தொடரும் பயணங்கள்!…. 3….. ஏலையா க.முருகதாசன்…. ( ஜேர்மனி )

இயல்பாகவே நான் ஊர்களைப் பார்ப்பதில் விருப்பமுள்ளவன்.ஜேர்மனி எங்கும் போகலாம் என்ற சலுகைக்குட்பட்ட ஒன்பது யூரோ பயணச் சீட்டு மட்டுமே எனது ஊர் பார்க்கும் ஆவலுக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது.![]()

மாதாந்த பயணச் சீட்டின் மூலம் சனி ஞாயிறுகளிலும் விடுமறை நாட்களிலும் இரவு ஏழு மணிக்குப் பின்னரும் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு போய்வரலாம் என்ற சலுகை மாதாந்த பயணச்சீட்டில் இருந்து வருகின்றது.
எனினும் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது யூரோ பயணச் சீட்டின் மூலம் கிழமை நாட்களிலும் ஜேர்மனி எங்கும் போய்வரலாம் என்ற சலுகை உண்டு.
அதற்கமைய நானும் மனைவியுமாகவும்,சில நாட்கள் தனியாகவும், சில நாட்கள் வருத்தப்படாத வாலிபர் சங்க நண்பகர்களுடனும் ஊர் உலாத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
ஊர் உலாத்தில் ஒன்றுமே இல்லையென்பவர்களுக்கு ஒன்றுமேயில்லைதான்.அங்கம் பக்கம் கண்களும் காதுகளும் உள்வாங்கியவை பலவாயிரம் அனுபவங்கள் என்போருக்கு பயணங்கள் அனுபவ ஆவணங்களே.இது ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது.
தொடர்ந்த பயணத்தில் நானும் மனைவியும் கடந்த 12.07.22 அன்று கேவலார் என்ற நகரத்திற்கு சென்று வந்தோம்.தமிழர்களைப் பொறுத்தவரை கேவலார் நகரம் ஒரு வழிபாட்டு நகரமாகும்.
அங்கு மரியன்னையின் தேவாலயம் இருக்கின்றது.தேவாலயம் அமைந்துள்ள சூழல் மரங்கள் நிழல் கொடுக்கும் மிகவும் அமைதியான இடமாகும்.
தேவாலயத்தை நோக்கிச் செல்லும் வீதி எப்பொழுதும் தெளிந்த நீரோடை போலச் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும்.
வீதியின் இருமருங்கிலும் பலதரப்பட்ட பொருட்கள் விற்கும் அங்காடிகள் இருக்கின்றன.அது தேவாலயப் பகுதி என்பதால் பெரும்பாலான கடைகள் கிறீஸ்தவர்கள் அணியும் சிலுவையுடன்கூடிய மாலைகள், மெழுகுவர்த்திகள் விற்கும் கடைகள் என உண்டெனினும் உணவகங்களும் ஐஸ்கிறீம் – கோப்பிக்கடைகள் விற்கும் கடைகளும் ஏராளம் உண்டு.
கடைக்குள்ளேயும்,கடைக்கு வெளியே போடப்பட்டிருக்கும் கதிரைகளில் உட்கார்ந்தபடி பல்வேறு வயதிற்குட்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் சிரித்து மகிழ்ந்தபடி ஐஸ்கிறீம் சாப்பிட்டுக் கொண்டும், கோப்பி,லஸ்ஸி போன்ற பாணங்களை குடித்துக் கொண்டிருக்கும் காட்சி இரம்மியமாக இரசிக்கத்தக்கதாக இருக்கும்.
மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்து மகிழ்வதையும், சின்னஞ்சிறுசுகள் ஐஸ்கிறீமை கரண்டியால் அளைந்து கள்ளம்கபடமற்ற சிரிப்புடன் வாயில் பாதி கரண்டியில் பாதியாக வருவோர் போவோரைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருப்பதும்,வழமையாக வெள்ளை நிறத்தவரையே பார்த்துப் பழகிய கண்களுக்கு எம்மைப் போன்ற மாநிறத்தவரை வியப்புடன் பார்க்கும் காட்சி எமக்கே சிரிப்பாக இருக்கும்.மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்வது ஒரு தனிச்சுகம்.
உயர்ந்த மரங்களின் இலைகளைத் தென்றல் தாலாட்ட அங்கிருந்து வரும் சுகமான காற்று உடையையும், உடலையும் தழுவிச் செல்வது பேரானந்தமாக இருக்கும்.
இயற்கை எமக்குக் கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்களில் தென்றல் காற்றும் ஒன்றென்று அதை அனுபவித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அடிக்கடி நேரந் தவறாது ஒலித்துக் கொண்டிருக்கும் தேவாலயங்களின் மணி ஓசை மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.ஆலயங்களில் ஒலிக்கப்படும் மணியோசையிலிருந்து வெளிக் கிளம்பும் ஒலியலைகள் மனிதர்களின் நரம்பு மண்:டலத்தைத் தூண்டிவிடுகின்றன என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
கேவலார் நகரம,; வயலும் ஆங்காங்கே காடுகளும் சுற்றுப்புறச் சூழலாக இருக்கும் இடத்தில் அமைந்திருக்கின்றது.அதனை மருத நிலத்தில் அமைந்த நகரம் என்றும் சொல்லலாம்.
இவ்வாலயத்தின் ஒரு பகுதி ஒல்லாந்து நாட்டினுடைய பகுதியாக இருந்தது என்றும்,இரண்டாவது உலகமகா யுத்தத்திற்குப் பின்னர் அது ஜேர்மனியுடன் இணைக்கப்பட்டது என்பதைச் சில வருடங்களுக்கு முன்னர் அறிந்திருந்தேன்.
அப்பகுதியில் வாழும் மக்களிடம் ஒல்லாந்து மக்களின் வாழ்வியல் இயல்பு நிலையும் இருப்பதை அவதானிக்க முடியும்.
கேவலார் மரியன்னையின் தேவாலயம் பற்றி சுமார் இருபது வருடங்களளவில்தான் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.இத்திருத்தலம் பற்றி ஜேர்மனியில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இவ்வாலயத்திற்கு ஒருமுறை வந்திருந்த எமது நகரைச்; சேர்ந்த திரு.து.கமிலஸ் அவர்களும்,திரு.அன்ரன் அவர்களும் ஏதோ ஒருவகையில் கேவலார் மரியன்னையின் தேவாலயம் பற்றி அறிந்து, அங்கு சென்று மரியன்னையைத் தரிசித்த பின்னர் அவர்கள் மனதில் அங்கு ஏன் ஒரு தமிழ்ப் திருப்பலி பூசையை நடத்தக்கூடாது என்ற எண்ணம் எழவே,கிறீஸ்தவ தமிழ் மக்களின் இறைப் பணியகமான ஆன்மீகப் பணியகத்தின் அன்றைய பொறுப்பாளராக இருந்த அருட்தந்தை ஜெயசேகரம் அவர்களுக்கு அந்தத் தேவாலயம் பற்றித் தெரிவித்து ஆன்மீகப் பணியகத்தின் தொடர் முயற்சியின் பயனாக வருடத்தில் ஒருமுறை ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது கிழமையில் வரும் ஞாயிற்றுக் கிழமையில்
திருப்பலிப் பூசைக்கு ஒழுங்கு செய்யப்பட்டு,அது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
ஐயாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரையிலான ஜேர்மனி மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் இத்தினத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மரியன்னையை வணங்கிவிட்டுச் செல்கிறார்கள்.சமய வேற்றுமையின்றி இத்திருத்தலத்திற்கு வருகை தருவோரில் எண்பத்தைந்து வீதமானவர்கள் சைவசமயத்தவர்களே.
கோவிட் 19 காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக மக்களோடு இணைந்து தமிழ்த் திருப்பலிப்பூசை நடைபெறவில்லை.
2022 ஆம் ஆண்டாகிய இவ்வாண்டு எதிர்வரும் 13.08.22 அன்று கேவலார் மரியன்னையின் திருத்தலத்தில் தமிழ்த் திருப்பலிப் பூசை நடைபெறவிருக்கின்றது.
இத்தினத்தில் கடைகளுக்கென பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்றைய தினத்தில் மட்டுமே வியாபாரத்தை நடத்துவதற்காக கேவலார் நகர சபை நிர்வாகத்தால் அனுமதிக்கப்படும்.
துணிக்கடைகள்,காய்கறிக்கடைகள்,பலகாரக் கடைகள்,இன்னும் உணவுக் கடைகள் எனப் பல கடைகள் இருக்கும்.மாலை ஆறு மணியுடன் வியாபாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்பதும் நகர நிர்வாகத்தின் உத்தரவாகும்.
ஆரம்ப காலங்களில் இந்நாளில் வருவோருக்கு, பலர் உணவு சமைத்துக் கொண்டு வந்து நேர்த்திக்கடன் என்று ஆங்காங்கே தேவாலயச் சுற்றுப்புறச் சூழலில் வைத்துக் கொடுத்தார்கள்.
அதனால் உணவைக் கொடுத்தோரும் அதை வாங்கியோரும் உணவு சாப்பிட்ட தட்டை ஆங்காங்கே இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போடாது பொறுப்புணர்ச்சியற்று அலட்சியத்துடன் தெருவோரங்களில் வீசியெறிந்ததனால் கேவலார் நகர நிர்வாகம் தமிழ் ஆன்மீகப் பணியகத்துடன் கதைத்து தனியார்கள் உணவு வழங்குவதைத் தடை செய்தார்கள்.அரைவாசி உணவுடன் வீசியெறியப்பட்ட தட்டுகளும் உண்டு.
பொதுவாக இந்தத் தேவாலயத்தில் மட்டுமல்ல சைவக் கோவில் திருவிழாக்களின் போதும் இவ்வாறே மக்கள் சுத்தத்தைப் பேணாது நடந்து கொள்வதால் நகர நிர்வாகத்தினர் சில கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்புதானே.
„நன்றும் தீதும் பிறர்தர வாரா’ என்பது உண்மையிலும் உண்மையே.
இத்திருத்தலத்தை நோக்கி ரயிலில் போவது என நானும் மனைவியும் தீர்மானித்து மேற்கூறிய திகதியில் எமது நகரத்திலிருந்து புறப்பட்டு கிறீபீல்ட் நகரத்தைச் சென்றடைந்து அங்கிருந்து கேவலார் நகரத்துக்கு ரயிலில் போவதற்காக ரயில் மேடையை நோக்கிப் போன போது, ரயிலின் விபரம் அட்டவணைப் பெட்டியில் காட்சிப்படுத்தப்படாமல் இருந்தமையைக் கண்டு,ரயில் நிலைய பணியாளரை விசாரித்த போது நவம்பர் மாதம் வரையும் கேவலார் போகும் ரயில் பாதை
திருத்தப்படுவதால் இங்கிருந்து கேவலார் வரையும் பஸ்ஸில் போகலாம் எனப் பணியாளர் சொல்ல பஸ்திரிப்பு நிலையத்திற்குப் போனோம்.
இதற்கிடையில் கேவலாருக்கு ரயில் போகவில்லையே எனத் தடுமாறி அங்கிருந்த இளைஞரை ஜேர்மன் மொழியில் கேட்ட போது அவர் ஒரு ரயில் மேடையைக் காட்டி இங்கிருந்து கேவலாருக்குப் போகலாம் எனச் சொல்லிவிட்டுப் போகையில் நானும் மனைவியும் தமிழில் கதைப்பதைக் கேட்டவுடன் திரும்பி வந்து „நீங்கள் தமிழ் என்று தெரியாமல் போச்சுது மன்னிக்கவும்’ என்றவர்,கைத்தொலைபேசியில் பஸ் நேரத்தை அறிந்து, அந்த பஸ் நிற்கும் இடத்தையும் காட்டிச் சென்றார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கேவலார் போகும் பஸ்தரிப்பு நிலையத்தில் நின்ற போது நேர அட்டவணையைப் பார்த்த போது அவை மிக மிகச் சிறிய எழுத்தக்களில் இருந்ததையும் பார்த்தோம்.
கேவலார் நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏறி இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தோம்.பஸ்ஸில் பயணிகள் நிறைந்து இருந்தார்கள்.பஸ் வயல்களுக்கூடாகவும் காடுகளுக்கூடாகவும் நேரான வீதிகளுக்கூடாகவும் வளைந்த வீதிகளுக்கூடாகவும் சென்று கேவலார் ரயில் நிலைய பஸ்தரிப்பு நிலையத்தையடைந்தது.
வயல்களில் சோளப் பயிர்களும்,பார்லிப் பயிர்களும் கோவா பயிர்களும் வளர்ந்திருப்பதைக் கண்டோம்.ஒரு இடத்தில் வெள்ளைக் கோவாவை நால்வர் வெட்டி எடுக்க, வெட்டி எடுத்த கோவாவை இருவர் அதன் தண்டை வெட்டி எடுத்து ஓடும் பெல்டில் வைக்க அதனை மற்றவர்கள் பெரிய பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் காட்சி பஸ்ஸின் வேகத்திற்குட்பட்டு எமக்கு சில விநாடிகளுக்குள்ளேயே கண்களால் உள் வாங்கப்பட்டது.![]()
தமிழ்த்திருப்பலிப் பூசை நடைபெறும் தினங்களில் அதிகமான தினங்களில் காரிலேயே கேவலாருக்குச் சென்றிருக்கிறோம்.ஒரிரு முறை ரயிலிலும் சென்றிருக்கிறோம்.ரயிலில் போகும் போது,ரயிலைவிட்டு இறங்கியவுடன் அடுத்து எப்படிப் போக வேண்டுமென்பதை பழக்கமாகியிருந்து.
ஆனால் பஸ் அங்கை சுற்றி இங்கை சுற்றி வந்து நின்றதால், சில நிமிடங்கள் தாமதித்து பாதையைப் பிடித்து செல்வோம் என நினைத்த போது ஒரு தமிழ்ப் பெண்மணி தனது மகனை கிண்டர் வாகனத்தில் வைத்துத் தள்ளிக் கொண்;டு போவதைக் கண்டு அவரிடம் „சேர்ச்சுக்குப் போவது எப்படி „என்று கேட்ட போது, வாருங்கள் காட்டுகிறேன் என்றார்.
அவரருகில் சென்று அவரோடு நடக்கையில் என்னையும் மனைவியையும் பார்த்து „உங்களை தனக்குத் தெரியுமென்றார்’.நாங்கள் அவர் யாராக இருக்கும் என்று யோசிக்கையில் „என்னைத் தெரியவில்லையா நீங்கள்தானே மோகனுக்கு அப்பா அம்மாவாக இருந்து அவரின் கல்யாணத்துக்கு தாரதர்ப்பம் பண்ணிக்
கொடுத்தனீங்கள்.நான்தானே பொம்பிளைத் தோழியாக வந்தனான் உங்களுடைய மகளும் வந்திருந்தார் என்றார். உடனே எங்களுக்கு அது ஞாபகம் வந்தது.
அந்தப் பெண்மணியின் அக்காவின் மகன்தான் மோகன்.மோகன் என்னுடன் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தவர்.அவர் இப்பொழுது குடும்பத்துடன் இலண்டனில் இருக்கிறார்.
ஒரு நாள் மோகன் என்னிடம் வந்து „ அண்ணை நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்,நான் கல்யாணம் செய்யப் போகிறன்.அதற்கு நீங்களும் உங்களுடைய மனைவியும் எனக்கு அப்பா அம்மாவாக இருந்து தாரதர்ப்பம் செய்து தர வேண்டும் என்ற போது ஒரு நொடியும் தாமதியாது அதற்குச் சம்மதித்தேன்.
நல்லதை மனமுவந்து செய்ய ஒரு போதுமே தாமதிக்கக்கூடாது. அதே தொழிற்சாலையில் வேலை செய்த சுரேஸ் தனது மனைவியுடன் மோகனின் மனைவியானவருக்கு பொம்பிளையின் தகப்பன் தாயாக இருந்து தாரதர்ப்பம் செய்து கொடுத்தனர்.
கல்யாணம் முடிந்து நாலாம் நாள் திருமணத் தம்பதிகளுக்கு கொழுக்கட்டை அவித்து நானும் மனைவியும் கொண்டு போய்க் கொடுத்திருந்தோம்.
அப்பெண்மணியுடன் நடந்து செல்கையில் அவற்றையெல்லாம் ஞாபகப்படுத்திக் கதைத்தோம்.அவர் எம்மை அழைத்துச் சென்று பாதையைக் காட்டிவிட்டுச் செல்கையில் „வீட்டுக்கு வாருங்கள் ரீ குடித்துவவிட்டுப் போகலாம் „என்று அவர் கேட்க „நன்றி நேரமில்லை கோபிக்காதையுங்கோ „என்று சொல்லிக் கொண்டே அவரிடம் விடைபெற்று தேவாலயத்தை நோக்கிப் போனோம்.
தேவாலயத்திற்குள் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மெழுகுதிரி கொழுத்தி வணங்கினோம்.
தேவாலயப் பகுதி நிலம் திருத்த வேலைக்காக பதியப்பட்டிருந்த கற்கள் எல்லாம் கிளப்பப்பட்டு வேலிகள் அடைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் 13.08.22 க்கிடையில் அப்பகுதி நிலம் செப்பனிடப்பட்டுவிடுமா என்பது தெரியவில்லை.
வழிபாட்டை முடித்த நாங்கள் மீண்டும் கேவலார் நகரததிலிருந்து ரயிலுக்குப் பதிலான பஸ்ஸில் காடுகளுக்கூடாகவும் வயல்களுக்கூடாகவும் பயணம் செய்த போது சில வயல்களில் உருளைக் கிழங்குப் பயிர்ச்செய்கையைக் கண்டோம்.அத்துடன் காய்ந்து போன பார்லித் தாள்களை இயந்திரங்கள் பெரிய வட்டங்களாக சுற்றிச் சுற்றிப் போடுவதையும் கண்டோம்.போகும் போது கவனிக்காத இவற்றை வரும் போது கவனித்தோம்.
கிறிபீல்ட் நகரத்தை வந்தடைந்த பஸ்ஸிலிருந்து இறங்கி அங்கிருந்து ரயிலில் எமது நகரத்தை வந்தடைந்தோம்.
கேவலார் தேவாலயம் அமைந்துள்ள அமைதியான சூழலும், சந்தித்த மனிதர்களும் உதவி செய்த பெண்மணி என இவர்களுடன் சிறிது நேரந்தான் பழகிய தருணங்கள் புதிய அனுபவங்களைக் கொடுத்து எமக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
பயணங்கள் எப்பொழுதும் இனிமையானவை புதிய புதிய அனுபவங்களைக் கொடுப்பவையே..
(பயணிப்போம்)
![]()