கட்டுரைகள்

பயணங்களும் இடங்களும்!… (ஒரு அனுபவப் பகிர்வு)…. ஏலையா க.முருகதாசன்.

எனக்கு எப்பொழுதும் ஊர் உலாத்துவதில் விருப்பம் உண்டு.ஊர் உலாத்துவது என்றால் ஒவ்வொரு இடங்களையும் பார்ப்பதுதான்.அது பயணங்களுடன் இணைந்ததே.

ஆக மொத்தத்தில் பயணங்களும் ஊர் உலாத்தலும் எனக்குப் பிரியமானவை.

நான் ஊரில் இருந்து போது எனது பயணத்துக்கு பெரும் உதவியாக இருந்தது சைக்கிளே.எனது சைக்கிள் என்னைப் பல இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறது.தார் வீதிகள் கல்லொழுங்கைகள்,புழுதியொழுங்கைகள்,வெள்ளொழுங்கைகள்,நாகதாளியும், கொடிக்கள்ளியும் சதுரக்கள்ளியும், அலம்பல் செடிகள்; நிறைந்த நிலங்கள்,தோட்ட வரம்புகள் எனப் பலதை நானும் சைக்கிளும் தரிசித்திருக்கிறோம்.

சைக்கிளில் பிரயாணம் செய்வது போல நடந்து பிரயாணம் செய்வதிலும் தொடர்ச்சியான விருப்பம் உண்டு.நடைப்பயிற்சியும் சைக்கிள் பயணமும் இன்னமும் தொடர்கின்றது.

எனது ஊர் தெல்லிப்பழை.மகாஜனக் கல்லூரியின் எல்லையோடு அமைந்த சுற்றுவட்டாரந்தான் அம்பனைக் குறிச்சி.அங்குதான் எங்களுடைய வீடு இருந்தது.

எங்களுடைய கல்லூரியான மகாஜனக் கல்லூரி நிலை கொண்டிருக்கும் இடமே அம்பனைக் குறிச்சிதான்.

நான் ஊரிலிருந்த போது அம்பனையிலிருந்து காங்கேசன்துறை, மயிலிட்டி,கீரிமலை,மூளாய் ஆஸ்பத்திரியடி, யாழ்ப்பாணம், சன்னதிக் கோவில்,அச்சுவேலி என பல ஊர்களுக்கு நடந்தே போயிருக்கிறன்.

நடப்பது எனக்கு விருப்பமான ஒன்று.எனது அப்பு மூளாய் ஆஸ்பத்திரியில் சுகமில்லாமல் இருந்த போது இருமுறை நடந்து போயிருக்கிறன்.அம்மா ஆஸ்பத்திரியில் வைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னிடம் சைக்கிளும் இருந்தது.பஸ்ஸில் போய் வருவதற்கு அம்மா காசும் தந்திருந்தார்.

நான் ஒரு நாள் நினைச்சன் மூளாய் ஆஸ்பத்திரிக்கு நடந்து போயப் பார்ப்பம் என்று.

அதன்படி அம்பனைச் சந்தியிலிருந்த சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் மூன்று தோசைகளைச் சட்னியுடனும் அதற்கு உவப்பாக சுண்டல் சகிதமும் சாப்பிட்டு, அதற்கு உவப்பாக நன்னாரித் தேத்தண்ணியும் குடிதச்சுவிட்டு நடக்கத் தொடங்கினன்.

கிட்டத்தட்ட மூளாய் ஆஸ்பத்திரியடி எங்கடை வீட்டிலிருந்து 10 – 12 மைல்கள் வரை இருக்கும்.நடக்கப் போற தூரத்தை அம்பனைச் சந்தியில் நின்று யோசிக்கக் கூடாது, அப்படி யோசிச்சால் கால் முன்னோக்கி ஏவாது.

நடக்கப் போகிற தூரத்தை துண்டு துண்டாக பிரிக்க வேணும்.அம்பனைச் சந்தியிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் வறுத்தலைப் பிள்ளையார் கோவிலடி,பிறகு கூத்தன்சீமா சந்தையடி, பிறகு அளவெட்டி தவளக்கிரி அம்மன் கோவிலடி, பிறகு கிராயிட்டி முடிய விளான் சந்தி,பிறகு இருபக்கமும் வெளியான நிலங்கள் உள்ள பகுதி,பிறகு பண்டத்தரிப்புச் சந்தையடி, பிறகு அப்படியே மேற்குப்புறமாக நடந்து சந்தியிலை தெற்குப் பக்கமாகத் திரும்பி நடந்தால்

வடலியடைப்பு, பிறகு அப்படியே சந்தியடிக்குப் போனால் சித்தங்கேணி, பிறகு சுளிபுரம்,பிறகு தொல்புரம் தொல்புரம் கடந்தால் மூளாய் ஆஸ்பத்திரியடி.

இப்படித்தான் நான் தூரங்களைக் கடப்பன்.பிறகு திரும்பி வீட்டுக்கு வரும் போதும் இப்படித்தான் தூரங்களைத் துண்டாக்கித் துண்டாக்கித்தான் நடந்து வந்தன்.

ஆனால் அப்புவும் அம்மாவும் எதற்காக தேவையில்லாமல் நடந்து வந்தனி என்று பேசினார்கள்.இப்படி இரண்டுதரம் மூளாய் ஆஸ்பத்திரியடிக்கு நடந்து போய் வந்தன்.

யாழ்ப்பாணத்துக்கும் நடந்து போய்ப் பார்ப்பம் என்று நடக்கத் தொடக்கினன்.அதுக்கும் இதே தியரிதான்.அம்பனைச் சந்தியிலிருந்து தெல்லிப்பழைச் சந்திக்கிடையில் வீதி வளைவுகளையும் கடைகளையம் எல்லைகளாக வகுத்துக் கொண்டன்.

தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து துர்க்கையம்மன் கோவிலடி அதோடு தொடர்பான எட்டாம் கட்டையடி,பிறகு மல்லாகம்,பிறகு சுண்ணாகம்,பிறகு மருதனார் மடம்,பிறகு இணுவில்,பிறகு கோண்டாவில் பிறகு தாவடிச் சந்தி,பிறகு நந்தாவில் பகுதி,பிறகு குளப்பிட்டிச் சந்தி, பிறகு கொக்குவில்,பிறகு நாச்சிமார் கோவிலடி பிறகென்ன யாழ்ப்பாணப் பட்டினம்.

தூர இடங்களுக்கு நடக்கிற போது கையில காசு வைச்சிருக்க வேணும்.அப்பத்தான்; தாகம் பசி வந்தால் வடையோ அல்லது ஏதாவது வாங்கிச் சாப்பி வேணும். ஆதனால் பசிதாகத்தை தீர்ப்பது மட்டுமல்ல நடக்கிற களையும் தெரியாது.

மூளை ஆஸ்பத்திரியடிக்கு நடந்து போகிற போது பண்டத்திரப்புச் சந்தியில் ஒரு தேத்தண்ணி இரண்டு வடை பிறகு சித்தங்கேணிச் சந்தி கிழக்குப்பற மூலைக்கடையில் ஒரு தேத்தண்ணி வடை என சாப்பிட்டும் குடிதச்சுவிட்டு நடையைத் தொடர்ந்தால் பிறகு மூளாய் ஆஸ்பத்திரிக்குப் போய் அம்மா சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டிட்டு பிறகு வீடு நோக்கி நடக்கத் தொடங்கி விடுவன்.

யாழ்ப்பாணம் நோக்கி நடக்கும் போதும் தெல்லிப்பழை ஆனந்த பவானில் இடியப்பம் சொதி சம்பலுடன் சாப்பிட்டுத் தேத்தண்ணியும் குடிச்சிட்டு நடக்கத் தொடங்கினால் சுண்ணாகம் முனீஸ்வராக் கபேயில் உழுந்து வடை இரண்டைச் சாப்பிட்டிட்டு தேத்தண்ணியும் குடிச்சிட்டு நடையைத் தொடர்ந்தால் பிறகு தாவடியில்,கிழக்குப் பக்கத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை இருக்குது அந்தக் கடை போண்டாவுக்கு பிரபலம், அதுவும் அங்கு பெரிய போண்டா, அங்கு போண்டாவைச் சாப்பிட்டிட்டு பெரிய பித்தளை மூக்குப் போணியில் ஒரு பால் கோப்பியும் குடிச்சால் அடுத்த சாப்பாடு யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிற்றி பேக்கரியில்.

அரை இறாத்தல் பாணும் பருப்புக்கறி மாஸ் போட்ட சம்பல் எனச் சாப்பிட்டிட்டு பிறகு யாழ்ப்பாணம் நூல் நிலையத்துக்குப் போய் ஏதாவது புத்தகங்களை எடுத்து வாசிச்சிட்டு மீண்டும் வீடு நோக்கி நடக்கத் தொடங்குவன்.

சன்னதித் திருவிழாக் காலங்களில் எப்பொழுதாவது ஒருநாள் இப்படி சன்னதிக்கு நடந்து போவதுண்டு.

வீட்டிலை இருந்து வெளிக்கிட்டு மகாஜனக் கல்லூரிக்கு எதிர்ப்பக்கதிலிருக்கின்ற லிங்கம் கபேயில் சாம்பார் சம்பலுடன் ஐந்து தோசையைச் சாப்பிட்டிட்டு பால்ரீயும் குடிச்சிட்டு நடக்கத் தொடங்கினால் தெல்லிப்பழைச் சந்தி அதையடுத்து வறுத்தலைவிளான் பிறகு கட்டுவன் சந்தி, கட்டுவன் சந்தி வடக்குப் பக்கத்தில் இருக்கும் சைவத்தின்ரை தேத்தண்ணிக் கடையிலை ஒரு பிளேன் ரீ குடிச்சிட்டு நடக்கத் தொடங்கினால் வயாவிளான் சந்தியின் வடமேற்காயிருக்கும் தேத்தண்ணிக் கடையிலை உழுந்து வடை சாப்பிட்டு பால்ரீயும் குடிச்சிட்டு நடக்கத் தொடங்கினால் தோலகட்டி கழிஞ்சு அப்படியே நடந்து கொண்டிருந்தால் பலாலி விமானநிலைய ஓடுபாதை வடக்குத் திசையில் தென்படும், அங்கை விமானம் ஓடி ஏறுவதற்கு தயாராக நின்றால் ஏறும் வரை நின்று பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குவன்.

பிறகு பத்தைமேனி கடந்து அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தடியில் ஒரு சாப்பாட்டுக் கடை தெற்குப் பக்கமாக இருக்கும் கிட்டினரின் சாப்பாட்டுக் கடையிலை தேத்தண்ணியும் வடையும் சாப்பிட்டிட்டு, சன்னதிக் கோவில் நோக்கி நடந்து சென்று அங்கு முருகனைக் கும்பிட்டிட்டு மடத்திலை சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் அங்கு கடலை வாங்கி; மரநிழலில் இருந்து கொறிச்சுப் போட்டு; கொஞ்ச நேரம் இருந்திட்டு, பிறகு பஸ்ஸில் ஏறி வீடு வந்திடுவன்.அச்சுவேலியில் உள்ள மாமா மாமி வீட்டுக்கும் நடந்து போயிருக்கிறன்.

ஆனால் சைக்கிள்தான் எனது தினசரி வாகனம்.தெல்லிப்பழையில் உள்ள ஒழுங்கைகள் குச்சொழுகைகள் எனச் சைக்ளில் திரிவன்.

இதிலை இன்னொரு விசயம் என்னவென்றால் அப்பு அம்மா காலமானதைத் தொடர்ந்து நான் தனியனாக ஐஞ்சு வருசங்கள் இருந்தனான்.

அந்தக் காலப் பகுதியில் எனது பகுதி கிராம சேவையாளருக்கு உதவியாக வாக்காளர் பெயர்களை வீடு வீடாகச் சென்று நிரப்புவது,குடிசன மதிப்பீட்டுக்காக இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று வீட்டிலுள்ளவர்களின் பெயர்களைக் கேட்டு நிரப்புவது என உதவிகளைச் செய்து கொண்டிருந்தன்.

இரவு நேரங்களில்; வீடுகளுக்குச் சென்று ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை ஏன் எழுத வேண்டுமென்றால் இரவு நேரங்களில்தான் ஒரு வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இருப்பார்கள் என்பதற்காகவே.

இரவு நேரத்தில்தான் கணக்கெடுக்க வருவார்கள் என்பதை மக்கள் அறிஞ்சு வைத்திருப்பதால் கோபிக்கமாட்டார்கள்.

வாக்காளர் பட்டியலை நிரப்பும் போது எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது.அளவெட்டியில் ஒரு பகுதி தெல்லிப்பழைக்

ஒரு வீட்டின் தலைவி தனது கணவரின் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.எனக்குத் திகைப்பாகவும் சங்கடமாகவும் இருந்தது.

அப்பொழுது பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைத்து தனது கணவரின் பெயரை எனக்குச் சொல்லும்படி சொல்ல அந்தப் பெண் இந்தப் பெண்ணின் கணவரின் பெயரைச் சொன்னார்.

நான் பெயர் சொன்னவரிடம் கேட்டன் „ ஏன் இவர் தனது கணவரின் பெயரைச் சொல்லத் தயங்குகிறார் „என்ற போது.இவங்க இந்தியாவிலிருந்து இங்க வந்து கல்யாணம் செய்தவர்.இவங்க கணவரின் பெயரைத் தம் வாயால் சொல்ல மாட்டாங்க, இது அவங்கட பழக்கம் என்றார்.

எனக்கு நடப்பதிலும் சைக்கிளில் போவதிலும் விருப்பம் ஏற்பட்டதற்கு அது எனது தந்தையிடம் இருந்து வந்த பழக்கமேயாகும்..

எனது அம்மாவிடம் இருந்து சிறு வயசிலேயே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது போல சுறுசுறுப்பாக ஓடித்திரியும் பழக்கம் எனது தந்தையிடமிருந்தே வந்தது.

எனது தந்தை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்தவர்.அவர் ஆறுமணி வேலைக்குப் போனதன் பின் காலமைச் சாப்பாட்டை அம்மா தர நானே கொல்லங்கலட்டி வீதி வழியாக நடந்து தச்சன் காட்டையும் கடந்து அலம்பல் செடிகள் அங்குமிங்குமாக நிற்கும் கல்குவாரிப் பகுதியையும் கடந்து கொண்டு போய்க் கொடுப்பன்.

சைக்கிள் ஓடப் பழகுவதற்கு முன் நடந்து போயக் குடுத்துவிட்டு வந்து பிறகு பள்ளிக்கூடம் போவன்.

எனது அப்புவும் சைக்கிளில் திரிவார்.வல்லிபரக் கோவில் நாகர் கோவிலுக்கெல்லாம் சைக்கிளில்தான் போய் வருவார்.

சைக்கிளில் நயினாதீவுக்கே போய் வந்திருக்கிறார்.அது எப்படியென்றால் எங்கடை வீட்டிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் பண்ணைப்பாலம் கடந்து மண்டைதீவுக்கூடாக புங்குடுதீவு போய்க் குறிக்கட்டுவானில் சைக்கிளை கப்பலில் ஏற்றி நயினாதீவுக்கரைக்குப் போய் அதிலிருந்து நயினாதீவைச் சுற்றி வந்தார்.

எங்கடை வீட்டயல் வீடான பாக்கியம்மா ரீச்சர் வீட்டிலை நயினா தீவைச் சேர்நத ஆசிரியர் திரு.கனகசபை அவர்களின் மகன் நாகேஸ்வரன் தங்கி மகாஜனக் கல்லூரியில் படிச்சுக் கொண்டிருந்தவர், பின்னாளில் பேராசியராக தனது கல்வியை மேலோங்கச் செய்தவர்.

அப்பு அவர்களின் வீட்டில் மத்தியானச் சாப்பாட்டைச் சாப்பிட்டிட்டு சைக்கிளில் நயினா தீவைச் சுற்றி வந்ததுடன் ஆங்காங்கெ சங்கு சிற்பிகள் கோரல்ஸ் விதம் விதமான மண்களைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிவர இரவு 11 மணியாகிவிட்டது.

காடுகளுக்குள்ளாலும், வயல்கள் இருமருங்கிலும் இருக்கின்ற சூழ்நிலையிலும் நடந்து போகிற போது மனதுக்குச் சுகமாகும்.இவை மட்டுமல்ல ஆறு குளம் ஏரி கடற்கரை என்பனவும் மனதுக்கு இதமானவையே.

நடையில் எனக்கு இருந்த விருப்பம் காரணமாக நான் சிங்கப்பூரில் வேலை செய்த போதும் சனி ஞாயிறுகளில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டதுண்டு.பிறகு எனது சிங்கப்பூர் வாழ்க்கை வேறு பாதையில் செல்லத் தொடங்கியது.ஆனால் அப்பொழுதும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறன்.நாங்கள் இருந்த வீட்டு நண்பர்களிடம் நடக்க வாறியளா என்று கேட்டால் வரவே மாட்டார்கள்.

நடக்கையில் கட்டிடங்கள் கழிந்து நடக்கும் போது இருபக்கமும் தோட்டப்பகுதிகளும் குடிமனைகளும் இருக்கம்.அழகிய பூமரங்களும,; தாராக்கள் சத்தம் போட்டுக் கொண்டு திரியும் காட்சியும் ரம்மியமானது.

அது தனிக் கதை.’சிங்கப்பூரில் சிலகாலம்’ என்ற தலைப்பில் உண்மைக்கதையொன்றை, கிட்டத்தட்ட 41 பகுதிகளாக அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் எழுதியிருந்தன்.

ஜேர்மனிக்கு வந்ததன் பின் இன்றுவரை நடைப்பயிற்சியில் ஈடுபடுவதுடன், இடங்களைப் பார்ப்பதற்காக பஸ்ஸிலும் ரயிலிலும் பிரயாணம் செய்வதையும் விரும்புகிறவன்.

வயல்களுக்கு நடுவிலும் காடுகளுக்கு நடுவிலும் செல்லுமு; வீதிகளில் அளவான வேகத்துடன் கார் ஓடுவதும் சுகமானதாக இருக்கும்.

ரயில் பயணத்தின் போது, அதுவும் ஓரளவு தூரமான இடங்களுக்கு பயணம் செய்யும் போது எமக்கருகிலும் கொஞ்சம் சற்றுத் தள்ளியும் எமது பார்வையில் படக்கூடியதாக இருக்கும் சக பயணிகளின் முகங்கள் உடல்வாகுகள் அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடும் போது அதைக் கவனித்தும் கவனியாதது போலவும் கேட்டும் கேளாதது போலவும் இருக்கும் அவர்களின் உரையாடல்களில் காணப்படும் மையக் கருத்துக்கள் எமக்குள் பல கற்பனைகளைத் தூண்ட வாய்ப்பேற்படுவதும் உண்டு.

ஒரு பொது மனிதனாக தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிப் போகிற போது தன்னோடு பயணித்த சக பயணிகளின் முகங்களையும் உரையாடல்களையம் மனதில் பதிய வைக்காது விட்டுச் செல்வதும் உண்டெனினும், ஆனால் நாம் பார்க்கின்ற அத்தனை காட்சிகளையும் கேட்கின்ற அத்தனை சத்தங்களையும் உரையாடல்களையும் மற்றவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற நவரச உணர்வுகளையும் எமது மூளைக்கலங்கள் பதிஞ்சு கொண்டேதானிருக்கின்றன, அது தானாக நடைபெறுகின்றன.ஒரு எழுத்தாளன் பயணியாக

இருப்பானானால் அவனது பயணங்களே கதைகளின் மூலக்கருவாவதும் உண்டு.நானும் அப்படியே.

தேவையேற்படும் போது மூளைக்கலங்களில் பதியப்பட்டவை ஞாபகப்படுத்தல் மூலம் திரையில் காண்பது போல மனத்திரையில் விரிகின்றன.

விமானப் பயணத்தின் போதும்கூட நான் அருகிலிருப்பவருடன் உரையாட விரும்புவதும் அவரோ அவளோ அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவருடனான உரையாடலைத் தொடர்வதுண்டு.

நடந்தும்,சைக்கிளிலும், பஸ்ஸிலும்,ரயிலிலும், காரிலும் எப்பவாவது ஒருமுறை விமானத்திலும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவன் நான்.

அதுவே இன்றுவரை வரை தொடர்கின்றது.எம்மிடமிருக்கின்ற பயணச் சீட்டு எமது விருப்பத்துக்கு துணை போகின்றது.

ஜேர்மனியின் எல்லையோடு இருக்கின்ற நகரங்களின் ரயில் நிலையம் வரை பயணம் செய்வதற்கு இப்பயணச் சீட்டு வழிவகுத்துள்ளது.

ரயில் நிலையம் மட்டுந்தானே என நாம் நினைச்சு அக்கறையற்று அலட்சியமாக இருந்துவிட வேண்டுமென்றில்லை.ஏனெனில் ஜேர்மனியிலிருப்பது போல ஜேர்மனியின் அயல்நாடான ஒல்லாந்திலும் ரயில் நிலையங்களை ஒட்டியும் தொடர்புபடுத்தியுமே நகரங்கள் இருக்கின்றன.

ஜேர்மனிய எல்லையோடிருந்த ஆர்ன்கைம், வென்லோ, நிம்வெகன் ஆகிய இடங்களுக்கு நானும் மனைவியும் சென்று வந்திருக்கிறோம்.சில நாட்களுக்கு முன் ஒல்லாந்து எல்லை நகரான நிம்வெகன் நகரத்துக்கு போயிருந்தோம்

எமது நகரத்திலிருந்து ஆர்ன்கைம் செல்லும் ரயிலில் சென்று எமரிக் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நிம்வெகன் நகருக்குச் செல்லும் பஸ்ஸில் சென்று நிம்வெகன் ரயில் நிலையத்தை அடைந்தோம்.

நிம்வெகன் ரயில் நிலையம் அழகாகவும் நவீனமாகவும் இருந்தது.ரயில் நிலையத்தின் முன்னாலிருந்த தரை மினுமினுவென வானத்தில் நட்சத்திரக்கூட்டங்கள் மின்னுவது போல மினுமினுத்துக் கொண்டிருந்தன.

நகரமும் கடைத்தெருவும் எங்கிருக்கின்றது என்று உருளைக்கிழங்குப் பொரியல் விற்றுக் கொண்டிருந்த ஒரு கடைக்காரரிடம் ஆங்கிலத்தில் கேட்ட போதும் அவரும் ஆங்கிலத்திலேயே நேராகப் போங்கள் நகரமும் கடைத்தெருவும் வருமென்று பதில் சொன்னார்.

அது வசந்தகால மகிழ்தருண காலமாதலால் நாங்கள் நடந்து கொண்டிருந்த இருபக்கத்திலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.அங்கு தின்பண்டங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன.அந்த இடம் ஓய்வெடுக்கும் இடமாகையால் இருபக்கத்திலும் நீளமான கதிரைகளிருந்தன.மக்கள் உல்லாச உணர்வுடன் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருந்தனர்.

அதையும் கடந்து நடந்த போது அகலாமான மிக நீளமான தெருவில் இருபக்கமும் நிறையக் கடைகள் இருந்தன.

ஒரு இடத்தில் மேடையமைக்கப்பட்டு இருவர் பக்கவாத்தியங்ளின் இசையில் ஒல்லாந்து மொழியில் பாடிக் கொண்டிருந்தனர்.பலர் கீழே நடனமாடிக் கொண்டிருந்தனர்.மொழி விளங்காவிட்டாலும் குரலும் இசையும் இனிமையாகி மனதைக் கவர்ந்தன.

நானும் மனைவியும் கொஞ்ச நேரம் அதை இரசித்துப் பார்த்துவிட்டு மீண்டும் கொஞ்சத் தூரம் நடந்துவிட்டுத் திரும்பி அம்மேடையைக் கடந்து வந்த போது சிறு சத்தத்துடன் பேப்பர் சிறுதுண்டுகள் எங்கள் மீதும் எங்களுக்கருகில் நடந்து வந்த இரு பெண்கள் மீதம் காற்றில் பறந்து

வந்து சரமாரியாக விழுந்தன.(பிறந்தநாள் விழாக்களில் சொரிய வைப்பது போல)அது எதிர்பாராது நடந்தபடியால் அதைப் படம் எடுக்க முடியவில்லை.

இசைக்கும் பாட்டுக்கும் மயங்காதார் யார் இருக்கிறார்கள்.இசையைக் கேட்கும் போதும் பாட்டைக் கேட்கும் போதும் எனக்கும் நடனமாடவேண்டும் என்று தோன்றும்.என்னையறியாமலே தலையும் தோளும் காலும் ஆடும்.

எமறிக் ரயில் நிலையத்திலிருந்து நிம்வெகன் ரயில் நிலையத்தடிக்குப் போவதற்கும் வருவதற்கும் பஸ் வசதியே இருந்தபடியால் பஸ்ஸில் போகும் போதும் வரும் போதும் பஸ் பல பெரிய சிறிய நகரங்களுக்கூடாகவும் காடுகள் வயல்கள் ஊடாகவும் சென்றன.

இருமருங்கிலும் கண்ட காட்சிகள் மனதுக்கு சுகமாக இருந்தன.ஆங்காங்கே பல பூங்காகளும் இருந்தன.

ஜேர்மனியில் இவ்வாண்டு (2022)யூன்,யூலை,ஓகஸ்ட் மாதங்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட 9 யூரோ பயணச் சீட்டு ஜேர்மனி பூராவும் செல்லலாம் என்ற ஒரு சலுகையைக் கொண்டிருப்பதால் பல நகரங்களுக்குச் சென்று வந்திருக்கிறோம்.

ரயில்களில் பஸ்களில் பயணிகள் நிறைந்து காணப்படுகிறார்கள்.பயணங்கள் சுவையானவை அதிலும் சுவையானவை இயற்கைக் காட்சிகள்.

அனுபவப் பகிர்வுகள் தொடரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *