கட்டுரைகள்

Spare ஸ்பியர் /உதிரி!….. ஏலையா க.முருகதாசன்.

„எனது அண்ணன் வில்லியமை பிரித்தானிய இராஜவம்சத்து வாரிசாகவும்,அவருக்கு உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதிரிப் பாகமாக பயன்படுத்துவதற்காக என்னை கவனமாக வளர்த்தார்கள்.எனக்கு ஒரு வாரிசையும்,அந்த வாரிசுக்கு உடல் உறுப்புத் தானம் செய்வதற்காக ஒரு மகனையும் பெற்றுத் தந்திருக்கிறாய் என்று எனது தந்தை எனது தாயிடம் சொல்லியிருக்கிறார்’

-இளவரசர் *ஹரி* 

Spare (ஸ்பியர் /உதிரி)

ஏலையா க.முருகதாசன்.

சுயசரிதை எழுதுவது என்பது சாதாரண விடயமல்ல.சுயசரிதை என்ற பெயரில் பலர் தமது மேம்பட்ட வாழ்க்கையை தாம் செய்த சமூக நன்மைகளை மட்டுமே எழுதி அதற்கு உள்ளும் புறமும் மூடிமறைப்பற்ற இரகசியங்கள் அத்தனையும் வெளிப்படுத்தி நிற்கும் சுயசரிதை எனப் பெயரும் இட்டுள்ளனர்.

சுயசரிதை என்றால் எழுதுபவரின் இருண்ட பக்கங்களையும் எழுதுதல் வேண்டும்.மேற்குலகினரில் சில முக்கியமானவர்கள் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள் அதில் தாம் செய்த தவறுகளை,தமது ஒழுக்கக் கேட்டை,செய்த துரோகங்களை,தமது தன்னினச் சேர்க்கையை மாற்றான் மனைவியுடன் இன்புற்றிருந்தமை போன்ற இப்படிப் பலவற்றையும் சேர்த்துத்தான் எழுதியிருக்கிறார்கள்.

தமிழர்களின் சுயசரிதை எழுதுதலுக்கும்,மேற்குலகினரின் சுயசரிதை எழுதுதலுக்கம் மிக மிகப் பாரிய வேறுபாடு உண்டு.தமிழர்களால் சுயசரிதை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

பல வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் ஆனந்தவிகடனில் (!971களில்) „நான் ஏன் பிறந்தேன்’ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதுவதாகச் சொல்லி எழுதினார்.ஆனால் அது சுயசரிதையே அல்ல,அதில் திமுக தலைவராக இருந்த சி.என் அண்ணாத்துரை(பேரறிஞர் அண்ணா) அவர்களின் வழிகாட்டல், திமுக கட்சியின் உட்பூசல், அக்கட்சியிலிருந்து தான் வெளியேறியமை,கலைஞர் கருணாநிதி தனக்கெதிராகச் செய்த சூழ்ச்சி,மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டிளயமை, தனது சினிமா வாழ்க்கை,தான் நன்மை செய்வதற்கே பிறந்தவன் போன்றவற்றை மட்டுமே எழுதியிருந்தாரே தவிர,தனது தவறுகளை அவர் அதில் ஒப்புவிக்கவில்லை,ஒரு வார்த்தைகூட எழுதவில்லை.

எம்.ஜி.ஆர் என்றவுடன் பொதுவெளியில் அவர் மக்கள் திலகம்,கர்ணனைப் போல அள்ளிக் கொடுத்த பொன்மனச் செம்மல் என்றுதான் தெரியுமே தவிர அவர் சினிமா நடிகைகளில் பலரை தனது காம இச்சைக்கு பலியாக்கியவர் என்று துணிந்து பொது

வெளியில் பேசுமளவுக்கு தமிழ்நாட்டில் யாருக்குமே பெருந்துணிவு இல்லை. அப்படிப் பேசப்படும் செய்திகள்கூட கடலில் விழுந்த மழைத்துளியாகிவிடும்.

ஒரு காலத்தில் இந்துநேசன் என்ற பத்திரிகை அன்றைய நடிகர்களின் சுயரூபங்களை வெளிப்படுத்தி எழுதிய போது, அதனால் கொலையும் இடம்பெற்றது.

மேற்குலகினர் எவரைப் பற்றியும் துணிவுடன் எழுதுவார்கள்.அது சனநாயக உரிமையாகவும் எழுத்துச் சுதந்திரமாகவும் கருதப்படுகின்றது.தமது சுயசரிதையை அவர்கள் எழுதும் பட்சத்தில் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி எழுதுவார்கள்.அவர்களின் வெளிப்படையான பண்பாட்டு படிமங்கள் அதற்குத் தடையாக இருக்காது.

எம்.ஜி.ஆரின் இன்னொரு பக்கத்தை எழுதும் துணிவு தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை.எழுதினால் என்னு நடக்கும் என்பது எழுது  பவருக்கும் தெரியும்.

தமிழர்கள் அந்தளவிற்கு விசாலாமான சீரணிப்பு உள்ளவர்கள் அல்ல. மது அருந்துவதையும்,பாலியல் தொடர்புகளையும் ஒரு பொருட்டாகவே மேற்குலகினர் பார்க்க மாட்டார்கள். தமிழர்களில் யாராவது சுயசரிதை எழுதப் போய் அதில் எழுதுபவர் நான் சிறு வயதில் எனது பெற்றோருக்குத் தெரியாமல் சாராயம்,கள்ளுக் குடித்தேன் இப்பொழுதும் குடித்துக் கொண்டிருக்கிறேன்,பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்று எழுதினால் எழுதுபவரின் குடும்பம் தொடக்கம் சமூக மட்டத்தில் பாரிய விளைவுகளை தூற்றல்களை அவர் சந்திக்க வேண்டிவரும்.

மகாத்மா காந்தியின் சுயசரிதையை வாசித்த போது எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது உண்மைதான்.1965-66 களில் நான் கொச்சிக்கடை, சிலாபம் என்ற ஊர்களில் இருந்த போது இந்தச் சயசரிதையை வாசித்து முடித்தேன்

அதில்கூட மகாத்மா காந்தி தனது வாழ்வில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஒளிமறைவின்றி எழுதினாரா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உண்டு.

உலகில் உள்ள சராசரி மனிதர்களைவிட,இராஜவம்சத்து மனிதர்கள் வித்தியாசமானவர்கள் அல்ல.காலம் காலமாக மக்களை ஆட்சி செய்த காரணத்தினாலும்,படைகளை வைத்திருந்த காரணத்தினாலும்,தண்டனைகளை வழங்குகின்ற அதிகாரத்தின் காரணத்தினாலும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கி அந்த அச்சத்தின் காரணமாக மக்கள் பணிந்து போகின்ற வாழ்க்கையைத் தொடர்ந்ததனால் பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக இராஜவம்சத்தவரைப் போற்றும் நிலைக்குள்ளாகியுள்ளார்கள்.;;

பொதுவாக ஒவ்வொரு சராசரி மனிதனின் மனதிலும் இராஜவம்சங்கள் பற்றி,அவர்கள் தங்களைவிட உயர்ந்தவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள் என்ற பிம்பம் அல்லது மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.இராஜவம்சத்தினர் தமக்கான வாழ்க்கையை அவர்கள் அவர்களுக்காக வாழ்வதே இல்லை.உலகத்திடமிருந்து

பெற்றுக் கொள்ளும் மரியாதைக்காகவும்,தம்மைப் பற்றி உலக மக்கள் உயர்வாகக் கருத வேண்டுமென்பதற்காகவுமே அவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்கள் சுதந்திரமற்றவர்கள். நடை உடை பாவனை என்ற இராஜ போர்வைக்குள் வாழும் அவர்கள் மனதளவில் அடிமைகள்.

உலகில் யார் சுதந்திரமானவர்கள் என்றால் நாளையைப் பற்றிக் கவலைப்படாமல் அன்றாடம் உழைத்துச் சாப்பிட்டுப் பசி போக்கி நிறைவான நித்திரை கொண்டு எழும் சாதாரண உழைப்பாளிதான் எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாழ்பவன்.

இந்த உணவைத்தான் சாப்பிட வேணும், இவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேணும் இவ்வளவு நேரந்தான் உட்கார்ந்து சாப்பிட வேணும், இவ்வளவு நேரந்தான் நித்திரை கொள்ள வேணும் என்ற திட்டமிட்ட தீர்மானத்துக்கமையவே இராஜவம்ச வாழ்க்கை வரைபடமாக வரையப்பட்டிருக்கின்றது.ஒரு நாளென்ற இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கை,அவர்களுக்கு அறிவுறுத்தலுக்கமையவும் நேரம் குறிக்கப்பட்டதுமாகவும் திணிக்கப்பட்டிருக்கின்றது.

உண்ணும் போதுகூட உணவு பரிமாறுபவர் பக்கத்திலேயே நிற்பார், சாப்பிடுவதைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்.மற்றவர்கள் கவனிக்கும் போது சாப்பிடுவதற்கே கூச்சமாகவிருக்கும்.இதுதான் இராஜவம்ச வாழ்க்கை.

அப்படியொரு வாழ்க்கையைத்தான் பக்கிங்காம் அரண்மனை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.அங்கிருந்துதான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேணும் என்று புறப்பட்டவர்தான் இராஜவம்சத்து வாரிசுகளில் ஒருவரான *ஹரி*

இராஜ வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை,துரோகங்களை,ஓரவஞ்சனையை,சங்கடங்களை வெளிப்படையாக யாருமே சொல்வதில்லை.சொன்னால் அது ஒரு வரம்பு மீறலாகவும் இராஜ குற்றமாகவும் ஒரு காலத்தில் கருதப்பட்டது.இராஜகுடும்பத்து உறுப்பினர்களின் தனிமனித உரிமைகள்,அபிலாசைகள் மறுக்கப்பட்டன.அவர்களின் உணர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன.இராஜவம்ச நியதி,விதி என்ற பாதையில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.நியதிக்கும் விதிக்கும் இடையில் அவர்களின் மனமும் அல்லாடின,வேறு வேறாக நின்றன.

உலக மக்கள் தம்மைத் தன்னிகரில்லாத மனிதர்களாக கருத வேண்டும் போற்ற வேண்டும் பயம் கலந்த மரியாதையை மக்கள் தமக்குத்தர வேண்டும் என்பதற்காக உலக மக்களிடமிருந்:து தம்மை வேறுபடுத்தி அதிஉயரத்தில் தம்மை வைத்துக் கொண்டனர்.

கோடு போட்டு கோட்டுக்குள் நடமாடும் மனிதர்களாக,இராஜவம்சத்துக்கென விதிக்கப்பட்ட சட்டங்கள் கோட்பாடுகள் என்ற நூலில் இயக்கப்படும் பாவைகளாக அவர்கள் வாழ்ந்தார்கள்,வாழ்கிறார்கள்.

அவர்கள் மக்களுக்கு முகம் காட்டும் போது,மக்கள் ஆராவாரித்து மகிழ்தல்,இராஜவம்சத்தினர் மக்களை நோக்கி கைகளை அசைத்தல், அந்த அசைத்தலை இறைவனைக் கண்டதாக புளகாங்கிதம் அடைந்து,பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாக கருதும் மக்களின் மனநிலை இவைகள் யாவும் இராஜவம்சத்தினரின் காப்பரணாகின.

தனது சுவாசப் பைக்கு தேவையான காற்றை உள்ளிழுத்து சுவாசிக்க முடியாத மனிதனின் நிலைக்கொப்ப இராஜவம்சத்து கட்டுப்பாடுகள்,இராஜவம்சத்து உறுப்பினர்களுக்கு இருந்த போதிலும்,தங்கக்கூட்டு கிளிக்கொப்ப, கூடென்றாலும் தங்கக் கூடுதானே என கிளி நினைப்பது போல இராஜவம்ச கட்டுப்பாட்டுச் சிறையை தங்கச் சிறையாகக் கருதி அதற்கு அவர்கள் இசைவாக்கம் பெற்றனர்.

எனினும் பல நாடுகளில் உள்ள இராஜவம்சத்து உறுப்பினர்கள்,இளவரசர்கள் அந்தக் கட்டுப்படுகளை உடைந்தெறிந்து பட்டம் பதவிகளைத் துறந்து சாதாரண மனித வாழ்க்கையை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். தனிமனித சுதந்திர வாழ்க்கையாக ஆகாயத்தில் சிறகடித்துப் பறக்கும் பறவையாக வரித்துக் கொண்டனர்.

இராஜவம்சமல்லாத பெண்ணைத் திருமணம் செய்வதற்காக அரண்மனை வாழ்க்கையைத் துறந்தவர்களும் இருக்கின்றனர்.

இன்றைய நிகழ்கால சமகாலத்தில் தனிமனித சுதந்திரத்தை நாடிச் சென்றவர்தான் பக்கிங்காம் மன்னரான சார்ல்ஸின் இரண்டாவது மகனான *ஹரி* என்பவர்.

இராஜகுடும்பத்து பெண்ணல்லாத அமெரிக்க சீரியல் நடிகையும் ஏற்கனவே திருமணம் செய்தவரும்,கலப்பினப் பெண்ணான மேகனை அவர் காதலித்துத் திருமணம் செய்த போதே பக்கிங்காமில் தனிமனித சுதந்திர எழுச்சி நடைபெற்றது.

மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் அதன் போக்கில் விட்டுவிட்டனர் பக்கிங்காம் அரண்மனையினர்.தனிமனித உரிமையை அலட்சியப்படுத்தியமை,பாரபட்சம் காட்டியமை என இவை யாவும் *ஹரி*யை சிந்திக்க வைத்து,அரண்மனைக்கு வெளியேதான் வந்துவிட்டேன் என *ஹரி*யை உணர வைத்தது, உந்தித் தள்ளிவிட்டது.

உரையாடும் போது வார்த்தைகளை இவ்வளவுதான் பயன்படுத்த வேண்டும்,சிரிக்கும் அளவும் அது தொடரும் நேரமும்,சிரிப்பொலியும் இவ்வளவுதான் என நிர்ணயம் செய்யப்பட்ட வாழ்வுக்கு *ஹரி*யால் வளைந்து இசைந்து போக முடியவில்லை.

அரச வாழ்வுப் புழுக்கத்தின் அல்லலை அனுபவித்த வெளிப்பாடே ஸ்பயர் என்ற *ஹரி*யின் நினைவுக் குறிப்புப் புத்தகம்.இப்புத்தகத்தில் மற்றவர்கள் தன்னை எவ்வாறு நடத்தினார்கள் என்பது மட்டுமல்ல தான் செய்தவற்றையும் ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கின்றார்.

இந்தப் புத்தகத்துக்கு அவர் வைத்த உதிரி என்ற பெயருக்குள் இருக்கும் அர்த்தமே மிக முக்கியமானது.அவரை நோகடித்து மனதை ரணகளமாக்கி சிதைத்த

வெளிப்பாடே அப்பெயராகும்.அந்த வலி ஒரு போதும் ஆறாது.அவருக்கு ஏற்பட்ட உளவியல் தாக்கமே இப்புத்தகம்.

*ஹரி*அணிந்து கொண்டிருக்கும் அரச அணிகலன்களால் அதனை நிவர்த்தி செய்துவிட முடியாது.இராஜ பரம்பரைக்கு உரிய மிடுக்கான பார்வையால் அதனை நீக்கிவிட முடியாது.காலத்தால் அதனை நீர்த்து போக வைக்க முடியாது.*ஹரி*யின் இதயத்தில் ஏற்பட்ட பெரும் தழும்பு.

தனது மூத்த மகனை தனது வாரிசு என்றும்,இரண்டாவது மகனான *ஹரி*யை உதிரியென்றும் மிக மோசமான மன உணர்வுடன் தனது மனைவியான டயானாவிடம் „ எனக்கு நீ ஒரு வாரிசையும்,ஒரு உதிரியொன்றையும் பெற்றுத் தந்திருக்கிறாய் „ என்று தனது தந்தை தாயிடம் சொன்னதாகச் சொல்லிய *ஹரி*தனது அண்ணனுக்க உறுப்புக்களைத் தானம் செய்வதற்காக தான் கவனமாக வளர்க்கப்பட்டதாக சொல்லிக் குமுறியிருக்கிறார்.

உணவிலிருந்து அனைத்திலுமே தனக்கும் அண்ணனுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டதாக *ஹரி* குறிப்பிட்டிருக்கிறார்.

உலகில் எந்தத் தந்தையுமே,தனக்கு எத்தனை பிள்ளைகளிருந்தாலும் ஏதாவது ஒரு பிள்ளையைக்கூட உதிரி என்று சொல்லியிருக்கவே மாட்டார்.

ஆனால் மன்னர் சாரல்ஸ் அவ்வாறு சொல்லியதன் மூலம் இராஜவம்சத்துக்குள் எவ்வளவு மோசமான அணுகுமுறைகள்,பாசத்துக்குப் பஞ்சமான நிலை இருந்திருக்கின்றது என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

மன்னர் சார்ல்ஸ் அப்படிச் சொல்லியிருப்பாரா என்றால் அப்படிச் சொல்லியிருப்பார் என்பது உறுதியானதுதான்.ஏனெனில் *ஹரி* தந்தையைப் பற்றி ஒரு பொய்யைச் சொல்லிவிட முடியாது.

ஆப்கானிஸ்தானில் தான் தலிபான்களைக் கொன்றேன் என்ற உண்மையைத் துணிவுடன் அவர் சொல்லியிருக்கிறார். இந்த உண்மையைச் சொன்னால் உலகளாவிய இஸ்லாமிய உலகத்திடமிருந்து தான் எவ்வளவு வெறுப்பைச் சம்பாதிப்பேன்,இராஜவம்சம் எவ்வளவு நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதையெல்லாம் அறிந்தும்கூட உண்மையைச் சொல்லியிருக்கிறார்.பதினேழு வயதில் தன்னைவிட வயது மூத்த பெண்ணுடன் உடலுறவு கொண்டேன் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.இவ்வாறு சாதாரணமாக எழுதிவிட முடியாது.துணிச்சலைவிட உண்மைதான் முக்கியம்.

தனது சுயசரிதைககுச் சமனான, தனது நினைவுக் குறிப்புக்கு உதிரி என்ற பெயரை வைத்தன் மூலம் தனது கோபத்தை,கவலையை,சீற்றத்தை,அனாதை நிலையை,ஆதங்கத்தை அந்த ஐந்து எழுத்துக்குள் அடக்கி தனது ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிப்படுத்தி தனது சொல்லும் தனிமனித உரிமையை வெளிப்படுத்தி சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *