கட்டுரைகள்

பிறந்த நாள்!…. எஸ்.ஜெகதீசன். … கனடா.

உலகெங்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குடும்பம் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ குதுகலமூட்டுவது அன்றாட வழமை என்றாகிவிட்ட ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

தினந்தோறும் சராசரியாக 18 மில்லியன் மக்கள் உலகமெங்கும் பிறந்த நாளை அனுசரிக்கின்றனர்.

ஆனால் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியானவையாக அவை இருப்பதில்லை.

பிறந்த நாள். இன்று பிறந்த நாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற பாடல் வரிகளை தமது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியின் முன்னிசையாக உலகமெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகளில் அனேகமானவை வைத்துள்ளன என்று சொல்லும் அளவிற்கு 1966 ம் ஆண்டு வெளிவந்த நாம் மூவர் என்ற திரைப்படத்துக்காக கவிஞர் வாலி எழுதி எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்து ரி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் பிரபலம் பெற்றுள்ளது.

உற்றமும் சுற்றமும் உவகையுடன் வாழ்த்துவதை உலக ரீதியாக உற்சாக மூட்டுகின்றன ஊடகங்கள்!

நம்மால் மற்றவர்களும் மகிழ வேண்டும் மற்றவர்களால் நாமும் மகிழ வேண்டும் என்பதே பிறந்த நாள் சொல்லி வைக்கும் உன்னதமான தத்துவம்!

ஒருவரின் தனித்துவ அடையாளமான பிறந்த நாளில் நேரிலோ, வாழ்த்து மடல்கள் மூலமாகவோ அல்லது பொது வெளி ஊடகங்கள் ஊடாகவோ வாழ்த்துவதும், பரிசுப் பொருட்களை வழங்குவதும், விருந்து வைப்பதும் உலகின் பாரம்பரியம்!

அவற்றுள்ளும் முதலாவது, பதினாறாவது, இருபத்தியோராவது, இருபத்தைந்தாவது, ஐம்பதாவது, அறுபதாவது, எழுபத்தைந்தாவது, எண்பதாவது, நூறாவது பிறந்த நாட்கள் கூடுதல் கவனமீர்ப்பவை!

மகிழ்வின் உறைவிடமாகவோ, மனசாட்சியின் குரலாகவோ, அறத்தின் நிழலாகவோ, இதயத்தின் துடிப்பாகவோ, தேடலுக்கான தூண்டுகோலாகவோ, நகைக்க வைக்கும் நண்பனாகவோ பிறந்த நாட்கள் பெரிதும் அமைகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள்!

வயது அதிகரித்துக் கொண்டே போவதை விரும்பாதது அல்லது வயதை மறக்க விரும்புவது மனித மனம்.

எனவேதான் பிறந்த நாள் வாழ்த்து என்றே ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறந்தது போல் மனம் மகிழ்வூட்டப்படுகின்றது.

பிறந்த ஆண்டு நிறைவு வாழ்த்து எனச் சொன்னாலும் அதனை சொற்பகட்டு ஆக்கி விடுவதும் மனித மனம்தான்!

கணனி மயப்படுத்தப்பட்ட நவீன யுகத்தில் பொதுவாக பல அரசாங்க அல்லது தனியார் நிறுவனங்கள் தம்மிடமுள்ள பிரத்தியேக கோப்புகளை திறக்கும் கடவுட் சொல்லாக சம்பந்தப்பட்டவருடைய பிறந்த திகதியையே வைத்துள்ளன.

இது அவர்களின் பாவனைக்கு இலகுவானது.

ஆனால் தனிப்பட்டவர்கள் தமது சொந்தத் தேவைக்காகத் தமது பிறந்த திகதியை கடவுட் சொல்லாக வைத்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல.

பரவலாக பிறந்த திகதியே கடைப்பிடிக்கப்படினும் பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதும் கண் கூடு.

ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் சஞ்சரிக்கும் இடமே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகின்றது. அதுவே வாழ்வை நிர்ணயிக்கின்றது என்ற நம்பிக்கை அதற்கு முக்கியத்துவமளிப்போரிடம் உண்டு.

அசையும் அசையா சொத்துகள் வாங்குதல், பத்திரங்களைப் பதிவு செய்தல், வீடு குடி புகுதல், புதியன பயில ஆரம்பித்தல், பதவி ஏற்றல், அன்னதானம், யாகம், தர்ம காரியங்கள் போன்றவற்றை எந்த மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரத்திலும் செய்வது உகந்தது எனக் கருதும் அவர்கள் திருமணம், முதலிரவு, மருத்து உட்கொள்ள ஆரம்பித்தல், காது குத்துதல், முடி இறக்குதல், போன்றவற்றிக்கு எந்த மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரமும் உகந்தது அல்ல என்ற அபிப்பிராயத்தையும் கொண்டிருப்பர்.

அநாதியில் எகிப்தியரிடம் தேன் கலந்தும், கிரேக்கரிடம் பாற்கட்டி கலந்தும், ரோமானியரிடம் பழங்கள், வித்துகள், முந்திரிகை வற்றல் போன்றன கலந்தும் கேக் தயாரிக்கும் வழக்கம் 13ம் நூற்றாண்டிலேயே இருந்திருப்பினும் பிறந்த நாட்களுக்கென கேக் தயாரிக்கும் பழக்கம் 17 ம் நூற்றாண்டு வரை எங்குமே தோன்றியிருக்கவில்லை.

எகிப்தின் 18ம் வம்ச ஆட்சியாளர்களான பாரோக்கள் தம்மைக் கடவுள் என முடி சூட்டிக் கொண்ட வேளையுடனேதான் பிறந்த நாள் கொண்டாடங்கள் ஆரம்பமாகின.

அப்பொழுதும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவர்களது மனிதப் பிறப்புடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.

மாறாக அவர்கள் தம்மைக் கடவுள் ஆக்கிக் கொண்ட பிறப்பையே குறித்தன.

பிறந்த தினத்தில் கேக் வெட்டும் கலாசாரம் ஜேர்மனியில் ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது. பாலகன் ஜேசுவை உருவகிப்பனவையாகவே அக் காலத்தில் கேக்குகள் பொதுவாக உருவாக்கப்பட்டன.

தொடக்கத்தில் கேக் கரடுமுரடானதாகவே தாயாரிக்கப்பட்டிருப்பினும் காலப்போக்கில் 18 ம் நூற்றாண்டில் அவை மென்மையானவையாகவும் இனிமையானவையாகவும் மாற்றமடைந்தன.

அது வரை பெரியவர்களால் மட்டுமே கொண்டாடப்பட்ட பிறந்த நாட்கள் அதன் பின்பே சிறாருக்கும் உரியது என்றாகியது.

கிரேக்கரின் நிலா தெய்வமான ஆர்டெமிசை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக கேக்குகள் வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டன.

பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் அமைந்த அவற்றில் ஆர்டெமிசிக்கு வணக்கம் செலுத்தும் முகமாக மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டன.

இது வரை வாழ்ந்த வாழ்வின் வயதை பிரதிபலிக்க ஒவ்வொன்றும், அடுத்து வரும் ஒரு வருடத்திற்கென ஒன்றுமாக மேலதிக மெழுகுவர்த்திகள் காலப்போக்கில் செருகப்பெற்றன.

வயதை வெளிக்காட்ட விரும்பாதவர்களின் பிறந்த நாள் கேக்கில் மூன்று மெழுகுதிரிகள் சுடர்வதை இன்றும் காணலாம். அவை கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக் காலங்களையும் குறிப்பனவாக அடையாளமிடுகின்றன.

கேக் மீதுள்ள மெழுகுவர்த்திகளின் ஒளி், நிலவின் பிரகாசத்துக்கு இணையானதாகவும் வெளி வரும் புகை, பிரார்த்தனையையும் வாழ்த்தையும் வானத்தில் இருக்கும் கடவுளிடம் எடுத்துச் செல்லும் என்பதாகவும் நம்பினர் முன்னோர்.

ஒரு வேண்டுதலை, ஒரு எதிர்பார்ப்பை, ஒரு விருப்பத்தை மனதில் நினைத்த வண்ணம் மெழுகுதிரியை ஊதி அணைக்கும் போது வெளி வரும் அந்தக் காற்றும் புகையுடன் கலந்து கடவுளுடன் சேருமாம். ஆயினும் ஒரே எத்தனிப்பில் சகல மெழுகுதிரிகளையும் அணைத்தல் வேண்டும் என்று ஒரு கணிப்பும் அல்லது நிபந்தனையும் உண்டு.

1893 ம் ஆண்டு அமெரிக்க சகோதரிகளான மில்ரெட் ஹில்லும், பார்ட்டி ஹில்லும் சேர்ந்து மழலையர் பாடசாலைகளுக்கென எழுதிய ‘குட்

மோர்னிங் டு யூ’ பாடல் வரிகளே பின்னர் பார்ட்டி ஹில்லினால் நகாசு வேலை செய்யப்பெற்று ‘ஹப்பி பர்த்டே டு யூ’ என பிறந்த நாளில் கேக் வெட்டப்பட முன்பாக அகிலமெங்கும் இன்று வரை ஒலிக்கும் பாடலாகியது.

ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாளன்று, நட்சத்திர அதிபதி சந்திரனில் ஆவாகனம் ஆகியிருப்பதால் அருகிலுள்ள சிவன் கோவில்களின் நவக்கிரக சன்னிதானத்தில் சந்திரனுக்கு அபிஷேகிப்பவர்களும் நேபாளம் இந்தியா இலங்கை மலேஷியா பாலி ஆகிய நாடுகளில் அனேகர்.

தமிழ் நாட்டின் திருவிடைமருதூர் சிவன் கோயில் மற்றும் திருவெற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் ஆகிய இரு கோயில்களிலும் உள்ள 27 நட்சத்திர லிங்கங்களில் தமது ஜென்ம நட்சத்திர லிங்கத்துக்கு அபிஷேகம் செய்பவர்களும் அதிகரிக்கின்றனர்.

அவர்களுக்குள்ளும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் உள்ள குளிகை காலம் அல்லது குரு ஓரை அல்லது சுக்கிர ஓரை வரும் வேளை ஆராதனை செய்வோர் சற்றே விஷயம் அறிந்தோர்.

தமிழர்களைப் போலவே சீனரும் தென் கொரியர்களும் அறுபதாவது வயதை அமர்க்களப்படுத்துவர்.

பிறந்த திகதியும் வயதும் ஒரே மாதிரியாக அமையும் வருடம் பொன் வருடம் என்று அழைக்கப்படும்.

உலகம் பூராவும் பிறந்த நாளுக்குரியவரே பார்ட்டி வைப்பர் எனினும் அமெரிக்காவில் ஏனையோரே பிறந்த நாளுக்குரியவருக்கு பார்ட்டி வைப்பது சம்பிரதாயம்.

பிறந்த நாள் பரிசுப் பொதிகளை வழங்கியவர் முன்பாகவே திறத்தல் ஐரோப்பிய மரபு.

பிறந்த நாளுக்குரியவரின் மூக்கு முழுவதும் வெண்ணெயை அப்பிவிடுவதில் மகிழ்வுறும் கனடாவின் அத்திலாந்திக் கரையோர பகுதியில் பதுங்கியிருந்து பாயும் உறவும் நட்பும்.

வெவ்வேறு நாட்களில் பிறந்த நாளை கொண்டாடாது ஏகோபித்து எல்லோரும் புது வருட தினத்தன்று கொண்டாடுவது வியட்நாமியரின் வழக்கம்.

ஒரு வருடப் பூர்த்தியே ஒரு வயது என்றில்லாமல் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ஒரு வயது என்று கணிக்கும் சீனாவில் பிறந்தவர் தனது பிறந்த நாளன்று ஒரு கோப்பை மிக நீண்ட நூடுல்சை வாய் முட்ட முட்ட தின்றாக வேண்டும்.

ஒவ்வொரு வயதுக்கும் ஒருதரம் என காதைப் பிடித்து பலமாக இழுப்பது இத்தாலி ஆர்ஜன்டீனா ஹங்கேரி போன்ற நாடுகளில் சர்வ சாதாரணம் எனின் அமெரிக்காவிலோ இன்னும் கொஞ்சம் மேலே போய் வயதுக்

கணக்குக்கேற்ப ஒரு நுள்ளு அல்லது ஒரு குத்து பிறந்த நாளன்று நிச்சயம்.

அயர்லாந்தில் தலை கீழாகப் பிடிக்கப்படும் பிறந்த நாளுக்குரியவர் தனது வயதுக் கேற்ப இடுப்பால் தரை தொட்டு நிமிர வேண்டும்.

ஜமேக்காவில் பிறந்த நாளுக்குரியவர் மீது எதிர்பாரத சமயம் பார்த்து நண்பர்களும் விருந்தினர்களும் மாவை கரைத்து மேனி முழுவதும் ஊற்றுவார்கள. நன்கு காயும் வரை காத்திருந்து விட்டு மீண்டும் மீண்டும் மாவால் தோய வைப்பார்கள்.

பிரேஸிலிலும் இதே நடைமுறை இருப்பினும் இடைக்கிடை முட்டையும் வீசப்படும். பிரேஸிலில் பிறந்த நாளுக்குரியவருக்கு வழங்கப்படும் முதலாவது கேக் துண்டை அவர் உண்ண முடியாது. தமக்கு மிக முக்கியமான ஒருவருக்கு அதனை ஊட்ட வேண்டும்.

எந்த நாளில் பிறந்தாரோ அந்த நாளின் பெயரையும் அத்துடன் பெண் எனின் தாயின் தாயுடைய பெயரையும் ஆண் எனின் தந்தையின் தகப்பனின் பெயரையும் இணைத்துக் கொள்வதும் முதலாவது பிறந்த நாளன்று ஞானஸ்தான பெயரை சேர்த்துக் கொள்வதும் சில ஆபிரிக்க நாடுகளின் நடைமுறை.

அதனால் உண்மையான பிறந்த நாளைத் தவிர்த்து ஞானஸ்தான தினத்தையே பிறந்த நாளாக கருதுவோரும் அங்கு உளர்.

உங்களின் பெயர் எழுதப்பட்ட பை (Pie) என்ற சிற்றுண்டியுடன் நீங்கள் காணப்பட்டால் உங்கள் பிறந்த நாளில் நீங்கள் ரஷ்யாவில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

பிறந்த நாள் கொண்டாடுபவரை சூழ்ந்து நண்பர்களும் உறவினர்களும் தேசிய கொடியுடன் காணப்படுவது டென்மார்க் நாட்டில்.

ஜேர்மனியில் நகர சபா மண்டப படிகள் மீது நண்பர்கள் குப்பைகள் கஞ்சல்களை வீச வீச முப்பது வயதடைந்த பிறந்த நாளுக்குரியவர் கூட்டித் துடைப்பது ஒரு பெண்ணை மோகிப்பது வரை நீளும்.

பென்னாம் பெரிய காகித பொம்மைக்குள் ( Pinata) இனிப்புகள் சொக்கலேட் போன்றவற்றால் நிரப்பி வீட்டில் கட்டித் தொங்க விடுவதும் பிறந்த நாளுக்குரியவர் தனக்கு விருப்பமான நேரமெல்லாம் அந்தப் பொம்மையை தடியால் அடித்துக்கிழித்து கீழே சிந்துவதைச் சுவைப்பதும் மெக்ஸிக்கன் கலாசாரம்.

அவுஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான வர்ண வர்ண இனிப்புகளால் தூவப்பட்ட பாண் (Fairy Bread) பாரம்பரியமும் பிரசித்தமும்.

நியூசிலாந்தில் பிறந்த நாளுக்குரியவர் கேக் மீது உள்ள மெழுகுதிரியை ஊதி அணைத்ததும் வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப வந்திருப்பவர்கள் கைதட்ட வேண்டும்.

நாணய குற்றி ஒன்றை கேக்கினுள் புதைத்து வைத்து அதை முதலாவது துண்டில் எடுக்கும் பிறந்த நாளுக்குரியவருக்கு அதிஷ்டம் சென்றடையும் என்ற நம்பிக்கை அநாதியில் பிரிட்டிஷ் காரரிடம் இருந்தது.

ஜேர்மனி கிறீஸ் போன்ற நாடுகளில் பிறந்த நாளன்றே வாழ்த்த வேண்டும் அல்லது பார்ட்டி வைக்க வேண்டும். அதற்கு முன்னோ பின்னோ கூடவே கூடாது.

ஆனால் ஜேர்மனியின் அயலில் உள்ள அஸ்திரியா போன்ற நாடுகளில் பிறந்த நாளுக்கு முந்திய தினம் கேக் வெட்டப்படும். வாழ்த்தப்படும்.

விருப்பமின்மை, வசதியின்மை, மதம் அல்லது கலாசாரம் சார்ந்த நம்பிக்கை, என பல காரணங்களால் பிறந்த நாளைக் கொண்டாடாதவர்கள் பலர்.

அவர்கள் மனதுள் வெதும்புவார்களோ பொருமுவார்களோ? யாரறிவர்!

பூட்டான் நாட்டில் பிறந்த நாள் கொண்டாடப்படுவது கிடையாது.

மற்றவர்களுக்கு முன்னால் பரிசுப் பொதியை மலேஷியாவில் திறப்பது கிடையாது.

கை கடிகாரத்தை அல்லது மணிக்கூட்டை சீனருக்கு பிறந்த நாளில் அன்பளிக்க வேண்டாம். அது அவர்களுக்குப் பிடிக்காது.

சுவீட் 16 என்ற வார்த்தைப் பிரயோகம் 16 வயதை அடைந்த பெண்களுக்கு மட்டுமே உரியது. ஆண்களுக்கல்ல.

ஒரு தாய்க்கு ஒரே வருடத்தில் இரு பிள்ளைகள் பிறப்பின் அவர்களை ஐரிஷ் இரட்டையர்கள் என்று அழைக்கும் வழக்கம் முன்பு இருந்தது.

21 வயதை அடைந்தோரின் நிஜப் பற்கள் அகற்றப்பட்டு கட்டுப்பற்கள் பொருத்தப்பட்ட விநோத கலாசாரமும் 19 ம் நூற்றாண்டில் சில இடங்களில் இருந்தது.

1996 ம் ஆண்டு 50 வயதை அடைந்த புறுனேயின் சுல்தானின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குதான் இது வரையில் ஆகக் கூடிய பணமாக 27.2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவளிக்கப்பட்டது.

2020 ம் ஆண்டு கேரளாவில் 17 388 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டதே உலகின் மிகப் பெரிய பிறந்த நாள் கேக் ஆகும்.

பீட்டில்ஸ் இசைக் குழுவின் பிரதம பாடகர் போல் மக்கார்டினியின் பிறப்புச் சான்றிதழ் உலகின் ஆகக் கூடிய விலையாக 84 146 அமெரிக்க டாலருக்கு 1977 ம் ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்டது.

ஜேர்மனியை சேர்ந்த ஸ்வென் ஹேக்மியர் என்பவர் நேர வித்தியாசத்தை சாதகமாக்கி தனது பிறந்த நாளை நியூஸிலாந்து அவுஸ்திரேலியா அமெரிக்காவின் ஹவாய் ஆகிய மூன்று நாடுகளில் 46 மணி நேரத்தில்

கொண்டாடி உலகில் மிக நீண்ட நேரம் பிறந்த நாள் ஒன்றை கொண்டாடியவர் என்ற சாதனைக்குரியவரானார்.

இந்து சாஸ்திரங்களின்படி நாள் சூரிய உதயத்துடன் தொடங்குகிறது எனும் இந்திய வேதங்கள் ஜோதிட சாஸ்திரங்கள் நள்ளிரவு 12.00 மணிக்கு பிறந்தநாளை வாழ்த்துவதும் கொண்டாடுவதும் கேக் வெட்டுவதும் தவறு என அறிவுறுத்துகின்றன. சூரிய உதயத்திற்குப் பிறகுதான் பிறந்த நாளை வாழ்த்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இருக்கும் நேரம் நிஷித் காலம் (பொருந்தாக் காலம்) எனவும் அவ் வேளையில் எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகம் வலுவடைந்திருக்கும் எனவும் அவை எச்சரிக்கின்றன.

கேக் வெட்டுவதற்குப் பதிலாக வத்தகப்பழத்தை (தர்ப்பூசனியை) வெட்டுவதும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்காமல் அகல் விளக்கில் அல்லது குத்து விளக்கில் தீபத்தை ஏற்றுவதும் நாட்டுப்புற நம்பிக்கை.

உங்களது பிறந்த நாளுக்கு ஒருவருமே வாழ்த்தவில்லையா? ஒவ்வொருவராக அழைத்து “எனது பிறந்த நாள் வந்ததே! மறந்து விட்டாயா?” என்று சொல்லிப்பாருங்கள்!

“ ஓ!மை கோட்! துண்டாய் மறந்துபோனேன்.மன்னித்து விடு! பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.” என்றே மனித நேயமுள்ள அனைவரும் ஏகோபித்துச் சொல்வார்கள்.

ஆங்கிலத்தில் சொல்வதாயின் Belated happy birthday என்பதுதான் சரி. Happy belated birthday என்றால் பிழை என்பதையும் மேலதிக போனஸாக அவர்கள் போதிக்கவும் கூடும்.

முதலாவது ஆண்டு நிறைவில் அப்த பூர்த்தி சாந்தியும், 55 வயது ஆரம்பத்தில் பீம சாந்தியும், 60 வயது ஆரம்பத்தில் உக்ரக சாந்தியும், 61 வயது ஆரம்பத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 70 வயது ஆரம்பத்தில் பீமரத சாந்தியும், 78 வயது ஆரம்பத்தில் விஜய ரத சாந்தியும், 80 வருஷம் 8 மாதம் நிறைவுற சதாபிஷேகமும், 85 முதல் 90 க்குள் ம்ருத்யுஞ்ஜய சாந்தியும், 100 ஆவது வயதில் கனகாபிஷேகமும் செய்தல் சமயத்தில் நல்லது!

அறுபதாவது பிறந்தநாளன்று மனைவிக்கு மறுதாலி அணிவிப்பதால் இது அறுபதாம் கல்யாணம் எனவும் எண்பதாவது பிறந்தநாளுக்கு அண்மித்து ஒருவர் ஆயிரம் பிறைகள் காணும் வாய்ப்புள்ளதால் ஆயிரம் பிறை கண்டோர் எனவும் இப்பிறந்த நாட்கள் மகிமை பெறுவதுமுண்டு.

1.பருத்தி 2. காகிதம் 3. தோல் 4. மலர் 5. மரம் 6. இனிப்பு 7. கம்பளி 8. வெண்கலம் 9. செப்பு 10. தகரம் 15. படிகம் 20. பீங்கான் 25. வெள்ளி 30. முத்து 35. பவளம் 40. மாணிக்கம் 45. நீலக்கல் 50. தங்கம் 60. வைரம் 75. வன்பொன் (பிளாட்டினம்) 80. அமுதம் 100. நூற்றாண்டு. இவ்விதம் காலாகாலமாக திருமண ஆண்டு நிறைவுகளை மட்டுமே குறித்து வந்தவை மெல்ல

மெல்லமாக ஊடுருவி பிறந்த நாட்களுக்குள்ளும் உட்புகுந்து பல வருடங்களாகிவிட்டது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் நூற்பாவில் (எண் 88 – வரி 8) பிறந்த நாள்வயின் பெரு மங்கலமும் என்றுள்ளது சங்க காலத்திலும் பிறந்தநாளை மன்னர்கள் கொண்டாடியமைக்கு நல்லதொரு சான்று. சேரனை எதிர்த்த பெரு வாயில் நன்னனின் பிறந்தநாளை விமரிசையாக்கினர் மக்கள் என்கிறது மதுரைக்காஞ்சி.

கனடா உட்பட முடிக்குரிய நாடுகளில் வதியும் 90 வயதானவர்களுக்கும் 95 வயதானவர்களுக்கும் அல்லது 100 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பும் சம்பிரதாயம் ஆளுனருக்கும் மகாராஜாவுக்கும் உள்ளது.

பிறந்த நாளுக்கு எட்டு வாரங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை எனினும் அதனிலும் குறைவான நாட்களில் விண்ணப்பிப்போருக்கும் சிலவேளை பிறந்த நாள் வாழ்த்து கிடைப்பதுண்டு. ஆனால் அதற்கு உத்தரவாதமில்லை. ஒரு வருடத்துக்கு முன்பாக விண்ணப்பிப்போரும் உளர். பிறந்த நாளுக்குரியவருக்காக உறவினர்கள் அல்லது நண்பர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள 100 வயதை அடைந்தவர்களும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களும் நேரடி வாழ்த்தைப் பெறும் விருப்பத்துடன் விபரத்தையும் முன் கூட்டியே பதிவு செய்தால் குறித்த நேரத்தில் தொலைபேசி மூலம் மகாராஜா மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் வாழ்த்தைப் பெறலாம்.

அவுஸ்திரேலியர்கள் தகுந்த ஆவணங்களுடன் தமது பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

வேற்று மொழிகளில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மனம் பிரியப்படுகின்றதா?

1.German – Alles Gute zum Geburtstag! 2.French – Bon anniversaire! 3.Spanish – Feliz cumpleaños! 4. Italian – Buon compleanno! 5.Portuguese – Feliz Aniversário! 6.Swedish – Grattis på födelsedagen! 7.Indonesian – Selamat ulang tahun! 8.Russian – s dnem rozhdeniya! 9.Danish – Tillykke med fødselsdagen! 10.Mandarin Chinese –Shēngrì kuàilè 11. Sinhalese – suba upan dinayak 12. Hindi – janmadin kee shubhakaamanaen 13. Malayalam janmadināśansakaḷ 14.Phiipino – Maligayang kaarawan 15. Greece – Χαρούμενα γενέθλια Charoúmena genéthlia

நீங்களும் பிறந்த நாளில் வாழ்த்து சொல்லுங்கள்! நலமாக பலமாக மகிழ்வாக வளமாக வாழ்க! என வாழச் சொல்லுங்கள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *