கட்டுரைகள்
தாய்வான் சுதந்திர நாடாகுமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அமெரிக்காவின் பிராந்திய ஆக்கிரமிப்பும் !
சீனாவின் ஒற்றையாட்சி அச்சுறுத்தலும் !!
—————————————————— 

தாய்வான் சுதந்திர நாடாகி, தேசிய சுயநிர்ணயம் பெற சாத்தியமா என்பது இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகளால் சாத்தியம் போலவே காணப்பட்டாலும் சீன அரசின் செயற்பாட்டை எவராலும் இலகுவாக கணிக்க முடியாமல் உள்ளது.
அமெரிக்காவின் பிராந்திய நலன்களைப் பேணவும், சீனாவின் ஒற்றையாட்சி அச்சுறுத்தல்களாலும் தாய்வான் சுதந்திர நாடாகும் சாத்தியங்கள் அதிகரித்தே வருகிறது.
அதே வேளை உக்ரைன் – ரஷ்யா போரை போல வெடிக்கப் போகிறதா தாய்வான் – சீனா இடையிலான நீண்ட முரண்பாடு என்றும் ஐயப்பட வேண்டியும் உள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவின் நீண்ட தூர ஏவுகணைப் பயிற்சிகளும்,
சீன அதிபர் அண்மைய பேச்சால், தாய்வான்- சீனா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
சீனா மற்றும் தாய்வான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தாய்வான்
தெரிவித்துள்ளது.
சீனாவின் போர் அச்சுறுத்தல் :
இருநாடுகளுக்கும் இடையே ’தற்செயலமான தாக்குதல்’ நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தாய்வான் கடல், வான் வெளியில் சீனா தொடர்ந்து விமானங்களையும் , ஏவுகணைகளையும் பரீட்சார்த்தமாக ஏவி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை உள்ள நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தாய்வானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது.வலுக்கட்டாயமாக தாய்வானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பு இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. சீனா மற்றும் தாய்வான் இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லையை கடப்பதை தாய்வான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது. சீனா 2025ஆம் ஆண்டிற்குள் தாய்வானை முழுவதுமாக கைப்பற்றி விடும் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது.
உலகில் ஜனநாயக ரீதியிலான சுயாட்சி நடைபெற்று வரும் தாய்வான் நாடானது தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என சீனா கூறி வருவதுடன் கடந்த இரு வருடங்களாக தாய்வான் மீதான இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்து வருகின்றது.
தாய்வானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க் கப்பல்களையும் அனுப்பியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுவதாக தாய்வான் இராணுவ அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
தாய்வானை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன ஜனாதிபதி தெரிவித்து வருகிறார். அதற்கு இராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என்னும் ரீதியில் ஏற்கனவே அவர் பேசியுள்ளார்.
மேலும் தாய்வானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுக்கு தனது கோபத்தையும் சீனா வெளிக் காட்டி வருகின்றது. இந்நிலையில், தாய்வான் ஆயுத படைகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் தாய்வானை மிக ஆபத்தான சூழலில் தள்ளுவது மட்டுமல்லாது அமெரிக்காவும் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என சீன இராணுவ அதிகாரி வாங் யீ தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தாய்வானுக்கு ஆதரவையும், ஆயுதப் பங்களிப்பையும் வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவில் கடும் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
தாய்வான் அரசோ தாம் ஒரு சுதந்திர நாடு என்றும் தமது சுதந்திரத்தையும், ஜனநாயத்தையும் பாதுகாப்பது எமது உரிமை என்றும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் தாய்வானை சீனப் பெரும் நிலத்துடன் இணைக்க சீனா நீண்ட காலமாக திட்டமிட்டும் வருகிறது.
போர்ப் பதற்றம் தொடர்கிறது :
கடந்த மாத இறுதியில் சீனாவின் 30 போர் விமானங்கள் தாய்வான் நீரிணை நடுப்பகுதியைக் கடந்துள்ளன. இது அதிகாரப்பூர்வ எல்லையாக இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
சீனா அனுப்பிய போர் விமானங்களில் ‘ஜே-16’ ரக போர் விமானங்கள் 21-ம், 4 ‘எச்-6’ குண்டுவீச்சு விமானங்களும், 2 முன் எச்சரிக்கை விமானங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தாய்வான் கூறும்போது, தங்கள் நில அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகள் மற்றும் தங்கள் கடற்படை கப்பல்கள் மூலம் கண்காணித்ததாக தெரிவித்தது. சீனாவின் அதிரடியால் தாய்வானில் போர்ப்பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த சண்டையைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தாய்வான் தனி நாடாக பிரிந்தது. தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் உள்ள தீவு நாடு தாய்வான். அமெரிக்காவின் நட்பு நாடாக இது விளங்குகிறது.
தாய்வான் தனி நாடாக இறையாண்மையுடன் விளங்கி வருகிறது. ஆனால் சீனா, தாய்வானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்த முற்படும் நிலையில், இதற்கு அமெரிக்கா பெரும் எதிர்ப்பாக நிற்கிறது.
ஆதரவான அமெரிக்கா :
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதைத் தடுக்கும் நோக்கிலும், அந்த நாட்டின்மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. அதேபோல் மறுபுறம், தாய்வானைத் தன்னுடன் இணைக்கும் நோக்கில், அங்கும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது சீனா.
தாய்வான் – சீனா இடையிலான நீண்ட முரண்பாடு உக்ரைன் – ரஷ்யா போரை போல வெடிக்கப் போகிறது போல
சீன அதிபர் ஜிங்பின்னின் அண்மைய பேச்சு அமைந்துள்ளது.
சீனா, மீண்டும் தாய்வானை தன்னில் இணைத்துக்கொண்டு விட்டால், அது பசிபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட வழிவகுப்பதுடன், குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமையும்.
ஆனால் தாய்வானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தாய்வானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி உள்ளிட்ட தலைவர்கள் சென்று வந்ததும் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும் அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சீன இராணுவம் பெரும்போர்ப் பயிற்சிகளை நடத்திக்காட்டியது. இப்படி தாய்வானை சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
தனிநாடக பிரிவினை :
சீனாவில், 1911-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1927-ல் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் கட்சிப் போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இந்தப் போரில்
தோல்வியுற்ற சீன தேசியக் கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் தீவான தாய்வானில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித்தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தாய்வான்.
1975 வரை சீன தேசியக் கட்சியின் தலைவரான சியாங்கின் சர்வாதிகார ஆட்சியிலிருந்த தாய்வான், அதன் பிறகு மெல்ல மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நீண்டகாலமாகவே தாய்வானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981-ல் `ஒரு நாடு; இரண்டு அமைப்புகள்’ என்ற ஆட்சிமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி, ‘எங்களுடன் தாய்வான் இணைந்து கொண்டால், ஹாங்காங்கில் இருப்பதுபோல உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்’ என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தாய்வான்.
சீனா படையெடுக்க சாத்தியமா ?
தாய்வானில், 2000-ம் ஆண்டில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து தொழில்துறை, தொழில் நுட்பத்துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதைக் கண்டு அஞ்சிய சீனா, தாய்வானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனிநாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே’ என்று சொல்லிவந்தது.
2005-ல் தாய்வானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது சீனா. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தாய்வானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.
அதைத் தொடர்ந்து, 2016-ல் தாய்வானின் அதிபரான சாய் இங்-வென், சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டுவந்ததோடு, பாதுகாப்புத் துறையையும் மேம்படுத்தினார். வெளிநாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தத் தொடங்கினார். அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் இங்-வென் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டதால், தாய்வானுக்குப் பல நவீன ஆயுதங்கள் கிடைத்தன.
மீண்டும் 2020-ல் அதிபரான இங்-வென், தற்போதிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நல்ல நட்புறவைக் கடைப்பிடித்து வருகிறார். உலகில் வத்திக்கானும், வேறு 13 நாடுகளும் தாய்வானை இறையாண்மைகொண்ட நாடாக அங்கீகரித்திருக்கின்றன.
சீனாவின் ஏவுகணைப் பயிற்சி :
கடந்த ஆகஸ்ட் 3 அன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கைகளை மீறி தாய்வானுக்கு வந்து சென்றார். தாய்வானுக்கு எப்போதும் துணை நிற்கிறோம் என்பதை உணர்த்தவே இங்கு வந்திருக்கிறேன் என்றார் பெலோசி.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாய்வான் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியது சீனா. அங்குள்ள கடற்பரப்பில் சில ஏவுகணைகளையும் வீசி அச்சுறுத்தியது. இதையடுத்து, தாய்வானும் போர்ப் பயிற்சியில் ஈடுபட, அங்கு பதற்றம் அதிகரித்தது.
அந்தப் பதற்றம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் அதிபர் ஜி ஜின்பிங்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், தாய்வான் குறித்துப் பேசிய அவர், தாய்வான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை முறியடித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.
இந்தப் பிரச்னையில் சீன அரசு ஒருபோதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயங்காது. தாய்வானைச் சீனாவுடன் இணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சி எடுத்து, நேர்மையான வழியில் இணைப்பை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது தாய்வான் அதிபர் மாளிகை. அந்த அறிக்கையில், தாய்வான் தனது இறையாண்மையிலிருந்து பின்வாங்காது. சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்ள முடியாது. தாய்வான் ஒரு சுதந்திர நாடு. போரைச் சந்திப்பது தைவானின் விருப்பமல்ல. இதுதான் தாய்வான் மக்களின் ஒருமித்த கருத்து என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், சீனா – தாய்வான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் தாய்வான் :
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாய்வான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது. தாய்வான் “நான்கு ஆசிய புலிகள்”‘ எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.
இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவானில் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம், பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது. 

சுதந்திர நாடாக அறிவிக்குமா ?
தனி அரசியலமைப்புச் சட்டம், ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக தாய்வான் பறைசாற்றிக் கொள்கிறது.
ஆயினும் தாய்வானை எளிதில் வீழ்த்தக் கூடிய பிராந்தியமாகப் பார்க்கிறது சீனா.
தாய்வான் அரசு, அந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாக ஒரு முறைப்படி அறிவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து சீனா கண்டனம் கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஆயினும் தாய்வான் ஏற்கனவே ஒரு சுதந்திர நாடு, அதை மீண்டும் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவது தேவையற்றது என கூறுகிறது அந்நாட்டு அரசு. சீனா மற்றும் தாய்வான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதைத் தடுக்கும் நோக்கில், அந்த நாட்டின்மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. அதேபோல் மறுபுறம், தாய்வானைத் தன்னுடன் இணைக்கும் நோக்கில், அங்கும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது சீனா.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
![]()