கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள்!…. 3….. சங்கர சுப்பிரமணியன்.

இந்தியாவில் சாதி என்ற பிறப்பால் கிடைக்கும் தகுதி எப்போதும் வர்க்க பேதத்திற்கு வித்திடுகிறது. கல்வி சில பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வளமாக வாழவசதியளிக்கின்ற பொழுது “மாடிகா” போன்ற இனமக்கள் பாரம்பரியமாக செருப்பு தைப்பவர்களாகவும் தோல் பதனிடுதல் மற்றும் இறந்த பிராணிகளை அப்புறப்படுத்தும் பணியில் இன்றும் வற்புறுத்தலின் வலி, வறுமை மற்றும் இனவேறுபாடு போன்றவற்றை நாடு முழுவதும் சந்தித்து வருகிறார்கள்.எல்லம்மா போன்ற மாடிகா இனமக்கள் அக்காலத்தில் பண்ணைக் கூலிகளாக பணி புரிந்திருக்கிறார்கள். கடுமையாக வயலில் உழைப்பது கூட்டிப் பெருக்கி வீட்டு வேலை செய்வது போன்ற தினக்கூலி வேலை கடினமாக இருந்தது.ஆனால் நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்த இன்னொரு வேலை காலப்போக்கில் வழக்கிலிருந்ததாக நான் கேள்விப்பட்ட தலித் இனப்பெண்கள் உயர்சாதி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது. எவ்வளவு நாட்களுக்கு முன் இவ்வழக்கம் இருந்திருக்குமென ஆச்சர்யம் அடைந்தேன். மேலும் யாராவது ஒருவர் ஒருகாலத்தில மற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது எனக்கு தெரியுமா?“பாட்டி, நம் குடும்பத்திலோ அல்லது  நம் இனத்திலோ யாராவது உயர்சாதி குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டியிருக்கிறார்களா?” நான் பாட்டியிடம் கேட்டேன்.எல்லம்மா திரும்பி என்னை நேராகப்பார்த்து, “எனக்கு பலரைத் தெரியும், குழந்த” என்று என்னிடம் பதில் சொன்னாள். ஆனால் உன்னைப்போல் படித்த பிள்ளை கடந்த துயரத்தை ஏன் தோண்டியெடுக்க விரும்புகிறாய்? உன்வயது பிள்ளைகள் கைபேசிகளில்தான் முகத்தை புதைத்திருப்பார்கள் என்று எண்ணினேன்” என்றாள்.ஆனால் அவள் புருவங்களைச் சுருக்கி அவளது பதின்ம வயதில், அவளது ஊரான குன்றத்திமடுகு என்ற கிராமத்தில் அக்கம்மா என்ற மாடிகா இனத்ததுப் பெண்ணைப்பற்றி என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள்.1960 ல் அக்கம்மாவுக்கு இருபது வயது தொடங்கியபோது முதலாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அக்கம்மா, அவளின் கணவர் மற்றும் கணவரின் உடன்பிறந்தவர்களோடு அடுத்த தெருவில் வசித்தபோது எல்லம்மாவின் அம்மாவும் அக்கம்மாவின் மாமியாரும் ஒரே வயலில் வேலை பார்த்தார்கள்.அக்கம்மாவுக்கு குழந்தை பிறந்து ஐந்து மாதம் முடிந்ததும் அந்த கிராமத்து துரை, அதாவது தெலுங்கானாவில் பேசும் பேச்சுவழக்கான தெலுங்கில் நில உரிமையாளர்களான பண்ணையார்களை அப்படித்தான் அழைப்பார்கள், அவளை அழைத்துவர சொன்னார். தெலுங்கானா பகுதியில் பெரும்பாலும் நில உரிமையாளர்கள் சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.பரம்பரை பரம்பரையாக வந்த இந்த பண்ணையார்கள் அதிக அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள். ஓவ்வொரு கிராமங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இப்படியான துரை குடும்பங்கள் இருக்கும். பெரிய வீடுகளையும் பெரிதளவில் நிலங்களையும் கொண்ட இவர்களை குறைவான தகுதியுடைய சாதியினர் வருமானத்திற்காக சார்ந்திருந்தனர்.இருபது வயது தொடக்கத்தில் இருக்கும் துரையின் (பண்ணையார்) மனைவியும் சிலவாரங்களுக்கு முன் ஆண் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள். ஆனால் வேண்டிய அளவு அவளிடம் தாய்ப்பால் சுரக்கவில்லை. ஆகையால் அக்குழந்தைக்கு முலைப்பாலூட்ட அக்கம்மா அழைத்து வரப்பட்டாள்.ஒருநாளில் குறைந்த பட்சம் ஏழு அல்லது எட்டு மணி நேரம் அக்கம்மா தன் குழந்தையை பிரிந்திருக்க வேண்டியதிருக்கும். அவள் வீடு திரும்பிய பிறகும் குழந்தை தாயின் முலைகளில் வாய்வைக்க மறுத்தாலோ தாயிடம் பால் சுரக்காவிட்டாலோ அல்லது தாய்க்கு குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலோ அக்கம்மா திரும்பவும் அழைத்து வரப்படுவாள் என்று எல்லம்மா விளக்கினாள்.

எல்லம்மாவின் அம்மாவும் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களும் அக்கம்மாவைப் பற்றி எப்போதும்  பேசிக் கொண்டிருப்பதை எல்லம்மா கேட்டிருக்கிறாள். அக்கம்மாவின் குழந்தை பசியால் அழுதாலும் பண்ணையாரின் குழந்தைக்கு அவள் எந்த அளவுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது எல்லம்மாவின் நினைவில் பதிந்திருந்தது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஆணாதிக்கமும் உயர்சாதி மனப்பாங்கும் தலித் பெண்களின் மேல் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தலித் பெண்களும் தாழ்ந்த சாதியான சூத்திரகுலப் பெண்களும் பண்ணையார்களால் தம் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டவும் மற்றும் வீட்டுவேலைகளுக்கு வற்புறுத்தப்பட்டதுடன் பாதுகாத்துக்கொள்ள முடியாத அளவுக்குபாலின சீண்டலுக்கும் உயர்சாதி ஆண்களால் உட்படுத்தப்பட்டார்கள்.“எங்கள் உடம்பில் இருந்து எதையும் பெறக்கூடிய பொருட்களாக எங்களை மாற்றியதோடு முலைப்பால்கூட கிடைக்கும்படி மாற்றினார்கள்” என்று எல்லம்மா சொன்னாள்.(தொடரும்)-சங்கர சுப்பிரமணியன்.நன்றி: ஜான்வி உப்புலெடி / அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *