கட்டுரைகள்
ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….3…..சங்கர சுப்பிரமணியன்.

சங்க காலத்தில் தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசினார்களா? சங்க இலக்கியங்களில் ஆங்கிலம் கலக்கவில்லை. ஏனென்றால் ஆங்கிலேயரோ மற்றும் எவரும் தமிழர் நிலத்தில் குடியேறவில்லை.
அதன்பின் வந்த இலக்கியங்களில் சமஸ்கிருதம் கலந்தது. இன்னும் தமிழில் சந்தோசம் போன்ற சொல்லை சந்தோசமாக தமிழர்களில் பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியம் என்ற சொல்லையும் முதன்மையாகவே கருதி வருகிறார்கள்.
இதுபோல் சமஸ்கிருதம் கலந்தசொற்கள் தமிழில் பல உள்ளன. அவையெல்லாம் வட்டார வழக்கு எனும் போர்வைக்குள் வசதியாக மறைந்து கொண்டு வக்கலாத்து வாங்குபவர்கள் அதையும் சமங்கலம் என்று சொல்லாமல் வசதியாக மறைக்கிறார்கள்.
அச்சொற்களெல்லாம் தமிழொடு தமிழக கலந்து தமிற்சொல்லா அல்லது வேற்று மொழிச்சொல்லா என்ற வேறுபாடு காணமுடியா வண்ணம் கலந்துள்ளது.
இது இவ்வாறிருக்க தமிங்கிலம் வந்து தமிழை அழிக்கிறதென்று கூக்குரல் இடுவதால் என்னபயன்? தமிழர் நிலமே உருமாறி வருகிறது. அதை முதலில் உருமாற்றத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.
உடுத்தியிருக்கும் வேட்டியையே உருவிக் கொண்டிருக்கிறார்கள். அதை பாதுகாப்பதை விட்டு அதில் ஓட்டை இருக்கிறது என்ற கதையாக தமிங்கிலமென்று தாண்டவமாடுகிறார்கள்.

இருப்பவன் சரியாக இருந்தால் சிரைப்பவன் சரியாக சிரைப்பான் என்றொரு சொலவடை உண்டு.
உடை நம் கையில் இருந்தால் அதில் ஓட்டையை அடைத்து விடலாம். இப்போது உடையிலுள்ள ஓட்டையல்ல கவனிக்க வேண்டியது. உடையைத்தான் முதலில் பாதுகாக்க வேண்டும்.
முதலில் இருப்பதை பாதுகாப்போம். அப்புறம் பறப்பதை பிடிப்போம். ஆனால் ஒரு கூட்டம் இருப்பதை தவறவிட்டுக் கொண்டு பறப்பதை காட்டிக் கொண்டிருக்கிறது. என் செய்வேன் கச்சி ஏகம்பா?
தமிழரிடம் அந்நியன் விக்ரம்போன்று இருமுனை கோளாறு உள்ளது என்பதை மறுக்க இயலாது. தாம் தலைசிறந்தவர்கள் என்ற உயர்ந்த மனப்பாங்கும் நாம் அழிந்து கொண்டிருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பாங்கும் உள்ளது.
நம்மிடமுள்ள இருமுனைக் கோளாறு பற்றி காண்போம்.சான்றாக பல சொல்லலாம். குமரிக்கண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்டவர்கள் சங்க இலக்கியம் படைத்தவர்கள் என்கிறோம். சேர சோழ பாண்டிய வரலாறு பேசுகிறோம்.
வந்தாரை வாழவைக்கிறோம் என்கிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறோம். இதெல்லாமே உயர்ந்த மனப்பாங்கு.
இதற்கு எதிர்மறையாக தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்கிறோம். தமிங்கிலம் பேசுகிறோம் என்கிறோம். தமிழ் அழிந்து போகும் என்கிறோம். நம்மை யாரோ இன்று ஆள்கிறார்கள் என்கிறோம்.
உலகம் முழுதும் சிதறிக்கிடந்த ஒரு இனம் இன்று உலகையே கட்டுக்குள் வைத்துள்ளதை எல்லாம் மறந்து விடுகிறோம். இது போன்றவை எல்லாம் தாழ்வு மனப்பான்மை.
தமிழர் தன்னிலை உணரவேண்டும். வீரத்துடன் விவேகத்தையும் வளர்க்கவேண்டும். மதுவுக்கு அடிமையாவதை விட்டு மதிநுட்பத்தை பெருக்கும் கல்வியில் வீறுகொண்டு எழவேண்டும்.
ஒரு துறையில் மட்டும் கல்வியில் கவனம் செலுத்தாது தனக்கு எத்துறையில் சிறக்க இயலுமோ அத்துறையை தேர்ந்தெடுத்து அத்துறையில் முன்னேறி உலகைத் தன் பக்கம் திருப்பவேண்டும்.
இரத்தத்தை பார்த்தாலே மயக்கும் வரும் தனது மகனிடம் சமுதாயத்துக்காகவும் போலிக் கௌரவத்திற்காகவும் அல்லது தனது ஆசைக்காகவும் மருத்துவ படிப்பை திணிக்க கூடாது. மருத்துவம் படித்தா மேதகு ஆனார். மருத்துவம் படித்தா பில்கேட்ஸ் பெருஞ் செல்வத்தர் ஆனார். அப்துல்கலாம் என்ன படித்து இரவாப் புகழ்பெற்றார்.
திறமை இல்லாவிடில் எத்துறை சிறந்தது என்று தேர்ந்தெடுத்து கற்றாலும் திறமைசாலிகள் ஆவதில்லை. எத்தனை வழக்கறிஞர்கள் நீதியரசராகாமல் தொடர்ந்து வழக்கறிஞர்களாகவும்
பொறியாளர்கள் இறுதிவரை அதே நிலையிலும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை வரை முன்னேறாது அடிப்படை மருத்துவம் மட்டுமே செய்கிறார்கள்.
எனவே பெற்ற துறையில் பெயரெடுக்க வேண்டும். தமிழர் எல்லா துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். இனப்பற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் இனப்பற்று என்ற இத்த மூன்றும் இணைந்த இனமே உலகை ஆள்கிறது. தலைசிறந்து விளங்குகிறது. இனப்பற்றை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைக்கும் எந்த இனமும் இக்காலச்சூழலில் தலைசிறந்து விளங்க இயலாது.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()