தமிழர்களே கோதபாய இராஜபக்சாவை ஜனாதிபதியாக்கியவர்கள்!…. ஏலையா க.முருகதாசன்.

எனது முகநூல் வட்டத்தில் தமிழக நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களனைவரில் சிலர் தமிழகக் கட்சிகளின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள்.நான் தமிழக கட்சிகளின் நிலவரம் சார்ந்து அல்லது அரசியல் அணுகுமுறை சார்ந்த கருத்துக்களைப் பதிவு செய்யும் போது அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு விசுவாசமாக கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
அது அவர்களின் உரிமை,கருத்துச் சுதந்திரம்,தனிமனித உரிமை.அதனை மதிக்க வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியர்கள் என்பதை நாம் உணர்தல் வேண்டும். நாங்களும் அவர்களும் தமிழர்களாக இருந்த போதும்.அவர்களும் நாங்களும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் தம்மை இந்தியர்களாக,இந்திய தேசப்பற்றுடன் உணர்வதும் சிந்திப்பதும் தவறே இல்லை. அதைப் போல இலங்கைத் தமிழர்கள்,தமிழர்கள் என்:ற காரணத்தினால் இந்தியர்களாக முடியாது.
அவர்கள் இலங்கையர்கள், இலங்கை மீதான தேசப்பற்றும் சிந்தனையும் உணர்வும் இருக்க வேண்டுமே தவிர அதீத தமிழகப் பற்றுக் காரணமாக இலங்கை மீது அந்நிய உணர்வு ஏற்படுவது மிகப் பெருந் தவறாகும். ஓத்த மொழி ஒத்த மதம் என்பது வேறு.இலங்கையுடனான இந்திய அரசியல் வேறு என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
எல்லா நாடுகளும் போல இந்தியாவும் தனது அரசியல் கட்டமைப்பைப் பல அடுக்குகள் கொண்டதாக கட்டமைத்து வைத்திருக்கின்றது. தனது குடிமக்களுக்கான அரசியல் வேறு.அயலக நாடுகளை அணுகுவதற்கான வெளிவிவகார அரசியல் வேறு.தனது குடிமக்களையே நோட்டம் விடும் அரசியலும் இராஜதந்திரமும் வேறு.தனது அயல் நாடுகளை நோட்டம் விடுதலும் உளவு பார்த்தலும் வேறு.
குறிப்பாக மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை இலங்கையை,இலங்கையின் இறமைக்கப்பால் அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இலங்கை மீது அன்று போர் தொடுத்தது போல, இன்று இந்தியா அரசியல் போர் தொடுத்து வருகின்றமையை நாம் உணர்தல் வேண்டும்.
இதனை எவ்வளவு நுணுக்கமாக இந்தியா செய்கின்றது என்பதை உற்றுக் கவனித்தால்,இலங்கையர் எவருக்கும் இந்தியா மீது சந்தேகம் எழும். அதிலும் குறிப்பாக தமிழர்களுடைய எண்ணம்’ இந்தியா எவ்வளவு உதவி செய்கிறது.இலங்கைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளில் எல்லாம் கப்பல்
கப்பலாக உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கின்றது.போக்குவரத்துக்காக ரயில் வண்டிகளை அனுப்பி வைக்கின்றது என்பதைச் சிங்களவர்களைவிட தமிழர்கள் சிலாகித்து மகிழ்கிறார்கள்.
ஆனால் இலங்கையை தமது வலையில் வீழ்த்துவதற்கு இத்தகு தமிழர்களின் அரசியல் பார்வையற்ற, எதற்கு?ஏன் ?என்று கேள்வி கேட்காத கண்மூடித்தனமான இந்தியா மீதான அதீத நம்பிக்கையே காரணமாகும்.
உலக நாடுகளில் சிறப்பான ஆட்சியை நடத்தும் நாடுகளின் நிர்வாகத்தை உற்றுக் கவனித்தால் அவர்கள் தம்மை எந்த நாடுமே எதற்காகவும் அரசியல் பொருளாதார ரீதியாவோ சமூக ரீதியாக கையகப்படுத்தாமல் இருப்பதற்காக மிக மிக அவதானமாகச செயல்படுகின்றன.
இலங்கையின் பலவீனம் என்பதே சிங்கள தமிழ் இன முரண்பாடுகளே.இரு இனங்களும் புரிந்துணர்வுடன் ஒற்றுமைப்பட முடியாத அளவிற்கு தமிழ்ச் சிங்கள இனவாதிகளை வளர்த்துவிட்டதே இந்தியாதான். அதே வேளை தமிழர்களும் சிங்களவர்களும் தாங்கள் இலங்கையர்கள் என்ற பெயருடன் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே இலங்கை ஒரு வளமுள்ள நாடாகவும்,அந்த வளங்களின் பலாபலன்களால் தமது வாழ்க்கை நிம்மதியும்,அமைதியம்,மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும் என்பதை உணரத் தவறிவிட்டனர்.
இந்தியா இலங்கையை தான் நினைத்தபடி ஆட்டுவிப்பதற்கு இன்னொரு வாய்ப்பாக அமைந்தது இலங்கையில் மட்டுமே சிங்கள இன மக்கள் வாழ்கின்றமையுமாகும். இந்தியா தமது இராஜதந்திரிகள் மூலமாக உலக நாடுகளில் இலங்கையில் மட்டுமே சிங்கள இனம் இருக்கின்றது.அவ்வினம் இலங்கைத் தமிழர்களின் நடவடிக்கையால் இல்லாது போகக்கூடாது போல இலங்கைச் சிங்கள இராஜதந்திரிகளுக்குச் சொல்வதுடன்,புத்தமதம் காக்கப்பட வேண்டும் எனச் சொல்லும் அதே நேரம் இலங்கைத் தமிழ் அரசிய்வாதிகளுக்கும், உங்கள் உரிமையை வென்றெடுக்க நாங்கள் துணை நிற்போம் என்றும் சொல்வார்கள். இதைவிட தமிழக அரசியல்வாதிகள் சிலரை உதாரணமாக சீமான் போன்ற அவர்களின் கையாட்களை வைத்து உணர்ச்சி பொங்க தமிழீழமே ஒரே வழி எனப் பேச வைப்பார்கள்.
இந்தியா பல மாநிலங்களையும்,பல மொழிகளையும், பல மதங்களையும்,பல பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட ஒரு கூட்டிசைவு நாடாகவும்.அதனைக் கட்டிக் காக்கு வேண்டிய பொறுப்போடமைந்த அரசியலை இந்தியா செய்து வருகின்றது.
ஆதலால் இந்தியாவிலிருக்கும் மாநிலங்களில் தமிழ் மாநிலத்திற்கும் இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்குமிடையிலிருக்கின்ற ஒரே இனம் என்ற அத்திவார ஒற்றுமை ஒன்றுபட்டுவிடக்கூடாதென்பதில் இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
இலங்கைத் தமிழர்கள் தாம் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவற உணர்தல் வேண்டும்.இந்தியா இலங்கைக்கு உதவி செய்வது என்பதுகூட இலங்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகவுந்தான் என்பதே நூறுவீத உண்மையாகும்.
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் சூத்திரதாரி இந்தியாதான் என்பதும்,அதனால் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழர்கள் சிங்களவர்களையும் விரோதிகளாக பார்க்கத் தொடங்கியமையும்,அதனால் எதிர்வினையாற்றல் சிறு சிறு துமியாக விழுந்த இனவாத மழை,இனவாத அடைமழையாக பொழிய ஆரம்பித்து இன்று முழு நாடுமே இனவாத வெள்ளத்தில் மூழ்கிப் போய் பொருளாதார சீரழிவுக்கு உட்பட்டிருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்னர் திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் „இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது „ என கருத்துத் தெரிவித்திருக்கிறார். இத்தகு அரசியல்வாதிகளின் இந்தியச் சார்பு நிலையே இலங்கைத் தமிழர்களுக்கு அழிவையும் ஏற்படுத்தி முழு இலங்கையையும் சீரழித்தது எனலாம்.
69 இலட்சம் சிங்கள மக்களின் ஆதரவை வாக்குகளால் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயாவை ஜனாதிபதியாகத் தேர்வு செய்ய வைத்தமைக்கு இந்திய சார்பு இலங்கைத் தமிழ் அரசியல்வவாதிகளும் இலங்கைத் தமிழர்களுமே காரணமானவர்கள். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய அரசொன்று இலங்கையில் வரக்கூடாதென்பதில் இந்தியா மிக உறுதியுடன் இருக்கின்றது. அதனை மன்னராட்சியிலிருந்து இன்றுவரை அதற்கான உளவு வேலைகளை இந்தியா செய்து வருகின்றது.
![]()