அதை இதால் முறியடிக்கலாம்…..முறியடிப்பு ஒன்று!…..சங்கர சுப்பிரமணியன்.


உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்பதைப் போன்று முடியும் என்றால் முடியும் முடியாது என்றால் முடியாது என்ற கொள்கையுடையவன் நான். எல்லோரும் சிற்பத்தை செதுக்கினால் நான் என்னால் அம்மிக்கல் ஆட்டு உரல் போன்றவற்றையாவது கல்லில் செய்வேன். நான் மெல்பனில் பணிபுரிந்த தொழிலகத்தில் பணிசார்ந்ந ஆலோசனைக்காக ஒன்றிற்கு மேற்பட்ட பொற்கிழிகளைப் பெற்றிருக்கிறேன்.விதி வலியது என்பார்கள். அதையும் பார்க்கலாம் என்று அதனுடனும் போராடி பார்ப்பேன். சிறுவயதிலிருந்தே போராட்டமே வாழ்க்கை என்றாகிப் போனதால் எதிர்நீச்சல் என்பது எளிதாகப் போனது. வடிவேலு பாணியில் சொன்னால் ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்றது. யார் எப்படி மாறுவார்கள் என்று சொல்லமுடியாதல்லவா? நம்மைப் பாரட்டி கொண்டாடியவர்களே நம்மை தூற்றவும் செய்யவார்கள்.அப்போதும் நான் வடிவேலைத்தான் நினைத்துக் கொள்வேன் அது வேறவாய் இது நாறவாய். நான் பணிபுரிந்து என்னைப் பாராட்டிய நிறுவனமே எனக்கொரு அநீதி இழைக்க முயன்றது. ஆட்குறைப்பு என்ற போர்வையில் நான் பார்த்த பணியை என்னிடமிருந்து பிடுங்கி அவர்களுக்கு வேண்டியவருக்கு கொடுக்க முயன்றது. அது வேறொன்றுமில்லை. எனது சம்பளத்ததை ஒரு சென்ட் கூட குறைக்காமல் வேறு பணிக்கு என்னை போகச் சொன்னார்கள்.பதினெட்டு ஆட்கள் விண்ணப்பித்து பல தேர்வுகளுக்குப் பின் நான் பெற்ற பணி அது.உற்பத்தியில் பழுது ஏற்பட்டால் உற்பத்தியையே நிறுத்துமளவுக்கு அதிகாரம் கொண்ட பணியைச் செய்த என்னை பத்தோடு பதினொன்றாக பணிபுரியச் சொன்னார்கள். அவர்கள் பார்வையில் அது தவறில்லை. நாம் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டியவர்கள் என்றால் கவனிப்பில் வேறுபாட்டைக் காணலாம் அல்லவா?நானும் சம்பளம் தான் குறைவின்றி கிடைக்கிறதே அதைக்காட்டிலும்பொருப்பு குறைந்த பணியாகவும் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டுருக்கலாம். ஆனால் நாம் அப்படியா? உரிமைக்காக உயிரை விடவும் தயங்காதவர்கள் அல்லவா. மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் ஆனேன். நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினேன். நிர்வாகத்தினர் அனைவரும் ஒருபக்கம். நான் ஒருவன் மட்டும் மறுபக்கம்.என் துறைசார்ந்த அதே பணியை வேறு இடத்தில் கொடுத்தால் மறுக்க இயலாது.தரக்கட்டுப்பாடு என்ற பிரிவில் என்னைவிட இரண்டு நிலை கீழே இருந்தவர்கள் பார்த்த பணியைப் பார்க்கச் சொன்னார்கள். இதை ஆங்கிலத்தில் மென்டல் டார்ச்சர் என்பார்கள். அதுபோன்று மன உளைச்சலை நான்கு மாதங்களாக கொடுத்தார்கள். அந்த எதிர்வினைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டே இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் எந்நிலைப் பாட்டை விளக்கிக் கொண்டிருந்தேன். எனக்கு அப்போது துணை நின்றது எனது ஆங்கிலத்திலூடான சிறிய அறிவுமட்டுமே.குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் அறிவுரை வழங்கினார்கள். பிழைக்க வந்த இடத்தில் அனுசரித்து போகலாமே என்றார்கள். இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஓய்வுபெறும் வயது. நிரவாகத்தில் சட்டப்படி நிறைய பணம் கொடுத்து ஆட்குறைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அதைக்காட்டி கைநிறைய பணம் கிடைப்பதைக்கெடுத்துவிடாதே என்றனர். உன்னை ஒரு சென்ட் கூட கொடுக்காமல் பணிநீக்கம் செய்து விடுவார்கள் என்றும் பயமுறுத்தினார்கள்.நிர்வாகம் எனக்கு பல்முனைத் தாக்குதலை விடாமல் செய்தது. அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் என்னிடம் வந்து தரமற்ற பொருளை தரமானதாகக்கூறி சான்றுச்சீட்டு கொடுக்குமாறு கூறினார். அது எனக்கு விரிக்கப்பட்ட வலை என்பதை உணர்ந்தேன். அவர்சொன்ன காரணம் அப்படி நான் செய்யாவிட்டால் கிட்டத்தட்ட ஐம்பது பணியாட்கள் பணியின்றி அந்த இடம் நின்றுவிடும். அதனால் இழப்பும் நம்மிடம் பொருள் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் கொடுக்கவில்லை என்ற அவப்பெயரும் ஏற்படும் என்றார்.இந்த மாதிரி சூழலை மேற்கொள்ளவே எப்போதும் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பது வழக்கம். அதனால் நான் அவரிடம் இருப்பைப் பயன்படுத்தலாம் என்று வாதாடினேன். இயக்குநரிடம் பேசவே மற்றவர்கள் அஞ்சும்போது இவன் என்னடா என்றால் அவரோடு வாதாடிக்கொண்டு இருக்கிறானே என்று பல கண்கள் பணிபுரிந்தபடியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன. எனக்கோ தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது சாண் போனால் என்ன முழம் போனால் என்ற மனநிலை.திரைப்படம் பார்பதனால் என்னவெல்லாம் நன்மை இருக்கிறது என்பதை அப்போது புரிந்து கொண்டேன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனமொன்று எனக்கு இடுக்கண் களைந்த நட்பு போன்று துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை என்ற வரிகளை காதில் ஓதியது. எத்தனையோ எழுத்தாளர்கள் நூல்களை எழுதி வெளியிடுகிறார்கள். ஆனால் ஒரு நூல் முழுதும் வாசித்து பெறும் அனுபவத்தை இந்த ஓரிரு வரிகள் சொல்லித் தந்துவிடுவதில்லையா? அப்படியானால் அந்த கதைவசனகர்த்தா எவ்வளவு சிறப்புக்குடையவர்?அந்த வரிகள் என்னில் முறுக்கேற நான் இயக்குநரிடம் அமைதியாகச் சொன்னேன். அப்படியானால் தாங்கள் ஏற்பிசைவு தந்து கையொப்பமிடுங்கள் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லே என்றேன். அவர் தனது மொட்டைத்தலையை தடவியபடியே என்னை முறைத்துப் பார்த்தபடியே அகன்றார். என் நண்பர்கள் சிலர் என்னிடம் வந்து உனது மகன்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் உனது மனைவியும் பணிபுரியவில்லை யோசித்துப்பார் என்றார்கள். இந்த பணி எளிதில் கிடைக்குமா என்றார்கள்.அதனால்தான் சொல்கிறேன். நான் இந்தியாவிலிருந்து எளிதாக வந்துவிடவில்லை. முறைப்படியாக பாயிண்ட டெஸ்ட்டில் தேர்ச்சிபெற்று நிரந்தரவதியுரிமையுடன் குடும்பத்துன் குடியேறியவன். இந்த பணியையும் எளிதாக அடைந்து விடவுமில்லை. முறைப்படியாக தேரச்சி பெற்றே அடைந்துள்ளேன். அதனால் என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை இரண்டிலொன்று பாரத்து விடுவோம் என்று உறுதியாக கூறினேன்.நிர்வாகத்தினர் சில ஒற்றர்களை என்னிடம் அனுப்பி மூளைச்சலவை செய்யமுற்பட்னனர். அப்போதுதான் போர்க்களம் என்றால் எப்படி எல்லாம் இருக்கும் என்று புரிந்தது. ஆயுதங்களால் மட்டும் பயன்படுத்தி
போராடுவது மட்டுமின்றி சதிகளையும் முறியடிக்க வேண்டும் என்றநிலையும் உள்ளது என அறிந்தேன். உரிமைக்கு குரல் கொடுக்கும்போது இதையெல்லாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். எதையும் அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் வலியும் வேதனையும் புரியும். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சொல்வதுபோல் வசதியாக வாழ்ந்துகொண்டு வார்த்தைப் பிரயோகம் செய்வது எளிது.(முறியடிப்பு தொடரும)-சங்கர சுப்பிரமணியன்.
![]()