கட்டுரைகள்

வாக்குமூலம்!…. 23 ….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு 15.06.2022 அன்று வழங்கிய செவ்வியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாட்டின் தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ஒரு வாதத்திற்குச் சம்பந்தன் கூறியிருப்பது சரியானது என எடுத்துக் கொண்டால் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது. அதாவது தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பு விதிகளின்படி அவர் கூறும் ஆட்சி மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது.

தற்போதுள்ள பாராளுமன்றம் கலைந்து அல்லது கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தலொன்று நடந்தால்தான் அவர் கூறும் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அப்படி பொதுத் தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட 2024 நவம்பர் வரை தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதானே (அவர் தானாகப் பதவி விலகினாலேயொழிய) அதிகாரத்தில் இருக்கப் போகிறார். அப்படியாயின் அவ்வாறான ஆட்சி மாற்றத்தால் என்ன பயன் விளையப் போகிறது?

ஒருவேளை தற்போதைய ஜனாதிபதி தானாகப் பதவி விலகி அல்லது குற்றவியல் பிரேரணை மூலம் பதவி விலக்கப்பட்டு அல்லது வேறு வகையில் ஜனாதிபதிப் பதவி பறிதாகி வெற்றிடம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் மீதமுள்ள பதவிக் காலத்திற்குப் புதிய ஜனாதிபதியைத் தற்போதுள்ள பாராளுமன்றம்தானே பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயிருந்து அரசியலமைப்பு ரீதியாகத் தெரிவு செய்யப் போகிறது. அப்படியாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் அல்லது அக்கட்சி ஆதரிக்கும் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தானே புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். அதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?

மேலும், தற்போதைய பாராளுமன்றம் தானாகக் கலைவதாயின் அது 2025 ஆகஸ்டில்தான் சாத்தியம். அவ்வாறில்லையாயின் அதற்கு முன்பு பாராளுமன்றம் கலைவதற்குத் தானாகத் தீர்மானிக்க வேண்டும் அல்லது தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படவேண்டும். பொது ஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி இவை இரண்டுமே சாத்தியமில்லை. இந்தப் பின்புலத்தில் புதிய பாராளுமன்றப் பொதுத்தேர்தலொன்று நடைபெறவேண்டுமாயின் தற்போதைய ஜனாதிபதியே தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டரை வருட முடிவில் அதாவது 2023 பெப்ரவரியில் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அதனை அவர் செய்வாரா? அப்படி அவர் செய்து புதிய பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடந்து சம்மந்தர் கூறும் ஆட்சி மாற்றம் (பொது ஜன பெரமுன கட்சி தவிர்ந்த வேறொரு கட்சியின் அரசாங்கம் அல்லது கூட்டு அரசாங்கம் அல்லது சர்வகட்சி அரசாங்கம்) ஏற்பட்டாலும்கூட இப்பத்தியின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டவாறு 2024

நவம்பர் வரை தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதிகாரத்தில் இருப்பார்.

இப்படியான ‘இடியப்பச்’ சிக்கல்களுக்கு மத்தியில் இரா சம்பந்தன் எழுந்தமானமாக-subjective ஆக -தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஆட்சி மாற்றமொன்றே எனக் கூறியிருப்பது, அவரது அரசியல் மூப்பு அனுபவத்திற்கும்- அரசியலமைப்புச் சட்ட அறிவுக்கும் பொருந்தாததுமட்டுமல்ல ஒரு objective அற்றதுமாகும்.

இவை ஒரு புறமிருக்க, சுதந்திர இலங்கையில் ஏற்பட்ட எத்தனையோ ஆட்சி மாற்றங்களால் தமிழ் மக்களுக்கு ஆனது என்ன? ஒன்றுமேயில்லை. எனவே இனி ஏற்படப்போகும் ஆட்சி மாற்றங்களாலும் தமிழர்களுக்கு எதுவுமே ஆகப் போவதுமில்லை.

இன்று இலங்கைத் தமிழர்களுக்கு-வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு குறைந்தபட்சமாவது சமூக பொருளாதார அரசியற் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருப்பது 13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தமே. இது ஆட்சி மாற்றங்களினால் ஏற்பட்டதொன்றல்ல. இந்திய தலையீட்டினால் ஏற்பட்டதொன்றாகும். அதற்கான சூழலைத் தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டமும் ஆயுதப் போராட்டமும் ஆக்கித் தந்தது. மறைந்த தமிழ்த் தலைவர்களான (தமிழர் விடுதலைக் கூட்டணி) மு. சிவசிதம்பரம் மற்றும் அ. அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் உருவானதில் தொடர்புபட்ட இரா. சம்பந்தனுக்கு இது புரியவில்லையா? அல்லது புரிந்தும் சுயலாபத்திற்காகத் தனது மேற்குலக ஏகாதிபத்திய எஜமானர்களின் இதயங்களைக் குளிர்விப்பதற்காக இப்படியான கூற்றுகளை எடுத்து வீசுகிறாரா?

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இரா. சம்பந்தன் உடனடியாகச் செய்ய வேண்டியது என்னவெனில், ஆட்சி மாற்றத்திற்குக் குரலெழுப்பாமல் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்ய அரசியல் விருப்புடனும் அர்ப்பணிப்புடனும் களமிறங்க வேண்டும். செய்வாரா?

செய்யவில்லையாயின், அவர் கூறும் ஆட்சி மாற்றம் (அதிகார மாற்றம்) தமிழர்களுக்குத்தான் தேவைப்படுவதேயொழிய முழு நாட்டுக்குமல்ல. அதாவது தமிழ்த் தேசிய அரசியலில்தான் அம்மாற்றம் அவசியமானது. தமிழ்த் தேசிய அரசியலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற (போலித் தமிழ்த் தேசியக்) கட்சிகளை அப்புறப்படுத்துவதற்கான ஆட்சி மாற்றமே (அதிகார மாற்றமே) அது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *