கட்டுரைகள்

„வெளிப்படையான கருத்துப் பகிர்வும் உண்மைகளைப் பேசும் துணிவுமே விசாலமான அறிவைத் தரும்’!…. ஏலையா க.முருகதாசன்.

கண்ணகி கோவலன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் நீண்ட நாட்களாக இருந்தது.எனக்கு அது பற்றி விளக்கம் தேவையென்பதற்காக மின்தமிழ் குழுமத்திடம் கேட்ட போது அதில் அங்கம் வகிக்கும் முனைவர் திருமதி .ஸ்ரீதாஸ் செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.நான் எழுதியதையும் அவர் எனக்கு அனுப்பியதையும் பதிவு செய்துள்ளேன்.

கோவலன், கண்ணகி,மாதவி சம்பந்தப்பட்ட கதையில் கோவலன் கண்ணகியை புறந்தள்ளிவிட்டு மாதவியிடம் சென்றான் என்ற ஒரு வரலாறு தமிழரோடு நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

இரண்டு செய்திகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. மின் தமிழிலோ வேறு எங்கோயோ வாசித்த தகவலை இங்கே பகிர்கிறேன்.செட்டிப் பெண்ணான கண்ணகிக்கு அவளின் 13 வயதிலேயே வணிகனான கோவலனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் என்பது அந்தத் தகவலாகும்.

இரண்டாவது தகவல், தமிழகத்தில் செம்மொழி மகாநாடு நடத்தப்பட்ட போது இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பெண் விரிவுரையாளரால் ஆய்வுக் கட்டுரையொன்று சமர்ப்பிக்கையில்,அதில் கண்ணகிக்கு தாம்பத்ய உறவில் நாட்டமிருக்கவில்லை,அதனால் அவள் கோவலனுடன் உறவில் ஈடுபடாத காரணத்தால் மாதவியைத் தேடிப்: போனான் அது கோவலனின் தவறல்ல என்பதாக சுட்டி நின்ற கட்டுரை ஒன்றை இலங்கையிலிருந்து வெளிவரும் அன்றைய வீரகேசரிப் பத்திரிகையின் மின் பத்திரிகையில் வாசித்தேன்.

அந்தத் தகவல் தொடர்ந்து எனது மனதில் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

பின்பு 13 வயதுப் பெண்ணான கண்ணகிக்கு கோவலனைத் திருமணம் செய்து வைத்ததாக ஒரு செய்தியை வாசித்த போத எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.

13 வயதில் உள்ள ஒருத்தி முழுமையான பருவ மங்கையல்ல அவள் சிறுமி.அவளை வணிகச் செல்வந்தனான கோவலனுக்கு செல்வந்தன் என்ற காரணத்துக்காக அவசரம் அவசரமாக கண்ணகியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்களா என்பது.

அடுத்து,இப்பொழுது உள்ள உணவுப் பழக்க வழக்கம் காரணமாக எழுந்த கோர்மோன் காரணமாக ஒன்பது வயதிலிருந்து சிறுமிகள் பூப்படைந்து வருகிறார்கள். பூப்படைதல் என்றால் என்னவென்று தெரியாத வயதில் மிக வயது குறைந்த சிறுமிகள் பூப்படைந்து வருகிறார்கள்.பூப்படைந்த தமது பிள்ளைகளுக்கு அதன் தாற்பரியத்தை விளக்கிச் சொல்ல முடியாது பெற்றோர் திண்டாடி வருகிறார்கள்.

ஆனால் கண்ணகியின் காலத்தில் பூப்படைதல் என்பது பதினைந்து வயதிலிருந்து 16 வயது வரையுமே பெரும்பாலும் நடைபெற்றிருக்கிறது.

இந்த வயதில் பூப்:படையும் முன்னரே பூப்படையப் போகும் பெண்ணுக்கு பாலியல் கிளர்ச்சி உணர்வுகள் மெதுவாகவே ஆரம்பித்துவிடும்.

பாலியல் கிளர்ச்சி காரணமாகவுந்தான் பூப்படைதல் நடைபெறுகிறது.பதினைந்து, பதினாறு வயதுடைய பெண்கள் நல்ல உடல்காத்திரம் கொண்டவர்களாகவும் பூப்படைதல் ஏன் என்பதை தமது தோழிகளிடமிருந்தோ,சில உறவுப் பெண்களிடமிருந்தோ பூடகமாக அறிந்தும் கொள்வார்கள்.அல்லது அரைவாசி கதையாகவும் அரைவாசி கண்சிமிட்டலிலும் சொல்லி விடுவார்கள்.பருவ மங்கையாகிவிடும் அவர்கள் விளங்காதது போல நடிப்பார்கள்.

திருமணம் வரையும்,திருமணத்துக்கான தேவை என்ன என்பது பற்றி வர்கள் முழுமையாக அறிந்து கொள்வதனால் கணவனுடனான உடல் உறவுக்கு தங்களைத் தயார் படுத்தி தானும் கணவனும் மகிழ்ந்து கொள்கிறார்கள்.

ஆனால் 13 வயதுச் சிறுமியான கண்ணகியிடமிருந்து கோவலன் தனது உடல் தாகத்துக்கு அவன் விரும்பியதைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறதே.

13 வயதில் பூப்படைதல் என்றால் அதன் விளக்கம் தெரியாத வயதில் கண்ணகி பூப்படைந்திருந்தால்கூட அவள் தாம்பத்திய உறவும் அதனால் பெறும் மகிழ்ச்சியை அவளும் பூரணமாகப் பெற்றுக் கொள்ள முடியுமா அல்லது பெற்றோரினதும் பெரியோர்களினதும் சொற்களைத் தட்டக்கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கடமை என்று கோவலனைத் திருப்திப் படுத்துகிறோம் என்று அறியாமலே கட்டளைக்கு அடிபணிந்த நிலையில் கண்ணகி நடந்து கொண்டாளா என்று எண்ணத் தோன்றுகின்றது.

திருமணத்தின் தாற்பரியமே காமமுந்தான், விதிவிலக்காக இருக்கும் சிலரின் வாழ்க்கையை வைத்துக் கொண்டு திருமணத்தின் தேவை கணவன் மனைவியின் தாம்பத்ய உறவல்ல அது முக்கியமல்ல என்று பொய்யுரைத்தல் தவறு.

எனவே கண்ணகி கோவலன் மத்தியில் கண்ணகிக்கு சார்பான ஒரு பூசிமெழுகுதல் அல்லது கண்ணகியின் பெற்றோர் செய்த தவறை வெளியில் சொல்லாத இரகசிய முடிச்சு இருப்பதாகவே ஆழமான ஆய்வு செய்யப்படின் அதனை அறிய முடியும்.

கண்ணகி கோவலனுக்கு தாம்பத்ய மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை என்பது உண்மையானால் இதுவரை காலமும் சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட சில விடயங்கள் புனைவா என கேள்வி எழுகின்றநது.

சில உண்மைகளைக்கூட சில ஆய்வாளர்கள் சொல்லத் தயங்குவார்கள். இவ்வளவு தூரம் பயணித்த கதையில் மூடிமறைப்புக்களும் அவிழ்க்கப்படக்கூடாத முடிச்சுக்கள் உண்டு என்று அறிந்தும் அதனை மூடிறைக்க வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்தால் அது வரலாற்றுத் துரோகமே.எதிர்காலத்துக்கு பொய்யுரைத்ததாகவே கருத இடமுண்டு.தொடர்ந்தும் பொய் பயணிக்க வேண்டுமா?

„தாம்பத்ய உறவென்பது ஒரு ஆணும் பெண்ணும் அதுபற்றி முழுமையாக அறிந்து மனதில் காதலும் உடலில் காமமும் கொண்டு ஓருயிராவதே’

 

எனது கேள்விக்குக் கீழ்வரும் பதிலை அளித்தவர் தமிழகத்திலிருப்பவரும்,மின்தமிழ் குழுமத்தில் இணைந்திருப்பவருமான முனைவர் (கலாநிதி) திருமதி.செ.ஸ்ரீதாஸ் அவர்களாகும், அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

திரு.முருகதாசன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் கேள்விகள் சிலவற்றிற்கு விடை தர முயல்கிறேன்.

1. திருமண வயது – தொல்காப்பியத்தில் – திருமணத்தில் பார்க்கவேண்டிய 10 பொருத்தங்கள் வருமாறு –

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு” – தொல். பொருள். மெய். 25

பத்துப் பொருத்தங்களில் வயதுப் பொருத்தமும் ஒன்று – “ஆண்டு” , ஆண்டு என்பதற்கு இளம்பூரணர், “ஆண்டென்பது, ஒருவரினொருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல், அது குழவிப் பருவங் கழிந்து 16 பிராயத்தானும் 12 பிராயத்தாளும் ஆதல்” என்கிறார்.

எனவே, பண்டைக்காலத்தில் திருமண வயது ஆணுக்கு 16, பெண்ணுக்கு 12 என்று கொள்ளலாம். கண்ணகிக்குத் திருமணமானபோது வயது 12

“…………………………….. மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;

மிக அண்மைக் காலத்தில் கூட (ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குள்) பெண்கள் 15 வயதில் திருமணம் செய்து கொடுப்பது சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது.

2. கண்ணகி கோவலன் திருமணம் – கோவலன் கண்ணகியிடம் காதல் வசப்பட்டவனாக,

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காதறு விரையே! கரும்பே தேனே!

அரும் பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

………………………………………………………

உலவாக் கட்டுரை பல பாராட்டி, தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்” – என்கிறார் இளங்கோவடிகள்.

அதாவது கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் அன்பு பாராட்டி, மகிழ்ந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. காப்பியத்தின் படி, கணவனும் மனைவியும் இன்புற்று இருந்தார்கள்.

மனையறம் படுத்த காதையின் மிகுதிப் பகுதியையும் படித்துப் பாருங்கள்.

“தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்

காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்

நிலையாமை கண்டவர் போல், நின்று.”

அவர்கள் வாழ்க்கை நன்றாகத் தான் போயிருக்கிறது.

3. உங்கள் மடலின் இறுதியில்

“தாம்பத்ய உறவென்பது ஒரு ஆணும் பெண்ணும் அதுபற்றி முழுமையாக அறிந்து மனதில் காதலும் உடலில் காமமும் கொண்டு ஓருயிராவதே” என்று கூறியிருக்கிறீர்கள்.

கண்ணகி கோவலன் அவ்வாறு தான் இருந்திருக்கிறார்கள்.

//4. கண்ணகியில் கூறப்படும் தவறு – அவள் கணவனுக்கு அலுப்பில்லாத இன்பத்தைத் தர மறந்தாள் என்பது. அதாவது, கூடலும் ஊடலும் இணைத்துத் தரவில்லை. எனவே கோவலன் சலிப்படைந்திருக்கலாம். அவள் ஒரு குடும்பப் பெண், அப்படித்தான் இருப்பாள் என்று சமாதானம் கூறப்படுகிறது. கண்ணகியால் கணவனைத் தன்பால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு அவள் கொடுத்த விலை பெரிது.

5. கண்ணகியையும் கோவலனையும் இணைத்து வைப்பதற்கு ஒரு மகவு பிறக்காததும் ஒரு குறை.

6. “கண்ணபோதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ”

கண்ணகியை பெண்களுக்கு உதாரணமாகப் படைத்திருக்கிறார்.

7. கோவலனிடம் காணப்பட்ட குறை – அவன் ஓர் ஒப்பற்ற தலைவன் அல்ல, குறைகளும் நிறைகளும் கலந்த தலைவன். 1. பெண்களிடம் நாட்டம் கொண்டவன். இளங்கோவடிகள், கோவலனை அறிமுகம் செய்யும் போதே “பரத்தையர் வீதியில் திரிதரு கோவலன்” என்று அவனது குறையைக் கூறி வைக்கிறார்.//

8. சிலப்பதிகாரம் எழுந்த காலம் “பரத்தையர் ஒழுக்கம்” மேலோங்கியிருந்த காலம்.

இளங்கோவடிகள் அரியதொரு காப்பியம் படைத்தார் என்பது சிறப்பு. படித்து இன்புறுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *