கட்டுரைகள்
ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!…. ( தொடர் 2 ) ….. சங்கர சுப்பிரமணியன்.

அப்படியிருக்க உயிரோடிருக்கும் மொழி சற்று நோய்வாய்ப் பட்டிருக்கும்போது
சிகிச்சையளித்து குணப்படுத்துவார்களா?
சிகிச்சையளித்து குணப்படுத்துவார்களா?அல்லது பிழைக்கமாட்டார் என்று இறுதிச்சடங்குக்கு உயிரோடு இருக்கும் போதே சங்கு ஊதுவார்களா? பாரதிதாசன் கவிதையான சங்கேமுழங்குக்கு இவர்களாகவே வேறு பொருள் புரிந்து கொண்டார்களா?
சிலர் தம் வீட்டில் மட்டும்தான் கோழி குழம்பில் கொதிக்கிறது என்கிறார்கள். கோழிக்கறி வீட்டில் இருந்தால் குழம்பில் கொதிப்பதை தடுக்க இயலாது. ஏனென்றால் அண்ணாச்சி மாடசாமி ஆய்வே செய்துள்ளார்.
இதுக்குமா ஆய்வென்று நான் அவரை எள்ளி நகையாடினேன். காரணம் நான் வேறுமாதிரி
எண்ணி வந்ததுதான். சிலர் இப்படித்தான் சில குறளிவித்தைகளைக் கற்றுக் கொண்டு அதை பொதுவெளியில் காட்டிக்கொண்டு இருப்பார்கள்.
கற்றது கைமண் அளவு என்பதை மறந்து என்னிடம் இரண்டு கைமண் அளவு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால் என் செய்வது? கச்சி ஏகம்பா என்று இருத்தலே நன்று.
அவர்செய்த ஆய்வு இதுதான். ஹாலிவுட் இருக்கிறதா என்றார். எஸ் என்றேன். பாலிவுட் இருக்கிறதா என்றார். ஹான் என்றேன். டோலிவுட் இருக்கா என்றார்.
அவுனு என்றேன். சாண்டல்வுட் இருக்கிறதா என்றார். அவுது என்றேன். மாலிவுட் இருக்கிறதா? என்றார். அதே என்றேன். கோலிவுட் இருக்கிறதா? என்றார். இருக்குப்பான்னு சொல்லி அருகிலிருந்த தண்ணீர்பாட்டிலைத் திறந்து மடக்மடக் என்று தண்ணீரைக் குடித்தேன்.
காற்று வாங்குவதைப்போல் சிறிது
மூச்சுவாங்கிவிட்டு என்னங்க ஒங்க பிரச்சினை என்றேன். பிரச்சினை ஒன்றுமில்லை யதார்த்தத்தை சொல்கிறேன் கேள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
போனமாதம் மும்பை சென்றிருந்தேன். அங்கே மராட்டியர்கள் இந்திங்கிலீஷும் பேசுறாங்க மாராங்கிலிஷும் பேசறாங்க. போன ஆண்டு கொல்கொத்தா போயிருந்தேன. அவங்க வங்கிலிஷு பேசுறாங்க. அஸ்ஸாமுல அஸ்சிங்கிலிஷும்
பஞ்சாப்ல பஞ்சிங்கலிஷு பேசுறாங்க.
தென்னாடுடைய சிவனே என்று இங்கு வந்தால் ஏழுமலையான கும்புடுற ஆந்திராவுலயும் தெலுங்கானாவுலயும் தெலுங்கிலிஷ் பேசுறாங்க. புவனேசுவரிய கும்புடுற கர்நாடாகாவுல கன்னிங்கிலிஷும் ஐயப்பன கும்புடுற கேரளாவுல மலங்கிலீஷும் பேசுறாங்க. முருகன கும்புடற தமிழ்நாட்டில தமிங்கிலம் பேசுறாங்க.
மரக்கறி உணவு உடல் நலத்துக்கு நல்லதுதான். அதற்காக கோழிப்பண்ணை வைத்து இறைச்சி வியாபாரம் நடக்கிறபோது மற்றவங்க வீட்டுக் குழம்புல கோழி கொதிப்பதைப் போல நம்ம வீட்டிலயும் கோழி குழம்புல கொதிக்குது என்றார்.
அண்ணாச்சி நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
சினிமாவுல கேட்டதைப்போல் என்ன மாயவரத்துல கேட்டாங்க மன்னார்குடியில கேட்டாங்க சின்னமனூருல கேட்டாங்க சிங்கப்பூர்ல கேட்டாங்கன்னு கதை சொல்றீங்க என்றேன். என் சிற்றறிவு அவ்வளவுதான் என்று அவர் புரிந்துகொண்டு விளக்கினார்.
இல்லப்பா நம்ம மட்டும்தான் தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறோம் என்று எண்ணி வேப்பர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு சொல்வதுபோல் தமிழும் அழியுமுன்னு சொல்லி வைப்பாங்க அதுக்கு தமிங்கிலத்தகாட்டி உன்ன அஞ்ச வைப்பாங்க என்று பாடி மேலும் கூறினார்.
நானாவது ஆண்டிப்பட்டியில இருக்கன். நீ மெல்பனுல இருக்க. அங்க சீனா, வியட்னாம், சிறீலங்கா, கிரீஸ் போன்று இன்னும் எத்தனையோ நாட்டினர் இருக்கிறார்களே. அவர்கள் பேசும்போது சற்று கூர்ந்து கவனி. கண்டிப்பாக அவர்களது மொழியில் ஆங்கிலம் கலந்திருக்கும்.
ஆண்டிப்பட்டியில இருக்கிற எனக்கே இது தெரியும்போது ஆஸ்திரேலியிவில் இருக்கும் உனக்கு இது தெரியலயா? சிறகை விரித்து உயரப்பறந்து பார் உண்மை தெரியும்.
நான் தரையில் நின்று ஆகாயவிமானத்தை அன்னாந்து பார்ப்பவன். நீ ஆகாயவிமானத்தில் உயர பறந்து கொண்டே ஒன்றும் தெரியாமலேயே இருக்கிறாயே என்றார்.
நான் சொன்னேன் தமிழர்தான் ஆங்கிலத்தை அதிகம் கலந்து பேசுவதாக சொல்கிறார்களே என்றேன். அதற்கு மாடசாமி அண்ணாச்சி சொன்னார், “இது இக்கரைக்கு அக்கரை பச்சையைப் போல“ என்றார். அதை திருத்தி கொள்ளலாமேயன்றி அல்லது கட்டாயம் திருத்த வேண்டுமேயன்றி
ஏதோ நாம் மட்டும்தான் ஆங்கிலத்தை கலந்து பேசுவதாக எண்ணக்கூடாது.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)
![]()