கட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!…. ( இரண்டாம் பாகம் )…. அங்கம் – 45 …. முருகபூபதி.

2001 இல் ஆரம்பித்த தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தின் உள்ளும் புறமும் !

முருகபூபதி.

இந்த 45 ஆவது அங்கத்திற்குள் பிரவேசிக்க முனைந்தபோது, அண்மையில் வாசித்த சில ஊடகங்களில் நேர்ந்திருந்த எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்தின.

எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளாக உருமாறினால் பெரும் சிக்கல்தான். கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம், ஜெயகாந்தன், விந்தன் முதலான எழுத்தாளர்களும் ஆரம்பத்தில் பத்திரிகைகளில் ஒப்புநோக்காளர்களாக பயணித்தவர்கள்தான்.

அவர்களின் பாதையில்தான் நானும் 1977 ஆம் ஆண்டில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக பணியை ஆரம்பித்திருந்தேன். அச்சமயம் அங்கு என்னோடு தெரிவானவர்தான் வீரகத்தி தனபாலசிங்கம். பின்னாளில் வீரகேசரி துணை ஆசிரியரானார். அதன்பிறகு தினக்குரல் நாளேட்டில் முதலில் செய்தி ஆசிரியராகவும், அதன்பிறகு பிரதம ஆசிரியராகவும், அதன்பின்னர் மீண்டும் வீரகேசரியில் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். எனினும், அவரது கரம் இன்னமும் ஓயவில்லை. தொடர்ந்தும் ஊடகங்களில் அரசியல் விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அன்று ஒப்புநோக்காளராக வீரகேசரியில் இணைந்து பின்னர் ஆசிரிய பீடத்திற்கு வந்து, 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்ந்து எழுதிவருகின்றேன். எனது ஆக்கங்களை எழுதுகின்ற அதேசமயம், பலரதும் படைப்புகளையும் ஒப்பு நோக்கியும் திருத்தியும் செம்மைப்படுத்தியும், கணினியில் பதிவேற்றிக்கொடுத்தும் வருகின்றேன்.

இது எனக்கு ஒரு மேலதிக வேலைதான். இருந்தாலும் செய்யவேண்டியிருக்கிறது. அதனால், அச்சு ஊடகங்களில் வரும் ஆக்கங்களை படிக்கும்போது எழுத்துப்பிழைகளே முதலில் கண்களை துருத்திக்கொண்டு தெரியவருகிறது.

அண்மையில் ஒரு அச்சு ஊடகத்திற்கு நான் எழுதியிருந்த ஆக்கத்தில் நாம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் என்று அச்சாகியிருந்தது.

மற்றும் ஒரு அன்பர் எழுதிவரும் அரசியல் விமர்சனத்தொடரிலும் அடிக்கடி இந்த எழுத்துப்பிழைகளை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஒரு அரசியல் கட்சியின் பின்புலம் என வந்திருக்கவேண்டியது. பின்புறம் என அச்சில் வந்திருந்தது. பின்புலத்திற்கும் பின்புறத்திற்கும் வித்தியாசமிருப்பதை அதனை ஒப்புநோக்கியவர் அறியவில்லையா…?

அதே தொடரில் சுமந்திரன் என வந்திருக்கவேண்டியது சுரேந்திரன் என வந்திருந்தது.

நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் ஒரு எழுத்துப் பிழையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகளை எரியூட்டி அழிக்கநேர்ந்தது. இது பற்றி ஏற்கனவே எழுத்துலகில் சனிபகவான் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

இக்கட்டுரை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளது.

ஒரு தடவை மகாகவி பாரதியார் பற்றி நான் வீரகேசரிக்கு எழுதிக்கொடுத்த கட்டுரையில் ஜார் மன்னர் என குறிப்பிட்டிருந்தேன். ஆசிரிய பீடத்திலிருந்த ஒருவர் அதனை ஜார்ஜ் மன்னர் எனத்திருத்தி அச்சுக்கு கொடுத்திருந்தார். ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த காலத்தில்தான் அக்கட்டுரையை எழுதியிருந்தேன்.

எனினும், எனது கண்ணிலிருந்தும் தப்பித்தான் அந்த எழுத்துப்பிழையுடன் குறிப்பிட்ட கட்டுரை வீரகேசரியில் வெளியானது.

அச்சில் வெளியாகும் ஊடகங்களில் தவறுகள் நேர்ந்தால், பின்னர் குறிப்பிட்ட தவறை அடுத்தடுத்து வரும் வெளியீட்டில்தான் சுட்டிக்காண்பித்து ஆசிரிய பீடம் வருத்தம் தெரிவிக்கும். இந்த நடைமுறை முன்னர் இருந்தது. ஆனால், இந்த அவசர யுகத்தில் இது சாத்தியமில்லைப்போலத் தெரிகிறது……

இனி இந்த 45 ஆவது அங்கத்திற்கு வருகின்றேன்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடாக 2000 ஆம் ஆண்டு இறுதியில் சிட்னியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்காக அங்கே சென்றிருந்தேன்.

அப்போது நண்பர் த. கலாமணி, யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடாக கிடைத்த புலமைப்பரிசிலில் சிட்னிக்கு வருகைதந்திருந்தார். அவரது

குடும்பத்தினரும் வந்திருந்தனர். இவர்கள் சிட்னி ஹோம்புஷ்ஷில் ஒரு வாடகைக் குடியிருப்பில் வாழ்ந்தனர்.

சிட்னியில் கலாமணியின் வீட்டிலே தங்கியிருந்து ஒரு மாலை வேளையில் அந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். எழுத்தாளர்கள் சந்திரகாசன், செ. பாஸ்கரன், நாடகக் கலைஞர் மனோகரன், ஒளிப்படக்கலைஞர் பரிமளநாதன் உட்பட வேறு சிலரும் வந்திருந்தனர்.

கலாமணி தனது இசை நாடகம் பூதத்தம்பியை எழுத்தாளர் விழாவில் மேடையேற்ற விரும்பினார். சந்திரகாசன் தனது ஒரு பொல்லாப்பும் இல்லை என்ற நவீன நாடகத்தை மேடையேற்ற விரும்பினார். அதற்கான ஒத்திகைகளையும் அவர்கள் அதன் பின்னர் மேற்கொண்டனர்.

அந்தக்கூட்டம் முடிந்தவேளையில் செல்விகள் பாமதி சோமசேகரம், யசோதா பத்மநாதன் ஆகியோர் வந்து என்னை அழைத்துச்சென்றனர்.

எழுத்தாளர் விழாவில் போர்க்காலமும் பெண்களும் என்ற தலைப்பில் பேச வருமாறு அவர்களை அழைத்தேன். மெல்பனில் எவரும் அந்தத்தலைப்பில் பேசுவதற்கு தயங்கியமையால்தான் அவர்களிடம் கேட்டேன். அவர்களும் மறுத்துவிட்டனர்.

நீடிக்கும் போரினால் பாதிக்கப்படப்போகின்றவர்கள் பெண்கள்தான் என நன்கு தெரிந்திருந்தும், எழுத்தாளர் விழா கருத்தரங்கில் அந்தத் தலைப்பில் பெண்கள் பேசுவதற்கு தயங்கியது எனக்கு பெரிதும் ஏமாற்றமாகவிருந்தது.

அந்தத் தலைப்பில் பேசுவதற்கு தேவைப்படும் குறிப்புகளையும் அவர்களுக்கு கொடுப்பதற்கு நான் தயாராகவிருந்தேன்.

அந்தத்தலைப்பில் பேசினால் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கநேரும் என்பதனால் பெண்கள் எவரும் பேசுவதற்கு முன்வரவில்லை.

அன்று கலாமணியின் வீட்டில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர், வெளியே சென்று “ கொண்டோடி சுப்பர் “ வேலையை விசமத்தனமாக செய்துவிட்டார்.

எமது விழாவுக்கு தானும் ஒரு நாடகத்துடன் வருவேன் எனச்சொன்னவர் பின்னர் வரவேயில்லை.

கலாமணியின் பூதத்தம்பி இசை நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் ஒரு மாணவி நடிக்க முன்வந்து ஒத்திகைகளுக்கும் வந்துள்ளார்.

பின்னர் யாரோ கொடுத்த அழுத்தங்களினால், இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டார்.

அதனால், கலாமணி அசௌகரியங்களுக்குள்ளானார். இறுதிநேரத்தில், மற்றும் ஒரு மாணவியை தேடிக்கண்டு பிடித்து இரவு பகலாக பயிற்சி கொடுத்து நாடகத்திற்கு தயார்ப்படுத்தி மெல்பனுக்கு அழைத்துவந்தார். அத்துடன் பின்னணி இசைக்கலைஞர் ஒருவரையும் அழைத்து வந்தார்.

குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர் விழாவின் இரண்டாம் நாள் மெல்பன் பண்டுரா பூங்காவில் ஒடியல் கூழ் விருந்துடன் கவியரங்கிற்கும் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.

ஒடியல் கூழ் செய்து தருவதாக முதலில் வாக்குறுதியளித்த ஒரு அன்பர், இறுதி நேரத்தில் எனது வீட்டிற்கே வந்து தனக்கும் அழுத்தங்கள் இருப்பதனால், “ முடியாது “ என கையை விரித்தார்.

தமிழ் பேசும் தமிழ் எழுத்தாளர்கள்தானே ஒன்றுகூடப்போகின்றோம். தமிழ் சமூகம் – கலை – இலக்கிய – ஊடகம் – தேடல் குறித்துத்தானே உரையாடப்போகின்றோம். அவ்வாறிருக்க, ஏன் அதில் பங்கேற்பவர்களுக்கு “ செல்லவேண்டாம் “ என அழுத்தம் கொடுக்கிறார்கள் அந்த படித்த மனிதர்கள் ( ? ) என்ற யோசனைதான் எனக்கு வந்தது.

அத்தகைய அழுத்தங்களை கண்டு பின்வாங்காமல் சிட்னியிலிருந்து நாற்பது பேருக்கு மேல் வந்தனர். கவிஞர் அம்பி, மருத்துவர் வாமதேவன் ஆகியோர் சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் அண்ணரின் வீட்டில் தங்கினர்.

பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் தம்பதியரும் ஏனையோரும் அவரவர் நண்பர்கள் வீடுகளில் தங்கினர்.

கலாமணியும் குடும்பத்தினரும் எனது வீட்டில் தங்கினர்.

எழுத்தாளர் மருத்துவர் தி. ஞானசேகரனும் அவரது துணைவியாரும் அருண். விஜயராணி வீட்டில் தங்கினர்.

எழுத்தாளர் விழா செலவுகளுக்கு அன்பர்கள் பலரும் உதவினர். இறுதி நேரத்தில் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கரின் துணைவியார் மாலா பாஸ்கர் ஒடியல் கூழ் தயாரித்து தந்தார்.

அதில் மீன், இறால், நண்டு கலந்திருந்தமையால், சைவ போசனக்காரர்களுக்காக நான் எலுமிச்சை சாதம் செய்தேன்.

அந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவரையும் இன்றளவும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.

இறுதியில் பெண்களும் போர்க்காலமும் என்ற தலைப்பில் நானே உரையாற்றினேன். அந்த உரையை படங்களின் காட்சிப்படுத்தலுடன் சமர்ப்பித்தேன்.

எமது முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவின் ( 06 -01 – 2001 – சனிக்கிழமை ) முதல் நாள் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை பாருங்கள்.

காலை 9-00 மணி: மங்கள விழக்கேற்றல்.

மௌன அஞ்சலி.

மறைந்த படைப்பாளிகள் – கலைஞர்கள் – உருவப்படக் கண்காட்சி. – புலம்பெயர்ந்தோரின் பத்திரிகை இதழ். மலர் , நூல் கண்காட்சி.

வரவேற்புரை: திருமதி உஷா சிவநாதன்.

விழா தொடக்கவுரை: திரு. லெ. முருகபூபதி ( எழுத்தாளர் விழா அமைப்பாளர் )

அறிமுவுரை: திரு. சண்முகம் சந்திரன் ( மறைந்த படைப்பாளிகள் – கலைஞர்கள் )

அறிமுகவுரை: திரு. எஸ். குணசிங்கம் ( புகைப்படங்களும் ஓவியங்களும் )

அறிமுகவுரை: திருமதி ரேணுகா தனஸ்கந்தா ( பத்திரிகை இதழ். மலர் , நூல்கள் )

காலை 9-30 மணி: கருத்தரங்கு அமர்வு – 1

தலைமை: திருமதி பாலம் லக்ஷ்மணன்.

1. திருமதி ஞானம் ஞானசேகரன்

“சங்க காலம் முதல் சங்கமருவி காலம் வரையில் பெண்களின் நிலைப்பாடு. “

2. திருமதி அருண். விஜயராணி

“ சுதந்திரத்திற்குப்பின் பெண்கள். “

3. செல்வி பாமதி சோமசேகரம்

“தமிழ் தொலைக்காட்சி நாடகங்களும் பெண்களும். “

10-30 மணி: கருத்தரங்கு அமர்வு – 2

தலைமை மாவை நித்தியானந்தன்.

1. திரு. யோகானந்தன்

“ எண்பதுகளில் தமிழில் நாடகம். “

2. கலாநிதி வேந்தனார் இளங்கோ ( வாசிப்பவர் நடராஜா கருணாகரன் )

“ தமிழில் சிறுவர் நாடகம். “

3. கலாநிதி த. கலாமணி

“ தமிழில் இசை நாடகம். “

முற்பகல் 11-30 மணி

கருத்தரங்கு அமர்வு – 3

தலைமை : பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்.

1. சட்டத்தரணி செ. ஶ்ரீகந்தராஜா

“ கிழக்கிலங்கை நாட்டார் இலக்கியம். “

2. தெளிவத்தை ஜோசப் ( கட்டுரை வாசிப்பவர் க. குமாரதாசன் )

“ இலங்கை மலையக இலக்கியம். “

3. திரு. செ. பாஸ்கரன்.

“ ஈழத்து போர்க்கால இலக்கியத்தில் கவிதை. “

பிற்பகல் 1-30 மணி:

கருத்தரங்கு அமர்வு – 4

தலைமை : மருத்துவர் தி. ஞானசேகரன்

1. மதுபாஷினி

“புகலிடத்தில் தமிழ் சிறுகதை “

2. நட்சத்திரன் செவ்விந்தியன்

“ புகலிடத்தில் தமிழ்க்கவிதை “

3. யமுனா ராஜேந்திரன் ( கட்டுரை வாசிப்பவர் – நல்லை. க. குமாரசாமி )

“ புகலிடத்தில் தமிழ் நாவல் “

பிற்பகல் 2-30 மணி

கருத்தரங்கு அமர்வு – 5

தலைமை : கவிஞர் அம்பி

1. செல்வி வித்தியா சண்முகநாதன்

“ அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞரும் இதழ்களும் . “

2. திருமதி சாந்தி மகேசன் ( வாசிப்பவர் திருமதி கலாமணி )

“ அவுஸ்திரேலியாவில் தமிழ் மாணவரும் இலக்கியமும். “

3. திரு. குலம் சண்முகம்

“ அவுஸ்திரேலியாவில் தாய்மொழி பேணலும் சமூக மொழியியல் நோக்கும். “

மாலை 3-30 மணி

கருத்தரங்கு அமர்வு – 6

சட்டத்தரணி த. நா. ஜெகராசசிங்கம்

1. திரு. இ. அரவிந்தன்

“ போர்க்காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர் “ ( கட்டுரை வாசிப்பவர் திரு. தெ. நித்திய கீர்த்தி )

2. திரு. சி. சிற்சபேசன்

“ புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் சமூக அமைவுகள் “

3. திரு. லெ. முருகபூபதி

“ போர்க்காலமும் பெண்களும் “

மாலை 4-15 மணி:

கருத்தரங்கு அமர்வு – 7

 

தலைமை: அ. சந்திரகாசன்.

1. திரு. ரட்ணம் கந்தசாமி.

“ பொதுசன ஊடகத்தில் தொலைக்காட்சியும் வானொலியும். “

2. Dr. நொயல் நடேசன்.

“ தேசிய இனப்பிரச்சினை – பத்திரிகைச் சுதந்திரம் –

தணிக்கை. “

3. Dr. பொன். சத்தியநாதன்

“தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் மொழி வடிவ மாற்றங்கள். “

மாலை 5-15 மணி:

கருத்தரங்கு அமர்வு – 8

தலைமை சட்டத்தரணி செ. ரவீந்திரன்.

1. திரு. வி. வசந்தன்.

“ கலப்பை கலை, இலக்கிய இதழ் “

2. திரு. விக்னேஸ்வரன்.

“உதயம் சமூக அரசியல் விமர்சன இதழ் “

3. திரு. எஸ். கொர்னேலியஸ்.

“ ஈழமுரசு சமூக அரசியல் விமர்சன இதழ் “

இதுவே அன்றைய விழாவின் முதல் நாள் பகல்பொழுது நிகழ்ச்சிகள்.

வேந்தனார் இளங்கோ ( சிட்னி ) , யமுனா ராஜேந்திரன் ( லண்டன் ) தெளிவத்தை ஜோசப் ( கொழும்பு ) ஆகியோர் தமது கட்டுரைகளை அனுப்பி வைத்திருந்தனர்.

கருத்தரங்குகள் முடிவுற்றதும் 1999 ஆம் ஆண்டு அம்ஷன்குமார் தயாரித்து இயக்கிய பாரதியார் ஆவணப்படத்தை காண்பிக்கவிருந்தோம். இந்தப்படம் குறித்து திரு. தில்லைக்கூத்தன் சிவசுப்பிரமணியம் உரையாற்றவிருந்தார்.

கருத்தரங்குகள் நிறைவுறும்போது மாலை 06 மணியும் கடந்துவிட்டது. மெல்பன் பிரஸ்டன் நகர பெரிய மண்டபத்தில் அடுத்த நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் தொடக்கவேண்டியிருந்தது.

அதனால் அன்று பாரதி ஆவணப்படத்தை காண்பிக்க முடியாமல்போனது மிகுந்த வருத்தமாக இருந்தது.

எனினும் அடுத்த ஆண்டு 2002 இல் சிட்னி ஹோம்புஷ் மேற்கு சமூக மண்டபத்தில் நடத்திய இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் குறிப்பிட்ட பாரதி ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சி அறிவிப்பாளராக வானொலி ஊடகவியலாளர் திரு. நவரத்தினம் அல்லமதேவன் தனது பணியை சிறப்பாகச் செய்தார்.

தமிழ் எழுத்தாளர் விழாவின் உள்ளடக்கத்தையோ, அதில் கலந்துகொண்டு உரையாற்றியவர்கள் பற்றியோ சரியாகத் தெரிந்துகொள்ளாமல், அந்த விழாவுக்குச்செல்லவேண்டாம் என வெளியே பிரசாரம் செய்தவர்கள் இறுதியில் கண்டது என்ன..? என்பது இதுவரையில் தெரியவில்லை.

ஆனால், குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், மெல்பனிலிருந்து சிட்னி – கன்பரா – குவின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் வரையில் பரவியது. தொடர்ந்தும் வருடந்தோறும் நடக்கிறது. 2001 முதல் விழாவுடன் அன்று தொடர்புகொண்டிருந்த கலாநிதி வேந்தனார் இளங்கோ, மருத்துவர் பொன். சத்தியநாதன், எழுத்தாளர்கள் தெ. நித்தியகீர்த்தி, அருண். விஜயராணி, தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் ஆகியோர் மறைந்துவிட்டனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் நினைவுகூர்ந்தவாறு இந்த அங்கத்தை அவர்களுக்கே சமர்ப்பிக்கின்றேன்.

 

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *