கட்டுரைகள்
மாஸ்கோவில் சதிப்புரட்சி சாத்தியமா ?… ரஷ்ய அதிபர் புட்டின் ஆட்சி கவிழுமா ?…. ‘வாக்னர்’ஆயுதக் குழு பின்புலம் என்ன?

(மாஸ்கோவில் சதிப்புரட்சி சாத்தியமற்றதாகவும், ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ஏற்பட்ட நெருக்கடி தற்காலிகமானதாகவே தென்படுவதாக மாஸ்கோ ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரின் திருப்பு முனையாக உள்ளக சதி மூலம் அதிபர் புட்டினை வீழத்த மேற்குலகும்- அமெரிக்காவும் முயல்கின்றன. இதற்கு ஒத்து ஊதும் வண்ணம் மேற்கத்தய ஊடகங்கள் பல கற்பனைக் கதைகளை பரப்புவது சகஜம்) ….
ஐங்கரன் விக்கினேஸ்வரா…..


உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் நேற்று சனிக்கிழமை காலை முதல் பரபரப்பான பேசுபொருளாக ஊடகங்களில், குறிப்பாக மேற்குலக ஊடகங்களில் அமைந்தது. உண்மையில் இன்றைய ஊடகங்களில் அமையும் முக்கிய விடயம் ரஷ்யா தான். ஏற்கெனவே உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக செய்திகளில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என எண்ணலாம். ரஷ்யா ஆம், இன்னமும் நெருக்கடியில்தான் இருக்கிறது. மேற்குலக எண்ணத்தின் படி எப்படி முன்பு எப்படி சோவியத் ஒன்றியம் உடைக்கப்பட்டதோ, அதே பாணியில் இப்போது ரஷ்யாவை சிதைக்கும் திட்டத்தில் மேற்குலக ஊடகங்கள் முனைப்பாக உள்ளன.
வாக்னர் ஆயுதக் குழு பின்புலம்:

உக்ரைன், நோட்டா அமைப்புடன் இணைவது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் என ரஷ்யா எச்சரித்தும், உக்ரைன் நோட்டாவுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. இதனால், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடங்கியது.
இப்போரில் வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புட்டினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு புதிய நெருக்கடியாக வலம் வரும் வாக்னர் ஆயுதக் குழுவின் ஏன் இன்றைய நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டதன் பின்புலம் என்ன என்பதை இலகுவாக கணிக்க முடியாது.
தற்போது தமது 25,000 வீரர்கள் இறப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என ரஷ்யாவுக்குச் சவால்விடுவதாக வாக்னர் குழு பற்றி ஐரோப்பிய ஊடகங்களில் பரவலான தகவல்கள் வெளிவருகின்றன.
யாரிந்த யெவ்ஜெனி பிரிகோஸின்:
இந்தக் குழு புட்டினின் தனிப்பட்ட ராணுவம் என்றும் கூட விமர்சனத்துக்குள்ளானது. உக்ரைன்-ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30,000 பேரை பலி கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைனின் பெரும்பகுதிகளை வாக்னர் குழுதான் கைப்பற்றி ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் முன்பு வெளியாகின.
வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித ஒப்பந்த படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.
ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது என மற்றய நாடுகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புட்டினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது என்பது வெளிப்படை.
முன்னாள் ரஷ்ய அதிகாரி டிமிட்ரி உக்டின் மற்றும் யெவ்ஜெனி பிரிகோஸின் என்ற புட்டினின் முன்னாள் தலைமை நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு என்றும், பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.
இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.
2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது என்பது அறிந்ததே.
மாஸ்கோவில் சதிப்புரட்சி சாத்தியமா ?
மாஸ்கோவை விட்டு தனி விமானத்தில் அதிபர் புட்டின் வெளியேறினார் என்றும், ரஷ்ய ராணுவத்துடன் மோதத் துணிந்துள்ள வாக்னர் படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்குமோ என்று அந்நாட்டு மக்கள் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறதாக அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் பரவலாக பிரச்சாரப் பாணியில் செய்திகளை வெளியிடுகின்றனர்.
அத்துடன் ரஷ்ய அதிபர் புட்டின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.ரஷ்யாவில் அதிபர் புட்டினுக்கான சிறப்பு விமானமான Il-96-300PU விமானம் மாஸ்கோவில் இருந்து, அங்குள்ள நேரப்படி பிற்பகல் 2.16 மணியளவில் புறப்பட்டு வடமேற்குத் திசையில் சென்றுவிட்டதாக விமானங்களின் பாதையை பின்தொடரும் FlightRadar சேவை தரவுகளை சுட்டிக்காட்டி சிலர் பதிவிட்டுள்ளனர். இவை எல்லாம் சோடிக்கப்பட்ட செய்திகள் என மாஸ்கோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள த்வெர் (Tver) நகருக்கு அருகே, புட்டின் பயணித்த சிறப்பு விமானம் அந்த கண்காணிப்பு கட்டமைப்பில் இருந்து மறைந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த சிறப்பு விமானத்தில் புதின் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.
அத்துடன் புட்டின் தலைநகர் மாஸ்கோவில் நிரந்தரமாக வசிப்பதில்லை, மாஸ்கோவுக்கு வடமேற்கே அமைந்துள்ள வால்டாய் ஏரியில் உள்ள தனது பரந்து விரிந்த இல்லத்தில் அதிக நேரத்தை செலவிடுவார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
புட்டினுக்கு எதிராக சதியா?
முதுகில் குத்தும் செயல் என்று புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வாக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய அதிபர் புட்டின் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
ரஷ்ய மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். நடந்த நிகழ்வுகள் ‘ஒரு துரோகம்’ என்றும் ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார். இது முதுகில் குத்தும் செயல். இந்த மாதிரியான அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காப்பதற்கான எங்களது நடவடிக்கை தீவிரமானதாக இருக்கும். துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள். சட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள் பதில் சொல்வார்கள் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவை அச்சுறுத்தும் இந்த மோசமான சூழலில் ரஷ்ய அரசு தரப்போ, வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸினோ தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க தயாராக இருப்பதாக தற்போது தெரியவில்லை.

புதினுக்கு நேரடி சவால் பிரிகோஸின்?

புட்டினின் தொலைக்காட்சி உரைக்கு பதிலளித்துள்ள வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தனது நிலைப்பாட்டில் முதலில் உறுதி காட்டினார். தற்போது பெலரூஸ் நாட்டு நடுநிலமையுடன் தற்போதய சிக்கல்களை பேசித்தீர்க்க முடிவெடுத்து உள்ளார.
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக முறையாக நேரடியாக பிரிகோஸின் விடுக்கும் சவால் இது என்று நம்பப்படுகிறது. மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த பிரிகோஸின், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் ‘புதினின் சமையல்காரர்’ என்று வர்ணிக்கப்பட்டவர்.
இந்நிலையில், அதிபர் புட்டினின் ஆதரவோடு வளர்க்கப்பட்ட வாக்னர் குழு இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது எனக் கூறப்பட்டாலும் மாஸ்கோவில் ஆட்சி மாற்றமோ ்அல்லது புட்டினை வீழ்த்துவது அரிதே என ஊகிக்கப்படுகிறது.
தற்போதய சிக்கலின் பின்னணி என்னவென்று பார்த்தால் ,உக்ரேனிய வலிந்த எதிர் தாக்குதல்கள் முறியடிப்பின் பின்னரே ஊடகங்களின் போராக வாக்னர் குழு பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
கடந்த வாரம் உக்ரேனிய போர் நிலவரத்தில், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில்அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புட்டின்தெரிவித்துள்ளதுடன், அதேவேளை மேற்குலக படைபல ஆதரவுடன் உக்ரேனிய வலிந்த எதிர் தாக்குதல்கள் ரஷ்யாவால் முறியடிக்கப்பட்டுள்ளதை மேற்குலக ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
உக்ரேனின் வலிந்த எதிர்த்தாக்குதல் முயற்சியின் போது ரஷ்ய படைகளின் முறியடிப்புத் தாக்குதல்களால் பல உக்ரேனிய தாங்கிகள் அழிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோப் பதிவுகள் மேற்கத்திய ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வீடியோவை முழுமையாக ஆதாரப்படுத்தி ஏற்காவிட்டாலும், உக்ரேனின் 186 டாங்கிகள், 418 கவச வாகனங்கள் இழந்ததை கீவ் தலைநகரம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
33 நாடுகளில் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி:
கடந்த வருடம் பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் பின், டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகள் உக்ரேனிய படைகளின் கோரமான தாக்குதல்களின் கீழ் வாழ்ந்து வந்த டான்பாஸ் பிராந்தியத்தை விடுவிக்கும் நோக்கில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை ஆரம்பமாகியது.
ரஷ்யா எல்லையில் உக்ரைன் கடந்த சில நாட்களாக உக்ரைன் வலிந்த எதிர் தாக்குதலை (Counter offensive) நடத்தியது. அதில் ரஷ்யா கைப்பற்றிய சில கிராமங்களை மீட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியிட்டனர்.
ஆயினும் ரஷ்யாவின் எதிர் தாக்குதலால் இப்போரில் உக்ரைனுக்கு இழப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக போரின் திருப்பு முனையாக உள்ளக சதி மூலம் அதிபர் புட்டினை வீழத்த மேற்குலகும்- அமெரிக்காவும் முயல்கின்றன. இதற்கு ஒத்து ஊதும் வண்ணம் மேற்கத்தய ஊடகங்கள் பல கற்பனைக் கதைகளை பரப்புவது சகஜம்.
ஆயினும் மாஸ்கோவில் சதிப்புரட்சி சாத்தியமற்றதாகவும், ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ஏற்பட்ட நெருக்கடி தற்காலிகமானதாகவே தென்படுவதாக மாஸ்கோ ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
![]()