கட்டுரைகள்
மாற்றமடையாத தமிழரின் இலட்சியமும்… எழுச்சியும்!… பொங்குதமிழ் முதல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி!!…. எழுகதமிழ் முதல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை!!!…நவீனன். !!

பொங்குதமிழ் முதல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி !
எழுகதமிழ் முதல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை !!
வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் திம்புக் கோட்பாடு வரை !!!
மாற்றமடையாத தமிழரின் இலட்சியமும்- எழுச்சியும் !!!!
——————————————————
– நவீனன்
யாழ்.பல்கலைக்கழக சமுதாயத்தால் முதல் முதலாக 2000ஆம் ஆண்டில் தொடங்கிய பொங்கு தமிழ் பிரகடனத்தினை மீண்டும் சாட்சியப்படுத்தும் நிகழ்வாக கடந்த வாரம் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனம் நிதர்சனமாக்கியுள்ளது.
பொங்குதமிழ் முதல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணிப் பிரகடனங்கள் மாற்றமடையாத தமிழரின் இலட்சியத்தையும்
எழுச்சியையும் உலகிற்கு ஆணித்தரமாக எடுத்தியம்புகிறது.
2000ஆண்டு ஆரம்பித்த பொங்கு தமிழ் :
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் 2000ஆண்டு ஆரம்பித்த பொங்குதமிழ் நிகழ்வு வருடாவருடம் உலகெங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.
இவ்வருடமும் பொங்கு தமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை பல்கலைகழக மாணவர்கள் நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் மீள வாசிக்கப்பட்டது.
இவ் எழுச்சி நிகழ்வில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை , மரபுவழித்தாயகம் , தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்கு தமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் :
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம், எழுக தமிழ் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி எழுச்சி கொண்டிருந்தது.
சர்வதேச கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு:
சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப் படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் தீர்க்கமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என இப்பிரகடனத்தில் கோரப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி:
2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழர மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்தும் வகையில் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி நடைபெற்றது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பேரெழுச்சியாக தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டனர் தமிழ் மக்கள்.
திம்புக் கோட்பாடும் தமிழ் மக்களின் அபிலாசையும் :
தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள பாரிய இந்த எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.
ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று இப் பேரணியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எழுக தமிழ் ‘2016’ பிரகடனம் :
2016இல் ‘எழுக தமிழ்’ நிகழ்வு தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்டது. 2016ஆம் ஆண்டு, செப்ரெம்பர் 24ஆம் நாள், யாழ்ப்பாண முற்றவெளியில் நடைபெற்ற ‘எழுக தமிழ் 2016’ எழுச்சிப் பேரணியில் சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவீன் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் வலியுறுத்துவதே ‘எழுக தமிழ் 2016’ நோக்கமாகும் என பிரகடனப் படுத்தியது.
உண்மையில் எழுகதமிழ் முதல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடந்த பேரணிகள் எல்லாம் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளை கோரும் அடையாள எழுச்சிகள் ஆகும்.
சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தந்த படிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில் தமிழர்களின் கடந்த 75 ஆண்டு கால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை.
தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம்.
தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என எழுக தமிழ் ‘2016’ பிரகடனம் செய்தது.
இலங்கையில் அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொது மக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறந்தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயக ரீதியதுமான கலந்துரையாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
அடக்குமுறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்த முடியாது. வடக்கு கிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று
‘எழுக தமிழ் 2016 ‘எழுச்சிப் பேரணியில் பிரகடனம் செய்யப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை -P2P
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி (Pottuvil to Polikandi – P2P) தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும் நடைப்பயணப் போராட்டமாகும். நீதிக்கான இப்பயணத்திற்கு ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ செல்லும் பாதை பெயரிடப்பட்டது.
இது பாரம்பரிய தமிழர் தாயகத்தின் இரண்டு தூர முனைகளையும், தெற்கே அம்பாறையில் பொத்துவில் முதல், வடக்கு முனையில் பருத்தித்துறையில், பொலிகண்டி வரையிலும் குறிக்கிறது.
இப்பேரணி கிழக்கின் தெற்கு முனையில் உள்ள பொத்துவில் நகரில் 2021 பெப்ரவரி 3 ஆம் நாளில் தொடங்கி வட மாகாணத்தின் வடமுனையில் அமைந்துள்ள பொலிகண்டியில் பெப்ரவரி 7 இல் நிறைவடைந்தது.
வடகிழக்குத் தமிழ்-பேசும் குடிசார் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மற்றும் முசுலிம் சமூகங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து பேரணியில் இணைந்து கொண்டனர்.
தமிழ், முசுலிம் அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, ஈழப்போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்குப் பதிலளிக்காமை, கோவிட்-19 பெருந்தொற்றினால் உயிரிழக்கும் இசுலாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலான அரச அடக்குமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களுக்கு நீதி கோரியும், தீர்வு கேட்டும் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.
இப்பேரணியின் இறுதி நாளான07.02.2021 கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி பொலிகண்ண்டியைச் சென்றடைந்தது. பேரணி நிறைவில் பத்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுச்சிப்பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. பிரகடனம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாயிருந்தது.
P2P எழுச்சி பிரகடனம் :
தமிழரின் வாழ்வாதரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். காணிகள் மீளக் கையளிக்கப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும். காணாமல் போனோருக்கு நீதிவேண்டும். ஜனாசாக்கள் விடயத்தில் மதநம்பிக்கை மதிக்க்ப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வேண்டும். அரசியல் தீர்வுக்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். தமிழர் மீதான அடக்குமுறை னிறுத்தப்படவேண்டும். இராணுவமே வெளியேறு. நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கலை நிறுத்த வேண்டுகோள் விடப்பட்டது.
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சிப் பிரகடனம் :
தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சி் வீரியங் கொண்டது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்தியது.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
தமிழரின் சுயநிர்ணய உரிமை :
1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட இனப்படுகொலை :
4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் நில அபகரிப்பு :
5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.
5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.
5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் :
5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.
5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.
5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.
5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.
திம்பு கோட்பாடுகள் :
இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என இப் பேரணியில் வேண்டுகோள் விடப்பட்டது.
6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்.
6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.
6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.
சர்வதேச மத்தியஸ்தத்துவம்:
6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.
6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.
6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.
மரபுவழித் தாயகம்:
இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.
ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.
அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக உலகுக்கு இந்தப் பிரகடனத்தில் அறிவிக்கிப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் திம்புக் கோட்பாடு வரை மாற்றமடையாத தமிழரின் இலட்சிய எழுச்சியை உலகங் கண்டு கொண்டுள்ளது. அதனைப் போல பொங்குதமிழ் முதல் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணிப் பிரகடனங்களும் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமையை கோரி சர்வதேசத்திடம் அழுத்தமாக பறைசாற்றி உள்ளனர்.
![]()