
யாராவது இருவரை ஒப்பிடும்போது அவரைவிட இவர் நல்லவர் என்றும் இவரைவிட அவர் கெட்டவர் என்றும் சொல்வார்கள். ஆனால் ராமச்சந்திரனும்அன்பரசனும் ஒன்றுதான் என்று குமார் சொல்வதைத்தான் நம்புவதற்கு சற்று கடினமாக உள்ளது. இப்படி அவர்களது நண்பன் குமார் சொல்வதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் சரவணனும் கதிரும்.
அவர்கள் அப்படிப் பேசிக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் ராமச்சந்திரனும் அன்பரசனும் எதிர் துருவங்கள்.அப்படியிருக்க இருவரும் ஓன்றுதான் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். சரவணனும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு தற்செயலாக வந்து சேர்ந்தான் தனஞ்செயன். தனஞ்செயனும் அவர்களது நண்பனே. வந்தவன் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அறிந்தான்.“நீங்கள் ஏன் வீணாக குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி என்ன குமார் தவறுதலாகச் சொல்லிவிட்டான்?” என்று சரவணனையும் கதிரையும் கேட்டான் தனஞ்செயன்.“தனஞ்செயா, நீதான் புரியாமல் பேசுகிறாய். வடக்கும் தெற்குமாய் நிற்பவர்களை ஒன்றுதான் என்று குமார் சொல்வதால் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?” என்று எதிர் கேள்விகேட்டான் சரவணன்.“சரவணா, நீங்கள் பார்க்கும் விதம் வேறு குமார் பார்க்கும் விதம் வேறு”“அந்த வேற்றுமையைத்தான் சொல்கிறேன்.ராச்ச்சந்திரன் வேறு அன்பரசன் வேறு” என்றான் சரவணன்.அப்படி என்ன ராமச்சந்திரனும் அன்பரசனும் வேறு வேறு. அப்படி வெவ்வேறாக இருப்பவர்களை குமார் ஏன் ஒன்றுதான் என்கிறான் என்பதை பார்ப்போம். ராமச்சந்திரன் கடவுள் நம்பிக்கை உடையவன். ஆனால் அவனது நம்பிக்கை தீவிரமானது. எந்த அளவு தீவிரம் தெரியுமா?ஒரு மதத்தில் இருப்பவர்களே மற்ற மதத்திலும் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளும் போது ராமச்சந்திரன் அவர்கள் மதத்திலேயே மற்ற கடவுளை ஏற்பதில்லை. ஆனால் அன்பரசனோ கடவுளே கிடையாது என்ற கொள்கையுடையவன்.ராமச்சந்திரனுக்கு அவன் கும்பிடும் கடவுள்தான் கடவுள். அவன் மதத்திலுள்ள மற்ற கடவுளை கடவுளாக ஏற்பதுமில்லை கும்பிடுவதுமில்லை. அவன் மதத்திலுள்ளமற்ற கடவுளின் கோவிலுக்கு நண்பர்கள் அழைத்தாலும் செல்லமாட்டான். ஆனால் ராமச்சந்திரன் அவன் கும்பிடும் கடவுளைக் கும்பிடக் கூப்பிட்டால் நண்பர்கள் செல்வார்கள். இதில் மாறுபட்ட விசயம் என்னவென்றால் அன்பரசனும் செல்வான். அன்பரசனுக்கு கடவுள் கிடையாது என்பதுதான் கொள்கையே தவிர வெறுப்பொன்றும் கிடையாது.“அப்படி என்னடா நாங்கள் பார்க்கும் விதத்துக்கும் குமார் பார்க்கும் விதத்துக்கும் புதிதாக வேறுபாட்டைக் கண்டுபிடித்து விட்டாய்?” என்று கதிரும் சரவணனுடன் சேர்ந்து கேள்விகேட்க, தனஞ்செயன் அமைதியாக பதில் சொன்னான். நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். இப்பவும் சொல்கிறேன் ராமச்சந்திரனும் அன்பரசனும் ஒன்றுதான்.அன்பரசன் கடவுளே கிடையாது என்கிறான். ராமச்சந்திரனோ அவன் கும்பிடும் கடவுளைத் தவிர அவன் மதத்திலுள்ள மற்ற கடவுளையும் சேர்த்து கடவுள் வேறு கிடையாது என்கிறான். இது எப்படி என்றால் ஒரு வீட்டிலுள்ள எல்லா பொருட்களையும் திருடுபவன் மட்டுமே திருடன் சில பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை திருடுபவன் திருடன் அல்ல என்பதுபோல் அல்லவா இருக்கிறது என்றான்.தனஞ்செயன் மேலும் தொடர்ந்தான். ஒரு கொலை செய்தாலும் கொலைகாரன்தான் பத்து கொலைகள் செய்தாலும் கொலைகாரன்தான். சிறு திருட்டை செய்பவனும் திருடன்தான் பெரிதாக திருடுபவனும் திருடன்தான். இப்போது சொல்லுங்கள் ராமச்சந்திரனும் அன்பரசனும் ஒன்றுதானே. குமார் சொல்வதில் என்ன தவறு? என்று கேட்க சரவணனும் கதிரும் வாயடைத்துப்போய் சரிதான் என்பதுபோல் தலையசைத்தனர்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()