எழுத்தும் வாழ்க்கையும்!… ( இரண்டாம் பாகம் ) …. அங்கம் – 24 …. முருகபூபதி.

காலத்தின் குரலாக ஒலித்த ஜெயகாந்தன் நினைவுகள் !
ஈழம் வராமலேயே ஈழத்து இலக்கியத்தில் தாக்கம் செலுத்திய ஜேகே. !!![]()
![]()
முருகபூபதி.
நான் இலக்கிய உலகில் பிரவேசித்த ( 1971 ) காலப்பகுதியில்தான் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியை தொடங்கியது.
அவ்வேளையில் அவசர கால சட்டமும் இரவில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட அஞ்சிய காலம். அதனால் வீட்டில் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களிடம் நூல்களை பரிமாறி வாசித்தோம்.
அப்போது ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எம்மை பெரிதும் கவர்ந்தன. அவர் மல்லிகை ஜீவாவின் நண்பராகவும் இருந்தார்.
ஜெயகாந்தனுடன் கருத்து ரீதியாக முரண்பட்ட ஜீவா, மல்லிகையில் நீண்ட தொடரும் எழுதினார். ஜெயகாந்தனும் அவற்றை படித்திருந்தாலும், தனக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத பிறவி அவர்.
பின்னாளில் ஜீவா சென்னை சென்றவேளையிலும் வீட்டுக்கு அழைத்து உபசரித்தவர்தான் ஜெயகாந்தன் என்ற ஜேகே.
அவரது பெரும்பாலான நூல்களை 1970 – 1980 காலப்பகுதியிலேயே படித்து முடித்துவிட்டேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அந்த நூல்களில் அவர் எழுதும் முன்னுரைகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
1984 இல் சென்னை சென்றவேளையிலும் அவரை சந்திக்கத் தயங்கிய நான், வெகு தொலைவில் கோவில்பட்டிக்கு அருகாமையிலிருக்கும் இடைசெவல் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் கி. ராஜநாராயணனை சந்தித்துவிட்டு வந்து வீரகேசரியிலும் எழுதியிருக்கின்றேன்.
கி.ரா. , நான் ஜேகே.யை சந்திக்காமல் செல்வது குறித்து கவலைப்பட்டார்.
“ நீங்கள் நினைப்பது போன்று ஜே. கே. கோபக்காரர் அல்ல. அடுத்த முறை வந்தால் அவசியம் சந்தித்து பேசுங்கள். அவரை எவரேனும் சீண்டினால்தான் கோபப்படுவார் “ என்றார் கிரா.![]()
1990 ஆம் ஆண்டு மீண்டும் நான் சென்னை சென்றபோது, குடும்பத்தினரும் இலங்கையிலிருந்து வந்தமையால் ஜே.கே. யுடனான சந்திப்பு இறுதி நேரத்தில்தான் நடந்தது.
சோவியத் கலாசார நிலையத்தில் நடந்த தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக்கும் ஜேகே. வரவில்லை. திருநெல்வேலி, சாத்தூர், மதுரை, திருச்செந்தூர் பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தோம்.
சென்னை தினமணியில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் கார்மேகமும் , இம்முறையாவது ஜேகே யை பார்த்துவிட்டு திரும்புங்கள் என்றார்.![]()
அவரும் ஜேகேயை முன்னர் ஒருதடவை இலங்கைக்கு அழைத்தார்.
“ நான் எனது எல்லையை விட்டு நகரமாட்டேன் “ என்று சொன்னதும், கார்மேகம், “ எல்லை என்று எதனைச்சொல்கிறீர்கள்..? இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த அறையா… அல்லது உங்கள் இந்த அறை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையா…? அல்லது சென்னை மாநகரமா..? அல்லது தமிழ் நாடா..? இந்தியாவா..? சொல்லுங்கள் ! எது உங்கள் எல்லை…? “ கார்மேகம் இவ்வாறு கேட்பார் என்று ஜெயகாந்தன் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
சுதாரித்துக்கொண்டு, “ இந்தியாவை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன் “ என்றாராம்.
அத்தகைய ஜே.கே, பின்னர் ருஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்றது வேறு ஒரு கதை !
சென்னையை விட்டு புறப்படுவதற்கு முதல்நாள் மாலை, குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கவியரசு கண்ணதாசன் வீட்டுக்குச்சென்றேன். அவர்களிடமிருந்து விடைபெறும்போது, ஜே.கே. அவர்களுடன் அங்கிருந்து தொலைபேசியில் உரையாடி வரப்போவதாகச் சொன்னேன்.
மல்லிகை ஜீவாவும் நான் வருவேன் என்று அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார்.
தனது ஆழ்வார்பேட்டை குடிலுக்கு வரும் பாதையையும் ஜேகே சொன்னார்.
குடும்பத்தினரை உமா லொட்ஜில் விட்டு விட்டு, கவிஞர் காவ்யன் விக்னேஸ்வரனுடன் சென்றேன்.
இலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஜே.கேயின் கருத்துக்கள் சகிக்கமுடியாமல் இருந்தன. அவர் இந்திய வானொலியில் இந்திய அமைதிப்படையினரை பாராட்டி பேசியதாக நான் அண்மையில் படித்த ஷோபாசக்தியின் ஸலம் அலைக் நாவலிலும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியப்படையின் அட்டுழியங்களை பின்னணியாகக் கொண்டு நானும் ஆண்மை என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். அதனை மல்லிகை உட்பட இலங்கை இந்திய ஊடகங்கள் வெளியிடத் தயங்கின.![]()
ஆனால், சென்னை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்ட எனது சமாந்தரங்கள் தொகுதியில் அச்சிறுகதை இடம்பெற்றது. மதுரையிலிருக்கும் தமிழ்நாடு விடுதியில் நாம் தங்கியிருந்தபோது, அங்கே வரவேற்பு உபசரணையாளராக பணியாற்றிய ஒரு இளம் பெண் என்னிடம் அக்கதைத் தொகுப்பினை வாங்கி முழுவதும் படித்துவிட்டு, ஆண்மை கதையில் வரும் புனிதமலர் தற்போது எப்படி இருக்கிறாள்? எனக்கேட்டு அந்த பாத்திரம் மீது அனுதாபம்கொண்டு உரையாடினார்.
ஆனால், தமிழ்நாடு மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஆதரவு இதழான தீக்கதிர், எனது நூலில் இடம்பெற்ற குறிப்பிட்ட ஆண்மை சிறுகதையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
இந்திய எழுத்தாளர்களும் ஊடகங்களும் இலங்கையில் அன்றும் அதன் பின்னரும் என்ன நடந்தது..? என்ன நடக்கிறது..? என்ற தெளிவின்றி எழுந்தமானமாக கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஜேகே. என்ற ஜெயகாந்தன்.
தமிழ்நாடு , தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் பிறந்த ஜெயகாந்தன், மூன்றாம் வகுப்பு வரையுமே கற்றவர். தமது 12 வயதில் வீட்டை விட்டு ஓடி, டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்னைக்கு வந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்து படைப்பாளியானவர்.
இலக்கியப்பிரவேசம் செய்த எந்தவொரு தமிழ்ப்படைப்பாளியும் ஜெயகாந்தனின் எழுத்துக்களை வாசிக்காமல் கடந்து சென்றிருக்கமாட்டார்கள். அவர் பலருக்கு ஆதர்சமாகவும் திகழ்ந்தவர்.
இந்திய சாகித்திய அகடாமி விருது, ஞானபீட விருது, தஞ்சை பல்கலைக்கழகத்தின் ராஜ ராஜசோழன் விருது, பின்னாளில் இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ள ஜெயகாந்தன் சோவியத் நாட்டில் தமது ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களுக்காகவும் ரோயல்டி பெற்றவர்.
நான் அன்று ஜே.கே.யிடம் சென்றபோது, அவரது அலுவலகம் கலகலப்பாக இருந்தது. ஒரு பெரிய மேசையைச்சுற்றி சிலர் அமர்ந்திருக்க ஜே.கே. சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆட்டம் முடிந்தது. ஜெயகாந்தனே வெற்றிபெற்றார். உரத்த சிரிப்புடன் என்னை அருகே அழைத்து அமரச்செய்துவிட்டு, அருகிலிருந்தவர்களை அறிமுகப்படுத்தினார்.
அவர்களில் ஒருவர் தூக்குமரநிழலில் நாவல் எழுதிய சி.ஏ. பாலன். அவர் கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள், ரண்டாங்கழி, கயிறு முதலான படைப்புகளை தமிழுக்கு வரவாக்கியவர்.
மற்றவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. சி.ஏ.பாலன் ஒரு காலத்தில் மரணதண்டனைக் கைதி. பின்னர் நிரபராதியெனக்கண்டு விடுதலையானவர். சிவகுமார் – லட்சுமி நடித்த இன்று நீ நாளை நான் என்ற திரைப்படத்தை எடுத்தவர்.

இலங்கை- இந்திய ஒப்பந்தம் வந்து இந்தியப்படை இலங்கையில் பிரவேசித்தபொழுது ஜெயகாந்தன் தெரிவித்திருந்த கருத்துக்கள் விமர்சனத்திற்குட்பட்டிருந்தன. ஏற்கனவே இந்திய இராணுவம் – சீனா – பாகிஸ்தானுடனான போர்களில் புரிந்த தியாகங்களினால் ஜெ.கே.வுக்கு இந்திய இராணுவத்தின் மீது மரியாதை இருந்திருக்கக்கூடும். அதே மரியாதையுடனேயே இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தையும் அவர் அவதானித்தார். இந்திய இராணுவம் புலிகளை வேட்டையாட முனைந்து அப்பாவித்தமிழ்மக்களின் உயிர்களைக்குடித்ததையும் உடைமைகளை சேதமாக்கியதையும் அவர் விமர்சனத்துக்குள்ளாக்காமல், இந்திய இராணுவம் தான் சென்ற நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லையென்றால் உடன் திரும்பியிருக்கவேண்டும் என்று மாத்திரம் பொதுப்படையாகச் சொன்னார்.
அக்காலப்பகுதியில் அவர் படிப்படியாக எழுதுவதைக் குறைத்துக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
நாம் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது இரண்டுபேர் இயக்குநர் பாக்கியராஜாவின் பாக்கியா இதழிலிருந்து வந்தனர். ஜெயகாந்தன் தனது மாலைமயக்கம் சிறுகதைத்தொகுப்பை எடுத்து, அதில் ஒரு சிறுகதையை தெரிவுசெய்து பிரசுரிக்குமாறு கொடுத்தனுப்பிவிட்டு, விட்ட இடத்திலிருந்து உரையாடலைத்தொடங்கினார். அவர் சிறுகதை – தொடர்கதை எழுதாமலிருந்தபோதிலும், ஏற்கனவே வெளியான அவரது படைப்புகள் இதழ்களில் மறுபிரசுரமாகிக்கொண்டுதானிருந்தன.
ஆனந்தவிகடனில் வெளியான பிரசித்திபெற்ற முத்திரைக்கதை அக்கினிப்பிரவேசம் அதன் பொன்விழா மலரில் மறுபிரசுரம் கண்டது. அவரது சிறுகதைகளுக்கு முத்திரைக்கதை தகுதியை வழங்கிய ஜெயகாந்தனின் பல தொடர்கதைகளை வெளியிட்ட ஆனந்தவிகடனின் பொன்விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.
ஏன்…? என்று கேட்டதற்கு, திவசச்சாப்பாடு என்று மாத்திரம் இரத்தினச்சுருக்கமாக சொன்னவர் ஜே.கே. அதுதான் ஜே.கே.
தமிழ் இலக்கிய உலகில் எவராலும் தவிர்க்கமுடியாத- தமிழே தவிர்க்கமுடியாத ஆளுமைதான் ஜெயகாந்தன்.
அவரை அன்று சந்திக்க முன்பே அவருடைய பெரும்பாலான படைப்புகளையும் படித்து அவரது சில திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அவரைப்பற்றி சில பத்தி எழுத்துக்களை எழுதியிருக்கின்றேன். அவரது படைப்புகள், கருத்துக்கள் குறித்து நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன்.
தமிழக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஜெயகாந்தன் ஒதுங்கிய அல்லது புறக்கணிக்கப்பட்ட காலப்பகுதியில், ஆனந்த விகடனின் முத்திரை எழுத்தாளராக உச்சத்திற்கு சென்றதும் மல்லிகையில் டொமினிக்ஜீவா எழுதிய ஒரு படைப்பாளியைப்பற்றி ஒரு சிருஷ்டியாளனின் பார்வை என்ற தொடர்கட்டுரை எம்மத்தியில் விவாதத்தை எழுப்பியிருந்தது. கட்டுரை முடிவுற்றதும் வெளியான எதிர்வினைகளையும் ஜீவா மல்லிகையில் பிரசுரித்தார்.
இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அக்காலப்பகுதியில் ஜெயகாந்தன் ஒரு ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.
ஜெயகாந்தனும் தடாலடியாக அறிவிப்புகளை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார்.
நான் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொண்டதில்லை.
எழுத்து எனது ஜீவன். ஜீவனம் அல்ல.
என்பன அவரது கம்பீரமான குறிப்பிடத்தகுந்த வாசகங்கள்.
ஜெயகாந்தன் செல்லுமிடமெங்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விதைத்துவிட்டுவிடுவார். அதனை எதிர்க்கருத்துக்கள் வளர்த்துவிட்டுவிடும்.
தமிழ்த்திரையுலகில் நாகேஷ், சந்திரபாபு, கமல், பார்த்திபன், சிவகுமார், ஸ்ரீகாந்த், லட்சுமி, எஸ்.வி.சுப்பையா, இயக்குநர்கள் பிம்சிங், முக்தா ஶ்ரீநிவாசன் மல்லியம் ராஜகோபால், விஜயன் உட்பட பலரின் இனிய நண்பரான ஜெயகாந்தனின் திரைப்படங்கள் இன்றும்பேசப்படும் காவியங்கள்.
உன்னைப்போல் ஒருவனையும் யாருக்காக அழுதானையும் திரைப்படங்கள் இயக்கும் எந்தவொரு முன்அனுபவமுமே இல்லாமல் தானே இயக்கியவர்.
ஜெயகாந்தன் 1971 இல் ஏன் எழுதுகிறேன் என்ற வானொலி உரையில்….
“எழுதுவதால் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பலனும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப்புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்காலச்சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை அதற்காகவும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம்எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம் “ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
பின்னாளில் அவர் பல வருடங்களாக எழுதவில்லை. “ ஏன்..? “ என்று கேட்டால் – “இதுவரையில் தான் எழுதியதைப் படியுங்கள். “ எனச்சொல்வார்.
அதுதான் ஜெயகாந்தன்.
விடைபெறும்போது, இலங்கைக்கு வாருங்கள். என்றேன்.
வந்தால், தனக்கும் பிரச்சினை உங்களுக்கும் பிரச்சினை என்று அட்டகாசமாக சிரித்துக்கொண்டு சொன்னார்.
மீண்டும் சந்திப்போம் எனச்சொல்லி வழியனுப்பிவைத்தார்.
மீண்டும் அவரை 2008 ஆம் ஆண்டு, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எழுத்தாளரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான மகேந்திரனுடன் சென்று பார்த்தேன். இந்த மகேந்திரன்தான் பின்னாளில் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டவர்.
அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் ஜேகேயிடம், “ ஒரு தடவை இலங்கை வாருங்கள் “ என்றேன். அப்போதும் சிரித்துக்கொண்டு, 1990 இல் சொன்ன அதே வசனத்தையே சொன்னார்.
2011ஆம் ஆண்டு நாம் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தியபோதும் தொலைபேசி ஊடாக அழைத்தேன். அவர் குறித்து எமது நண்பர் கனடா மூர்த்தி எடுத்த உலகப்பொது மனிதன் ஆவணப்படத்தை நாம் காண்பிக்கவிருக்கின்றோம். வாருங்கள் என்றேன்.
“ தாராளமாக காண்பியுங்கள். அதில்தான் நான் தோன்றுகின்றேனே… அது போதும் “ என்றார்.
திட்டமிட்டவாறு மாநாடு நடந்தது. முதல் நாளன்று நிகழ்ச்சியில் ( இரவு ) அதனை காண்பித்தோம்.
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற விரிவான கட்டுரையை கொழும்பு தினக்குரல் வார இதழிலும் எழுதியிருக்கின்றேன்.
எங்கள் பிரியத்திற்குரிய ஜெயகாந்தன் தமது 81 வயதில் கடந்த 08-04 – 2015 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
அப்போது நான் எழுதிய கட்டுரையும் இடம்பெற்ற நூலை குமுதம் இதழ் வெளியிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாசார மையமும் இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக்கழகமும்
இணைந்து ஏப்ரில் 24 ஆம் திகதி ( ஜெயகாந்தன் பிறந்த தினம் ) நடத்திய மெய்நிகர் அரங்கில் ஜெயகாந்தன் பற்றி உரையாற்றினேன்.
ஜெயகாந்தனின் பால்யகாலத் தோழர் தமிழ்நாடு திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி , ஜே.கே. பற்றிய ஆவணப்படம் எடுத்த நண்பர் கனடா மூர்த்தி ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
எனது எழுத்துலக வாழ்வில் ஜெயகாந்தனையும் மறக்கமுடியாது.
எனது ஆண்மை சிறுகதை இடம்பெற்ற தொகுப்பினை நூலகம் இணைப்பில் பார்க்கலாம். https://noolaham.net/project/117/11650/11650.pdf
சமாந்தரங்கள் கதைத் தொகுப்பு
( தொடரும் )
—0—
![]()
தணியாத்தாகம் தேடல் துரத்தும் நின்ற இடத்தில்