கட்டுரைகள்
யாரைப் பற்றி யார் பேசுவது?….. கம்பவாரிதி இலங்கை …. ஜெயராஜ்!

தமிழக இணையவெளித் தளம் ஒன்றில் ஒரு நபர், பட்டிமண்டபப் பேச்சாளர் பாரதி பாஸ்கரைத் தாக்கி ஓர் காணொலியைப் பதிவிட்டிருந்தார். எங்கோ நடந்;த ஒரு கூட்டத்தில் பாரதி பாஸ்கர், ‘பக்தியை நீக்கிவிட்;டால் தமிழ்மொழி வளம் இழந்;து போகும்’ என்று சொன்னாராம். அதனால் அவர் ‘ஆர்;. எஸ். எஸ்ஸின்’ வழிப்படுத்தலில் இயங்கும் ஒரு ‘சங்கி’யாக மாறிவிட்;டார்; என்று கூறி, அந்த நபர்; அப் பதிவில் கொந்தளித்துப் பேசியிருந்தார்.
சங்க இலக்கியங்களிலோ, திருக்குறளிலோ சிவனோ, முருகனோ, திருமாலோ எங்கும் சொல்லப்படவில்லை என்றும், அதனால் பக்தியை நீக்கினாலும் தமிழ் நிலைத்து நிற்கும் என்றும் பேசிய அவர், முடிந்தால் சங்க இலக்கியங்களிலோ, திருக்குறளிலோ இந்துத்தெய்வங்கள் பற்றிப் பதிவுகள் இருப்பதைக் காட்டமுடியுமா? என்றும் சவால் விட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்தநபர், பிராமணப் பெண்ணான பாரதி பாஸ்கர், தன் பேச்சுகளில் பாரதியார் பாடல்களை மட்டும்தான் பேசிவருகிறார் என்றும், பாரதிதாசன் பாடல்களையோ, ஈ.வே.ரா. பெரியாரின் கருத்துக்களையோ சொல்வதில்லை என்றும் வேறொரு குற்றத்தையும் சாட்டியிருந்தார்.
இவையெல்லாம் திருமதி பாரதி பாஸ்கரை நோக்கி எறியப்பட்ட கணைகள். இதில்; நீங்கள் ஏன் வீணாய் மூக்கை நுழைக்கிறீர்கள்? என்றும்;, பாரதியின் வழக்கில்; அழைக்கப்படாத வக்கீலாய் ஆஜராகவேண்டிய தேவை என்ன? என்றும், பாரதி பாஸ்கரைப் புகழ்ந்துபேசி, அவரிடம்; எதையாவது பெறவிரும்புகிறீர்களா? என்றும், இப்பிரச்சினையில் உள்நுழைந்து உங்களை இனங்காட்ட முயல்கிறீர்களா? என்றும் சிலர் கேட்க நினைப்பீர்கள்.
அதற்கான பதிலை முதலில் சொல்லிவிடுகிறேன். அந் நபர் எறிந்த கணைகள் தனியே பாரதி பாஸ்கரை நோக்கியன அல்ல. அவற்றைத் தமிழ் அறிவுலகத்தை நோக்கி எறியப்பட்ட கணைகளாகவே நான் கருதுகிறேன். எப்படிப் பிட்டுக்கு மண்சுமந்த சிவன் மேல்; பாண்டியன் எறிந்த பிரம்படி எல்லா ஜீவராசிகள் மீதும் பட்டதோ, அதுபோல பாரதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கணைகளைத் தமிழ் உலகத்தினுள் வாழும் எங்கள் எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்விகளாகவே நான் கருதுகிறேன். அதுதவிரவும், நான் புகழ்ந்துதான் பாரதிக்கு இனிப் புகழ் வரவேண்டும் என்று எந்த அவசியமும்; இல்லை. அதுபோலவே, இறைவனால் எல்லாம் தரப்பட்ட எனக்கும், பாரதியிடம்; பெற்றுக்கொள்ள வேண்டியதென்று எதுவும் இல்லை.
அந் நபர்; ஏதோ தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் பேசுவதுபோல் தன் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தபடியால், அவ்விரண்டினோடும்; தொடர்புடையவன் என்ற வகையில், அவரது இப் பதிவுபற்றி நான் சிலவற்றைப் பேசவேண்டியிருக்கிறது. அதனால்த்தான் இக் கட்டுரையை நான் வரையத் தொடங்குகிறேன்.
அண்மைக்காலமாய் தமிழ்நாட்டில், ‘நாத்திகர்கள்’ தங்கள் விருப்பப்படிதான் எல்லோரும் நடக்கவேண்டும்; என்றாற்போலப் பேசியும், எழுதியும்; மற்றவர்களை மிரட்டி வருகிறார்கள். இது அறிவுலகத்திற்கு உகந்த செயலன்று. இத்தகையவர்களின் ‘சண்டித்தனத்;திற்குப்’ பயந்து ‘ஆத்திகச்’ சான்றோர்கள் மௌனித்திருப்பதால்த்தான் இவர்களின் அட்டூழியம் வரவர வளர்ந்து வருகிறது. கருத்துக்களால் அன்றி, மிரட்டல்களால் மற்றவர்களைப் பணியவைக்கும் இவர்களது கீழ்மைச் செயல்களைச் சகிக்க முடியவில்லை.
கட்டுப்பாடில்லாத இணையத்;தளங்கள் வந்தபிறகு, யார், யாரை விமர்;சிப்பது என்று ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது. திருமதி பாரதி பாஸ்கர்; இன்றைய தமிழ்ப் பேச்சாளர்களில் முன்னிலையில் நிற்கும் ஒருவர். அவரது பேச்சாற்றலை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நிதானம், கூர்த்தமதி, உரைத்திறன், ஆராய்ந்து பேசும் அறிவு, கேளாரையும் விரும்பிக் கேட்கச் செய்யும் பேச்சாற்றல், தன் கருத்தை ஆணித்தரமாய் உரைக்கும் நிமிர்வு என அவர் தகுதிகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகையவரை யாரென்றும் தெரியாத இந்த நபர், இணையத்தில் ஓர் வெளியைப் பெற்றுக்கொண்டு விமர்சிக்கிறார்.
என்னே கொடுமை? இந்தக் கொடுமையைத் தமிழ்நாட்டு அறிஞர்களும், பேச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்வோரும், மற்றைத் தலைவர்களும் மௌனித்துப் பார்த்திருப்பது அதைவிடக் கொடுமை. ‘எரிதழல் கொண்டுவா தம்பி அண்ணன் கையை எரித்திடுவோம்;’ என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியின் வீமன் உரைக்குமாப் போல, அந்த நபரின் கருத்தைக் கேட்டு இவர்கள் எல்லாம் கொதித்தெழுந்திருக்க வேண்டாமா? இத்தகைய மூடர்;கள், சான்றோரின் கண்ணியம் காக்கும்; பொறுமையை அவர்களின் இயலாமையாய்க் கருதி ஆட்டம் போடப் பார்க்கிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் ஏதோ ஆட்சிபெற்றவர் போல அந் நபர் கேட்கும் கேள்விகள் நகைப்பைத்தான் தருகின்றன. பாரதி பாஸ்கர் பதிலுரைக்க வாய்திறந்தால், கம்பர் சொன்னாற்போல, ‘மாருதம்; அறைந்த பூளையாய்ப் போவார்’ இந் நபர். ‘நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் நிற்கும் அம் மனிதருக்குச்(?) சில சொல்லவேண்டி இருக்கிறது.
முதலில் சங்க இலக்கியங்களில் இந்துத் தெய்வங்களின் பெயர்கள் இருக்கிறதா? என்று கேட்கும் அவருக்கு, அங்கிருக்கும் சில இந்துத் தெய்வங்களின் பெயர்களை எடுத்துக் காட்டுகிறேன். ஏற்று ஊர்தியான், ஈச்சடை மேனியன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், செம்மேனி எம்மான், கறைமிடற்று அண்ணல், புங்கம் ஊர்பவன், தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், முழு முதல்வன், முழுமுதற் கடவுள், இமையவில் வாங்கிய ஈச்சடை அந்தணன் என்று எத்தனையோ இடங்களில் சங்கப் புலவர்கள் இந்துக் கடவுளர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அது தவிரவும், ஐவகை நிலத்;திற்கும் ஐந்து இந்துக் கடவுளர்;களைத் தெய்வங்களாய் நியமித்து அவர்கள் பாடியும் இருக்கிறார்கள்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் இருந்த, நக்கீரரால் பாடப்பட்ட, சங்கப்பாடல்களில் ஒன்றான ‘திருமுருகாற்றுப்படை’ என்கின்ற நூல், முருகக் கடவுள்மேல் பாடப்பட்ட பக்திப் பனுவலாகவே அமைந்திருக்கிறது. அந் நூலில் சிவன், திருமால், உமை, இந்திரன் ஆகிய தெய்வங்களை எல்லாம் நக்கீரர் பெயர் சொல்லிச் சுட்டியிருக்கிறார்.
திருக்குறளில் இந்துக் கடவுள்;கள் இருக்கிறார்களா? என்று கேட்கிறார் அந்த நபர். நகைப்பதன்றி இதற்கு வேறு என்னசெய்யமுடியும்? அடிஅளந்தான் (திருமால்), தாமரைக் கண்ணான் (திருமால்), செய்யவள் (ல~;மி), இந்திரன், கூற்றம் (யமன்), தவ்வை (மூதேவி), தென்புலத்தார் (பிதிர்கள்) என எத்தனையோ இந்துக் கடவுள்களின் பெயர்கள் திருக்குறளில் பதிவாகியிருக்கின்றன. குறளைப் படித்தால்த்தானே இவையெல்லாம் தெரியவருவதற்கு.
இன்னொன்றையும் சொல்லவேண்டும். பாரதி பாஸ்கர் பாரதியாரைத் தவிர பாரதிதாசன் போன்றோரை மேடையில் சொல்வதில்லை என்கிறார்; அந்த நபர். இந்த நிமிடத்தில் கூட பாரதி பாஸ்கரால் பல பாரதிதாசன் பாடல்களை உடன் சொல்ல முடியும். பலமேடைகளில் அவற்றை அவர்; சொல்லியும் வருகிறார். கேள்வி ஞானம் இருந்திருந்தால்கூட, இவ் உண்மை அந்த நபருக்குத் தெரிந்திருக்கும். தமிழ்ப் பற்றுள்ளவராய்த் தன்னைக் காட்டிக்கொள்ளும்;; இந்த நபர் பாரதிதாசனின் ஒரு பத்துப் பாடல்களையேனும் தெரிந்து வைத்திருக்கிறாரா? என்பது வேறுவிடயம்.
ஈ.வே.ரா .பெரியாரின் கருத்துக்கள் பற்றிப் பாரதி பேசுவதே இல்லை என்று, இன்னொரு குற்றச்சாட்டும் இந்த நபரால் சொல்லப்படுகிறது. இக் குற்றச்சாட்டினூடு பிராமணப் பெண்ணான பாரதி பாஸ்கர், மற்றை ஜாதியினரைப் போற்றுவதில்லை எனும் கருத்தை மறைமுகமாகப் பதிக்க முயல்கிறார் இவர்.
பெரியாரின்; கருத்துக்களைச் சொல்லாததற்கு அவரின் கருத்துக்களோடு பாரதிக்கு உடன்பாடில்லாமை காரணமாய் இருக்கலாம். எல்லோரும் எல்லாக் கருத்துக்களையும் ஏற்கவேண்டும் என்று சொல்ல இவர் யார்? தம் இனத்தாரை அந்தணர்;கள் தாழ்த்தினார்கள் என்றுசொல்லி அவ் இனத்தாரை நாகரீக எல்லைகள் கடந்து தாக்கினார் பெரியார். அவருக்கிருந்த அந்தக் கருத்துரிமை பாரதி பாஸ்கருக்கு மட்டும் இல்லையா?
தன் இனத்தை இழிவுசெய்த பெரியாரை அவரது மனம் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது எப்படித் தவறாகும்? இருந்தாலும்கூட அநாகரிகமாய்ப் பெரியாரை அவர் என்றும் தூற்றியதில்லை. பெரியாரின் ஆதரவாளர்களை ஈர்ப்பதற்காக, தன் மனம் ஏற்காத, பெரியாரின் கருத்துக்களை, பொய்மையாய் வழிமொழியாதிருக்கும் தன்மையே பாரதி பாஸ்கரின் உண்மைக்குச் சான்று என்று கருதுகிறேன்.
அடக்குமுறைக்கு எதிரானவர்கள் என்று சொல்லி அந்தணர்களைத் தாக்கிய இவர்கள் இன்று கருத்துரீதியாக அவர்கள்மேல் ஒரு அடக்குமுறையைச் செய்ய நினைப்பது எப்படி நியாயமாகும்?
பிராமணர்களில் சிலர் ஒரு காலத்தில் தவறாய் நடந்துகொண்டார்கள் என்பதற்காக, அந்த இனத்தையே ஒதுக்க நினைப்பது நியாயமாகுமா? நல்லவர்களும் கெட்டவர்;களும்; எல்;லா இனத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையவர்களை மட்டும் வைத்து, குறித்த ஓர் இனத்தைப் போற்றுவதும், தூற்றுவதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடயம். தமிழையும் சமூகத்தையும் நிமிர்;த்தி வைத்த, பாரதியாரைப் போன்ற பலர் நமது தமிழ் அறிவுலகில் இருக்கிறார்கள். இனம் நோக்கிய தாக்குதலில், அத்தகைய பெரியவர்களும்; இழிவுசெய்யப்படுவதை இவர்கள் ஏனோ உணர்கிறார்கள் இல்லை!
நிறைவாக ஒன்று, இந்தப் பதிவைச் செய்ததற்காகக் குறித்;த இந்த நபரும் இவரைச் சார்ந்தோரும் இனி என்னை இழிவுசெய்ய முயல்வார்கள். வாழ்க்கையின் நிறைவுப் பகுதியில் பயணிக்கத்; தொடங்கியிருக்கிற எனக்கு அதுபற்றி எவ்வித கவலையும் இல்லை. என் தேவைகருதி எவரையும் சந்தோசப்படுத்துவதற்காகவோ, துன்பப்படுத்துவதற்காகவோ நான் எழுதுவதில்லை என்பதை என்னை அறிந்தவர்கள், அறிவார்கள். அறியாதார் அறியாதாரே! எவர் என்னைத் தூற்றினாலும் எனது மனதிற்குப்பட்ட உண்மையைச் சொல்லிவிட்டேன் என்ற திருப்தியோடு இக் கட்டுரையை முடிக்கின்றேன்.
![]()