கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. (தொடர் 27) ….. மௌனஅவதானி.

உளவு நிறுவனங்கள் தமது நாட்டின் தொடர்பற்ற நிலையில் இயங்குபவை அல்ல.அவை தனித்துவமான ஒரு நிறுவனமாக இயங்குமேயன்றி தமது நாட்டின் இராஜதந்திரிகளின் ஆலோசனைப்படியும் அறிவுரைக்கமையவுமே இயங்குபவை.

வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகள், வறிய நாடுகள் என அனைத்து நாடுகளையும் அந்தந்த நாடுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பொருளாதார மூலகங்கள்(Economic Elements) எதுவென கண்டறிகின்றன.அவற்றைச் சிதைப்பதன் மூலமோ அன்றி அவற்றைத் தனதாக்கிக் கொள்வதன் மூலமோ ஒரு குறிப்பிட்ட நாட்டின் நிர்வாகத்தை சிதைக்க முடியும் என்பது ஆய்ந்தறிந்த உண்மையாகும்

ஏன் உளவு நிறுவனங்கள் மற்றைய நாடுகளின் நிர்வாகக் கட்டுமானங்களை சிதைப்பதற்காகச் செயல்படுகின்றன என்ற கேள்வி எழும் போது ஒவ்வொரு சமகாலத்திலும் உலக நாடுகள் தம்மை வளர்த்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பல்வேறுவகைப்பட்டனவாக இருக்கின்றன.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை உளவு பார்த்தல் என்பது ஒரு அரச பணியாகவே இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.தனது மக்களின் மகிழ்ச்சியே தமது அரசின் உச்ச நிலைப்பாடெனக் கொண்டிருக்கும் நாடுகள்கூட மற்றைய நாடுகளை உளவு பார்க்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு சமகாலத்திலும் அந்தந்த நாடுகள் தமது நிர்வாகத்தை நடத்த எடுத்துக் கொள்ளும் பொருளாதார மூலக்கூறுகள் பல்வேறுபட்டவையாகவே இருக்கும்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கீழ்வருபனவையாக கண்டறிந்து கொள்ளலாம்.ஏற்றுமதி இறக்குமதி சாராது ஒரு நாட்டினுடைய மண், நீர்நிலைகள், கனிமவளங்கள் சார்ந்த பொருளாதார ஆதாரங்கள்;(Economic sources) மூலமாகவும் அவற்றைச் சரியான முறையில் கையாளுதல் வழியாகவுமே ஒரு நாடு தனது குடிமக்களை சிறப்பாக நிர்வாகிப்பதற்கான கட்டமைப்பாகச் செயல்படுகின்றது.

பொருளாதாரத்திற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத போது அந்நாடுகள் தமது நாட்டு மக்களுக்கான அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்கின்ற நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

தொழிற்சாலைகள் பல இயங்கி உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தும் ஏற்றுமதி செய்கின்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது உளவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கிவிடும்.

ஒரு நாட்டினுடைய தொழிற்சாலைகள் என்பனவும் அந்நாட்டின் தொழில்துறை பொருளாதார ஆதாரங்களாகும்(Industrial economic sources ).

இவற்றினைச் சிதைப்பதற்காகவே உளவு நிறுவனங்கள் செயல்படுகின்றன.இந்தச் சிதைவுச் செயல்பாடுகளை செய்வதற்கு அந்நாட்டில் இயங்குகின்ற, உளவு நிறுவன நாடுகளின் தூதரகங்கள் மூலவேராக இருக்கின்றன என்பதை நிராகரிக்க முடியாது.

ஒரு நாட்டினுடைய இராசந்திர உறவுகள், பொருளாதார உறவுகள் என இன்னோரென்ன உறவுகளை இயல்பாக தூதரகங்கள் பேணுகின்ற அதே வேளை அந்த நாடடின் வளர்ச்சியையும் கண்காணித்துக் கொண்டேயிருக்கும்.

அந்தக் கண்காணிப்பின் ஒரு வேலைத்திட்டமே தொழிற்சாலைகளுக்கு எதிராக இடம்பெறும் தொழிலாளர்களின் போராட்டங்களாகும்.

தொழிலாளர்களின் பணிக்குச் செல்லாத பணிமறுப்பு போராட்டங்கள் காரணமாக உற்பத்திகள் நடைபெறாத பட்சத்தில் ஒரு தொழிற்சாலையிலிருந்து பொருட்களின் தேவை மக்களுக்கு தேவையானளவு கிடைக்காத போது மக்கள் அரசு மீதுதான் அதிருப்தியடைவார்கள்.

சமாந்தரமாக பற்றாக்குறையை தமக்குச் சாதமாக பயன்படுத்தி தொழிற்சாலை தொடங்கி சந்தைப்படுத்துவோர், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வரை விலைகளை ஏற்றுவார்கள்.

ஒரு மனிதனின் வருமானத்திற்கு மிதமாக அவன் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்படுகின்ற பணிமறுப்பு போராட்டத்திற்கு எதிரானதாகவும் சார்பானதாகவும் கருத்துக்கள் விமர்சனங்கள் பெகாதுமக்களிடமிருந்து வெளிப்பட்டாலும் ஒட்டுமொத்தத் திரட்சியாக அனைத்துக் கோபங்களையும் அரசின்மீதே ஒரு சராசரி மனிதன் கொள்வான்.

தொழிற்சாலைகளின் நிர்வாகத்திற்கும்,தூதரகங்களின் அவர்களுடனான இரகசியத் தொடர்பைக் கண்டறிவது என்பது சுலபமான விடயமல்ல.ஒரு விவேகமும் நுட்பமும் கொண்ட அரசு தூதரகங்கள் மீது சந்தேகம் கொண்டிருந்த போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் என தமது நாட்டுக்கும் தூதரகத்தின் நாட்டுக்குமிடையிலான இராசதந்திர உறவில் விரிசல் ஏற்படாமல் பாரத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக மிகவும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

தொழிற்சாலைகள்,தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றில் தூதரகங்களின் உளவு நிறுவனங்கள் கொண்டுள்ள தொடர்புகள் மிகவும் முக்கியமானவை.

தொழிற்சாலைகளையும் தொழிலாளர் சங்கங்களையும் கையாளுவதற்கு தூதரங்கள் தாம் தொடர்புபட்டவர்களாக காட்டிக் கொள்ளாது தமக்கும் உளவு நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்புமே இல்லை என்பதை மிகவும் நுட்பமாக கட்டமைத்திருக்கும்.

இக்கட்டுரை ஆரம்பிக்கும் போது உளவு நிறுவனங்கள் பணம்,பெண்,பொருள் ஆகியவற்றை பயன்படுத்தியே இரகசியங்களை அறிந்து கொள்கின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

எந்தெந்த நாட்டுக்கு எந்தெந்த அணுகுமுறை உகந்தது என்பதை கண்டறிவதும் அவை கண்டங்கள் சார்ந்த நாடுகளுக்கு வேறு வேறாகவும் இருக்கும்.

ஒரு நாட்டினுடைய ஏற்றுமதியைச் சிதைக்கும் போராட்ட வன்முறை பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *