தமிழக வரலாற்றில் மறைக்க முடியாத உண்மைகள்!…..சங்கர சுப்பிரமணியன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதில்
யாதும் ஊரே என்பது தமிழ் நாட்டில் வாழும்தமிழருக்கும் தமிழரல்லாத மற்ற இனத்தவர்க்கும் நன்றாகவே புரியும். தமிழர் அதைக் கடைப்பிடிப்பதில் பேச்சளவிலா அல்லது மனதளவிலா என்பதுஅதை பேச்சளவில் அல்ல மனதளவில் என்பதை தமிழரும் தமிழரல்லாதோரும் நன்கே அறிவர். ஆனால் யாவரும் கேளிர் என்பதில் தமிழர் எங்கு சென்றாலும் தம்மை தமிழர் கேளிர் என்று சொல்லிக்கொண்டே கேளிராகவே இருக்கின்றனர்.எந்தப் பகுதிக்கு சென்றாலும் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கும் தமிழர் தம்மை தமிழர் தமிழராகவே அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். அந்தந்த பகுதியில்பல்லாண்டு காலம் வாழ்ந்தபோதும் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருந்தாலும் அந்தந்த பகுதிவாழ் மக்களுடனும் அந்தந்த நாடுகளிலும் கேளிராக மட்டுமே வாழ்கின்றனர். அந்தப் பகுதியையோ அந்த நாட்டையோ அபகரிக்க வேண்டும் அதை நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை எல்லாம் தமிழரிடம் என்றும் இருந்ததில்லை.
இனியும் இருக்கப் போவதுமில்லை. எப்படி என்கிறீர்களா? அதுதான் மரபணுவின் பண்பாகும். சான்றாக சொல்ல வேண்டுமானால் ஒன்றைச் சொல்கிறேன். எண்ணிப் பாருங்கள் உண்மையை ஐயமின்றி உணர்வீர்கள். தமிழ்நாட்டை விட்டு பிற பகுதிகளுக்கும் பிற நாட்டிற்கும் போர் தொடுத்துச் சென்று அங்கெல்லாம் வெற்றிவாகை சூடியபின் அவர்களது நிலத்தை அபகரித்து அங்கெல்லாம் தமிழர்களைப் பெருமளவில் குடியேற்றி அவர்களது வாழ்வுரிமையைக் கெடுத்திருக்கிறார்களா?இல்லை என்ற பதிலைத்தான் தமிழர் உட்பட மற்ற இனத்தினரும் கூறுவார்கள். இந்த கருத்தை நன்றாக மனதில் பதித்துக்கொண்டு மேற்கொண்டு கட்டுரையைத் தொடருங்கள். அப்போதுதான் நான் சொல்ல வருவதில் நிறைகுறைகளை ஏற்கும் மனப்பக்குவம் ஏற்படும். பறவைகள் உட்பட்ட உயிரினங்களும் மனிதர்களும் இடம் பெயர்வது இயற்கை. அதைத் தடுக்க இயலாது. இடம் பெயர்வது ஏன் நிகழ்கிறது?ஒரு இடத்தில் வாழ வழியில்லாமல் போகும்போதும் வசதியாக வாழ முடியாதபோதும் இடம்பெயர்வது அவசியமாகிறது. வசதியாகவாழ விரும்புவதில் தவறில்லை. அடுத்தவர்களை அழித்து வாழ்வதுதான் தவறு. எனக்கு வசதி எதுவும் வேண்டாம் எனக்கு தாய்மண் மீதுபற்று அதிகம் என்பவர்களை குறைகூற முடியாது. அப்படி குறைகூற முற்பட்டால் டாக்டர் அப்துல் கலாமையும் குறைசொல்ல வேண்டியதிருக்கும். வசதியாகவாழ புலம்பெயர்வதையும் குறைகூற முடியாது.ஏனென்றால் சொந்த நாட்டுக்குள்ளும் பிறந்ந ஊரைவிட்டு எங்கும் புலம்பெயரக் கூடாது. அதவும் ஏதாவதொரு வசதியை முன்னிட்டுத்தானே புலம்பெயர்கிறார்கள். தமிழர், தமிழர் தாயகத்தை விட்டு மற்ற பகுதிகளிலும் மற்ற நாட்டிலும் குடியேறுகிறார்கள். அப்படி அவர்கள் குடியேறுவது சரி மற்ற இனத்தவர் குடியேறுவது மட்டும் தவறு என்று சொல்லமுடியாது. அப்படிப் பார்த்தால் மற்ற இனத்தவர் தமிழர் நிலத்தில் குடியேறுவதையும் தவறு என்று சொல்லமுடியாது.பின் எது சரி எது தவறு? இதை நாம் மனசாட்சியோடு அனுகவேண்டும். இன்று தமிழர் பல பகுதிகளிலும் பல நாடுகளிலும்பெருமளவில் பற்பல காரணங்களின் அடிப்படையில் குடியேறி இருக்கிறார்கள். இன்னும் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தந்த பகுதிகளிலும் அந்தந்த நாடுகளிலும் வாழும் வம்சாவழித் தமிழரை இது உங்கள் பகுதிகிடையாது இது உங்கள் நாடு கிடையாது. இங்கிருந்து வெளியேறுங்கள் என்றால் அந்த தமிழர் எல்லாம் எங்கு செல்வார்கள்? அவர்களின் நிலை என்ன?அதே நிலை நிலைதான் இன்று தமிழர் பகுதிகளிலும் தமிழர் தாயகத்திலும் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய வேற்று இனத்தவர்களின்நிலை. அவர்கள் எங்கு செல்வார்கள்? நமக்கொரு நீதி மற்ற இனத்தவர்களுக்கு ஒரு நீதியெனில் அது பொதுநீதி ஆகுமா? இப்போது உங்களுக்கு என்னைப்பற்றிஒரு சந்தேகம் எழலாம். அது தவறில்லை. அப்படி எழாவிட்டால்தான் தவறு. அப்படியானால் அது என்ன சந்தேகம்?நீங்கள் மரபணுவால் தமிழனா? (பச்சைத் தமிழனா?) சிவப்புத் தமிழனா? என்றெல்லாம் பகடி பண்ணாதீர்கள். அல்லது தமிழை தமிழரைவிட நன்றாக கற்றுக்கொண்டு தன்னை வேற்று இனத்தவர் என்று கண்டுபிடிக்க முடியாதபடி தமிழர் என்ற போர்வையில் வாழும் தமிழரா என்று கேட்கலாம். அக்கேள்விக்கு மரபணுப்படி நான் பச்சைத் தமிழன் என்பதை உங்கள் கேள்விக்கு பதிலாக்குகிறேன்.இன்னொரு உண்மையையும் இங்கு உரைத்தே ஆகவேண்டும். தமிழர் பகுதியிலும் தமிழர் தாயகத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்வந்து குடியேறிய வேற்று இனத்தவரது வம்சாவழிகளின் நிலைதான் அது. இப்படிப்பட்ட வேற்றினத்தவரின் பாட்டன் முப்பாட்டன் என்று பல தலைமுறையாக இங்கே பிறந்து வளர்ந்து தமிழையே கற்று தமிழரோடு தமிழராக திருமணம் போன்ற பந்தத்தில் இரண்டறக் கலந்து தமது அடையாளத்தையே தொலைத்துவிட்ட வேற்றினத்தவரின் நிலையையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு செடியை வேறோடு பிடுங்கி எறியும் பாதகச் செயலுக்கு ஒத்ததாகாதா அவர்களை வெறுத்து ஒதுக்குவது?
தமிழர் வேறு எவரது நிலத்தையும் அபகரித்து குடியேறவில்லை. அதற்காக வேற்றினத்தவரின் மூதாதையர் தமிழர் நிலத்தை அபகரித்து குடியேறியதற்கு இன்றைய சந்ததியினரை எப்படி குற்றவாளிகளாக ஆக்கமுடியும்? அல்லது வேற்றினத்தவர் தானாகவே வந்து குடியேறாமல் குடியேறவைக்கப்பட்டு இருந்தால் அவர்களின் சந்ததியினரை எவ்வாறு குறைகூற முடியும்? இன்னொரு காரணத்தையும் பார்ப்போம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் நிலம் செழிப்புடன் வளமாக இருந்திருப்பதால் தமிழர் வாழ்வைத்தேடி புலம்பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. இயற்கையின் நியதிப்படி வளமான நமது நிலத்தைநாடி வேற்றினத்தவர்வாழ்வாதாரத்திற்காக வந்ததிலும் தவறில்லை. அப்படி வந்தவர்கள் நிலைத்து விட்டார்கள். மற்றவர்கள் நிலம் வளமாகவும் வாழ்வாதாரத்துடனும் இருந்திருந்தால் அவர்களெல்லாம் புலம்பெயர்ந்து தமிழர் நிலத்தை நோக்கி ஏன் வரப்போகிறார்கள்?இனி உண்மை நிலவரத்தையும் தமிழ்நாடு இன்றுள்ள நிலையையும் கண்டறிவோம். தமிழ் அரசர்கள் ஒருவருக்கொருவர் படையெடுத்து வாழ்ந்தும் வீழ்ந்தும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் வீழ்ந்திருந்த காலத்தில் வேற்றினத்தவரின் படையெடுப்பும் கலாச்சார படையெடுப்பும் நடந்து தமிழர் அடிமையாகினர். வரலாற்றுச் சுழற்சியில் வாழ்வதும் வீழ்வதும் இயற்கை. பாஞ்சாரங்குறிச்சியை ஆண்டான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் குறுநில மன்னன். இன்று அவனின் வம்சத்தின் வழிவந்த ஒருவர் கயத்தாறில் டூரிஸ்ட் கைடாக இருக்கிறார் என்பதையும் அறிந்தேன்.-சங்கர சும்பிரமணியன்.(தொடரும்)
![]()