கட்டுரைகள்

யாழ் எம்.பி வெ. யோகேஸ்வரன் : இலங்கை அரசின் தமிழ் இனஅழிப்பை பாராளமன்றில் சாட்சிப்படுத்திய உரை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் ஜூன் 9, 1981 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் ஆவேசமாக ஆற்றிய உரையானது, ஈழப் போராட்டத்தை உலகெங்கும் பறை சாற்றிய வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்.
அரசின் தமிழ் இன சுத்திகரிப்பு :
1981 ஜீனில் அரச வன்முறையாளர்களின் கொலையில் இருந்து தப்பிய ஒரு எம்பியின் கதையை இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டாக, சர்வதேசத்திற்கு பறைசாற்றும் வண்ணம் “அரசின் தமிழ் இன சுத்திகரிப்பு” எனும் தலைப்பில் வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் தமிழரின் உரிமை போராட்டத்தை வெளிப்படுத்தியதாகும்.
 “இன்று என் குரல் மட்டும் என்னுடையது. ஆனால் என் உடைகள் அனைத்தும் கடன் வாங்கப்பட்டவை. நான் அணிந்திருக்கும் வேட்டி திருகோணமலை உறுப்பினரின் பரிசு, மேலாடை பனியன் கடன் வாங்கப்பட்டது, அதன் கீழ் நான் அணிந்திருக்கும் உல்லாடை என் தந்தையினுடயது. எனவே, நான் ஆரம்பத்தில் சொன்னது போல் என் குரல் மட்டும் என்னுடையது” என்று அவர் கூறிய வார்த்தைகள் அரச வன்முறையை உலகிற்கு தெளிவாக்கிய சான்றாகும்.
சர்வதேசத்திற்கு தமிழர் உரிமைப் போராட்டத்தை பறைசாற்றிய வெற்றிவேலு யோகேஸ்வரனின் நினைவு தினம் ஜீலை 13ஆகும்.
துன்பியல் நிகழ்வாக 1989 ஜீலை 13 இல் அவரை இழந்த துயர நிகழ்வானது ஈழத் தமிழர்க்கு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.
கொடுங்கோல் ஆட்சி ;
தமிழர்களின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த யோகேஸ்வரன் ஜூன் 9, 1981 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் கூறியது போல், இந்த அழகிய தீவின் இரு தேசங்களும் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு. ஒரு தேசம் கசப்பாக கற்கவில்லை, மற்றொன்று கசப்பாக கற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தமட்டில், தமிழ்த் தேசம் சரியாகப் பாடம் கற்றிருக்கிறது என்பதை அரச வன்முறையில் இருந்து காணக் கூடியதாக உள்ளது. இன்று நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன். எனக்குள் துடிக்கும் இதயத்தைத் தவிர எனக்கென்று சொந்தமாக எந்த உடைமைகள் எதுவும் இல்லை.
இந்த கொடுங்கோன்மை, இந்த கொடுங்கோல் ஆட்சியிலிருந்து என் மக்களை விடுவிக்க நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன், இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் அதை பற்றி எப்போதும் விட இப்போது மிக்க உறுதியாக இருக்கிறேன்.
1981 யாழ்நகரமும்,பொது நூலகம்
எரிப்பும் :
1981 ஜீனில் யாழ்ப்பாண நகர எரிப்பும், பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய கறை படிந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள அரச வன்முறைக் குழுவொன்றால் நடந்தது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் மூல கர்த்தாக்களாக இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் உரம் ஊட்டியது.
1981 சூன் 1 இல் சிங்களக் காவல்துறை, மற்றும் கும்பலால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது யோகேஸ்வரனின் இருப்பிடமும் எரிக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் பின் சுவரால் குதித்து வெளியேறி உயிர் தப்பினர்.
இக்கொடுமைகளை விவரித்து ஜூன் 9, 1981 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் ஆவேசமாக யாழ்ப்பாணத்திற்கான எம்.பி. திரு. வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்
என் கதையின் முடிவு :
எந்த நாகரீக நாட்டிலும் இல்லாத வகையில் நிராயுதபாணியான மக்கள் மீது, கொடூர வன்முறையை அப்பாவி மக்கள் மீது உங்கள் அரசாங்கமும்,அரசாங்கத்தின் படைகளும் கட்டவிழுத்துவிட்டீர்கள். என்னுடைய தனிப்பட்ட பார்வை என்னவென்றால், நான் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பினார், அதிசயமாக நான் தப்பித்தேன். அன்று நான் ஓடிக்கொண்டிருந்தபோது என் மனைவியிடம், “இதுதான் என் கதையின் முடிவு” என்று சொன்னேன். ஆனால் இது கதையின் முடிவாக இருக்கக்கூடாது என்று கடவுள் விரும்பியுள்ளார் போல்,
ஒருவேளை, அவர் என் உடைகள் அனைத்தையும் எரித்திருக்கலாம், அவர் என் வீட்டை எரித்திருக்கலாம். எனக்கு உலகில் வேறு சொத்துக்கள் இல்லை, சொந்தமாக எதுவும் இல்லை. ஒருவேளை, அவர் என்னிடம் சொல்லியிருக்கலாம். “உங்கள் மக்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் சொற்பொழிவாகப் பேசுகிறீர்கள், ஆனால் சில நேரங்களில் நீங்கள் மிகவும் ஆடம்பரமாக உடை அணிவீர்கள்; அதைச் செய்யாதீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஆடம்பரமாக வாழ்கிறீர்கள்; அதைச் செய்யாதீர்கள்.” என்ற அந்தப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
31-ம் தேதி இரவு நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதேவேளை என் மனைவியும் உயிர் பிழைப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்று இங்கு நிற்கும் போது நான் சில சமயங்களில் எனது சொந்த இரங்கல் குறிப்பில் பங்கேற்கிறேனா என்று வியப்படைகிறேன்.
என் வீட்டின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு பாராளுமன்றப் பிரதிநிதி தனது மக்களுடன் வாழ்ந்து, தான் நேசித்த மக்களிடையே வாழ்ந்தவரை மறைந்து, வீடு வீடாக ஒளிந்து கொள்ள வேண்டிய ஒரு கொடூரமானநிகழ்வை யார் செயதிருப்பர் ?இது அரசின் செயலாக இருக்க வேண்டும் ??
தீப்பிழம்பாக யாழ்நகர் :
என் வீட்டில் இருந்து பார்க்கையில் நகரப்பகுதியில் இருந்து தீப்பிழம்புகளை பார்க்க முடிந்தது. உடனே என் மனைவி என்னிடம், “எங்கள் வீட்டைத் தாக்குவார்கள் என்று நினைக்கிறேன்” என்றார். நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிய நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடன் வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவர்கள் வந்து கூச்சலிடலாம் ஆனால் வீட்டினுள் நுழையமாட்டார்கள் என்றே நினைத்தேன். பின்னர் மாவட்ட அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் அங்கு இல்லை. நான் அவருடைய செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “போலீசார் ஊரின் சில பகுதிகளை எரிக்கிறார்கள்” என்றேன்.
அதன்பின் நான் யாழ்ப்பாணம் ஜி.ஏ.வை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனது வீட்டிற்கு எதிரே ஒரு முக்கியமான சந்தி உள்ளது. பருத்தித்துறைவீதி, மருத்துவமனை சாலை சந்திப்பு. சந்திப்பிலிருந்து பலத்த சத்தம் கேட்டது. எங்கள் வீட்டை கண்டிப்பாக தாக்குவார்கள் என்று என் மனைவி என்னிடம் கூறினார். நான், “இல்லை. அவர்கள் கூச்சலிட்டுப் போய்விடலாம். நான் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பேசி என்ன நடக்கிறது என்பதைச் சொல்ல நான் முயன்றேன்.
குடிபோதையில் படையினர் :
நாம் தப்பி போக வேண்டும் என்பதில் மனைவி பிடிவாதமாக இருந்தாள், ஆனால் நான் போகவில்லை. என் அலுவலகக் கதவைத் திறந்தேன். அலுவலக ஜன்னல் வழியே என் முன் வாயில் தெரிந்தது. 50 முதல் 100 பேர் வரை, சிலர் காக்கி சீருடையில், சிலர் வெள்ளை பனியன் மற்றும் காக்கி காற்சட்டைகளுடன் , சிலர் சரமாரியாக, சிலர் தடிகளுடன், சிலர் வாள்களுடன் மற்றும் சிலர் துப்பாக்கிகளுடன், கேட் அருகே நிற்பதைக் கண்டேன். உண்மையில் நிலைமை என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கேட்டை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றனர்.
அப்போது கேட் பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் பயங்கர போதையில் இருந்தனர். அவர்கள் என் வீட்டிற்கு வருவதற்கு முன்பு வெளிநாட்டு மதுபானக் கடைகளை சூறையாடி  விஸ்கி மற்றும் பிராந்தி ஆகியவற்றை உட்கொண்டதை அறியக் கூடியதாக இருந்தது.
அவர்களால் கேட்டை திறக்க முடியவில்லை. அவர்கள் கேட்டைத் தள்ளினார்கள், திறக்கவில்லை. ஒரு அதிகாரி பூட்டில் சுடுவதை நான் பார்த்தேன். பின்னர் நான் என் மனைவியிடம் இன்னும் அங்கே காத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று சொன்னேன், நாங்கள் இருவரும் ஓடினோம். இரண்டு மூன்று சுவர்களைத் தாண்டி குதித்து பாதுகாப்பான இடத்திற்கு வந்தோம். பின்னர் கேட்டை திறந்தனர். அனைத்து கதவுகளிலும் எதையாவது ஊற்றி தீ வைத்தனர். நான் சுவர் மீது ஏறி தப்பித்தேன். என் மனைவியும் சுவர் ஏறி ஏறினாள். அதன் பிறகு நான் அவளை தவறவிட்டேன்.
நான் என் பக்கத்து வீட்டில் மறைந்திருந்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு, என் மனைவி எங்கே இருக்கிறாள் என்று பார்க்க விரும்பினேன். பனியன் மற்றும் காக்கி காற்சட்டை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் என்னைக் கையால் பிடித்துக் கொண்டார், ஆனால் அவர் போதையில் இருந்ததால், பெரும்பாலான படையினர் போதையில் இருந்தார்கள். இதனால் நான் என்னை பொலிசாரிடமிருந்து துண்டித்துக்கொண்டு மீண்டும் சுவரின் மேல் எகிறி தப்பிக்க முடிந்தது.
3 அல்லது 4 மணி வரை என் மனைவி எங்கே என்று யாருக்கும் தெரியாது. பின்னர் அக்கம் பக்கத்தில் சென்று தேடி கண்டுபிடித்தோம்.
அரச படையினர் என் காருக்கும் தீ வைத்தனர். எனது வளாகத்தில் ஜீப் கேரேஜில் பத்திரமாக நிறுத்தப்பட்டு, கேரேஜ் பூட்டப்பட்டிருந்தது. கேரேஜில் இருந்து ஜீப்பை தள்ளிவிட்டு, ஜீப்பை இரும்பு கம்பியால் அடித்து, சாலையில் தள்ளி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். ஜீப் எரிந்து நாசமானது. அங்கே என் நண்பர் ஒருவர் நிறுத்தியிருந்த பியூஜியோ 404 கார் இருந்தது. அந்த காருக்கும் தீ வைத்தனர்.
அவர்கள் சில நகைகளைக் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், ஆனால் அனைத்து நகைகளும் எரிந்தன அல்லது காணவில்லை; நான் இதுவரை ஒரு பொருளையும் பார்க்கவில்லை. என்னிடம் இருந்த தட்டச்சு இயந்திரங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது.
உண்மையாகவே, என் மனைவி அணிந்திருந்த கவுனையும், அப்போது அணிந்திருந்த மஞ்சள் நிறச் சேலை மட்டும் இப்போது என்னுடம் உள்ளன.
வயதான பெற்றோர் மீது துன்புறுத்தல்:
எனது சொந்த மக்கள் மத்தியில் நான் மறைமுகமாக வாழ வேண்டியிருந்தது. நான் வேறு இடத்தில் சென்று தங்கினேன்.  அன்று மாலை 5 மணிக்கு சில இராணுவ வீரர்கள் என் தந்தையின் வீட்டிற்குச் சென்று நான் எங்கே இருக்கிறேன் என்பதை அறிய விரும்பினர். அவர் அவர்களிடம் கூறினார்: “அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எனக்கு ஓரிரு நாள் அவகாசம் கொடுங்கள் எனக்கூறினார்.
இதன்பின் மதியம் 2 மணியளவில் சுமார் 7 அல்லது 8 பொலிஸ் அதிகாரிகள் வந்து எனது தந்தையின் வீட்டின் சுவர்கள் மேல் பாய்ந்து என் அப்பா அம்மா இருவரையும் பயமுறுத்துனார்கள். என் பெற்றோர்
மிகவும் வயதானவர்கள். இந்த போலீஸ்காரர்கள் சுவர்களை, கதவைத் தட்டி,  “வீட்டைத் தேடலாமா?” என்று கேட்டார்கள். என்க்கு பாதுகாப்பு அளிக்க வந்தவர்கள் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு படுக்கையின் கீழும் சோதனையிட்டனர்.
அரச படையினர் என் தந்தை வீட்டில் சென்று அவர்களை துன்புறுத்தினார்கள். நான் அரசியலில் நுழைந்தமைக்காக முதுமை வயதில் என் பெற்றோர் துன்புறுத்தப்படுவதற்கு இடம் கொடுத்ததற்காக நான் வருந்துகிறேன். ஆனால் நமக்கு சில கடமைகள் மற்றும் உரிமைகள் உள்ளன. நாமும் நம் மக்களுக்கு நம் கடமையைச் செய்ய வேண்டியுள்ளோம்.
என் மாமனார் மாரடைப்பால் மரணம் :
நான் முன்பே சொன்னது போல், நான் தப்பித்தது உண்மையிலேயே ஒரு அதிசயம். என் தந்தையிடம் சென்று தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் எனது மாமனார் மாரடைப்பால் இறந்துவிட்டார். எமக்கு நடந்த கொடுமையை அறிந்தமையால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. அச்சுறுத்தல் காரணமாக அவரது மரண அறிவிப்பை நாளிதழ்கள் கூட வெளியிடவில்லை. எனது மாமனாரின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து வானொலி அறிவிப்பையையும் செய்யவில்லை.
அரச வன்முறை:
இந்த அரசாங்கம் நிராயுதபாணியான, அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அயர்லாந்தில் பிரிட்டிஷ் வீரர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆனால் அவர்கள் என்றமே பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிக்கிறார்களா அல்லது சாதாரண மக்களின் வீடுகளை எரிக்கிறார்களா?
அரசின் கடமை வன்முறையாளர்களை கட்டுப்படுத்துவது. படையினர் ஒழுக்கமான சக்தியாக இருக்க வேண்டும். காவல் துறை ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
எனது வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான சம்பவங்களை மட்டுமே உங்கள் கூறினேன். பதிவு செய்ய வேண்டிய சம்பவங்கள் பல உள்ளன.
கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் ;
இந்த அரசாங்கம் என் சொத்துக்களுக்கும் எனக்கும் சொல்லொணாச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது தோல்வியடைந்தது. அரசாங்கம் என்மேல் என்ன எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என்ன திட்டங்களை வைத்திருந்தாலும், மேலே உள்ள கடவுள் அத்தகைய திட்டங்களை முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அனைத்து சோதனைகள் மற்றும் இன்னல்கள் இருந்தபோதிலும், நாங்கள் கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம், அதை நாங்கள் உறுதியுடனும் பின்பற்றுவோம்.
 தமிழ்த் தேசிய உரிமைகளுக்காக நீண்ட காலம் உழைத்த அவர், இந்திய இலங்கை ஒப்பந்த்தின் பின்னர் நாடு திரும்பினார். முன்னாள் யாழ் பாராளமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரன் தமிழ் இளைஞர்கள், மற்றும் பொது மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர். அக்காலத்தில் யாழ் எம்.பியாக தமிழ் இளைஞர்களின் பலத்த ஆதரவை யோகேஸ்வரன் பெற்றிருந்தார்.
துன்பியல் நிகழ்வாக 1989 ஜீலை 13 இல் அவரை இழந்த துயர நிகழ்வானது ஈழத் தமிழர்க்கு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *