கட்டுரைகள்

படைத்தவன் எங்கிருக்கிறான்?… சங்கர சுப்பிரமணியன்.

இறைவன் மனிதனைப் படைத்தானா? அல்லது மனிதன் இறைவனை உருவாக்கினானா? என்ற கேள்வி தொன்று தொட்டு இருந்து வருகிறது. முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பதைப் போல். தொன்றுதொட்டு வரும் இக்கேள்வியைப்போல் மனிதனும் இறைவனும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோழியும் முட்டையும் இருக்கத்தான் செய்கிறது.மெய்ஞ்ஞானிகள் இறைவன் இருக்கிறான் என்கிறார்கள். விஞ்ஞானிகள் மாறுபட்டு நிற்கின்றனர். அவன் இன்றி ஒரு அணுவும் நகராது என்கிறார்கள் ஒருசாரர். அணுவில் இருந்துதான் எல்லாமே ஆரம்பம் என்கிறார்கள் மறுசாரர். மெய்ஞ்ஞானிகளுக்கு  பெருங்கூட்டம் என்றால் விஞ்ஞானிகளுக்கு இயற்கையோடு இயைந்ததுதான் வாழ்வு என்றொரு கூட்டமும் இயங்கத்தான் செய்கிறது.இறைவன் உண்டென்பவர்களே சிலசமயங்களில் எவ்வளவு  தூரம் இறைவனை மதிக்கிறார்கள் என்பதையும் நாம் கண்கூடாக காணலாம். ஆலயங்களில்இறைவனைத் தவிர மனிதர்கள் எவரையும் வணங்கக்கூடாது என்பவர்கள்கூட பணம் மற்றும் பதவிகளின் முன் மாறிவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய் இறைவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பட்டம் பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். எப்படி?  இதை சிலர் சொல்லும்போது நம்புவதற்கு கடினமாக இருப்பினும் நாம் கண்கூடாக பார்க்கும்போது நம்பவேண்டியுள்ளது.பணம் மற்றும் பதவிகளின் முன் இறைவன் தன் சிறப்பை இழப்பதோடு இருப்பையும் பறிகொடுத்து பரிதவித்து நிற்கிறான். சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். கண்டதும் வியந்தேன். கோவிலில் இறைவனுக்கு வாகனம் இருக்கிறது.அவன் அமர்ந்து செல்ல தேர் இருக்கிறது. அவன் தலைக்குமேல் அழகான வேலைபாடுகள் கொண்ட குடையும் உள்ளது. இப்படி எத்தனையோ இறைவனின் உடமை.

அப்படிப்பட்ட உடமைகளை இறைவனைத் தவிர வேறு எவராலும் பாவிக்க இயலாது. பாவிக்கவும் விடமாட்டார்கள் பக்தகோடிகள். ஆனால் இப்படியொரு உடமையான இறைவனின் குடையை மனிதருக்கும் பாவிக்கலாம் என்பதையும் அதிலும் இறைவன்முன் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது என்பதையும் அதை பாவிக்கும்போது சாதிபார்க்கும் பக்கோடிகள் சரணாகதி அடைந்து விடுவார்கள் எனவும் அறியலாம். இறைவனிடம் சரணாகதி அடைவது பக்தர்களின் கடமைதான். ஆனால் இங்கு இறைவனை ஒதுக்கிவிட்டு மனிதரிடம் சரணாகதி அடைவதும் நடக்கிறது என்பதை அக்காணொளில் கண்டேன். அபிராமி பட்டர் அன்று பாடிய கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் என்ற பாடலைப் பாடியபோது பக்தர்கள் அடைந்த மகிமையைஇன்றும் பக்தர்கள் அடைந்திருப்பார்கள்.உடனே மாடசாமி அண்ணாச்சி இந்தியாவில்தான் இதுமாதிரி எல்லாம்நடக்கும் சிங்கப்பூரில் நடக்காது என்பார். சிங்கப்பூரில் இருந்தாலும் இறைவன் இறைவன்தான். அவன் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தாலும் இறைவன் இறைவன்தான். அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அதேபோல் எங்கிருந்தாலும் பக்தன் பக்தன்தான்.எல்லாம் சரி, என்னதான் சொல்லவருகிறேன் என்று குழம்பாதீர்கள். நான் காணொளியில் கண்டதைத்தான் சொல்கிறேன். எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே. அதாவது நான் அந்த காணொளியல் கண்ட காட்சியில் மழைபெய்கிறது. மழைபெய்தது  என்றுதான் நினைக்கிறேன். அந்த காட்சியைக் கண்டதும் எப்படி அர்ச்சுணனுக்கு கீழே இருக்கும் நீரில் மரத்தின் பிம்பத்தில் அமர்ந்திருந்த கிளியின் கண்மட்டும் தெரிந்ததோ அப்படித் தெரிந்தது.அப்படி என்னதான் தெரிந்தது? இறைவனின் தலைக்கு மேல் இருக்கவேண்டிய குடையை மழையில் நனைந்துவிடாதபடி ஒருவரின் தலைமீது பக்திசிரத்தையுடன் பிடித்து செல்கிறார்கள். ஆனால் எல்லோரையும் காத்து படியளக்கக்கூடிய இறைவன் மனிதர்கள் பிடித்துச் செல்லக்கூடிய ஒரு சாதாரணக் குடையை ஒருவர் பிடித்துச்செல்ல பரிதாமமாக செல்கிறார். அதிலும் இறைவன் செல்லக்கூடியவேகத்துக்கு குடைபிடிப்பவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.ஆதலால் குடை அவரது தலையை மறைக்க முடியாததால் இறைவன் மழையில்நனைந்தபடி சாதாரண குடைபலனளிக்காமல் பாவம்போல் செல்கிறார். ஆனால் அவரால் படைக்கப்பட்டவரோ இறைவனது குடையை பவ்யமாய் வேறொரோருவருக்கு பிடித்துவர குடையின்கீழ் செல்வர் விருப்பமுடன் செல்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் நாளை இன்னொருவரை இறைவன் அமரக்கூடிய தேரில் அமரவைத்து இழுத்துச்சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.மேலும் மிகவும் முதன்மையானவராயிருந்து அவர் சீக்கிரமே செல்லவேண்டியருந்தால் அவருக்கு பிரசாதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு அதன்பின் இறைவனுக்கு படைப்பார்கள் போல் தெரிகிறது. இதை நானாகச் சொல்லவில்லை இந்த இறைவனின் குடைதான்சொல்லவைக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கின்றான்? என்ற கேள்விக்கு இருக்கிறான் என்ற பதிலை தாராளமாக சொல்ல முடிகிறது.அடுத்து அவன் இருந்தால் இந்த உலகத்திலே எங்கே வாழ்கிறான்? என்ற கேள்விக்கும் சரியான பதிலைச்சொல்ல முடிகிறது? என்ன பதில் தெரியுமா? அவன் பணமிருப்பவர் பையில் இருக்கிறான், அவன் பதவியிலிருப்பவர் கையில் இருக்கிறான். எல்லாம் காலம் கலிகாலம் ஓய் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.எனவே இறைவன் என்பவன் ஆடை ஆபரணம் என்றும் அபிசேகம் அலங்காரம் ஆராதனை என்றும் பூசை புனஷ்காரம் என எதிலும் இல்லை. ஆராவாரம் எதுவுமின்றி அமைதியான இடத்தில் படைத்தவன் இருக்கிறான்.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *