகவும் அழகானவர், யோகேஸ்வரன் தனது அழகிய தோற்றத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டார். எப்போதும் ஒரு கவர்ச்சியான புன்னகையுடன் இருப்பார். அவர் அடிப்படையில் நல்ல குணமும், மிகவும் இனிமையான சுபாவமும் கொண்டவர். அவர் ஒரு எழுச்சிமிக்க ஆளுமையுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்காக யோகேஸ்வரன் பல மனிதாபிமான செயற் திட்டங்களை ஊக்குவிப்பதில் தீவிரமாக இருந்த போதிலும் தமிழ் தேசியவாதத்தில் தான் தன்னை முழுமையாக ஈடுபட்டிருந்தார். தமிழ் மக்களுக்காக அவர் பல ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்கவும் பங்குபற்றவும் உதவினார். உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த போது ஹீத்ரோ விமான நிலையத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை இந்த விடயத்தில் முக்கியமான நிகழ்வாகும்
 
வெற்றிவேலு வாரிசு :
வெற்றிவேலு யோகேஸ்வரன்
(5 பெப்ரவரி 1934 – 13 ஜீலை 1989) இலங்கைத் தமிழ் தேசிய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்
அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மரியாதைக்குரிய மருத்துவ நிபுணர் டாக்டர் சண்முகம் அப்பாக்குட்டி வெற்றிவேலு மற்றும் திருமதி.பராசக்தி வெற்றிவேலு ஆகியோரின் மகனாவார்.
இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி, யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று சட்டம் பயின்றார். பிரித்தானியாவில் படித்த போது அவர் மாணவர்களுக்கான தேசிய ஒன்றியம், இனவொதுக்கலுக்கு எதிரான முன்னணி போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். வெளிநாட்டு இலங்கைத் தமிழர் முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளையின் தலைவராகவும் பணியாற்றினார்.
இலண்டனில் சட்டக் கல்வி :
சட்டக் கல்வியை முடித்து விட்டு நாடு திரும்பிய வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதனை தொடர்ந்து அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி,
பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினராக யாழ்ப்பாணத்தில் முழு நேர அரசியலுக்குத் திரும்பினார்.
யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாக செயற்படும் போது தமிழ் தேசியத்துக்காக உழைத்த கட்சி உறுப்பினராக அரசியலில் மூழ்கத் தொடங்கினார். அவரது மனைவி சரோஜினி வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து அவருக்கு நேரடியாக அரசியல் பணியில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்கு முழு உதவியாக இருந்தார். யாழ்ப்பாணத்தில் வசித்த யோகேஸ்வரன் முக்கியமாக யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல்களில் முக்கியமாக கவனம் செலுத்தினார்.
நிறவெறி எதிர்ப்பு இயக்கம் :
இங்கிலாந்தில் சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோதும் வெற்றிவேலு யோகேஸ்வரன் இங்கிலாந்திலும் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் தத்துவஞானியான லார்ட் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஆகியோருடன் நெருக்கமாக நிறவெறி எதிர்ப்பு இயக்க அரசியலில் பணியாற்றினார்.
அணுவாயுதக் குறைப்பு மற்றும் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு ஆகிய இரண்டு விடயங்களிலும் அங்கு யோகேஸ்வரன் பெர்ட்ரான்ட் ரஸ்ஸலுடன் அரசியல் பிரச்சார அமைப்பில் பங்கேற்றார். அத்துடன் மறைந்த யோகேஸ்வரன் லண்டனில் உள்ள தென்னாப்பிரிக்க கறுப்பின ஆர்வலர்களுடன் சகோதரத்துவமும் கொண்டிருந்தார். அவர் நிறவெறி எதிர்ப்பு இயக்க செயறரபாடுகளிலும் ஈடுபட்டார்என்று அறியப்பட்டது. யோகேஸ்வரன் லண்டனில் உள்ள ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னார்வத் தொண்டராகவும் பணியாற்றினார். மற்றும் ஆலிவர் டாம்போவுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவரும் ஆவார்.
1977 நாடாளுமன்றத் தேர்தல் :
இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 ஜீலை 21 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் தேசிய அரசுப் பேரவைக்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. அவரது பொருளாதாரக் கொள்கை நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டிருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை. அரசியலமைப்பின் படி 1975 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி நாடாளுமன்ரத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் சிங்களத் தேசியவாதம் மிகப் பலமாகத் தலை தூக்கியதில் தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக நாட்டின் வட கிழக்கு மாகாணத்தில் அரசியல் குழப்ப நிலை தோன்றியது.
நாடு முழுவதும் அவசரகால நிலையை அரசு கொண்டு வந்தது. ஐக்கிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின.
அதே வேளை, 1970 தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத் தீர்வு காணப்படும் என அது உறுதி அளித்தது. திறந்த பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு கிலோகிராம் அரிசியை விட மேலதிகமாக எட்டு இறாத்தல் மாவும் இலவசமாக வழங்க அது உறுதி அளித்தது.
அன்றைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்து தமிழர் பிரதேசங்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கை அக்கால கட்டத்தில் முன்வைத்தனர்.
எதிர்க்கட்சியாக கூட்டணி :
இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதே வேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சி ஒன்று இரண்டாவது அதிகப்படியான 18 இடங்களைக் கைப்பற்றி 1977 நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர ஆதரவாளரான யோகேஸ்வரன் கட்சியின் செயல் குழுவில் இணைந்து இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டார். யாழ்ப்பாணத் தொகுதியில் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6,291 அதிகப்படியான வாக்குகளால் தமிழ் காங்கிரசில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட யோகேஸ்வரன் 9291 வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
வாக்கு முடிவுகள் பின்வருமாறு :
1. வி.யோகேஸ்வரன்- 16,251
2. குமார் பொன்னம்பலம் – 6,960
3. ஏஎல் ஆபிரகாம்-4,349
4. சீ.மாட்டின் -900
5. ஏ.ஜி.ராஜசூரியர்-164
6. அ.தர்மலிங்கம் – 77.
இத்தேர்தலில் யோகேஸ்வரன் அமோகமாக வெற்றி பெற்றார். பாரம்பரியமாக துரையப்பாவுக்கு ஆதரவாக இருந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் இம்முறை யோகேஸ்வரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் குருநகரில் மார்ட்டின் போட்டியிட்ட போதிலும் இம்மக்களும் யோகேஸ்வரனுக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தமிழ், முஸ்லிம், சிங்களம் இனங்களைக் கொண்டதும், இத்தொகுதி கிறிஸ்தவ பெரும்பான்மையுடன் (43%) அடுத்த இடத்தில் இந்துக்கள் (41%) இருந்தனர். இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் 13% ஆகவும் பௌத்தர்கள் 3%. ஆக வடக்கின் மாவட்டத் தலைநகராக இருந்ததால் யாழ்ப்பாணம் தொகுதி மிகவும் மதிப்புமிக்க, கவனுத்தைப் பெற்ற வாக்காளர் தொகுதியாக இருந்தது.
1981 யாழ்ப்பாண நகரமும்,பொது நூலகம் எரிப்பும் :
1981 ஜீனில் யாழ்ப்பாண நகரம் எரிப்பும், பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய கறை படிந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள அரச வன்முறைக் குழுவொன்றால் நடந்தது.
1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் மூல கர்த்தாக்களாக இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் உரம் ஊட்டியது.
1981 சூன் 1 இல் சிங்களக் காவல்துறை, மற்றும் கும்பலால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது யோகேஸ்வரனின் இருப்பிடமும் எரிக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் பின் சுவரால் குதித்து வெளியேறி உயிர் தப்பினர்.
1983 களில் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு ஜீலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்தார்கள்.
ஈடு செய்யப்பட முடியாத இழப்பு:
தொடர்ந்து மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் யோகேஸ்வரன் யாழ்ப்பாணத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார். அரச அடக்குமுறையிலிருந்து உயிர் தப்ப
யோகேஸ்வரனும் அவரது மனைவியும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்று சென்னையில் வாழ்ந்து வந்தனர்.
தமிழ்த் தேசிய உரிமைகளுக்காக நீண்ட காலம் உழைத்த அவர், இந்திய இலங்கை ஒப்பந்த்தின் பின்னர் நாடு திரும்பினார். முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் இளைஞர்கள், மற்றும் பொது மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர். அக்காலத்தில் யாழ் எம்.பியாக தமிழ் இளைஞர்களின் பலத்த ஆதரவை யோகேஸ்வரன் பெற்றிருந்தார்.
தமிழர்களின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த யோகேஸ்வரன் ஜூன் 9, 1981 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் கூறியது போல்,
இந்த அழகிய தீவின் இரு தேசங்களும் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு. ஒரு தேசம் கசப்பாக கற்கவில்லை, மற்றொன்று கசப்பாக கற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தமட்டில், தமிழ்த் தேசம் சரியாகப் பாடம் கற்றிருக்கிறது என்பதை அரச வன்முறையில் இருந்து காணக் கூடியதாக உள்ளது. இன்று நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன். எனக்குள் துடிக்கும் இதயத்தைத் தவிர எனக்கென்று சொந்தமாக எந்த உடைமைகள் எதுவும் இல்லை.
இந்த கொடுங்கோன்மை, இந்த கொடுங்கோல் ஆட்சியிலிருந்து என் மக்களை விடுவிக்க நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன், எப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் அதை பற்றி எப்போதும் விட இப்போது மிக்க உறுதியாக இருக்கிறேன். துன்பியல் நிகழ்வாக 1989 ஜீலை 13 இல் அவரை இழந்த துயர நிகழ்வானது ஈழத் தமிழர்க்கு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *