கட்டுரைகள்

சோதிடமும் அவனும்!….. சங்கர சுப்பிரமணியன்.

இறைவன் இருக்கிறான் என்பதும் இல்லைஎன்பதும் அவரவர் நம்பிக்கை. பெருவெடிப்பின் கோட்பாட்டின்படி அடர்த்தியும் மிகுந்த வெப்பமும் கொண்ட ஒரு தீப்பிழம்பு திடீரென விரிவடைய ஆரம்பித்து இப்பேரண்டம் உருவானது. இந்த விரிவடைவு இன்னும் தொடர்ந்து கொண்டே போவதால் இப்பேரண்டம் எங்கு முடிகிறது என்று எல்லை வகுக்கமுடியா அளவுக்கு விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.இப்படி விரிவடைய ஆரம்பிக்கும்போது அதற்காக அது எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நொடியில் சில கூறுகள் மட்டுமே. இந்த ஆகாயத்தில்தான் எண்ணிலடங்கா சூரிய குடும்பங்களும் அதைச்சுற்றி பல கோள்களும் பால்வீதிகளும் விண்மீன்களும் இருக்கின்றன். அப்படி ஒரு சூரியக் குடும்பத்தைச் சுற்றிவரும் இப்பூமியில் நாம் வாழ்கிறோம். இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு இப்பூமியில் தோன்றிய மதங்கள் இறைவன் என்ற நம்பிக்கையே ஏற்படுத்தியுள்ளது.நாம் வாழும் இந்த சூரிய குடும்பத்திலே உள்ள மற்ற கோள்களில் மனிதனைப்போல் ஓர் உயிரினம் இருக்கிறதா? அது நாகரிகம் அடைந்துள்ளதா? என்பனவெல்லாம் நமக்கு தெரியாது. அப்படியே நம்மைப்போல் ஒரு மனித இனம் வாழ்ந்தாலும் அங்கு இறைவன் என்ற கோட்பாடும் வழிபடும் இடங்களும் உள்ளனவா என்றும் நமக்கு தெரியாது. இந்த பேரண்டம் 14.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சில மில்லி மீட்டர் அளவேயிருந்து விரிவடைய ஆரம்பித்தது விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.இந்த ஆற்றலை விளங்கிக்கொள்ள முடியாமல் அதை இறைவன் என்கிறோம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆற்றலை இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. இந்த சூரிய குடும்பத்தில் சுழன்றுவரும் கோள்களின் அடிப்படையில் சில கணிப்புகளை செய்துள்ளார்கள். இந்த கணிப்புகளை மனிதவாழ்வுடன்தொடர்புபடுத்தி மனிதவாழ்வில் என்னென்ன நிகழும் என்றும் கணக்கிட்டுள்ளார்கள்.இந்த கணக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறந்த நேரத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது என்கிறார்கள். இது எவ்வளவு தூரம் பலிக்கிறது என்பதை நூற்றுக்கு நூறு சொல்லிவிடவும் முடியாது. இதைத்தான் சோதிடம் என்கிறார்கள். இதை அவனுக்கு நிகழ்ந்த சில விடயங்களின் அடிப்படையில் பார்ப்போம். அவன் பிறந்தவேளை வீட்டின் கூரையில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியதாம். இதனால்தான் அவனுக்கு நாகராஜன் என்று பெயர் வைத்தார்களாம்.

பனைமரத்தில் தேள் கொட்டினால் தென்னமரத்துக்கு நெரிகட்டியதைப்போல அந்த கடவுள் கழுத்தில் பாம்பு இருப்பதற்கும் அவன் பிறந்தநேரம் அவர்கள் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தம் உள்ளது. அவன்பிறந்த ஊருக்கு வடக்கே நாற்பது கிலோமீட்டரில் அக்கடவுளின் கோவில் இருக்கும் ஊர் உள்ளது. இதுதான்ஊர்க்காரணம் சொல்வதுபோல் அவன்பெயர்க்காரணம்.அப்போது இவன் இந்த நாட்டில் இருக்கமாட்டான் வெளிநாடு போய்விடுவான் என்று சொன்னார்களாம். ஆனால் அவன்வெளிநாடு வந்தது நாற்பது வயதுக்கு மேல்தான் என்பது வேறு கதை.பிரபலமான கைரேகை நிபுணர் ஒருவர் அவன் கையை பார்த்து ஒரு விதை ஒன்றை அவனது பதினேழு அல்லது பதினெட்டு வயதில் ஊன்றி வைத்தார். அவ்விதை பசுமரத்தாணி போல் பதிந்து வளர ஆரம்பித்தது. அப்படி என்ன விதையை ஊன்றினார்?அவனுக்கு ஆகாயவிமானம் வாங்கக்கூடிய பலன் உள்ளது என்றார்? அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆகாயவிமானத்துக்கே சொந்தக்காரனாகப் போகிறான் என்றால் சும்மாவா? அவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றியதால் வாழ்வில் பல அரிய வாய்ப்புக்களை இழந்தான். சரி, இனி கடைப்பிடிக்க சொன்ன வழிமுறைகளைப் பார்ப்போம்.

ஆகாயவிமானம் வாங்கவேண்டும் என்றால் அதை வாங்கும்வரை எந்த வாகனமும் வாங்கக்கூடாது என்றார் சோதிடர். அதை அப்படியே ஏற்ற அவனும் சைக்கிள், மொபெட், ஸகூட்டர் மற்றும் மோட்டர்பைக் என்று எதையுமே சொந்தமாக வாங்கவில்லை. இன்று அவனோ பகுத்தறிவு பேசித்திரிகிறான். எதையும் வாங்காமலே வெளிநாட்டுக்கும் வந்துவிட்டான்அதற்குமேல் தாக்குபிடிக்க முடியவில்லை. அவன் சென்ற நாட்டில் வேலைக்கு செல்ல வேண்டுமெனில் கார் வாங்கியே ஆகவேண்டும். எனவே வேறு வழியின்றி கார் வாங்கினான்.ஒருவேளை அந்த காரையும் வாங்காமல் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பாவித்திருந்தால் ஹெலிகாப்டர் வாங்கியிருப்பானோ என்னவோ? அத்தோடு ஆகாயவிமானம் வாங்குமளவுக்கான முன்னேற்றம் தடைபட்டதாக நினைத்தான். சரியான மாங்காமடையனாக இருப்பான் போலிருக்கிறதே என்று நீங்கள் அவனை எள்ளி நகையாடுவது தெரிகிறது. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்.ஆனால் இந்தியாவில் அவன் நண்பர்கள் அப்போது பலர் கார் வாங்கவில்லை என்பதை எண்ணும்போது கைரேகை நிபுணர் சொன்னதை பின்பற்றியதால்தான் கார் வாங்கும் நிலைக்கு வந்துள்ளதைஎண்ணவைத்தது. இனி சோதிடம் பலிக்குமா பலிக்காதா? என்பதை அவனுக்கு நடந்த நிகழ்வுகளில் இருந்து பார்ப்போம். கடந்த ஆண்டு ஒருநாள் மண்ணுலகை விட்டு விண்ணில் பயணித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி அவனை உலுப்பி பயணத்தை தடுத்துவிட்டார்.சற்று தாமதித்திருந்தால் ஆண்டவனைப் பார்க்காவிடினும் குறைந்த பட்சம் ரம்பை, ஊர்வசி, திலோத்துமையை சந்தித்து ஒரு ஷெல்பியாவது எடுத்து வந்திருப்பான். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும் என்பதுபோல் ஷெல்பி எடுக்காத குறை அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது.இந்த விண்வெளிப் பயணத்தை சற்று விரிவாகச் சொல்லவேண்டும். காலை சுற்றுண்டியை முடித்து எழுந்தவுடன் இப்பயணம் தொடங்கியது. விண்வெளியில்அவனைச் சுற்றி கண்களை கூசவைக்கும் அளவுக்கு பேரொளி. மிகவும் மகிழ்ச்சியுடன் மேல் நோக்கி படிக்கட்டுல் ஏறிச்செல்வது போல் போய்க் கொண்டிருந்தான். அவன்பயணம் வீட்டில் தடுக்கப்பட்டது. ஏதோ ஒரு சத்தம் கேட்டு வேறு இடத்தில் இருந்த மனைவி ஓடிவந்திருக்கிறார்.வியக்கும் படியாக எந்தவிதமான சிறு சிராய்ப்புக்கூட இல்லாமல் கைத்தாங்கலாக மேஜை நாற்காலிகளில் அடிபடாதவாறு மேஜையின் அடியில் யாரோ அவனை படுக்க வைத்திருக்கிறார்கள். ஒருவேளை மறைந்த அவன் தாய் வந்து தாங்கிப் பிடித்திருப்பாளோ? தாங்கிப்பிடித்தவளால் பிரிந்து சென்றிருந் மூச்சுக் காற்றைத் தாவிப்பிடிக்க முடியவில்லை. ஆஹா… என்ன அற்புதம். தாங்கிப் பிடித்தவளால் தாவிப்பிடிக்க முடியவில்லை. எனக்கு எழுதவும் வருகிறதே.ஆனால் அவன் மனைவி போட்ட கூச்சலால் கூட்டைவிட்டுச் சென்றிருந்த ஆவி வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என்ற பாடலுக்கு வாய்ப்பில்லாமல் திரும்பவும் கூட்டுக்குள் புகுந்து கொண்டது. கண் விழித்த அவன்என்ன ஆச்சு? மேஜைக்கு அடியில் எப்படி வந்தேன்? நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்? என்று கேட்டவனுக்கு அவளின் பதில் நடந்ததை உணர்த்திற்று.அவன் விண்வெளிப்பயணத்தால் ரெம்பவே அவன் குடும்பத்தினர் ஆடிப்போயினர். இதன் வெளிப்பாடு இந்தியா சென்ற அவன் மனைவி புதுக்கோட்டையில் மிகவும் பிரபலம் என்று சொல்லப்படும் பிரபல சோதிடரிடம் சோதிடம் கேட்டிருக்கிறாள். பிரபலம் என்பதைவிட அவனது மாமனார் ஊரான மதுரைக்கும் அவன் மகனின் மாமனார் ஊரான காரைக்காலுக்கும் நடுவில் உள்ளது அவ்வூர். அப்போது சோதிடம் சொன்ன சோதிடர் அவனுக்கு கெடு வைத்திருக்கிறார்.கைரேகை நிபுணர் சொல்லி கார் வாங்கும்வரை வந்ததை நம்பும்போது சோதிடர் சொல்வதை நம்பித்தானே ஆகவேண்டும். நம்புவதற்கு தக்க சான்று உள்ளது. அவன் சென்ற ஆண்டு விண்வெளிப் பயணம் மேற்கொண்டு திரும்பியதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு அவன்இம்முறை தேவலோக நாட்டிய தாரகைகளையும் ஆண்டவனையும்காணலாம் என்ற ஆவலுடன் இருக்கிறான்.ஆனால் அவன் குடும்பத்தினர் பெரும்பீதியில் இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இதற்கு முன்னும் விண்வெளியில்தான் பயணித்தான். திட்டமிடப்பட்டிருக்கும் அடுத்த பயணமும் விண்வெளியில்தான் என்று பிரபல சோதிடர் அழுத்தமாகச் சொல்லியும் இருக்கிறார். அவர் மண்ணைத் துளைத்துக் கொண்டு செல்வான் என்று சொல்லியிருந்தால் நரகத்தைப் பற்றி சிந்திக்கலாம்.இந்த விண்வெளிப்பயணம் எல்லாமே ஒரே முறையில் முதலிலேயே வெற்றியடைவதில்லை என்பதை நாம் அறிவோம். எத்தனை முறை சந்திரனுக்கு விண்கலன்களை அனுப்பி வைத்தார்கள் எத்தனைமுறை செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்ததே நம்மால் அறியமுடியும்.இதை மெய்ப்பிக்கும்படியே அவனதுவிணவெளிப் பயணமும் எடுத்த எடுப்பில் வெற்றியைத் தராது என்பதை சோதிடர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என அவன் எண்ண வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு அவன் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் குடும்பத்தினர் தலையீடு காரணமாக தோல்வியைத் தழுவியதல்லவா?ஆனால் இவ்வாண்டு மே மாதத்தில் ஒரு பயணம் உள்ளது என்றும் அதுவும் தோல்வியடைந்தால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்றும் சோதிடர்சொல்லியிருக்கிறார். ஏனென்றால் தோல்வி அடைந்தால் அவனுக்கு அடுத்த ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் விண்வெளிப் பயணம் செல்ல நூற்றுக்கு நூறு வாய்ப்புள்ளதாகவும் கூறியிருக்கிறார். ஓருவேளை அவனுக்கு அடுத்து வரும் விண்வெளிப் பயணங்களில் வெற்றி கிட்டினால் நன்றாக கணித்து சொல்லும் சோதிடர் அவர் என்பது உறுதியாகிவிடும. இதைச் சொல்ல அவன் அப்போது இல்லாதுபோனாலும் சோதிடம் உண்மை என்பது தெரியவரும்.உண்மையாகும் பட்சத்தில் அவன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இதனைக் கேள்விப்படுபவர்கள் எல்லாம் புதுக்கோட்டை சோதிடரை நோக்கி படையெடுப்பார்கள். போகும்போது நாலுபேருக்கு நல்லதை செய்யவேண்டும்என்பதால் அவன் மூலம் இந்த சோதிடரால்நாலுபேருக்கு அந்த பலன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.-சங்கர சுப்பிரமணியன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *