கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. (தொடர் 35) ….. மௌனஅவதானி.

உளவு நிறுவனங்களின் சதி வேலைகளுக்கு அன்றைய காலத்தில் இருந்த அச்சு ஊடகங்களைவிட இன்று எங்கெங்கும் வியாபித்திருக்கும் சமூக வலைத்தளங்கள் மிகப் பெரிய உதவியைச் செய்து வருகின்றன.

இக்கட்டுரையின் முந்தைய தொடர்களில் ஒரு நாட்டுக்குள் உளவு நிறுவனங்கள் எவ்வாறு அனைத்துக் கட்டமைப்புகளுக்குள்ளும் தமது நாசகார கைகளை விரித்து அந்நாடுகளைத் துவம்சம் செய்கின்றன என்பதை விபரித்திருந்தேன்.

ஒரு நாட்டினுடைய அரசாங்கத்திலிருக்கும் இராஜதந்திரிகளைவிட உளவு நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவர்களாகவும் அது சார்ந்த கல்வியில் புலமை உள்ளவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

உலக நாடுகளில் உள்ள உளவு நிறுவனங்களில் நான்கு நாடுகளின் உளவு நிறுவனமும் அந்த உளவு நிறுவனங்களுக்காக பணியாற்றும் ஒற்றர்களும் மிக தந்திரம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளே பலம் பொருந்திய உளவு நிறுவனங்களாகும்.

இந்த உளவு நிறுவனங்கள் தனிப் பிரிவாக இயங்கி, ஒரு நாட்டினுடைய கட்டமைப்பினுக்குள் ஊடுருவி அவற்றை சீர்குலைப்பது ஒரு முறை.இதற்கு தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் உளவு நிறுவனங்கள் தனித்துவமாக நியமித்த ஒற்றர்களாகும்.

இன்னொன்று அந்தந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தூதரகங்கள் வாயிலாக உளவு வேலையைப் பார்த்தல் ஆகும்.

தனித்துவமாக இயங்கும் உளவு நிறுவனங்களுடன் தூதரங்கள் தொடர்புபட்டவையாகவே இருக்கும்.

இதுபற்றி இக்கட்டுரையின் முந்திய தொடர்களில் குறிப்பிட்டிருந்த போதிலும், குறிப்பிட்டவை மட்டுந்தான் அவற்றக்கான தொகுப்பு என்று கொள்ள முடியாது.

தூதரங்களின் வெளிச் செயல்பாடுகளை கவனிக்கும் ஒரு பொது மகன் தூதரகங்கள் தமது நாட்டினுடைய அபிவிருத்திக்கு உதவி செய்கின்றன என்று நினைக்கலாம் அது சார்ந்த செய்திகள் உள்ளுர் ஊடகங்களிலும் வெளிவருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம்.ஆனால் அதே தூதரங்கள் உளவு வேலையையும் செய்கின்றனவா என்ற கேள்வியை தமக்குள் கேட்பதில்லை.

உண்மையாகவே தூதரகங்கள் ஒரு நாட்டினுடைய நாளாந்த நடவடிக்கையைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றன.கவனித்துக் கொண்டெயிருக்கின்றன என்பதைவிட கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றன என்பதே பொருத்தமாகும்..

ஒரு நாட்டு மக்களை மிகச் சிறந்த நிர்வாகத்தின் மூலம் ஒருங்கிணைந்து வைத்தக் கொண்டும்,மக்களின் வாழ்வியலுக்கான வளமான முறைமைகளை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் நாடுகளில் உளவு நிறுவனங்களின் சதி வேலைகள் தோல்விகளையே தழுவியிருக்கின்றன.

இத்தகு நாடுகளில் அரச நிர்வாகத்தின் போக்கினை விமர்சிக்கம் எதிர்க்கட்சிகள் இருப்பினும் அவைகள் நாட்டினுடைய கட்டமைப்பை வழுவிலக்கச் செய்ய மாட்டார்கள்.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையிலிருக்கும் விமர்சனங்களும் முரண்பாடுகளும் மக்களுடைய நலன்களை நோக்கியும் அபிவிருத்தியை நோக்கியுமே இருக்கும்.

தமது நாடு உலகின்: முதன்மையான நாடாகவும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்ற நாடாகவும் இருக்க வேண்டுமென்பதில் மட்டுமே அவர்கள் ஆளுங்கட்சிக்கு அறிவுரை சொல்வார்கள் விமர்சிப்பபார்கள்.தேசியப்பற்றை அவர்களுடைய விமர்சனங்கள் என்றுமே பாதிக்காது.

இத்தகு நாடுகள் தமது நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களையும் சரி தமது குடிமக்களையும் சரி மிகவும் உன்னிப்பாகவே கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

புலனாய்வாளர்கள் மக்களோடு மக்களாக கலந்து நடமாடுவார்கள்.தொலைபேசிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதுடன் தமது நாட்டில் குடியிருக்கும் வேற்று நாட்டு மக்களின் மொழியிலான தொலபேசி உரையாடல்களை அம்மொழியுடைவர்களை வைத்தே தமது நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பதும் அதற்கென்றே விசேடமான திணைக்களத்தை நிறுவி வைத்திருப்பார்கள்.

ஆனால் பல்லின வாழும் நாடுகளின் ஆட்சி முறையில் பெரும்பான்மை இன அரசுகளின் ஆட்சியில் ஏற்படும் சிறுபான்மையின ஒடுக்குமுறைகளினால் ஏற்படும் சிறுபான்மையின மக்களின் அதிருப்தியினால் ஏற்படும் மன உளைச்சல்கள் கோபங்கள் வேதனைகளை கவனிக்கும் உளவு நிறுவனங்கள் அம்மக்களின் திருப்தியின்மையை தமது ஆயுதமாகப் பாவிக்கத் தொடங்குவர்.

அரசுக்கெதிரான சிறுபான்மையின மக்களின் கருத்துக்களை ஊதிப் பெருப்பிக்க உளவு நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

பெரும்பான்மையின அரசு தமது அரசாட்சியில் எடுக்கும் தவறான முடிவுகளை நாட்டு நலன்கருதி திருத்திக் கொள்வதற்கும் நிரந்தரமான தீர்வினை எட்டுவதற்கும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாட்சியிலுள்ள பிரதிநிதிகளே அரசினை தீர்வினை நோக்கிச்; செல்லவிடாது ஆட்சியைக் கவிழ்க்கின்ற சூழலை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் வாயிலாக உளவு நிறுவனங்கள் மக்களின் கருத்து என்ற போர்வையில் இனவாதக் கருத்தினைப் பரப்புவர்.

பத்திரிகை ஊடகங்களில் ஆசிரியர் பீடங்களில் இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து தாம் நினைத்தவற்றை உளவு நிறுவனங்கள் சாதித்துக் கொள்ளும்.

அரசு எடுக்கும் சிறுபான்மையின இன மக்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய நலன் சார்ந்தவை என்று ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் அதனை மக்களுக்குக் கொண்டு செல்வதோடு நின்றுவிடாது ஊடகத்துறையில் புலமையும் தந்திரமும் மிக்க ஊடகவியலாளர்களை அல்லது இனங்கள் தொடர்பான கல்வியியலாளர்களைக் கொண்டு பெரும் கட்டுரைகளை பெரும்பான்மையின அரசினை முன்மொழிந்து கொண்டிருக்கும் பத்திரிகைளில் ஏழுதிக் கொண்டிருப்பார்கள்.

அதனை வாசிக்கும் பெரும்பான்மையின மக்கள் தேவையற்ற விதத்தில் சிறுபான்மையின மக்கள் போராடுகிறார்கள் என சீற்றம் கொள்வார்கள்.அந்தச் சீற்றத்தை இனவாதமாக மாற்றுவதே உளவு நிறுவனங்களின் சதியாகும்.

பெருபான்மையினம் சார்பான பத்திரிகை ஊடகங்களையும் இணையத்தளங்களையும் பணம்,பெண், பொருள் என்பவற்றை இலஞ்சமாகக் கொடுத்து தாம் நினைத்ததைச் சாதிக்கும் உளவு நிறுவனங்கள் சிறுபான்மையின மக்களின் சார்பான பத்திரிகைகள் இணையத்தளங்களையும் பணம், பெண் பொருள் என்பவற்றை இலஞ்சமாகக் கொடுத்து அரசுக்கெதிராகவும் பெரும்பான்மை மக்களுக்கெதிராகவும் எழுத வைக்கும்.

உளவு நிறுவனங்களின் இச்சதிக் கோட்பாட்டால் நாட்டில் அமைதியின்மை ஏற்படுவது மட்டுமல்ல,அபிவிருத்தியின்மையும் பொருளாதாரச் சரிவும் ஏற்படும்.அதனால் மக்களின் வாழ்வு சீரழியும்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *