83 வயதில் பசிபிக் பெருங்கடலில் தனியே பயணம் செய்து உலகச் சாதனை
ஜப்பானின் 83 வயதான கெனிச்சி ஹோரி (Kenichi Horie) பசிபிக் பெருங்கடலில் இடைவிடாமல் தனியே பயணம் செய்து உலகச் சாதனை புரிந்திருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ஹோரி இன்று (4 ஜூன்) ஜப்பானைச் சென்றடைந்தார்.
இரண்டு மாத காலத்திற்குப் பசிபிக் பெருங்கடலில் அவர் தன்னந்தனியாகப் பயணம் செய்தார்.
இதன் மூலம் பெருங்கடலைத் தனியே இடைவிடாமல் பயணம் செய்த உலகின் ஆக வயதானவர் என்ற உலகச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஹோரி.
இதற்கு முன்னர் அவர் 23 வயதில் தனியே ஜப்பானிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரை பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்தார்.
1962 ஆம் ஆண்டு கடப்பிதழ் இல்லாமல் பசிபிக் பெருங்கடலில் சென்றதால் பிடிபட்டுவிடக்கூடும் என்ற பயம் இருந்தது என்று ஹோரி கூறினார்.
ஆனால் தம்முடைய இந்தப் பயணம் முற்றிலும் வித்தியாசமானது; பலர் தம்மைக் கடலுக்கு அனுப்புவதில் பங்காற்றினர்; கண்காணிப்புக் கேமராக்கள், ரேடியோ மூலம் அனைவரின் ஆதரவையும் பெற்றதாகத் தெரிவித்தார்.
தமது இந்தச் சாதனையில் பங்குகொண்டு உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் திரு. ஹோரி.
![]()