யார் எழுத்தாளன்?….. கிறுக்கல்…8 …. சங்கர சுப்பிரமணியன்.

நூல்களைப் படிப்பது ஒரு விருப்பமான பொழுது போக்கு. சிலருக்கு ஆவணப்படங்களை
பார்ப்பது பிடிக்கும். சிலருக்கு திரைப்படங்கள்தான் பிடிக்கும். எல்லா நூல்களைப் படிப்பதாலும் அறிவைப் பெறுகிறோம் என்று சொல்லிவிடவும் முடியாது. அறிவைப் பெருக்கிக் கொள்ள அதற்கென்று தனி நூல்கள் உள்ளன.சில நூல்கள் குப்பைகள். பொழுது போக்குக்காக திரைப்படம் பார்க்க செல்கிறோம். அப்படம் நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அமர்ந்து பாரக்கும் அளவுக்காவது சுமாராக இருக்க வேண்டும். திரைப்படம் தொடங்கி அரைமணி நேரம்கூட அதனுடன் பயணிக்க முடியாது போனால் அது என்ன படம்? வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு ஓடிவிடும். அதபோல் ஈர்ப்பு இல்லாதுபோனாலும் நூலைப் படிக்கும் ஈர்ப்பற்ற நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. சிலபக்கங்களைக் கடக்குமுன்பே சிந்தனை சிதறக்கூடாது.தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று என்ற குறட்பாவில் சொல்வதைப் போன்றுவெளியிடில் சிறந்தநூல் வெளியிடுக அஃதின்றேல் வெளியிடலில் வெளியிடாமை நன்று என்று அமைந்து விடக்கூடாது. ஏனென்றால் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடிவிடுவதுபோல் எழுத்துலகில் இருந்தும் காணாமல் போய்விடுவார்கள்.பலர் நூல் வெளியிடுவதை ஏதோ பக்கோடா சாப்பிடுவதுபோல் செய்து கொண்டிருப்பார்கள். பையில் காசிருந்து பக்கத்தில் பக்கோடா கடையும் இருப்பதுபோல் அல்ல நூல் வெளியிடுவது. ஒரு நூலை பொதுவெளிக்குள் கொண்டு வரும்முன் பலமுறை சிந்திக்க வேண்டும். அப்படி எல்லாம் பார்க்காவிட்டால் அது தூய்மையாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குப்பைகளைப் போட்டு நீரைக் களங்கப்படுத்துவதற்கு ஒப்பாகும்.
நூல்களை பெரிதும் விரும்பிப் படிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் அறிவார்ந்த நூல்களைப் படிக்கிறார்கள் என்றால் விடை கிடைப்பது சற்று சிரமம்.பொழுதுபோக்குக்கு படிப்பவர்கள்அறிவார்ந்த நூல்களை படிக்கமாட்டார்கள். நூல்களை படித்து விவாதிப்பவர்கள் ஒரு திருக்குறளையோ அல்லது நாலடியாரில் ஒரு செய்யுளையே எடுத்து விவாதிப்பார்களா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் அது பொழுதுபோக்கு நூல் அல்ல.எல்லா நூல்களுமே சமூகத்தில் இருந்த எடுக்கப்படும் அனுபவத்தை கற்பனை கலந்து இடங்களை மாற்றி பாத்திரங்களை கூட்டியோ குறைத்தோ எழுதப்படுவதுதான். இப்படி ஒருவர் சமூகத்திடம்இருந்து எடுத்து படைத்த அனுபவத்தை நூலாக படைத்ததை பொழுதுபோக்காக படித்த அந்த அனுபவத்தை அந்த சமூகத்திடமே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு திரைப்படத்தை பார்த்தவர்கள் கூடி உட்கார்ந்து ஏதாவதொரு நிகழ்வில் கலந்து கொள்ளும்போது பேசிக்கொள்வத்தைப் போன்றுதான்.இதைப்பற்றி நான் சில நேரங்களில் இப்படி எண்ணுவது உண்டு. சமூக அனுபவங்களில் அதாவது நமது அன்றாட வாழ்வில் நடப்பவற்றில் மனதைத் தொடும் நிகழ்வுகளைஅல்லது பதியும் நிகழ்வுகளை மையமாக வைத்து தமது கற்பனையைக்கலந்து ஒரு நூலைப்படைத்து நூலாசிரியர் நூலாக வெளியிடுகிறார். அதனைப் படித்தவர்கள் சிலர் ஒரு நிகழ்வாக அமர்ந்து விவாதிக்கின்றனர் என்பதுதான் அது.இதை இப்படியும் பார்க்கலாம். ஒரு நூலாசிரியர் பொழுதுபோக்கு நூல் எழத அந்த நூலைப் படித்தவர்கள் சிலர்சேர்ந்து விவாதிப்பது மற்றொரு பொழுதுபோக்கே அன்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்? ஒரு வேளை அந்த நூல் விளம்பரப் படுத்தும் நல்ல பணியாக வேண்டுமானால் இருக்கலாம். ஏன் இருக்கலாம் என்று சொல்கிறேன் என்றால் ஒரு விவாத நிகழ்ச்சியில் அந்நூலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசித் தீர்த்தபின் இனி நூலை வாங்கிப்படிக்க என்ன இருக்கிறது?என்ற எதிர்வினையையும் ஏற்படுத்திவிடும்.ஒரு சிறந்த திரைப்படம் வருகிறது. அதைப்பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அப்படத்தைப் பார்த்துவிட்ட ஒருவர் அவரது நண்பரிடம் அப்படத்தைப்பற்றி சிறுதே விவரிக்க முயன்றாலும் வேண்டாண்டா சொல்லாதே நாளைக்கு அந்த படத்துக்கு போகிறோம் இப்போது நீ சொன்னால் ஆர்வம் குறைந்து விடும் என்பார் அல்லவா.அதைப்போல ஒரு நூலை விவாதிக்கும் இடத்தில் அந்நூலைப் படிக்காதவர்களும் இருக்கலாம் அல்லவா?இப்படி நூலூப்பற்றி விவாதம் செய்பவர்கள் பெரும்பாலும் பிரச்சனையற்ற நூலைப் பற்றியே விவாதம் செய்வார்கள்.பெருமாள் முருகன், டோனி ஜோசப் போன்றோரின் நூல்களைப் பற்றி விவாதிக்க மாட்டார்கள். அறிவுசார்ந்த நூல்களைப் பற்றி விவாதிப்பவர்கள் மிகக்குறைவே. இலக்கியவாதிகளில் பெரும்பாலானோர்பழந்நமிழ் இலக்கியங்களைக் கண்டு கொள்வதேயில்லை. இலக்கியவாதிகளில் எத்தனைபேர் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, பதினென் மேல்கணக்கு போன்றவற்றை எல்லாம் படித்திருப்பார்கள்?பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற பெரும் வரவேற்பை நூல் விவாதம் போன்றவைகள் பெற்றுவிடவில்லை. ஆங்காங்கே சிறு குழுக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். பட்டி மன்றங்களில் கூட அறிவார்ந்த கருத்துக்களை எடுத்தாழ்வது குறைந்து வருகிறது. காரணம் இருபதாண்டுகளுக்கு முன்னிருந்த நிலை வேறு இன்றுள்ள நிலை வேறு.சமீபத்தில் பெங்களூரில் ஒரு நண்பர் நடத்தவிருக்கும் விழாவில் ஒரு பேச்சாளருக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசணையில் ஈடுபட்டிருந்தார். அதில் ஒருவர் இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுதான் எங்கும் அடிபடுகிறது. அதுசார்ந்த தலைப்பைக் கொடுக்கலாம் என்றதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். பேச்சின் தலைப்பாக இராஜராஜ சோழன் இந்துவா அல்லது சைவரா? என்று வைக்கலாமா என்று சொன்னவுடனே தீயை மிதித்தவர்போல் ஆகிவிட்டார்.இதிலிருந்து என்ன தெரிகிறது? தனக்கு எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது. தனது நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரது இலக்காகவும் உள்ளது. இலக்கியமே என்றாலும் அதற்கும் எல்லை வகுத்துள்ளார்கள். ஒரு விவாதம் என்றால் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எளிதாக நடத்துவதல்ல விவாதம். தீயவற்றைக் கண்டு வெகுண்டெழவேண்டும்.எவ்வாறு தெரியுமா? மெய்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்ற வேண்டும் என்கிறார் பாரதியார். அத்தோடு பாரதி நிறுத்தி விடவுமில்லை சிறுமை கண்டு பொங்குவாய் என்றும் சினத்திருக்கிறார்.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)
![]()