சங்கதிகள்

“பனையோலை அழைப்பிதழ்கள்” …. ப. தெய்வீகன்.

வவுனியாவிவிலிருந்து முன்னெடுக்கப்படுகின்ற “பனையோலை அழைப்பிதழ்கள்” என்ற சிறுதொழில் முயற்சி பற்றி நேற்றைய தினம் Neethujan Bala முகநூலில் பகிர்ந்திருந்தார். உடனடியாகவே, சம்பந்தப்பட்ட தம்பி Arul Ananth அவர்களை தொடர்புகொண்டு பேசியதில், தாங்கள் சிறிய அளவில் தொடங்கியுள்ள இந்தப் பணிகுறித்து விரிவாக விளக்கினார்.
வெளிநாடுகளில் நடத்தப்படுகின்ற தமிழ் திருமணங்களில், ஒரு பெண்ணை தங்கள் வீட்டிலிருந்து அனுப்புவதற்கு, ஒவ்வொரு குடும்பமும் கிட்டத்தட்ட, கோட்டபாயவை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு செலவிட்ட டொலர்களுக்கு ஈடாகக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
தங்கள் குடும்ப கௌரவத்தின் அடையாளங்களாக – சமூக நன்மதிப்பின் அடையாளங்களாக – தங்களது ஊர் பெருமையின் குறியீடுகளாக – சண்டித்தனத்தின் அலகுகளாக என்று, இவ்வாறு செலவு செய்யப்படுகின்ற டொலர்கள் – பவுண்ட்ஸ்கள் – யூரோக்கள் அனைத்திற்குள்ளும் நீண்ட செய்தியிருக்கிறது.
அந்த வகையில், அழைப்பிதழ்கள் என்பவை இன்று மின்னஞ்சல் – சமூக ஊடகங்கள் வழியானவை என்று சுருங்கிவிட்டாலும், மங்களகரமான நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்களைக் கையில் வழங்குவது என்பது இன்னமும் வெளிநாடுகளிலும் நீண்டதொரு பாரம்பரியமாகத் தொடர்க்கிறது.
ஆஸ்திரேலியாவில் தமிழ் திருமணமொன்றில் அழைப்பிதழுக்கு மாத்திரம் குறைந்தது இரண்டாயிரம் டொலர்களாவது செலவு செய்கிறார்கள். அழைப்பிதழ் ஒன்றை வடிவமைத்து, அச்சிட்டு, உறையிட்டு வாங்கும் செலவு, ஐந்தாறு டொலர்களில் ஆரம்பித்து நூறு டொலர்வரை உள்ளது.
காகிதத் தாளில் தொடங்கி பிளாஸ்திக்வரை கொடி – குடை – ஆலவட்டங்களோடு ஏகப்பட்ட வகையாறாக்களை இந்த அழைப்பிதழ்களில் கண்டிருக்கிறோம்.
இவை அனைத்துக்கும் இணையான தரத்துடன் – அழகான வடிவமைப்புடன் – வவுனியா நண்பர்கள் பனையோலை அழைப்பிதழைத் தயாரிக்கிறார்கள்.
தகுந்த ஓலைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்து, வெட்டிச் செப்பனிட்டு, சரியான அழைப்பிதழ் அளவுகளுக்கு வெட்டியெடுத்து, அதன் பின்னர் பிரிண்ட் போடுகிறார்கள். தாங்கள் ஏற்கனவே செய்த அழைப்பிதழ் படங்களை அனுப்பிவைத்தார்கள். மிக அருமையாகவுள்ளது.
திருமணங்கள் போன்ற மங்களகரமான நிகழ்வுகள், வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் காதலர் தினம் – தீபாவளி போன்ற நிகழ்வுகள் போன்றவற்றுக்கும் இவர்கள் அழைப்பிதழ்களை தயாரிக்கிறார்கள்.
ஏற்கனவே, இலங்கைக்குள் ஓடர்கள் எடுத்து தயாரித்திருக்கிறார்கள்.
எங்கள் நிலத்தில் விளைந்த பொருளொன்றை – எங்களது பண்பாட்டின் தொடர்ச்சியாக பின்பற்றும் பழக்கங்களை – சமய அனுட்டானங்களை – பின்பற்றுவதில், புலம்பெயர்ந்தவர்கள் காண்பிக்கும் அதே ஆர்வத்தினை இந்தப் பனையோலை அழைப்பிதழ் முயற்சியிலும் காண்பித்தால், அதனால் பயனடையப்போறவர்கள் ஏராளம். தமிழர் தேசத்துக்கான சிறு டொலர் வருமானமாக இது அமையும் என்பதற்கு அப்பால், இதுபோன்ற தொடர்பறாத பண்பாட்டு பழக்கவழக்கங்களை, புலம்பெயர்ந்த வீடுகளுக்குள் பெருக்கிக்கொள்வது, இனிவரும் காலங்களில் அத்தியாவசியமாகவுமுள்ளது.
இங்குள்ள தமிழ் பாடசாலைகளில் இதுபோன்ற விடயங்களை அறிமுகப்படுத்துவதும் குழந்தைகளிடம் இவற்றைப் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்று.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *