உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள் – 7…..சங்கர சுப்பிரமணியன்.

எழுபது வயதுமிக்க சூத்திர பண்ணையாரான ரெட்டியார் சாதி பெண்ணிடம் அதுபற்றி கேட்கலாம் என்று விரும்பினேன் ஆனால் அவளிடம் சென்று எப்படி கேட்பதென்று பிடிபடவில்லை. அவர்கள் அந்த வழக்கத்தை மறுக்கக்கூடும் அல்லது முலைப்பால் கொடுக்கும் பெண்களைப் பற்றி மனம் வருந்தும்படி கூறலாம் என்று கவலையுடன் அதை உணர்ந்தேன்.
என்னுடைய ஊரிலுள்ள உயர்ந்தசாதி இனத்தவரிடம் முலைப்பால் கொடுக்கும் பெண்களைப் பற்றி கேட்கமுடியாது. ஏனென்றால் கேட்பதன் மூலம் எனது இன மக்களின் வாழ்க்கையில் சிக்கல் உண்டாக்க விரும்பவில்லை.
அல்லது பண்ணையார்களின் குடும்பங்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை சிதைக்கவும் விரும்பவில்லை. ஆகையால் பேருந்தில் முன்பின் தெரியாதவர்களிடம் கேட்பது தகுந்த சந்தரப்பமாகத் தோன்றியது.
அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அப்புறம் அவர்கள் ரெட்டியார்களா என்று கேட்போம் என்ற தைரியத்தை என்னுள் வளர்த்துக்கொண்டு பேசினேன். அவர்கள் சந்தேகத்துடன் பார்த்தார்கள் ஆனால் பெருமையுடன் ஆம் என்றார்கள்.
“அக்கா, நான் கேட்பதை தவறாக எடுக்க வேண்டாம்- ஏதாவது தலித் அல்லது தாழ்ந்தசாதி சூத்திர பெண்கள் ரெட்டியார் குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்ததைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா?” நான் அந்த வயதுமுதிர்ந்த பெண்ணிடம் கேட்டேன்.
அவள் அதிர்ச்சி அடைந்தாள். “எனக்கு தெரியாது. எதற்காக அவர்களை எங்கள் வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும்?” அவள் எரிச்சலோடு பதிலளித்தாள். “அதுமாதிரி ஒன்றும் நடக்கவில்லை”. என்னிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டு அவர்களது பேச்சைத் தொடர்ந்தார்கள்.
உங்கள் மனதை சுமையாக்கிவிட்டேன்:
தெலுங்கானாவின் தெற்கிலுள்ள அண்டை மாநிலமான கடற்கரையோர ஆந்திர பிரதேசத்திலுள்ள சிந்து மாதுரி என்ற 49வயது எழுத்தாளர் அதிகமாக பேச விரும்பினாள்.
கர்னாடக மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த அவள் அவளது சாதியான கம்மாசாதி பண்ணையார் குடும்பங்களில் மடிகர்கள்
வேலைசெய்தார்கள் என்று சொன்னாள். “அவர்கள் எங்களுக்கு சொந்தமானவர்கள். எங்களுக்காகவே வேலை பார்த்தவர்கள்” என்று அவள் ஒரு தொலபேசி பேட்டியில் சொன்னாள்.
“அவர்கள் எங்கள் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர்கள். எங்கள் குடும்பங்களில் நடக்கும் எல்லாவற்றையும் பற்றி அவர்களுக்கு தெரியும். அவள் வீட்டில் முலைப்பால் கொடுக்கும் பெண்கள் இல்லாதிருந்தாலும் மற்றவர்கள் வீடுகளில் இருந்ததாக ஞாபகமிருப்பதாகச் சொன்னாள்.
மாதுரியின் வீட்டிலுள்ள பெண்களும் மற்றும் மடிகா இனப்பெண்களும் ஆண்களிடமிருந்து வரும் எல்லாவிதமான சுரண்டல்களுடன் நன்றாகவே இருந்திருக்கிறார்கள் என்று அவள் உறுதியாகச் சொன்னாள்.
“இந்த வேலைகளை பெண்கள் மறுத்தாலோ அல்லது பாலியல் மீறல்களை தவிர்த்தாலோ அவர்கள் பண்ணையாரிடமிருந்து வேலையை இழப்பதுடன் மற்ற பண்ணையார்கள் யாரும் வேலை கொடுக்கவும் மாட்டார்கள். அது ஒரு முறையான புறக்கணிப்பாக இருந்து கொண்டிருக்கும்” என்று விவரித்தாள்.
இந்த வகையில் மடிகா இனப்பெண்கள் வேலை செய்வதற்கும் முலைப்பால் கொடுப்பது உட்பட்டவைகளுக்காகவும் மிரட்டப்பட்டார்கள். சில சமயங்களில் சிலர் பண்ணையார் குடும்பத்தின் மேலுள்ள அன்பின் காரணமாக வேலை செய்தார்கள் என்று மாதுரி நம்புகிறாள்.
ஆதிக்கவர்க்க பெண்கள் ஏதாவது தவறு
செய்திருக்கலாம் என்று அவர்களை மன்னித்து விடலாம். ஆனால் மடிகாஇன பெண்கள் மேலான முறைகேட்டுக்கு ஆண்கள்தான் முழுமையான பொறுப்பு என்று சொல்லலாமா என்று கேட்ட பொழுது இந்தியாவின் ஆணாதிக்க முறையினால்தான் எல்லா பெண்களும் துன்பமடைவதாக அழுத்திச் சோன்னாள்.
“உயர்சாதிப் பெண்கள் கூட இந்த ஆண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று விளக்கமாகச் சொன்னாள். தொர்னாக்கல் வந்தபின், எங்கள் உரையாடலுக்கு பிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நரசிம்மா என்னை வீட்டில் வந்து சந்தித்தாள். நான் அவளுக்கு கொஞ்சம் டீ கொடுத்தேன் ஆனால் அவள்
கலக்கமுடன் இருந்ததாகத் தெரிந்தது.
“ உன்னிடம் அந்த எல்லா செய்திகளையும் சொல்லியிருக்க கூடாது, குழந்தை. நான் வீட்டுக்கு சென்றபின்னும் என்னால் கவலைப் படாமல் இருக்கமுடியவில்லை. எங்களுடைய துயரங்களை எல்லாம் உன்னிடம் உடைத்துக்கூறி உன் இதயத்தை கனக்க வைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். நீ இதுபோன்ற கதைகளைச் சொன்னால் ஆட்கள் உன் பெயரை கெடுப்பார்கள் என்று கவலையாய் இருக்கிறது” என்று சொன்னாள்.
(முற்றும்)
-சங்கர சுப்பிரமணியன்.
நன்றி: ஜான்வி உப்பலெடி / அல் ஜஷீரா
(பெண்களின் அடையாளங்களை பாதுகாப்பதற்காகவும் மேலும் அவமானப்படாமல் இருப்பதற்காகவும் பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன)
![]()