கட்டுரைகள்

உலகின் முதல் பெண் தற்கொடைப் போராளி ! விடுதலை தீயை முத்தமிட்ட வீரத்தாய் குயிலி!!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(ஈகத்தின் உச்சம் தொட்ட தியாகமே உயிர்க்கொடை. தன் மண்ணிற்காக, மக்களுக்காக உயிர்க்கொடை தந்த மாவீர தியாகங்களால் உயிர்பெற்றதே ஈழமண். இந்த தியாகங்களின் உறுதிப்பூக்களை ஒவ்வோர் ஆண்டும் தமிழர் தாயகத்திலும், புலம் பெயர் மண்ணிலும் ஜூலை ஐந்தில் நினைவு கூறப்படுகின்றனர். இதனையிட்டு இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது.)


வீரத்தாய் குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்தாலேயே இந்தியா விடுதலை பெற்றது.

தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக ‘தற்கொலைப் போராளி’ உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த போராளி வீரமங்கையின் பெயர்தான் குயிலி.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் யப்பான் அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக கமிகசே (யப்பானிய மொழியில் கமி – கடவுள், கசே – காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் நேச நாட்டுக் கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் வரலாறாக இன்றைய உலகம் அறிகிறது.

வீரத்தாய் குயிலி:

ஆயினும் இதற்கு முன்பாகவே உலகின் முதல் பெண் தற்கொலைப் படை போராளி ‘வீரத்தாய்’ குயிலியின் வரலாறு பலருக்கும் அறியப்படாத வண்ணமாக உள்ளது.

இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி.

தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர்.

வேலுநாச்சியார் வரலாறு
அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள். வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை. வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலி.

1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன் முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்.

துரோகிகளை கருவறுத்த வீரத்தாய் குயிலி:

விருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.

விருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில் அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால் வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து வந்தார்.

விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின் குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.

போர்க்களத்தில் குயிலி:

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும் நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே செய்தவர் வேலுநாச்சியார்.

மருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது.

ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.

தற்கொலைப்படையான குயிலி

குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது.

இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு வெளியேறினான். வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி. ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி. இந்த வீரத்தாய் குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.

உலகின் முதல் பெண் தற்கொலைப் படை போராளி… ‘வீரத்தாய்’ குயிலி. தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி. …ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.

ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *