கட்டுரைகள்

தொங்கும் கலாசாரம்! ….. எஸ். ஜெகதீசன்…. ( கனடா )

அன்று வீடுகளுள் நுழைந்தால் சட்டென கவனம் ஈர்த்தவை அங்கு தொங்கிய புகைப் படங்கள். கடைக் கண் பார்வைக்குள் சிக்கியவை நாட்காட்டிகள்.

காரணம் காலத்தை கௌரவித்தவர்களும் அதிலிருந்தனர்.

காலம் கௌரவித்தவர்களும் அதிலிருந்தனர்.

வீட்டிலுள்ளவர்களின் அரசியல் சமய சமூக சிந்தனையை சற்றேனும் அவை பிரதிபலித்தன.

அரசியல் இலக்கியம் கலை சமயம் சமூகம் என வெவ்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் திகழ்ந்த எத்தனையோ தலைவர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் பிரமுகர்கள் எம் வாழ்வோடு வரவு வைத்ததன் சான்றே அப் புகைப்படங்கள்.

வரலாற்றின் அடையாளம் அற்றுப்போகாதிருக்க ஆயிரம் வார்த்தைகளால் பேசியவற்றை சுவர்களில் இருந்தவாறே கண்களால் பேசிக் கொண்டவை அன்றைய புகைப்பட ஆவணங்கள்.

புகைப்படத்திலிருந்தவர் எம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வினைத் தந்தனர்.

தாம் வாழ்ந்த முறையை எமது கற்பனைக்குள் கடத்தினர்.

வரலாற்றை கணிக்க வைத்த அல்லது கவனிக்க வைத்த பழைய நினைவில் ஒன்றையேனும் ஏதோ ஒரு வகையில் மனதில் வட்டமடிக்க வைத்தனர்.

தமது கொள்கைகளால் தமது கோட்பாடுகளால் எமது எண்ணத்துள் சினேகிதமாகினர்.

அன்றைய இலங்கைத் தமிழரின் சுவர்கள் பலவற்றை அமைதியாக அலங்கரித்த அநேக புகைபடங்கள் இன்றைய ஆரவார இதயங்களின் நினைவலைகளை வருடிக்கொடுக்கும் கிறங்கலிலாவது மங்கலாகத் தெரியும்!

1920 ம் ஆண்டிற்கு முன்னும் 1980 ம் ஆண்டிற்கு பின்னும் பரந்த அளவில் படங்கள் காணப்படாமைக்கு பொதுவான காரணம் ஒன்றே ஒன்றுதான். – வசதியின்மை!

ஆனால் அந்த வசதியின்மை என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

தொழில் நுட்பம் – பணமுடக்கம் – இடப்பெயர்வு – பயப்பிராந்தி!

அதற்கு முன்பாக ஆடம்பரமான வீடுகளில் சாதாரணமாகவும் சாதாரண வீடுகளில் ஆடம்பரமானதாகவும் வெகுசில படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவர்களில் இருந்திருக்கலாம்.

அதற்கான தடயங்களோ சான்றுகளோ எங்குமில.

சுவர்களில் படங்களாக நான்கு சட்டத்துள் அடங்கிக் கொண்டே அவர்கள் வார்த்தைகளின்றி வரலாறு பேசிய அல்லது வரலாறு பற்றி சிந்திக்க வைத்த அல்லது வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்த இடைப்பட்ட ஆறுபது வருட ஆச்சரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் எந்த ஆவணமும் இதுவரை எம்மிடமில்லை!

சலனமற்றிருந்த சுவாமி படங்களுக்கு அப்பால் அப்பொழுதெல்லாம் குடும்பப் படங்களே பெரும்பாலான வீடுகளில் தென்பட்டன.

அவற்றிலும் அனேகமாய் குடும்பத் தலைவன் அமர்ந்திருப்பதும் பிள்ளைகள் சூழ தலைவி அவர் பின்னே அடக்கமாக நின்றிருப்பதும் வழமையாயின.

குடும்ப வைபவங்கள் சிறப்பு நிகழ்வுகள் கூட படங்களானதுண்டு. வீட்டில் ஒருவர் பட்டதாரியாயிருந்தால் அந்த அங்கியுடன் படமாகி ஏனையோருக்கு பாடமாகி இருப்பார். பிறை நிலவில் வீற்றிருந்த கன்னி யாரையோ கவர்வதற்கு காத்திருந்தாள்.

பிரிந்தவர் படமதை பாசமுடன் தடவிட – உயிர்தது சுவர்தனில் பரம்பரை.

மகாத்மா காந்தி நடப்பது போல் அமைந்த ஒரு படத்துடனேதான் புகைப்பட கலாசாரம் இலங்கைத் தமிழரின் வீடுகளை பரவலாக அலங்கரிக்க ஆரம்பித்தது என்று நம்பப்படுகின்றது.

மகாத்மா காந்தி 1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் அவரது முதலாவதும் இறுதியுமான இலங்கைப்

பயணமாக அமைந்தது. அவருடன் அவருடைய மனைவி கஸ்தூரி பாயும் ராஜாஜியும் அந்தப் பயணத்தில் பங்கெடுத்திருந்தனர்.

இலங்கையில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த மகாத்மா காந்தி சிலாபம் காலி கண்டி பதுளை பண்டாரவளை ஹட்டன் மாத்தளை நுவரெலியா பருத்தித்துறை யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் பயணித்தார்.

1924 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இயங்கியது.

பிரித்தானியரிடமிருந்து முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதன் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்த அமைப்பு இதுவாகும்.

1927 ம் ஆண்டு இடம்பெற்ற அந்த அமைப்பின் மாநாட்டிலும் மகாத்மா காந்தி கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தியின் அந்த இலங்கை விஜயத்தின் போது அவர் நடப்பது போல் அமைந்த இரண்டு அடிக்கு இரண்டு அடி அளவிலான படமொன்றும் இந்திய அபிமானிகளிடமும் காந்தி பக்தர்களிடமும் அஹிம்சை வழியில் சென்றடைந்தது.

1929 ம் ஆண்டு தீவிர இடதுசாரி கொள்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்நியராட்சிக்கு எதிராகவும் மக்கள் தொழிலாளர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளை முன்னெடுக்க ஏதுவாகவும் பிரித்தானியருக்கு எதிராக சூரியமலர் என்ற இயக்கம் உருவானது.

1935 ம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியாக அது உருமாறியது.

சமசமாஜக் கட்சியிலிருந்து பின்னர் முரண்பாட்டால் வெளியேறியவர்களால் 1943 ம் ஆண்டு இலங்கை பொதுவுடமைக் கட்சி ஆரம்பமானது.

1964 ல் கொள்கை வேறுபாட்டால் இலங்கை பொதுவுடமைக் கட்சி (மாஸ்கோ அணி) இலங்கை பொதுவுடமைக் கட்சி (பீகிங் அணி) என இரண்டானது.

1943 ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியின் உதயத்துடன் லெனின் ஸ்டாலின் மா சே துங் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் படங்கள் தாராளமாக பொதுவுடமை வாதிகளின் வீடுகளை சென்றடைந்தன.

அவர்கள் ஆர்வத்துடன் படங்களை சேகரிக்க முற்பட குக்கிராமங்களின் தாழ்வாரங்களையும் நோக்கிக் கூட தலைவர்கள் அணிவகுத்தனர்.

சர்வ தேச தரத்திலிருந்தவர்கள் சாதாரண இடத்துக்கு வந்தார்கள். சாதாரண இடத்திலிருந்தவர்களை சர்வ தேச தரத்துக்கு உயர்த்தும் கொள்கையுடன்.

1940 ம் ஆண்டு நாட்காட்டி முகப்பில் பிரமுகர்களின் படங்கள் வரத் தொடங்கின.

தமக்கென்று தனி அடையாளத்துடன் வாழ்வை வசீகரமாக்கியவர்களென யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (சமயம்) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் (இலக்கியம்) கொழும்பு சேர் பொன்.இராமநாதன் (அரசியல்) புத்தளம் சைமன் காசிசெட்டி (வணிகம்) நாவலப்பிட்டி ருக்மணி தேவி் (கலை) ஆகியோரது படங்கள் முதலாவது வருடத்தில் நாட்காட்டி முகப்பில் வனப்புச் சேர்த்து மிகவும் சொற்ப அளவில் தாம் சார்ந்த பிராந்திய வீடுகளில் வரவேற்புப் பெற்றன.

1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் ஏனைய தலைவர்களை முந்திக் கொண்டு இலங்கையை புகைப்பட வடிவில் எட்டிப் பார்த்தவர் இரவீந்திர நாத் தாகூர்.

கவிஞர் எழுத்தாளர் நாடகாசிரியர் ஓவியர் கல்வியாளர் மெய்யியலாளர் சுதந்திரப் போராட்ட வீரர் தத்துவஞானி.

இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவர்.பின்நாட்களில் இவரது வேறெரு கவிதை பங்களாதேஷின் தேசிய கீதமாயிற்று.

1913ல் இலக்கியத்துக்கான நோபல் பெற்ற முதலாவது ஆசியர்.

சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமானவர்.தாகூரின் பாடல்கள் பலதை விவேகானந்தர் பாடியுமுள்ளார்.

இலங்கைக்கு மூன்று தடவை விஜயம் செய்த பரிச்சயமும் தாகூருக்கு உள்ளது. றீகல் பட மாளிகையை திறந்து வைத்தவரும் அவரே!

1948 ல் இலங்கை சுதந்திரமடைந்தாலும் பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவும் எதிர்கட்சி தலைவர் என்.எம்.பெராவும் தத்தமது தமிழ் ஆதரவாளர்களின் இல்லங்களையே முற்றுமுழுதாய் நெருங்க முடியவுமில்லை. முனையவுமில்லை!

எனினும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் (கைத்தொழில்) சி.சுந்தரலிங்கம் (வர்த்தகம்) சி.சிற்றம்பலம் (தபால்) ரி.பி.ஜெயா (தொழில்) போன்ற தமிழ் அமைச்சர்கள் சுவர்களில் அதிகாரத்தை ஆரம்பித்தனர்.

1948 ம் ஆண்டு மார்கழி மாதம் தமிழரசு கட்சி உதயமானது. தமிழரசு கட்சியின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசு கட்சியின் தாய் கு.வன்னியசிங்கம் வ.நவரத்தினம் ராஜவரோதயம் போன்றவர்கள் நாட்காட்டியின் முகப்படங்களாகி அன்றைய தமிழர்கள் பலரை தலை நிமிர்ந்து பார்க்க வைத்தனர்.

1950 ம் ஆண்டு தை மாதம் இந்தியா குடியரசு நாடானது. அதனையொட்டிய கொண்டாட்டங்கள் இலங்கையிலும் அமர்க்களப்பட்டன.

முதலாவது ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் உப ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிரதமர் ஜவர்கலால் நேரு சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தேசபிதா மகாத்மா காந்தி சுபாஷ் சந்திரபோஸ் முகம்மது அலி ஜின்னா போன்றோரின் படங்களை வரவேற்ற இலங்கைச் சுவர்கள் ஜனகணமண பாடின.

சிவாஜி கணேசனின் பராசக்தியும் எம்.ஜீ.ஆரின் மந்திரி குமாரியும் 1952 ம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டன.

அவற்றின் பெரியளவிலான புகைப் படங்களும் சுவரொட்டிகளும் திரையரங்க உரிமையாளர்கள் முகாமையாளர்கள் ஊழியர்கள் வீடுகளில் பெற்ற பெரிய வவேற்பை தொடர்ந்து இலங்கை பூராவும் நடை பாதை கடைகள் மூலம் இந்த வியாயாரம் எகிறிட திரை நட்சத்திரங்களின் படங்கள் சாதாரண வீடுகளிலும் வியாபகம் பெறத் தொடங்கின.

திரைக்கலைஞர்கள் சுவரொட்டி வடிவில் குடிசை வீடுகளிலும் காட்சி அளிக்க ஆரம்பித்தனர். தட்டியில் செருகப்பட்ட கொட்டகைகள் நைந்தன.

கிராமத்து இளசுகள் நடிக நடிகைகளாகவே வாழ்ந்து காட்ட முற்பட முதன்முதல் கைதட்டலின் ருசியை சுவர்களின் காதுகள் சுவைத்தன.

வைஜயந்திமாலாவின் படமே பலருக்கு பல காலம் பெருவிருப்பமாக இருந்தது என்ற கருத்தும் சிகை அலங்கார நிலையங்களை கவர்ந்தவர் ராஜ சுலோசனா என்ற கருத்தும் அன்றைய கவர்ச்சி!

1953 ம் ஆண்டு 75ஆவது வயதில் அமரத்துவமான தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பதிகம் ஊஞ்சல் கலம்பகம் நான்மணி மாலை அட்டகம் அந்தாதி சிலேடைவெண்பா என பல வடிவில் பல பாடல்கள் இயற்றிய தாலும் நாணூற்றுக்கும் மேலான அடிகளை உடைய கலிவெண்பா வகையில் அமைந்த பனைவளம் கூறும் தாலவிருட்சம் என்ற செய்யுள் நுரல் மிகவும் பிரசித்தமாக அமைந்தமையாலும் தாடி அறுந்த வேடன் எலியும் சேவலும் போன்ற சிறுவர் கதைப்பாடல்களையும் ஆடிப்பிறப்பு கத்தரிவெருளி புளுக்கொடியல் பவளக்கொடி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றிய சிறுவர் இலக்கிய முன்னோடி என்பதாலும் தமிழ் அபிமானிகளிடம் படமாகி சுவரினில் ‘தீர்காயுசு’ பெற்றார்.

எலிசபெத் மகாராணியின் படம் இல்லாத வீடுகளே இல்லை என்றும் ஒரு காலம் இலங்கையில் சர்வ சாதாரணமாக இருந்தது பலருக்கும் நினைவிலிருக்கும்.

பொதுவாக எந்தவொரு வீட்டுக்கும் அல்லது ஒட்டுமொத்தமாக நாட்டுக்கும் எலிசபெத் மகாராணி செய்த ஒரு பெரிய சேவை வீடுகளிலிருந்த ஓட்டை ஒடிசலை அந்தப் படத்தால் மூடி மறைத்ததுதான் என்று சொல்ல அப்போது பலரிருந்தனர்.

எலிசபெத் மகாராணி கணவர் இளவரசர் பிலிப்புடன் 1954 ம் ஆண்டு அரச விஜயமொன்றை மேற்கொண்டு 10 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த வேளையில் மகாராணியின் 28 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது பெரிய அளவிலான படம் இலங்கையில் உள்ள சகல மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு அதனை வீடுகளில் மாட்டுமாறு பணிக்கப்பட்டது.

அல்லது திணிக்கப்பட்டது!

வசதியுடன் இருந்தோர் அதனை கண்ணாடிச் சட்டமிட ஏனையோர் அதனை வெறுமனே பொருதினர்.

அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பரந்த அளவில் வீடுவீடாக அலங்கரிக்க ஆரம்பித்த கலாசாரத்தின் நீட்சி் இது என்று கருதப்படுகின்றது.

1957 நவம்பர் 3ம் திகதி பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றிவர ஸ்புட்னிக்2 எனும் விண்கலத்தில் முதன்முதல் விண்ணுக்கு சோவியத் யூனியன் அனுப்பியது லைக்கா என்ற பெயரிட்டப்பட்ட ஒரு நாய்.

அதிக அழுத்தம் அதிக வெப்பம் காரணமாக விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அது மரணிக்க நேரிடினும் மனிதர் விண்ணுக்குச் செல்லும் சோதனைக்கு வழிவகுத்தது.

1961 ஏப்பரல் 12ம் திகதி் சோவியத் யூனியனியிலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட வசுத்தோக்1 என்ற விண் கலத்தில் 108 நிமிடங்கள் சஞ்சரித்து பூமியை வலம் வந்த முதலாவது விண்வெளி வீரரான யூரி அலெக்சியேவிச் ககரின்.

அமெரிக்காவின் அப்போலோ 11 விண் கலம் மூலம் 1969 யூலை 20ம் திகதி சந்திரனில் காலடி வைத்த முதலாவது விண்வீரர் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ரோங்.

ஒட்டு மொத்த மனித குலமும் அண்ணாந்து பார்த்த மூன்று படங்கள் இவை.

1960 ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதமரானார். கூடவே உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற புகழையும் தனதாக்கினார்.

கலண்டர் வடிவில் தமிழரின் வீடுகளுக்குள் பிரவேசித்த அவரை சில கிராமங்களின் சமையலறை விறாந்தைகளே பெரிதும் வரவேற்றன.

முழுவியளத்துக்கு கூடாது என அதற்காக முன் வைக்கப்பட்ட காரணம் அவரது கட்சி சார்ந்ததா அல்லது அவரது வெண்ணிறாடை சார்ந்ததா என்று எவராலும் கூறப்படவேயில்லை.

டி.எஸ்.சேனநாயக்கா வீடுகளின் முன் விறாந்தையிலும் டட்லி சேனநாயக்கா வீடுகளின் வரவேற்பறையிலும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா சேனநாயக்கா வீடுகளின் பின் விறாந்தையிலும் இதே கிராம மக்களால் முன்னர் கிழிக்கப்பட்டிருந்தனர்.

கர்நாடக இசை உலகம் மிகவும் பரந்து விரிந்தது. இசை பிரியர் வீடுகள் பலவற்றில் மும் மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள் முத்துசுவாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் நீண்ட காலம் ஆரோகணித்தனர்.

செம்பை வைத்தியநாத பாகவதர் அரியகுடி இராமானுஜ ஐயங்கார் செம்மங்குடி சீனிவாச ஐயர் மகாராஜபுரம் மதுரை சோமு தண்டபாணி தேசிகர் எம்எஸ்.சுப்புலட்சுமி எம்.எல்.வசந்தகுமாரி டி.கே.பட்டம்மாள் என அவரோகணிக்காமலே கச்சேரியை தொடந்தவர்கள் பட்டியலும் நீண்டது.

மேடைகளை போலவே வீடுகளிலும் இவர்கள் ஒன்று சேராமல் தனித்தே ஆலாபனை செய்தார்கள்.

1960 ம் ஆண்டுக்கு பின்னராக இலங்கை இசை மேதைகளும் மனங்களிலும் சுவர்களிலும் இடம் பிடித்தனர்.

ஜோன் கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து அவரது படங்கள் வித்தியாசமான அளவுகளில் 1963 ம் ஆண்டு அமோகமாக விற்பனையாகின.

கையிருப்பு தீர்ந்ததும் ஏற்கனவே விற்பனையாகாமலிருந்த ஆபிரஹாம் லிங்கனது படங்களை தூசி தட்டி காட்சிப்படுத்திச் சந்தர்ப்பத்தை சமயோசித மாக்கினர் சில வியாபாரிகள்.

விவரம் இல்லாத சில வியாபாரிகள் விபரம் ஏதும் தெரிவியாது மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதிப் படங்கள் தேவை என கோரிட ஜோர்ச் வாஷிங்டன் தியோடர் ரூஸ்வேல்ட் டுவைட் ஐசனோவர் ஹாரி ட்ரூமன் லிண்டன் ஜோண்சன் என பேர் போன ஜனாதிபதிகள் கடைகளில் அந்தரத்தில் தொங்கினர்.

அவர்கள் யார் எனத் தெரியாது ஏக்கத்துடன் பார்த்தார்கள் வாங்க வந்தவர்கள்! வந்தவர்கள் யாரிடமாவது விலைப்பட மாட்டோமா என ஏக்கத்துடன் பார்த்தார்கள் படத்திலிருந்த ஜனாதிபதிகள்.

1964 ல் பாரதப் பிரதமர் நேரு காலமானார். இலங்கையின் ஏரிக்கரை நிறுவனம் தனது தமிழ் சிங்கள ஆங்கில பத்திரிகைகளில் காந்தி – நேரு சிரித்துக் கொண்டிருக்கும் பெரிய அளவிலான படமொன்றை பளபளப்பான

காகிதத்தில் இலவச இணைப்பாக்கிட சுமார் இரண்டு லட்சம் இல்லங்களில் நீண்டது அவர்களின் சிரிப்பு!

இந்தியாவின் 2ஆவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் 1966ம் ஆண்டு ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.

பின்னர் இந்தியா திரும்புவதற்கு காத்திருந்த நடுநிசி வேளைக்குச் சற்று முன்பாக உயிர் துறந்தார்.

தாமதமான செய்தி ஆதலால் அச்சு வேலைகள் பூர்த்தியான அடுத்த நாளின் இந்திய பத்திரிகைகள் அனைத்தும் தவறியவர் செய்தியை தவறவிட சி.பா.ஆதித்தனார் மட்டும் தனது பத்திரிகையான தினத்தந்தியிலும் தனது உற்ற நண்பனின் பத்திரிகையான இந்துவிலும் மலைப்புச் செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்.

லால் பகதூர் சாஸ்திரியும் ஆதித்தனாரும் இலங்கை சுவர்களின் திடீர் கதாநாயகர்களானார்கள்.

சா.ஜே.வே.செல்வநாயகம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் சௌமியமூர்த்தி தொண்டைமான் அல்பிரட் துரையப்பா கு.வன்னியசிங்கம் மு.திருச்செல்வம் அ.அமிர்தலிங்கம் செ.இராசதுரை கா.பொ.ரத்தினம் மு.சிவசிதம்பரம் அல்பிரட் தம்பியையா வி.குமாரசாமி ஆ.தியாகராசா மொலானா அ.வைத்திலிங்கம் வ.பொன்னம்பலம் நா.சண்முகதாசன் மு.கார்திகேயன் போன்ற அரசியலாளர்கள் அல்லது சிவாஜி கணேசன் எம்.ஜீ.ராமச்சந்திரன் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி விஜயா சரோஜதேவி போன்ற நடிக நடிகைகள் காலத்துக்கு காலம் கலண்டரில் காட்சி தந்து மாணவர்களின் சோதனை காலத்தில் உற்ற துணையாக உறுதுணை புரிந்தனர்.

பரீட்சை மண்டபத்துக்கு நாட்காட்டி அட்டைகளை எடுத்துச் செல்வதும் விடைத் தாளின் கீழ் அதனை வைத்து எழுதுவதும் அக்கால வழமை.

தமக்குப் பிடிக்காதவரின் படத்தையே தேடி வாங்கினார்கள் வெகு சில வாக்காளர்களும் ரசிகர்களும். காரணம் கேட்டால் வீட்டில் தன்னும் கிழித்து எறியலாம் அல்லது கட்டித் தொங்கவிடலாம் என்று கூறி சிரித்தார்கள்.

ஏணியிலே ஏறினனாம் முத்தன்.

இவன் எதையும் கவனிக்காப் பித்தன்.

ஏணி நுனிக் கப்பாலும்

ஏறிக் கொண்டே இருந்தான்

காணும்…அவன் இன்றோ வானத்தன்!

செந்திரு இரட்டையரை ஈன்றாள்

சிந்தையிலே பேருவகை சான்றாள்.

வந்து கண்ட ஐயப்பர்

வாய்கடித்தே “என்னுடையது

எந்த மகவு?” என்ன ஏதும் தோன்றாள்.

பஞ்சலிங்கம் பார்க்கின்றான் பார்வை

பவளம்மாள் மென் முகத்தில் வேர்வை.

கொஞ்சம் அவள் தன்னுடலிற்

கொண்டு வந்த சாமானுக்கு

அஞ்சுலட்ச மாம் ஐயா தீர்வை!

வண்டு வடைக்குள்ளிருந்து மேலே

வந்தது நான் பிய்த்தபடி யாலே!

கண்டொரு சொல் பேசாமல்

காற்றில் அது போயினது

நன்றி சொல்லா தெம்மவரைப் போலே.

இதயம் கவர்ந்த மஹாகவி உருத்திரமூர்த்தியின் 100 குறும்பாக்களிலிருந்து நான்கு இவை.

தமிழ் கவி வளத்தை செழுமைப் படுத்திய இவரை ஆதர்ஷ கவிஞராகக் கொண்டு புதிய கவிஞர் பரம்பரை உருவாகியது.

1966 ம் ஆண்டு நுரலுருவில் வெளிவந்த இவரது குறும்பா மிகுந்த வரவேற்பைப் பெற்றது போலவே இவரது படமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

1966 ம் ஆண்டு கோலாலம்பூரில் நடை பெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடர்ந்து தமிழ் வளர்த்த சான்றோர் பலரின் ஆதிக்கம் இலங்கை தமிழரின் வீடுகளில் அதிகரித்தது.

சேவியர் தனிநாயகம் அடிகள் சுவாமி ஞானப்பிரகாசர் முத்தமிழ் வித்தகர் கி.ஆ.பெ. விசுவநாதம் இரசிகமணி டி.கே.சிதம்பர நாதன் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கல்கி் கிருஷ்ணமூர்த்தி கலையரசு சொர்ணலிங்கம் ஏ.பெரியதம்பிப்பிள்ளை நடிகமணி வி.வி.வைரமுத்து கலாயோகி ஆனந்தகுமாரசாமி போன்றோர் அறிவுடன் அலங்கரித்தனர்.

1967 ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வெற்றியீட்டி அறிஞர் சி.என்.அண்ணாத்துரை முதலமைச்சர் ஆனார்.மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றமை அவர்களின் முதல் நடவடிக்கையானது.

அமெரிக்கரல்லாத ஒருவருக்கு முதன்முறையாக கௌரவ பேராசிரியர் என்ற விருதை அண்ணாத்துரைக்கு வழங்கியதில் கௌரவம் பெற்றது அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகம்.

ஆங்கிலத்திலும் புலமைமிக்கவர் என்பதை அறிந்தால் மாணவ மனங்கள் சும்மா இருக்குமா? because என்ற வார்த்தை அடுத்தடுத்து மூன்று தடவைகள் வரும் வகையில் ஒரு வாக்கியம் சொல்லச் சொன்னார்கள்.சிறிதும் தாமதமின்றி அண்ணாத்துரையிடமிருந்து வந்த பதில் – No sentence can end with because because,because is a conjunction!

அறிஞர் அண்ணாதுரை நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி மதியழகன் சாதிக்பாட்சா போன்றோர் தமிழ் நாட்டின் மந்திரிசபையை மட்டும் அலங்கரிக்கவில்லை.

தமிழணங்கை தழுவியவாறே இலங்கை வீடுகளிலும் ஆட்சியை கைப்பற்றினர்.

பெரியார் ஈ.வே.ராமசாமியை மந்திரி சபை புறக்கணித்தது எனினும் இலங்கை விட்டுக்கொடாமல் அரவணைத்தது.

ராஜாஜி காமராஜர் கக்கன் பக்தவச்சலம் பொன் ராமநாதன் பொன் அருணாசலம் ஆகியோருக்கு சுவர்களிலிருந்த இட ஒதுக்கீடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

சொந்தமாக இருந்தவரெல்லாம் சொல்லாமலே ஓரம் கட்டப்பட வின்சன்ட் சர்ச்சில் மார்டின் லூதர் கிங் குடிபுக ஒரு யோக்கியதை வேணாமா என ஆராயாது உட்புகுந்து உரிய இடமின்றி அல்லல் பட்டனர்.

பேசும் சக்தி இருந்திருப்பின் இவர்களிடம் இந்தக் கேள்வி இருந்திருக்கும்: – “அதற்குள்ளா மறந்து விட்டீர்கள்? ”

1968 ம் ஆண்டு சென்னையில் வெகு விமரிசையாக நடை பெற்ற உலக தமிழாராச்சி மாநாடு் நிறைவில் ஏற்கனவே புகைப்படங்களாக வீடுகளுள் திகழ்ந்தவர்களுடன் புதிதாகப் பவனி வந்தனர் கனடியரான ஜீ.யூ.போப் இத்தாலியரான வீரமாமுனிவர் அயர்லாந்தவரான கால்டுவெல் என தமிழ் வளர்த்த சான்றோர்!

அறிஞர் அண்ணாதுரையின் மறைவின் பின் கலைஞர் கருணாநிதி முதல்வராக மட்டும் வரவில்லை. வீடுகளுக்குள் கலண்டரில் சிரித்தபடியே மீண்டும் மீண்டார்.

கலைஞருக்கு அருகே கல்லாப்பெட்டியை வைக்க வேண்டாம் என சொல்லிக் கொண்ட பெரியவர்கள் கொஞ்சம் குறைந்தாலும் அவரை சந்தேகிக்க நேரும் எனறு காரணம் கூறி சில்மிசம் செய்தனர்.

அண்ணாவின் மறைவையொட்டி எழுதிய கவிதையே கலைஞரை இலங்கைச் சுவர்கள் வசீகரித்ததற்கு காரணம் என அப்போது நினைத்தவர்களுக்கு இப்போது 70 – 80 வயதிருக்கலாம்.அந்தக் கவிதை இது.

மூன்றெழுத்தில் ஒரு சிறப்புண்டு

அதில் முத்தமிழ் மணமுண்டு

மூவேந்தர் முக்கொடி முக்கனி என

மும்முரசு ஆர்த்தவர் தமிழர்

அவர் வாழ்ந்த தமிழ்

வாழ்வுக்கு மூன்றெழுத்து

அந்த வாழ்வுக்கு அடிப்படையாம்

அன்புக்கு மூன்றெழுத்து

அந்த அன்புக்கு துணைநிற்கும்

அறிவுக்கு மூன்றெழுத்து

அறிவார்ந்தோர் இடையில் எழும்

காதலுக்கு மூன்றெழுத்து

காதலர்கள் போற்றி நின்ற

கடும் வீரமோ மூன்றெழுத்து

வீரம் விளைகின்ற களம் மூன்றெழுத்து

களம் சென்று காண்கின்ற

வெற்றிக்கு மூன்றெழுத்து

வெற்றிக்கு ஊக்குகின்ற

அமைதிமிகு அண்ணா மூன்றெழுத்து

என்று முடியும் அந்தக் கவிதை.

தமிழ் சனசமூக நிலையங்களை ஏற்கனவே அறிவூட்டிக் கொண்டிருந்த கம்பர் வள்ளுவர் பாரதியார் பாரதி தாசன் போன்றவர்களுடன் தமிழ் பண்டிதரின் வீடுகளில் குமாரசாமி புலவரும் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையும் இணைந்து ஆராதிக்கப் பெற்றமையும் ஆறுமுக நாவலர் குடைச்சாமி செல்லப்பா சுவாமி யோகர்சுவாமி ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆயர் தீயோகுப்பிள்ளை போன்றோர் சமயவாதிகளின் வீடுகளை கும்பிட வைத்ததும் குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குள் என்ற வரையறைக்குள் அடங்காதவை.

வாழும் வரை ஜீவகாருண்யம் என்றால் நினைவில் வருபவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். பசி பிணி தாகம் இச்சை பயம் கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு தயவு கருணை இரக்கம் கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு உபகாரம் செய்வதே ஜீவகாருண்யம் என்றவர் வள்ளலார்.

வள்ளலாரின் படத்தைச் சுவரில் கொளுவியவர்கள் ஏதோ ஒரு நல்ல நாளில் அதற்கு மலர்மாலை சூட்டியபின் வள்ளலாரையும் மறந்திருப்பார்கள். ஜீவகாருண்யத்தையும் மறந்திருப்பார்கள். மலர்மாலையையும் மறந்திருப்பார்கள்.

ஆனால் படத்தின் பின்னால் காய்ந்த மலர்களும் அவற்றை அகற்றாத மனிதரும் அங்கு நிலவிய இதமான வெப்பமும் உணர்ந்த வள்ளலாரோ ஏராளமான பல்லிகளையும் கரப்பான் பூச்சிகளையும் குடியமர்த்தி அங்கு வாழ்வளித்திருப்பார்.

வள்ளலாரின் படமருகே ரமணரும் சங்கராச்சாரியாரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவியும் விவேகானந்தரும் விபுலானந்தரும் திருமுருக கிருபானந்த வாரியாரும் அபூர்வமாக குன்னக்குடி அடிகளும் கணேசையரும் நல்லை மணிஐயரும் படங்களாயிருப்பர்.

அங்கும்தான் ஜீவ ஜந்துகள் உள்ளனவே என்றால் வள்ளலாரின் பின்னே ஜீவித சந்தர்ப்பம் என்றும் ஏனையவை சந்தர்ப்ப ஜீவிதம் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

இராமபாண பூச்சிகள் இதர படங்கள் அனைத்தையும் அரித்திடினும் வள்ளலாரின் படத்தை மட்டும் எந்த ஒரு வீடடிலும் அரித்ததில்லை என்றொரு கதையும் அல்லது கட்டுக்கதையும் அந்தக் காலத்தில் நிலவியது இராமபாண பூச்சிகளை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு இன்னமும் ஞாபகத்திலிருக்கும்.

வரவேற்பறையே புகைப்படங்களை பெரிதும் விரும்பி வரவேற்கும் அறைகளாக அநேக வீடுகளில் காட்சியளித்தன.

படுக்கை அறைகள் அன்னியரின் படங்களுக்கு பெரும்பாலும் அன்னியப்பட்டன.

சகல படங்களும் சகல வீடுகளிலும் இருந்திருக்கச் சாத்தியமில்லை.

அல்லது ஏதாவது ஒரு படத்தை மட்டுமே எல்லோரது வீடுகளிலும் காணும் வாய்ப்பும் எவருக்கும் இருந்ததுமில்லை.

கலண்டர்கள் அல்லது படங்களின் பின்புறம் சலவை துணி விபரம் பால் கணக்கு அவசர கொடுக்கல் வாங்கல் குறிப்பு போன்ற வற்றிக்கும் இட ஒதுக்கீடு இருந்தது ஞாபக கிறுக்கலில் உள்ளதா?

அருகருகே இருந்த அண்ணன் தம்பி வீடுகள் இரண்டில் முன்னொரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ என்ற இயற் பெயரை உடையவரின் படம் ஒரு வீட்டிலும் ஆக்னஸ் கோன்ஜா போஜதஜியூ என்ற இயற் பெயரை உடையவரின் படம் மறு வீட்டிலும் தஞ்சமடைந்தன.

இருவரும் துறவிகள்.வெவ்வேறு காரணங்களுக்காக துறவு பூண்டவர்கள்.

ஒருவர் தீபேத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.மற்றவர் அல்பேனியர்.

பிற்காலத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் இருவருமே நோபல் பரிசு பெறப் போகின்றவர்கள் என்பதோ அவர்கள் இருவரும் முறையே தலாய் லாமா எனவும் அன்னை திரேசா எனவும் அழைக்கப்படுகின்றவர்கள் என்பதோ தெரியாமலே ஊர் மக்களுக்கு ஒரு வீடு சீன வீடாகவும் மறு வீடு வெள்ளை வீடாகவும் மாறிப் போனது.

காலக்கிரமத்தில் சீனன் வீடாகவும் வெள்ளையன் வீடாகவும் திரிந்து படங்களை கொளுவியவர்களும் மறைந்து படங்களும் மறந்து போய் தலைமுறை தாண்டிய பின்னரும் சீனன் வீடு வெள்ளையன் வீடு என்றே அவ்விரு வீடுகளும் அழைக்கப்பட்டதுதான் விசித்திரம்.

1969 ம் ஆண்டு தொடக்கம் அகமத் யாஸின் யாஸிர் அரபாத் பொபி சான்ட்ஸ் நெல்சன் மண்டேலா சேகுவேரா முயம்மர் கடாபி கிம் இல் சுங்

ஆங் சான் சூகி ஹோ சி மின் என தத்தமது நாடுகளில் பிரளயம் உருவாக்கிய புரட்சியாளர்களின் படங்கள் வரத் தொடங்கின.

பயிற்சி காலத்தில் வியர்வை சிந்தத் தயாராக இல்லையெனில் யுத்த களத்தில் ரத்தம் சிந்துவது தவிர்க இயலாது என்ற வாசகம் அவர்களது விடாத முயற்சிக்கும் கெடாத நம்பிக்கைக்கும் வலுவூட்டியது.

துப்பாக்கியை நிறுத்தி வைத்தால் அதன் பின்னே ஒளிந்து கொள்ளக் கூடிய உடல்வாகு கொண்டவர்.

ஆழ்ந்த அரசியல் புலமையும் நுண்ணறிவும் போர்த் தந்திரமும் கொண்டவர்.

வியட் நாம் படைகளுக்கு தலைமை ஏற்று அமெரிக்காவை விரட்டி அடித்தவர்.

1955 முதல் 1975 வரையான அமெரிக்க வியட்நாமிய யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தவர்.

புரட்சியாளர். தொழிலாளர் கட்சியின் தலைவர்.

பிரதமராக அதிபராக 1954 முதல் 1965 வரை திகழ்ந்தவர்.

வியட் நாமின் தேசத்தந்தை.

நியூவென் சின் சுங் என்பது இயற் பெயர். வேறு 50 புனை பெயர்களிருந்தன.

அவற்றில் ஒன்று தான் ஹோ சி மின்.

1969 ல் அவர் வியட் நாமில் மரணிக்க அவரது படம் இலங்கை வீடுகளில் உயிர்த்தது.

அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா புரட்சியால் அமெரிக்காவை அலறவிட்டு கியூபாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தவர்.

ஆபிரிக்க நாடான கங்கோ விடுதலைக்கும் தென் அமெரிக்க நாடான பொலிவியா விடுதலைக்கும் களமாடியவர்.

அவர் பயணித்த சொற்ப நாடுகளில் இலங்கையும் ஒன்று.

1959 ல் ஹொரன எனும் இடத்தில் அவர் நாட்டிய மலை வேம்பு மரம் இன்றும் உண்டு.

1971 ல் இலங்கையில் இடம் பெற்ற ஆயதப் புரட்சியுடன் சே குவேராவின் பெயரும் அடிபட்டது.

எதிரி நம்மைத் தாக்கு முன் எதிரியை நாம் தாக்க வேண்டும் என்ற அவரது கோட்பாடும் அடிபட்டது.

எனினும் புரட்சியாளன் படமானான்.

புரட்சியானது பாடமானது.

இவ்விரு படங்களும் படைகளின் கண்களுக்கு தோட்டாக்களாக சீறிப்பாய்ந்ததோ தெரியாது.

சுவர்கள் முதன்முறையாக பயப்படத் தொடங்கின!

1975 ம் ஆண்டின் பின் சுவர்களில் காணப்பட்ட படங்கள் ஆபத்தை அருகே அழைக்கும் அடையாளங்களாகவே படிப்படியாக மாறத் தொடங்கின.

நெறிமுறைகள் தெரியாத கருணை இல்லாத முரட்டுக் கும்பலிடம் மாட்டி வம்பை விலை கொடுத்து வாங்கவோ கலங்கிய கண்களுடன் அவற்றைப் பார்க்கவோ எவருமே தயாராக இல்லை.

Loading

2 Comments

  1. இந்தக்கட்டுரையை எழுதியவர் தலைபிளந்து (சத்திரசிகிச்சைமூலம்)
    உள்ளே இருக்கும் சரக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் அப்படியே திரும்பவும் மூடிக்கட்டி விடவேண்டிய நிலை
    என்நிலை.

    இந்த எழுத்தாற்றல் இருக்கிறது!!
    உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் காட்டுவோம் என்றால்,
    எங்க எதைக் காட்டுவது, ஒவ்வொரு பந்தியையும் தூக்கிப்போடப்போட முழுக்கட்டுரையையும் எல்லோ முத்தாய்ப்பாக போடவேண்டியுள்ளது.

    இது நல்லாயிருக்குமென்றால் அட அடுத்தது என்ன விதத்தில் குறைந்தது.
    இப்படியே பந்திக்குப் பந்தி கேட்டுக் கொண்டே போகலாம்.

    காரணம் காலத்தை கௌரவித்தவர்களும் அதிலிருந்தனர்.
    காலம் கௌரவித்தவர்களும் அதிலிருந்தனர்.

    இட ஒதுக்கீடு இருந்தது ஞாபக கிறுக்கலில் உள்ளதா*?

    அவர்கள் யார் எனத் தெரியாது ஏக்கத்துடன் பார்த்தார்கள் வாங்க வந்தவர்கள்!
    வந்தவர்கள் யாரிடமாவது விலைப்பட மாட்டோமா என ஏக்கத்துடன் பார்த்தார்கள் படத்திலிருந்த ஜனாதிபதிகள்.

    மலைப்புச் செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்.

    இப்படி ஒவ்வொரு பந்தியிலும் வித்தியாசமான வேலைபாடு.
    இருப்பதோ சொற்பணம், இதற்குள் ஒன்றை எடு என்றால் என்நிலை???

    1. எப்படியோ தலையை பிளந்தாயிற்று! அதற்கும் அப்பால் என்னத்தை நான் சொல்ல! எனினும் இதயத்திலிருந்துதான் நன்றி வருமெனின்….நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *