கட்டுரைகள்

கங்காரு தேசம்….! ஶ்ரீரஞ்சனி (அவுஸ்ரேலியப் பயணக் கட்டுரை 2)

கிட்டத்தட்ட 35 வருடங்களின்பின் மெல்பேர்னில் பாமினியும்நானும் சந்தித்திருந்தபோதும், 12ஆம் வகுப்பில் எப்படிப் பேசினோமாஅப்படியே இயல்பாகப் பேசிக்கொண்டோம். பருப்புக் கறிக்குச் சீரகம்,மிளகு அரைத்துப் போடுவது அவவின்குடும்பத்தினருக்குப் பிடிக்காதுஎன்பதால் நான் நிற்கும்போதுதான் அப்படிச் சமைத்துச் சாப்பிடமுடிகிறதெனப் பாமினி சொன்னபோது யாழ்ப்பாணத்துக்குள்ளேயேசமையல்முறைகளும் ரசனைகளும் எப்படி வேறுபடுகின்றன என்றும்பேசிக்கொண்டோம்.

பாமினியின் முற்றத்தில் பல்வேறு வர்ணங்களில் பூத்திருந்தஅழகிய, பெரியரோசாப்பூக்களையும், பின்வளவில் இலைகள்தெரியாதளவுக்கு மரத்தை நிறைத்திருந்த தோடம்பழங்களையும்,சடைத்திருந்த கறிவேப்பிலை மரத்தையும் விட்டுக் கண்களைஅகற்றஎன்னால் முடியவில்லை. அங்கிருந்த காலநிலையைஅனுபவித்தபோதும், அங்கிருக்கும் தொழில்வாய்ப்புக்களைப் பற்றிஅறிந்தபோதும், அங்கேயே நாங்களும் புலம்பெயர்ந்திருக்கலாமோ,வளவெல்லாம் சோலையாக்கி தெல்லிப்பழையிலிருக்கும் நினைப்புடன்வாழ்ந்திருக்கலாமோ என ஆதங்கமாகவிருந்தது.

அடுத்த நாள், அவர்களின் காரைச் சாலையோரம் நிறுத்திவிட்டு,சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும்நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும்இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன்நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத்தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்தவேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப்போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமானஇணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர்அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளைமட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள்பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச்சலித்துக்கொள்ள மட்டும்தான் எங்களால் முடிந்தது.

அன்று மாலையில் என்னைச் சந்தித்த பூபதி அண்ணா, ATBCவானொலிக்காக எழுத்தாளர் கானா பிரபா என்னைப் பேட்டிகாண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச்சென்றிருந்தார். மின்கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானாபிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்துவைத்திருந்து வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச்செய்திருந்தார். மறுநாள், என் பாடசாலையான மகாஜனக் கல்லூரியின்ஆசிரியர்களில் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், எங்களின்அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்குஎன்னைக் கூட்டிப்போயிருந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு வருகிறேன் என்றதுமே, “அக்கா,ஏதாவதொரு இடம்பார்ப்பதற்கு நான் உங்களைக் கூட்டிப்போவேன்” எனஅவர் அன்புடன் கூறியிருந்தார். வயதில் சிறியவரான அவருடன்ஊரிலிருக்கும்போது அதிகம் பழகியதில்லை. அதை ஈடுசெய்யும்வகையில் அந்தப் போக்குவரத்தில் கழிந்திருந்த 7 மணித்தியாலத்தில்நாங்கள் பலதையும் பத்தையும் பேசித்தீர்த்தோம்.

 

விக்ரோரியா மாநிலத்திலுள்ள Port Campbell National Parkஇலுள்ளஇந்தச் சுண்ணாம்புக்கல் குன்றுகள், தற்போதும் Twelve Apostles எனஅழைக்கப்பட்டாலும், எட்டு மட்டுமே கடலரிப்பிலிருந்து தப்பிஇப்போது மீதமாயிருக்கின்றன. மலைகளுக்கும் கடலுக்குமிடையில்செல்லும் Great Ocean Road எனும் சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற அழகானவீதியிருகில் இது அமைந்துள்ளது. காதலர் தினம் என்ற படத்தில்வரும் “என்ன விலை அழகே,” என்ற பாடல் இங்குதான்படமாக்கப்பட்டிருந்தது. ‘நள தமயந்தி’ என்ற திரைப்படத்தில் வரும்சிவா விஷ்ணு கோவிலுக்கும் அன்று போயிருந்தோம்.

அவுஸ்ரேலியாவிலிருக்கும் கோவில்களில் சைவ, வைஷ்ணவ மதத்தெய்வங்கள் இணைந்தேயிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வார இறுதியில் அவுஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச்சங்கத்தினரினால் நிகழ்த்தப்பட்டிருந்த ‘ஒன்றே வேறே’ என்ற எனதுநூலின் அறிமுக நிகழ்வு, இதுவரை நிகழ்ந்த எனது நூலறிமுகங்களைப்போலன்றி வித்தியாசமானதாக அமைந்திருந்தது. முகம்தெரியாதவர்கள்அதிகமிருந்த அந்தவிடத்தின் உள்ளே சென்றதும் தன்னை எனக்குஅறிமுகப்படுத்திக்கொண்ட கலாதேவி பாலசண்முகன் அந்த நூலைநான் எழுதியமைக்கு நன்றிதெரிவித்து, நீண்டநாட்களின்பின்நல்லதொரு நூலை வாசித்ததிருப்தி கிடைத்ததாகச் சொன்னபோது என்உணர்வுகளை வடிக்க என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை.

அவரின் கனிவும் பரந்தமனமும் என்னை வியக்கச்செய்தன.என்னை அறிமுகப்படுத்திய பூபதி அண்ணா என் தந்தையாரைப்பற்றி மிகவும் உயர்வாகக் கூறியமை நெஞ்சைத் தொட்டது. ‘ஒன்றேவேறே’ தொடர்பாகக் கருத்துரைத்த கலாதேவி பாலசண்முகனும்,பாலசந்தர் செளந்தரபாண்டியனும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தபத்து நிமிடத்துக்குள் சிறப்பாக உரையாற்றினார்கள். ரொறன்ரோவில்நிகழும் நூல்வெளியீடுகளில் நிகழ்வதுபோல, ஆசியுரை,வாழ்த்துரையென நேரவீணடிப்புக்கள் எதுவும் அங்கிருக்கவில்லை,வரிசையாக நின்று என்வலப் கொடுத்து நூல் வாங்கும் சடங்கும்அங்கு நிகழவில்லை. பலரின் நூல்கள் விலைபோடப்பட்டுக்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விருப்பமானவர்கள் வாங்கிக்கொண்டனர்.அது புத்தகம் படிக்கப்படலாம் என்றொரு உத்தரவாதத்தைத் தந்தது.

பெயரினால் மட்டுமறிந்திருந்த டொக்டர் நொயல் நடேசன், ஓவியர்கிறிஸ்டி நல்லரெத்தினம், அக்னிக்குஞ்சு யாழ். பாஸ்கர், எழுத்தாளர்சகுந்தலா கணநாதன் ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும்எனக்கன்று கிடைத்திருந்தது. தலைமைவகித்த சகுந்தலா அவர்களின் கணவர்,  தனது மனைவியைப் பற்றி உயர்வாகவும் நெகிழ்வாகவும்என்னுடன் கதைத்தபோது முதுமையிலிருக்கும் அந்த அன்பானதம்பதியரைப் பார்க்க நெகிழ்ச்சியாகவிருந்தது.

பாலசந்தர் உரையாற்றியபோது, இலங்கையரின் பேச்சுத்தமிழைக்கேட்பதற்காகத் தான் சிலரின் வீடுகளுக்குப் போவதுண்டெனவும்,பேச்சுத்தமிழைவிட எழுத்துத்தமிழ் அற்புதமாக இருக்கிறதெனவும்இலங்கைத் தமிழைக் கிலாகித்துப் பேசியிருந்தார். நூலின் சிலபகுதிளைத் தான் மீளமீள வாசித்ததாகவும் அவர் கூறியபோதுஅண்மையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகம்வந்தது. ரொறன்ரோக் கல்விச் சபையிலுள்ள மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மதிப்பிடுபவராகவும் நான் வேலைசெய்கிறேன்.

அப்படியான ஒரு மதிப்பீட்டின்போது, என் இலங்கைத் தமிழைக்கேட்கத் தனக்கு ஆசையாகவிருந்ததெனத் தன் அம்மாசொன்னதாகவும், தனக்கும் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியாகஇருந்ததெனவும் மாணவி ஒருவர் கூறியிருந்தார். இவ்வகையானநிகழ்வுகள் ஏன்தான் எங்களின் சில எழுத்தாளர்கள் இந்தியத் தமிழில்கதைகளை எழுதுகிறார்களோ என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது.இல்லையா?

அன்றிரவு, தியாகராஜா மாஸ்ரரின் மகன் ஶ்ரீகந்தராஜா அவர்கள்என்னைச் சந்திக்க வந்திருந்தார். எண்பதை அண்மித்திருக்கும்வயதிலும் தனது கல்லூரியைச் சேர்ந்த மாணவியைச் சந்தித்துவாழ்த்த வேண்டுமென்ற அவரின் பண்பு என்னைப் பிரமிக்கச் செய்தது.

மகாஜனாவில் தியாகராஜா மாஸ்ரரிடம் நான் கற்கவில்லைஎன்றாலும், வெள்ளை வேட்டிசேட்டுடனும் கல்லூரிக்கு வரும் அவரின்அமைதியான உருவமும் அதிர்ந்துபேசாத தன்மையும் என்னைக்கவர்ந்திருந்தன. அதை அவருக்கும் கூறி மகிழ்ந்தேன்.

மறுநாள் சுற்றுலாப் பயணிகளுக்கென இயங்குமொருசேவையினருடன் பென்குவின்களைப் பார்க்கச் சென்றிருந்தேன்.போகும்வழியில் துள்ளித்துள்ளி ஓடும் கங்காருகளையும், மரங்களில்தம்மை மறந்து நித்திரையிலிருந்த கொவாலாக்களையும் பார்த்ததுடன்,கங்காருக்களுக்கு உணவூட்டக்கூடியதாகவும் இருந்ததில்சிலிர்ப்பாகவிருந்தது. மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால்,பென்குவின்களைப் பார்ப்பதற்குக் கடற்கரையில் குளிருக்குள்காத்திருக்க வேண்டுமே என்ற தயக்கத்துடன் சென்றிருந்த எனக்கு,வாழ்க்கையில் மறக்கமுடியாததொரு இனிய அனுபவத்தை அந்தப்பயணம் தந்திருந்தது.மாணவர்களுக்கான ‘தமிழ் படிப்போம்’ என்ற என்நூலிலுள்ள அவுஸ்திரேலியா பற்றிய கட்டுரையில், பிலிப் தீவுக்குஆயிரக்கணக்கான பென்குவின்கள் மாலைநேரத்தில் வரும். அவற்றைப்பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமென இணையத்திலிருந்ததகவல்களின்படி எழுதியிருந்தேன்.

ஆனால், அவை அசைந்தசைந்துவருவதும், திரும்பித் தண்ணீருக்குள் போவதுமாக இருப்பதைப் பார்த்துஆர்ப்பரித்து, பின்னர் முடிவில் கூட்டம்கூட்டமாக ஆடிஆடி நடந்தபடிஅவற்றின் பொந்துகளுக்குப் போவதைப் பார்த்தது விபரிக்கவோ,படத்துக்குள் அடக்கவோ முடியாததொரு நிறைவைத் தந்தது. இந்தக்குட்டிப் பென்குவின்களைப் பார்ப்பதே இத்தனை இன்பமென்றால்Antarcticaக்குப் போனால் எப்படியிருக்குமென வியந்தேன்.

அடுத்த நாள் ராஜனின் அக்கா கெளரி என்னிடம் வந்திருந்தா.ஊரிலிருக்கும்போது, எங்கள் இருவரினதும் வீடுகளுக்கிடையிலிருந்தவேலியில் வைத்த பொட்டுக்கூடாக நெடுநேரம் நாங்கள் பலதையும்கதைப்போம். ஆனால், கடந்த 40 வருடங்களாகச் சந்திக்கக்கிடைத்திருக்கவில்லை. ரோகிணி ரீச்சர் தன் கடைசிக்காலங்களில்கூடஎன்னைப் பற்றிக் கதைத்திருக்கிறா எனக் கெளரி அன்று சொன்னபோதுஎனக்குக் கவலையாக இருந்தது. ‘மகாஜனாவும் நானும்’ என்ற என்கட்டுரையில், ”வீட்டுக்கு வா கொஞ்சம்கூடக் கணக்குப் படிக்கலாம்என்று தன் வீட்டுக்கு கூப்பிட்ட ரோகிணி ரீச்சர் அம்மாட்டைகையொப்பம் வாங்கிக்கொண்டு வா, சாரணராகச் சேரலாம் எனக்கூறி,பல தடவைகள் என்னைப் பெருமைகொள்ள வைத்த சாரணியத்துக்குவித்திட்டிருந்தா,” என அன்புடன் அவவை நினைவுகூர்ந்திருந்தேன்.

என்வாழ்க்கையில் முக்கியமானதொரு இடத்தில் அவ இருந்தா.இருப்பினும், நாட்டிலேற்பட்ட பிரச்சினைகளும் தனிப்பட்டவாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களும் இப்படி எத்தனைஅன்புள்ளங்களைத் தொலைவில் வைத்திருந்திருக்கிறது எனமனம்நொந்தது.

– தொடரும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *