கட்டுரைகள்

உருவச்சிலைகளுக்கு பின்னாலிருக்கும் அரசியலும் மதமும் சமூகமும்!.., அவதானி.

எப்பொழுதும் கேலியும் கிண்டலுமாக பேசியும் எழுதியும் வந்தவரான தமிழக எழுத்தாளரும், துக்ளக் ஆசிரியரும், நாடக – சினிமா நடிகருமான சோ . ராமசாமி, முன்னர் எழுதிய நாடகம் ஒன்று கல்கி இதழில் தொடர்ந்து வெளியானது.

அதில் வரும் இரண்டு பாத்திரங்கள் சென்னை மெரீனா பீச்சுக்கு செல்வார்கள். அங்கிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் சிலையை காண்பித்து ஒருவர், மற்றவரிடம், “இது யாருடைய சிலை? “ எனக் கேட்பார்.

அதற்கு மற்றவர், “ இந்தியாவின் ஏழ்மைக் கோலத்தை வெளிநாட்டிலிருந்து இங்கே வருபவர்களுக்கு காண்பிக்கின்ற அடையாளச் சின்னம் . “ என்பார்.

சமகாலத்தில் இலங்கையில் ஆங்காங்கே எழும் புத்தர் சிலைகளை பார்த்து வருகின்றோம்.

பல வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரில் ஒரு புத்தர் சிலை நாற்சந்தியில் வைக்கப்பட்டது. அதனை கண்டித்து அன்றைய தமிழ்த்தலைவர்கள் சட்ட நடவடிக்கையும் எடுத்தனர். அச்சிலை முறையான அனுமதியுடன் அங்கே நிறுவப்படவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

அச்சிலைக்கு ஏதும் நேர்ந்துவிடும் என்பதற்காக பொலிஸார், அச்சிலையைச் சுற்றி கம்பி வேலியும் அமைத்து, காவலும் காத்தனர். பின்னர் இந்த விவகாரம் காற்றோடு கலந்து சென்றுவிட்டது.

புத்தர் தனக்கு அரசும் வேண்டாம், மணிமுடியும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் எனச்சொல்லிக்கொண்டு வனம் சென்று தவம் புரிந்து நிர்வாணம் எய்தியவர்.

அத்தகைய ஒரு புனிதரை வைத்து இலங்கையில் அரசியல் நடக்கிறது. சமூகத்திற்கு மகோன்னதமான சேவைகளை செய்தவர்களுக்கும், மொழிக்கும் கலை, இலக்கியத்திற்கும் பண்பாட்டுக்கும் அறிவியலுக்கும் மகத்தான சேவைகளை செய்தவர்களுக்காகவும் சமூகம் காலத்திற்குக் காலம் சிலைகளை நடமாடும் பிரதேசங்களில் நிலை நிறுத்திவருகிறார்கள்.

கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் யேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் வீதியோரங்களில் சிலைகளை காணலாம். அத்தகைய சிலைகள் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக்கும்.

சைவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வீதியோரங்களில் பிள்ளையார் சிலைகளை காணலாம். அரசமரம், வேப்பமர நிழல்களில் அவர் மௌனமாக அமர்ந்திருப்பார். அவரை வழிப்பிள்ளையார் என்பார்கள். அவருக்கு தேங்காய் அடித்து வழிபட்டுச்சென்றால், செல்லும் காரியம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.

இவைதவிர, இலங்கையில் பழைய பாராளுமன்ற வளாகத்திலும் சில அரசியல் தலைவர்களின் சிலைகளை காணலாம். காலிமுகத்திடலில் பண்டாரநாயக்காவுக்கு மாத்திரம் இரண்டு சிலைகள் இருக்கின்றன.

ஒன்று முன்னைய பாராளுமன்ற முன்றலில், மற்றது சோவியத் அரசு வழங்கியது காலிமுக வீதியருகில். காலிமுக கோத்தா கோ கம போராட்டத்தின்போது யாரோ ஒருவர் அச்சிலையில் ஏறி நின்று அதன் கண்களை கறுப்புத்துணியினால் மூடிக்கட்டினார்.

அரசியல் தலைவர்களின் சிலைகளை வருடம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் கழுவி சுத்தம் செய்வர். அப்போது அச்சிலைகளின் தலையின் படிந்திருக்கும் பறவைகளின் எச்சம் கழுவித் துடைக்கப்படும்.

ஆனால், புத்தருக்கு இந்த தண்ணீர் குளிப்பு நடப்பதற்கு சாத்தியமில்லை. அவர் பறவைகளின் எச்சம்விழாத வகையில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளோ அல்லது புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்குள்ளோ இருப்பார்.

பிரமாண்டமான புத்தர் சிலைகள் பறவைகளின் சரணாலயமாகிவிடும். அவர் பறவைகள் உட்பட உயிரினங்கள் அனைத்தையும் நேசித்து, அன்பு மார்க்கத்தை போதித்தவர்.

ஆனால், அவரது மார்க்கத்தை பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் பூரண அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும் நாடெங்கும் புத்தர் சிலைகள் எழுந்துகொண்டிருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன்னர், கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரும் வெளிநாட்டு கப்பல்களின் மாலுமிகள் தூர நோக்கு கண்ணாடி ( Telescope ) ஊடாக கொழும்பின் கரையை பார்த்தபோது, அவர்களுக்குத் தெரிந்தது கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் கோபுரம்தான்.

முன்னைய ஜே. ஆர். ஜெயவர்தனா – பிரேமதாச ஆட்சிக்காலத்தில், இந்த விடயம் அவர்களின் கவனத்திற்கு வந்ததும், கோட்டையில் கடலுக்கு சமீபமாக மிக உயரமான விகாரையும் தூபியும் அமைக்கப்பட்டு அங்கே புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டது.

அதன்பிறகு வெளிநாட்டுக்கப்பல்களுக்கு அந்தத் தூபிதான் தென்பட்டது. அதன் மூலம் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை அந்த ஆட்சியாளர்கள் புத்தர் சிலையை வைத்தே வெளிநாட்டு கப்பல்களுக்கு நிரூபித்தார்கள்.

இன்றைய ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் தற்போது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் திடீரென எழுகின்றன.

அதற்காக அவ்விடங்களில் ஏற்கனவே இருந்த இந்துக்கடவுளர்களின் விக்கிரகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புத்தரின் உண்மையான சரித்திரம் தெரியாது போலும்.

இவ்வாறு புத்தர் இடத்துக்கிடம் சிலையாக எழுந்திருப்பதுபோன்று , சிவனின் மற்றும் ஒரு வடிமான நடராஜரும் திருக்குறளை தந்த திருவள்ளுவரும் எழத்தொடங்கியிருக்கின்றனர்.

இவர்களைப்பற்றி சமய பாடத்திலும், தமிழ்ப்பாடத்திலும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து சிலைகளை அமைப்போர் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

விரைவில் வடபகுதியில் படிப்படியாக பல பாடசாலைகள் மூடப்பட்டுவிடும் என்ற செய்தி அபாயச்சங்கின் ஒலியாக வெளிப்பட்டதை அறிவோம்.

வன்னி பெருநிலப்பரப்பில் வதியும் பல மாணவர்களின் உடலில் இறுதிப்போரின் வடுக்கல் எறிகணைத்துகள்களினால் நிரந்தரமாகியிருக்கிறது.

பல ஏழை மாணவர்கள் காலை உணவும் இன்றி பாடசாலைகளுக்கு செல்லும் அவலமும் தொடருகின்றது.

ஏழை மாணவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் இல்லை. அத்தகையோர் தெற்கிலும் மேற்கிலும், மலையகத்திலும் இருக்கின்றனர்.

இவர்களின் தேவைகளை கவனிக்குமாறு புத்தரோ, நடராஜரோ, வள்ளுவரோ கனவுகளில் தோன்றி சொல்லமாட்டார்களா..?

கட்டினார் கட்டினார் சிலைகளை கட்டினார், கட்டிய சிலைகளில் என்னதான் கண்டார்..? எனக்கேட்டால், பறவைகளின் எச்சத்தைக் கண்டார் எனச்சொல்லமுடியுமா…?

தமிழ் பிரதேசங்களில் சிலையாக நிற்கும் பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *