ஊமையின் குரல்! கிறிஸ்டி நல்லரெத்தினம்

ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் பேசுபொருளாய் இந்நாட்களில் முதலிடத்தில் இருப்பது TheVoice – குரல் – எனும் சர்வஜன வாக்கெடுப்பாகும். ஆஸ்திரேலிய பூர்வீக குடிகளின்உரிமைகளை அரசியலமைப்பில் ஒரு ஷரத்தாக பதிவு செய்வதற்கான முன்னெடுப்பு இது.
அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இவர்களின் உரிமைகளையும்வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தப்போவதாய் உறுதியளித்தபோதிலும் இவர்கள்வாழ்க்கைத்தரம் பின்னோக்கிப்பாய்ந்த நதியாகவே இன்றுள்ளது…..இல்லை, என்றும்இருந்துள்ளது!.
ஆஸ்திரேலியாவின் சாமானிய குடிமகனுடன் ஒப்பிடும்போது பூர்வீக குடிகளின் ஆயுள்காலம்,கல்வி, சுகாதாரம், சமூக கட்டமைப்பு, வீட்டுவசதி போன்றவை கீழ் தட்டு வாசிகளே.இவர்களின் சமூக கட்டமைப்பையும் 'குரல்' பற்றிய புரிதலையும் நோக்கும் முன் ஆஸ்திரேலியாபிறந்த கதையை சிறிது பார்ப்போமா?

தை மாத கோடை வெயிலில் தன் கப்பலை விட்டு கேப்டன் ஆத்தர் பிலிப் அந்த அஸ்திரேலியகடற்கரை வெண் மணலில் தன் சகாக்களுடன் தடம் பதித்தான்.அன்று ஜனவரி 26ம் திகதி 1788.மெதுவாக திரும்பி தான் 252 நாட்கள் பயணித்த தனது கப்பலை களைப்புற்ற கண்களால்நோக்கி பின் பார்வையை திருப்பி தன் கண்முன்னே விரிந்த நிலப்பரப்பை நோக்கினான்.மொத்தம் பதினெரு பாரிய கப்பல்கள் பாய் விரித்து கம்பீரமாக சிட்னி பொட்ணீ குடாவில்நங்கூரமிட்டிருக்கும் காட்சி அவன் முன்னால் உள்ள பாரிய கடமையை அவனுக்குநினைவூட்டிற்று.
தனது முன்னேடியான கேப்டன் ஜேம்ஸ் குக் 1770 இல் இந் நாட்டை இனங்கண்டு இந்தமண்ணில் ஒரு நாட்டை உருவாக்கும் சாத்தியம் பற்றி பேசினான். இப்போது அந்த பாரியபொறுப்பு இவன் கையில்!
பிரித்தானியாவில் இருந்து வந்த இந்த First Fleet எனும் முதல் கடல்படை அமைக்க இருக்கும்கைதிகள் காலனி; (penal colony) அவன் எண்ணங்களை நிரப்பிற்று.

அதே வேளை, அவனின் ஒவ்வொரு அசைவையும் அக்கடற்கரையை ஒத்த மரங்களின்பின்னால் இருந்து சில ஜோடிக் கண்கள் வியப்பும் பீதியும் கொண்டு நோக்கிற்று.திடகாத்திரமான கரிய மேனி, சுருள் முடி., கூரிய கண்கள். அவர்கள் மனத்தில் எழுந்தகேள்விகள் எல்லாம் ஒன்றே :யார் இந்த வெள்ளைத் தேவதைகள்? விசித்திரமான ஆடைகள்.புரியாத பாஷைகள்…. எமது கடற்கரையில் இவர்களுக்கு என்ன வேலை?
பிறந்த கேள்விகளுக்கு விடை இல்லை. தங்கள் கைகளில் இருந்து கூரிய ஈட்டிகளைகெட்டியாக பிடித்தபடி அங்கிருந்து பின் வாங்கி அவர்கள் காட்டுடன் கலந்தனர்.
கப்பல்களில் கேப்டன் ஆத்தர் பிலிப் கொண்டு வந்தது தங்கப் பாளங்களோ வைரங்களோஅல்ல! பிரித்தானியாவின் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்ட 775 கைதிகள்;193 பெண் கைதிகள் உட்பட! இவர்கள் தங்கள் தண்டனை காலத்தை இங்கு தான் கழிக்கப்போகிறார்கள். இவர்கள் மட்டுமா?
மொத்தத்தில் 1480 ஆண், பெண், குழந்தைகள், சில மந்தை மிருகங்கள் குதிரைகள், விதை நெல்,கோதுமை பழவகைகள் என ஒரு புதிய சமுதாயமே இந்த மண்ணில் கால் பதித்து ஒரு புதியஉலகை உருவாக்கும் வேட்கையில் அல்லவா வந்துள்ளனர்!
காலம் தாமதிக்காமல் மறு வாரமே கட்டுமான வேலைகள் தொடக்கப்பட்டன.சிறைக்சாலைகள், அதிகாரிகள் குடும்பங்கள் தங்குமிடம், சிறுவருக்கான பாடசாலை, ஆலயம்,மருத்துவ நிலயம் என ஒரு புதிய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் எல்லாகட்டிடங்களும் கடும் உழைப்பினால் கைகூடிற்று. விடுப்புப் பார்க்க வந்த பூர்வீக குடிமக்களும்விலங்கிட்டு கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் எல்லாம் அன்று விதைத்த அந்த நம்பிக்கை வித்து ஒரு விருட்சமாய் வளர்ந்துஅஸ்திரேலியா எனும் ஒரு பெரும் தேசமாய் வார்ந்து இன்று வந்தாரை வாழ வைக்கும் நாடாகமிளிரும் என எண்ணினோமா?இவர்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிய சரித்திர பின்னணிதான் என்ன?
1700 களில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி பரவத் தொடங்கி யந்திரமயமாக்குதலின்எச்சங்களாக அனேக தொழிலாளிகள் வேலை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கியகாலம் அது. திருட்டும் மற்ற சட்டவிரோத செயல்களும் மலிந்து பிரித்தானியாவின் சிறைகள்நிரம்பி வழிந்தன. அமேரிக்காவின் 1776 சுதந்திர பிரகடனத்தின் பின் பிரித்தானிய சிறைகைதிகளை அங்குள்ள கைதிகள் காலனிகளுக்கும் அனுப்ப முடியாத நிலமை.
இதற்கு தீர்வுதான் என்ன? பிரித்தானிய அரசுக்கு உதித்தது ஒரு எண்ணம் : தமதுசாம்ராஜ்ஜியத்தை மேலும் விரிவடைய செய்யவும் கைதிகளின் செறிவை குறைக்கவும்இவர்களை கப்பலேற்றி ஒரு புதிய உலகை அமைக்க தொலைதூரத்திற்கு அனுப்பினால்என்ன? இத்திட்டத்தின் உதயம்தான் இந்த புதிய பூமி! ஆனால் இந்தப் பூமி இவர்களுக்குமட்டுமா சொந்தம்? இல்லவே இல்லை! இக் கண்டத்தின் பூர்வீக குடிமக்கள், கப்பலில் வந்துஇறங்கிய இந்த வெள்ளை விசித்திர மனிதர்களை வியப்புடன் நோக்கினார்கள்.
இம்மண்ணின் மைந்தர்கள் அஸ்திரேலியாவை 40, 000 முதல் 60.000 ஆண்டுகளுக்கு முன்னரேவந்தடைந்தார்கள் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றன. இவர்கள் ஒரு காட்டுவாசிவாழ்க்கையை வாழ்ந்து ஆன்மீக மற்றும் ஆடல், பாடல் கலை மரபுகள் பலவற்றை நிறுவினர்.பல தேசத்து மூதாதையர்கள் சூரியனையும் தீயையும் தெய்வங்களாய் பூஜித்தது போல் இவர்கள்தாம் வாழும் நிலத்தையே தெய்வமாக்கி பூமித்தாயுடன் ஒரு பிணைப்பைஏற்படுத்திக்கொண்டனர்.
கடல் சூழ்ந்த கண்டத்திற்கு இவர்கள் எங்கிருந்து வந்திருக்கலாம் என அனேக ஆய்வுகள்ஊகிக்கின்றன. இவர்களின் முகவெட்டு மற்றும் உடல் வாகு போன்றவை தென் ஆசியமக்களை ஒத்து இருப்பதால் இவர்கள் அப்பிரதேசங்களில் இருந்து குடிநகர்ந்து இருக்கலாம்என்பதும் ஒரு சாராரின் கருத்து. பல மில்லியன் வருடங்களுக்கு முன் கண்டங்கள் இணைந்துஅருகருகே இருந்ததால் இது சாத்தியமாய் இருந்திருக்கலாம்.
கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஓவியக்கலையில் வல்லவர்கள். மூதாதையர்கள் தங்கள்கனவுக்கதைகளை கற்குகைகளில் ஓவியமாக வரைந்து வைத்தார்கள். மேலும் இவர்களுக்கேஉரித்தான வண்ண புள்ளிக் கோலங்களில் வரையும் ஒவியங்களுக்கு உலக ஓவியச் சந்தைகளில்இன்றும் மவுசு அதிகம்.
1788 இல் ஐரோப்பியர் கால்பதித்த நாட்களில் இந்த மண்ணின் மைந்தர்களின் ஜனத்தொகை850,000 ஆக இருந்திருக்கும். 500 வகையான பழங்குடியினர் இக் கண்டத்தில் தங்கள் சொந்தமொழி பேசி வாழ்ந்தனர் என்பது ஒரு சிறப்பு. ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பு, பல நூறுவகையாக பேச்சுவழக்கு போன்றவை இவர்களை ஒரே இனமாக கூடி வாழ தடையாகஇருந்தன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவே பின்நாட்களில் இவர்களின்உரிமைக்காக போராட இவர்களிடையே ஒரு காந்தியையோ அல்லது ஒரு நெல்சன்மண்டலாவையையோ தோற்றுவிக்க தடையாய் இருந்தது என்பது இவர்கள் கணிப்பு.
பழங்குடியினருக்கும் விசித்திர மனிதருக்குமான உறவு நாளடைவில் முறுகலாக மாறி பலஎதிர்ப்புகளுக்கு வித்திட்டது. அந்நாட்கள் இந்த அப்பாவி குடியினருக்கு இருண்ட நாட்களே.அடக்குமுறையும் அறிமுகப்படுத்தப்பட்ட சின்ன அம்மை போன்ற நோய்களும் இவர்கள்எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. மேலும் வேட்டையாடி சிறைபிடிக்கப்பட்டபல பூர்வீக குடிகள் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு இங்கிலாந்திற்கு ஒரு காட்சிப் பொருளாய்கொண்டுபோகப்பட்டனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால் 1960களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆஸ்திரேலிய சரித்திரநூல்களின் ஆசிரியர்கள் பூர்வீக குடிகளுக்கு இழைக்கப்பட கொடுமைகளையும் அநீதிகளையும்மூடி மறைத்து இவர்களிடையே ஒரு சுமுகமான உறவு நிலவியதாகவே பதிவு செய்தனர்.பின்னர் எழுதப்பட்ட நூல்கள்தான குருதி தோய்ந்த சோக சரித்திரத்தை எழுத்தில் வடித்தன.
எந்த ஒரு தேசத்தின் உதயத்திலும் பிறக்கும் பிரவச வேதனையின் ஓலத்தில் அந்நாட்டின் பூர்வீககுடிகளின் முனுகல்கள் மெளனமாக மடிந்து போவது ஒரு நியதி அல்லவா? இன்றும் பலபழங்குடி அமைப்புகள் 26 ஜனவரி 1788 ஐபடையெடுப்பு நாள்ஆக கணித்து அஸ்திரேலியாநாளைபுறக்கணித்து வருகின்றன.
இன்றய ஆஸ்திரேலிய சமுதாய அடுக்குகளின் கீழ் தட்டில் இன்னும் வாழும் அபொரிஜீனல்குடிமக்கள்என்று அழைக்கப்படும் பூர்வீக குடிகளின் வாழ்க்தைத் தரம் ஆண்டுதோறும்அங்குல வளர்ச்சியையே கண்டு வந்துள்ளது.
மேலும் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் வடுக்கள் இன்னும் ரணமாகவே உள்ளன.இவை இன்னும் சொஸ்தப்படுத்தப்படவில்லை. 1860- 1970க்கு இடைப்பட்ட காலப்பகுதியில்பூர்வீக குடிகளின் குழந்தைகள் பலவந்தமாக அவர்களின் பெற்றோர்களிடம் இருந்துபிரிக்கப்பட்டு 480க்கும் அதிகமான நிறுவனங்களிலும், வெள்ளை இனத்தோர் வீடுகளிலும்வளர்க்கப்பட்டனர். இவர்களுக்கு அவர்களின் கலை கலாச்சார நடைமுறைகள், சம்பிரதாயம்,மொழி, சடங்குகள் போன்றவை மறுக்கப்பட்டன. இந்த இளம் சந்ததியார் ;திருடப்பட்டதலைமுறைகள்(Stolen Generation) எனும் நாமத்தை பின்னர் சூடிக்கொண்டனர்.
இவர்களில்அனேகர்இடைச்சாதி(Half-caste) என வர்ணிக்கப்படும் பூர்வீககுடி தாய்க்கும் வெள்ளைக்காரதந்தைக்கும் பிறந்தவர்களே.இந்த மண்ணின் மைந்தர்கள் தமது சொந்த மண்ணிலேயே ஒரு புறக்கணிக்கப்பட்ட சந்ததியாய்ஆக்கப்பட்டது சோகமே. வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியில் கடைசி வாங்கு,ஆரோக்கியமின்மை வறுமை, அபிரிமித சிறை புகுதல் என இவர்கள் சோகக்கதை நீழ்கிறது.
25.69 மில்லியன் ஆஸ்திரேலிய சனத்தொகையில் 893, 300 பூர்வீக குடிகளும் அடங்குவார்.இத்தனை சிறிய எண்ணிக்கையே உள்ள பூர்வீக மாந்தரின் அடிப்படை அபிலாஜைகளைபூர்த்தி செய்ய அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம் எனும் கேள்விக்கு விடைபகர பல வட்டமேசைமகாநாடுகளும் பேச்சுவார்த்தைகளும் கமிஷன்களும் வைத்தாயிற்கு. இப்பயணத்தில் சிலவெற்றி கிடைத்ததுண்டு.

அவற்றில் சில:
1991 – பொலீஸ் காவலில் மரணித்த பூர்வீக குடிகளுக்கான ராயல் கமிஷன்
1992 – மாபோ எனும் பூர்வீக குடிமகன் உயர்நீதிமன்றத்தில் நில உரிமைக்கான அங்கீகாரவழக்கில் வெற்றி.
1993 – ஆஸ்திரிய பாராளுமன்றம் பூர்வீக உரிமைச் சட்டத்தை (Native Title Act)நிறைவேற்றியது.
1995 – ஆஸ்திரேலிய அரசு பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரேய்ட் தீவுகளின் கொடிகளைஅதிரபூர்வமாக அங்கீகரித்தது.
1997 – ஆஸ்திரேலியாவின் 'திருடப்பட்ட தலைமுறைகள்' பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைநல்லிணக்க மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது
2008 – ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் 'திருடப்பட்ட தலைமுறையினரிடம் நிகழ்ந்ததவறுகளுக்காக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
2017 – உளுறு அறிக்கையில் (The Uluru Statement from the Heart) ஆஸ்திரேலிய அரசிடம் தாம்நாட்டின் முதல் பிரஜைகள் எனும் பிரதிநிதித்துவத்தை (உரிமைகளை) அரசியலமைப்பில்பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது.
2020 – பூர்வீக குடிகளின் சிறைக்காவல் மரணங்கள் மற்றும் சுய காயப்படுத்தலுக்கு எதிராகBlack Lives Matter எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் பங்குபற்றிய நாடளாவியஊர்வலங்கள் நடந்தேறின.
இப்பட்டியலில் உள்ள நிகழ்வுகள் பூர்வீக குடிமக்களின் மடியில் தானாய் வந்து விழவில்லை.பலத்த இழுபறியின் பின்பும் பல வருட பேச்சுவார்த்தைகளின் பின்புமே இவைசாத்தியமாயிற்று.
2022 பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சி, பூர்வீககுடிகளின் அபிலாஷைகள் அரசியலமைப்பில் பதிவேற்றப்படும் என உறுதியளித்து தாம்தேர்தலில் வெற்றியீட்டினால் அதை சட்டபூர்வமாக நிறைவேற்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்புநடாத்தும் எனவும் உறுதிமொழி அளித்தது.
அத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தொழில் கட்சி தற்போது இதற்கானமுன்னெடுப்புகளில் மும்முரமாய் இறங்கியுள்ளது. குரல் (The Voice) எனும் பெயரில்முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி சர்வஜன வாக்கெடுப்புடன் உச்சக்கட்டத்தை அடைந்துசாதகமான முடிவை வாக்காளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டால் பாராளுமன்றத்தில்சட்டமாகி அரசியலமைப்பில் ஒரு ஷரத்தாக வந்து குந்திக்கொள்ளும்.
எதிர்கட்சியான லிபரல் கட்சி இந்த முன்னெடுப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாய்இவ்வாரம் அறிவித்தது. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல பாரிய கம்பெனிகள் பூர்வீககுடிகளுடன் ஒரு முறுகலான உறவையே வைத்திருக்கின்றன. பூர்வீக குடிகளுக்கு சொந்தமானநிலங்களில் சுரங்கம் அமைக்க இக் கம்பெனிகளுக்கு இவர்கள் அனுமதி தேவை. இதற்கான பலபேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவதுண்டு. எனவே அரசியலமைப்பில் பூர்வீக குடிகளின்உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் அது அவர்கள் கைகளை மேலும் பலப்படுத்தும் என்பதுஇக் கம்பெனிகளின் கவலை. லிபரல் கட்சி ஆதரவாளர்களான இக் கம்பெனிகளைபகைத்துக்கொள்ள தயங்கிய அக்கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது பலஅரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
இந்த குரல்முன்னெடுப்பைப் பற்றி சிறிது பார்ப்போமே.2017ல் வெளியிடப்பட்ட “ஊளறு அறிக்கையின்”படி பூர்வீக குடிகளின் பிரதிநிதித்துவத்தைஅரசு அங்கீகரிக்கவேண்டும் எனும் வேண்டுகோளை அரசியலமைப்பில் பதிவேற்றும்நடவடிக்கையின் முதல் கட்டமே இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஆகும். இந்த அங்கீகாரம்இவர்களுக்கான உரிமைக்குரலாக எதிர்காலத்தில் ஒலிக்க வகை செய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் வாக்காளர்களிடம் கேட்கப்பட இருக்கும் கேள்வி இதுதான்: To alter theconstitution to recognise the first people of Australia by establishing an Aboriginal and Torresstrait Islander voice.Do you approve this proposed alteration?இக்கேள்விக்குஆம்அல்லது இல்லை; என வாக்காளர்கள் பதிலளிக்க வேண்டும்.
அஸ்திரேலியாவின் அரசியலமைப்பு இதுவரை 44 முறைகள் சர்வஜன வாக்கெடுப்பிற்குவிடப்பட்டாலும் எட்டு முறைதான் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.குரல்வாக்கெடுப்பு வெற்றிபெற்று அரசியலமைப்பில் பதிவேற்றப்பட்டால் பூர்வீககுடிமக்களை பிரதிநிதப்படுத்தும் ஒரு நிரந்தர குழு நியமிக்கப்பட்டு அக்குழு பூர்வீக குடிகளைபாதிக்கும் அரசு கொள்கைகளை ஆராய்ந்து அரசுக்கு அறிவுரை வழங்கும். ஆனால்பாராளுமன்றம் தமக்கு இணங்காத கொள்கைகளை நிறைவேற்றுவதை தடுக்கும் வீட்டோஅதிகாரம் இக்குழுவிற்கு கிடையாது. 'என்ன, வெற்றுத் துப்பாக்கிக்கு இத்தனை பில்டப்பா?என நீங்கள் நினைப்பது நியாயமானதே!
இக்குழுவில் யார் யார் அங்கத்தவராய் இருப்பார்கள், மொத்தம் எத்தனை பேர், இவர்களின்கடமை என்ன என்ற கேள்விகளுக்கு அரசு தரப்பில் இருந்து மௌனமே பதில். இந்தமௌனத்தை எதிர்கட்சியான லிபரல் கட்சி தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டுஇல்லை வாக்குகளை சேகரிக்க முனைவது அரசியல் காய்நகர்த்தல் என்றேகணிக்கப்படுகிறது.
எனினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அரசியலமைப்புமாற்றத்திற்கு சார்பாக 53% ஆதரவு உள்ளதாக தெரியவந்துள்ளது. இது வரவேற்கத்தக்கசெய்தியே! இளம் சமுதாயத்தினர் இந்த மாற்றத்தை ஆதரிப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.
வாக்களிப்பில் மொத்த தேசிய ரீதியாக 50% க்கும் அதிகமான ஆம்வாக்குகளையும் ஒவ்வொருதனிப்பட்ட மாநிலத்திலும் 50%க்கும் அதிகமான ஆம் வாக்குகளையும் பெற்றால்தானஅரசியலமைப்புச் சட்டத்தில் கை வைக்க முடியும். வாக்குரிமையுள்ள 17 மில்லியன்ஆஸ்திரேலிய வாக்காளர்களில் 8.5 மில்லியன் வாக்காளர்கள் ஆம் என்றுதலையாட்டினாலேயே இக் கனவு நனவாகும்!
அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்த அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்கள்பூர்வகுடிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை.வேலையில்லா திண்டாட்டம், மழலை பராமரிப்பு / கல்வி போன்றவற்றில் முன்னேற்றங்கள்காணப்பட்டாலும் தற்கொலை, வளர்ந்தோர் சிறை செல்தல், பெற்றோரிடம் இருந்துபிள்ளைகள் அரசினால் பிரிக்கப்படுதல், உடல் நலம், வீட்டு வசதி போன்றவைபின்னடைவையே கண்டுள்ளன.
பூர்வீக குடிகளின் குரல் பாராளுமன்றத்தில் உரக்க ஒலித்து தங்கள் எதிர்காலத்தை தாமேஅமைத்துக்கொள்ளும் சுயநிர்ணய உரிமையை இந்த அரசியலமைப்பு இவர்களுக்குசமைத்துவைக்குமானால் அதுவே இக்குரலின் வெற்றி எனலாம்!
ஊமையின் குரலும் ஒலிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது!
முற்றும்
![]()
அருமையான பதிவு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள் மிகுந்த தேடலுடனும், வரலாற்றுக்கண்ணோட்டத்திலும் முடிந்த வரையில் விரிவாக, ஒரு கதை சொல்லிபோன்று விவரித்துள்ளார்.
இந்தப்பதிவை இங்கு வாழும் எமது தமிழ் மக்களும் படிக்கவேண்டும்.
நாம் எவ்வாறு உருவாக்கப்பட்ட நாட்டில் புகலிடம் பெற்றிருக்கின்றோம் என்பதை மூத்த மற்றும் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும்.
நேற்றைய செய்திகள்தான் சரித்திரமாக எழுதப்படுகின்றன.
கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் உழைப்புக்கு மனமார்ந்து வாழ்த்துக்கள்
குரலற்ற மக்களின் குரலாக இந்தப்பதிவு அமைந்துள்ளது.
முருகபூபதி – மெல்பன்.